கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -17 இரண்டாவது உலகத்தமிழராய்ச்சி மாநாடு நினைவுகள் ! மக்கள்திலகம் எம்.ஜி. ஆர் சூட்டிய தங்கப்பதக்கம் !


அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றி நீங்கள் அறிவீர்கள்.  இன்றைய புதிய தலைமுறை இம்மாநாடு பற்றி எவ்வளவுதூரம் அறிந்துள்ளார்கள் என்பதை நானறியேன்.
அருட் தந்தை தனிநாயகம் அடிகளாரினால் தோற்றுவிக்கப்பட்ட இம்மாநாடு எமது இலங்கையில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தவேளையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் பற்றி இற்றைவரையில் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் எழுதிவருகிறார்கள்.
இம்மாநாட்டின் பின்னணி பற்றி எனது நினைவுக்கு எட்டிய சில குறிப்புகளை முதலில் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
 1964  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில்  புதுடில்லியில்  நடைபெற்ற   அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது.
அருட்தந்தை தனிநாயகம்  அடிகளார் அக்காலப்பகுதியில்  மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் பீடத்தின்  தலைவராகவிருந்தார்.
அவர் தனது Tamil Culture எனும் இதழ் மூலம் ஏற்கனவே  உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆய்வாளர்களை ஒன்றிணைத்திருந்தவருமாவார்.  அதனால் அவரால் முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியாவில் கோலாலம்பூரில் நடத்துவதற்கு சாத்தியமாகியிருந்தது.
இதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.  இம்மாநாடும் குறிப்பிட்ட ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம்தான் நடைபெற்றது.
இம்மாநாட்டில்  சமர்ப்பிப்பதற்காக  மருத்துவத் தமிழ் முன்னோடி கிறீன் பற்றிய ஒரு கட்டுரையை நான் அனுப்பியிருந்தேன். அதனையும் அங்கு வாசிப்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து,  அதற்கான நேரமும் ஒதுக்கியிருந்தார்கள்.
அதனால், இம்மாநாட்டிற்கு செல்வதற்கு தீர்மானித்துமிருந்தேன். இதே காலப்பகுதியில் தமிழ்நாட்டில் மற்றும் ஒரு மாநாடும் – இலக்கிய மாநாடாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதனை ஆக்க இலக்கியத்துறை விழாவாக ஒழுங்குசெய்திருந்தனர். அதன் ஒரு அங்கமே, அனைத்துலக தமிழ்க்கவிதைப்போட்டி.


உலகின் எப்பாகத்திலும் வாழும் தமிழ் கவிஞர்கள்  இப்போட்டிக்காக எழுதலாம். போட்டியின் தலைப்பு புகாரில் ஒரு நாள். அதில் கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு அச்சமயம் தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவின் பெயரில் தங்கப்பதக்கம் பரிசு.
அந்த விழாவுக்கும் நான் செல்லவிரும்பியதனால், அந்தப்போட்டியிலும் கலந்துகொள்வதற்கு விரும்பினேன். புகார் எனக்குறிப்பிட்டதும், இது குளிர்கால பனிப்புகார் அல்ல என்பது எனக்குத் தெளிவானது.
கலைஞர் கருணாநிதி 1964 இல் பூம்புகார் என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி வெளியிட்டிருந்தார். அத்திரைப்படம்  கலைஞரின் வசனத்திற்காகவே பட்டி தொட்டி எங்கும் வெற்றிகரமாக ஓடியது.  கலைஞருக்கும் கண்ணகி காவியத்தில் ஈர்ப்பு அதிகம்.
பூம்புகார் பற்றிய செய்திகளை சேகரிக்கத் தொடங்கினேன். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது எமது ஆன்றோர் வாக்கு. காலந்தோறும் அவர் கண்ணகி காவியத்துடன் வாழ்ந்தவர்.
கப்பலோட்டிய தமிழர்கள் பற்றிய கதைகள் பல அறிவோம். கணித – விஞ்ஞான ஆசிரியராக இருந்த எனக்கு,  கப்பலோட்டிய தமிழர்கள் பற்றி கேள்விஞானம் இருந்தது. ஆனால், அது பற்றி முழுமையான அறிவோ, தெளிவோ இருக்கவில்லை. அதனைச்சொல்லவும் நான் வெட்கப்படவில்லை. தெரியாததை தெரியாது  எனச்சொல்வதில் என்ன தவறு…?
சிலப்பதிகாரத்தில் பூம்புகார் பற்றிய செய்திகளை சேகரிக்கத் தொடங்கினேன். போட்டிக்கு நான் அனுப்பிய புகாரில் ஒரு நாள் கவிதைக்குத் தேவைப்பட்ட குறிப்புகளை முதலில் சேகரித்தேன்.
பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் – பட்டினப்பாக்கம் என இரு வேறு பகுதிகள் இருந்தன. அதன் சிறப்பியல்புகள் பற்றி கவிதைச் சீராக விபரிக்கவேண்டும். ஆமாம், என்னால் முடிந்த வரையில் முயன்று தேடினேன்.
மருவூர்ப்பாக்கத்தில் உயர்ந்த மாடிவீடுகள். அவ்வூர் மக்கள் திரைகடலோடி திரவியம் தேடி செல்வத்தில் முன்னேறியவர்கள். கடின உழைப்பினால் உயர்ந்த அம்மக்களின் செல்வம் எல்லாம் கவர்ச்சிகரமாக இருந்த காரணத்தால், அந்த அற்புதங்களையெல்லாம் வானத்தில் தவழ்ந்த முகில்கள் ஒரு கணம் நின்று, அந்த அதியற்புதக்காட்சியை தரிசித்தால் எவ்வாறு இருக்கும் என்று எனது கற்பனை சிறகடித்தது.
உலகின் பலபாகங்களும் சென்று வாணிபஞ்செய்து வாழ்ந்த அம்மக்களிடத்தில் துன்பமே அண்டவில்லை என்பதை சித்திரிக்கும் விருத்தப்பாக்களை முதலில் எழுதினேன்.
அதுபோன்று பட்டினப்பாக்கம் பற்றியும் அதன் சிறப்புகளை சுருக்கமாக அழகியலுடன் எழுதினேன். அந்நாட்டிலே ஏன் நீதி நூல்கள் இல்லை..? என்ற ஞானம் உதயமானது. அம்மக்கள் பொய், களவு, சூது, வாது அறியாதவர்கள். அதனால் அங்கு வேதியருக்கும் வேலை இல்லை. சோதிடர்க்கும் தொழில் இல்லை. மேலே வானத்தில் தவழ்ந்த மேகங்களின் பார்வையில் பார்த்தால் கீழே தெரிவது, நிலம் அல்ல. நிறைவான செல்வமே…!
பல நாட்கள் யோசித்து யோசித்து கற்பனையில் புகாரில் ஒருநாள் கவிதையை எழுதி முடித்தேன். தொடர்ச்சியான உழைப்பினால் உடலும் சற்று சோர்வுகண்டது.
எனது வீட்டிலே தட்டச்சு இயந்திரம் இல்லை. அதனால், எழுதியதை அப்படியே விட்டுவிடுவோம் என்று எண்ணியிருந்தேன்.
எனது இயலாமையை நினைத்து வேதனையுடன் நான் இருந்தபோது, ஒரு நாள் எனது பழைய மாணவன் சிவநேசன் என்பவர் வந்தார்.
அவனை நான் ஒருமையிலும் விளித்து அழைப்பேன். என்னிடம் இருந்த கவிதையை அவனிடம் காண்பித்து, தட்டச்சு செய்யமுடியாதிருக்கும் எனது இயலாமையை எடுத்துக்கூறினேன்.
அவன் மௌனமாக இருந்தான். எதுவும் கூறவில்லை.  வெளியே சென்று வருகின்றேன் எனச்சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.
சென்றவன் திரும்பினான். அவனது துவிச்சக்கர வண்டியில் ஒரு  தமிழ் தட்டச்சுப்பொறியும் ஒரு பையில் காகிதாதிகளும் இருந்தன.
என்முன்னே அமர்ந்த எனது மாணவன் சிவநேசன்,  “ ஸேர்… உங்கள் கவிதையை தாருங்கள். இப்பொழுதே அச்சிட்டுத்தருகின்றேன்  “ எனக்கேட்டு வாங்கி அச்சிடத்தொடங்கினான். அந்த அச்சுவேலையும் அன்றே முடிந்தது.
 “ ஸேர்… இன்றே இதனை தபாலில் அனுப்புகின்றேன் .   “ எனச்சொல்லி சிவநேசன் எழுந்தான். நான் மெய்மறந்து அவனது செயல்களை அவதானித்தேன்.
எனது வாழ்நாளில் அந்தச்  சம்பவம் மிகவும் முக்கியமானது.  சில சமயங்களில் நாம் எதிர்பாராத சம்பவங்கள் எமது வாழ்க்கையில் நடக்கலாம்.  அன்றும் அதுதான் நடந்தது.
நாளடைவில் இரண்டாவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டிற்கான நாளும் வந்தது. நான் சென்னைக்குப் புறப்பட்டேன். நான் போட்டிக்கு அனுப்பிய கவிதைக்கு பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்து நான் அங்கு செல்லவில்லை.
நான் ஏற்கனவே எழுதி அனுப்பிய எனது கிறீன் பற்றிய கட்டுரையை  வாசிப்பதற்காகவே சென்றேன். சென்னையில் விடுதியில் தங்கியிருந்தபோது ஒரு நாள் காலை அன்பர் காந்தளகம் சச்சிதானந்தன் ஒரு பத்திரிகையுடன் என்னைப்பார்க்க வந்தார்.
 “ அம்பி… இந்தச்செய்தியை பாரும்  “ என்றார்.
பார்த்தேன். எனது கண்கள் ஆச்சரியத்தினால் விரிந்தன. புகாரில் ஒரு நாள் கவிதைப்போட்டி முடிவுகள் வெளியாகியிருந்தது.
போட்டிக்கு வந்த கவிதைகள் பலதும் நன்றாக இருந்திருப்பதாகவும், அவற்றில் பத்தினை தேர்வுசெய்து பத்து கவிஞர்களுக்கும் தனித்தனியாக அண்ணா தங்கப்பதக்கம்  வழங்கப்படவிருக்கிறது என்றும் அச் செய்தி அச்சாகியிருந்தது.
அதில் ஒரு கவிஞராக எனது பெயரும்  இடம்பெற்றிருந்தது.
இனி, நான் எழுதி அந்தப்போட்டிக்கு அனுப்பிய கவிதையை பாருங்கள். சம்பிரதாயபூர்வமாக சக்தி வணக்கத்துடன் கவிதையை தொடங்கியிருந்தேன்.
சக்தி வணக்கம்
சீரார் தமிழின் திருவாற் பொலிந்த திருவுளத்துப்
பேரார் அவையிற் பெரியோன் விருது கவர்வதற்குப்
பாராய் கடைக்கண் பழகுந் தமிழைப் பொழிந்துதர
வாராய் திருவே வளர்பூம் புகாரை வலம் வரவே

தொடர்ந்து காவிரி நதியின் கழிமுகம் பற்றியும் பூம்புகார் பற்றியும் விபரமாக பா எழுதி, அன்றைய மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் பற்றி விபரித்து, விழாவுக்கு தோரணம், வாழை, கரும்பு, பூரணகும்பம் போன்ற சகல அம்சங்களையும் பதிவுசெய்தேன். இதோ எடுத்துக்காட்டாக சில பாடல்கள்.
மருவூர்ப்பாக்கம்
மாடிகள் உயர்ந்து வானை மருவிய மருவூர்ப் பாக்கம்
தேடிய செல்வம் எல்லாந் திரைகடல் ஓடி வீரஞ்
சூடிய மகுடம் என்னச் சுடர்விடு மனைகள் காண
ஓடிய முகில்கள் நின்றே ஒருமுறை பொழிந்த காலம்

கதிர்மணி களத்தி லாடக் கணிகையர் பரத மாட
மதுமலர்க் குழவி தூங்கி மனைகளில் அமைதி தூங்க
வதுவை செய் குயில்கள் தூண்டி வருடிய உணர்விற் பூத்த
சதுர்விழி மாதர் நெஞ்சில் தனியுணர் வுயிர்த்த காலம்

பார்புகழ் திரவியங்கள் பாய்விரித் தோடிச் சொந்த
ஊர்களிற் சேர்க்க மொய்த்தாங் குலகரங் கான தாலே
சீர்பொலி மணிகளார்ப்பச் சிலம்பொலி கலந்தங் கார்ப்ப
நேர்வழி வணிப மோங்கி நிறைநிதி குவிந்த காலம்

பண்டமாற் றரசு செய்து பவளமும் மணியும் முத்தும்
மண்டிய சந்த னந்தேன் மகிழகில் ஆர வண்ணம்
கொண்டவர் கண்ட வின்பங் குலவிய பெருமை கூறத்
தண்டமிழ்க் கிளவி ஒன்றே தரணியில் அறிந்த காலம்

நரையிலர் மக்கள் நாட்டில் நடப்பவை அறனாய் என்றும்
பரதமும் பண்ணுந் தேர்ந்த பனிமலர்க் கொடிகள் ஆட்டம்
சொரிவன பூக்கள் மாரி துயில்வன பிணிகள் பஞ்சம்
விரைவது பொன்னி இன்பம் விளை நிலம் மலர்தல் வேண்டி

பட்டினப்பாக்கம்

பட்டினப் பாக்க மெங்கும் படர்ந்தடர் வீதி யோரஞ்
சொட்டிய கோலம் நீதிச் சோழனின் மரபு சொல்லும்
இட்டுணல் இல்லை நாட்டில் இரப்பவர் இன்றி ஓங்கித்
தட்டிய அடிகள் எல்லாந் தமிழ்க் கலைத் தொழில் களாலே

ஆயநற் கலைகள் ஓங்கி அரண்மனை அறனி லோங்கிக்
கோயில்கள் விகாரை பள்ளி கொள்கையின் தெளிவு காட்டத்
தாயகந் தணைய முத்துந் தமிழ்விரி யாறும் ஊரிற்
பா ய்கையில் தயங்கி மெல்லப் பலகலை பயின்ற சாலம்

பாவையர் காந்தள் ஆடப் பருத்தியும் பட்டும் பூத்துப்
பூவிரிந் தாடும் பொய்கை புனல் மலர்ந் தாடுஞ் சொந்தத்
தேவையீ டாடும் நாளுந் தெளிந்தநல் லறி பாடும்
ஓவியஞ் சிற்பம் எல்லாம் உயிர்பெறும் உணர்வின் ஆடும்

நீதிநூல் இல்லை வாழ்வில் நெறிமுறை வளர்வதாலே
வேதியர்க் கில்லை வேலை வீடெலாங் கோயிலாகிச்
சோதிடர்க் கில்லை வேலை துயருறா நாட்டில் நூறாய்ச்
சாதிகள் சொல்வர் நுட்பத் தனிக் கலை விரிவ தாலே

ஆலைகள் இல்லை இல்லம் அனைத்துமே ஆலை யாகிச்
சோலைகள் இல்லை வீடே சொரிமலர்ப் பொழில்களாகி
வேலைகள் இல்லை வாழ்வோர் வினைஞராய் விளங்கி மேலே
நீலவான் நின்று காணல் நிலமல நிறைந்த செல்வம்

ஆமாம்…! மருவூர்ப்பாக்கம் – பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களின் பண்ணும் பரதமும் ஒருபுறமும் – ஓவியம் – சிற்பம் எல்லாம் சீரிய செல்வமாகத்திகழ்ந்த அந்தப்பூமியை மேலே வானில் நின்று பார்த்தால் நாம், காண்பது யாது..? இல்லை… இல்லை… நாம் நிலத்தை காணமுடியாது. நிறைந்த செல்வத்தையே காண்போம் என்று வர்ணிக்கிறது எனது கவிதை.
ஆமாம், அவ்வளவு அருமையான பூம்புகாரிலே நீதி நூல் தேவையில்லை. மக்கள் நெறி தவறாது வாழ்ந்தால், வேதியர், சோதிடர் , சாதிகள் எதுவுமே இல்லை! அவ்வளவு செல்வம் கொழிக்கும்   தன்னிறைவு கண்ட பூமிதான் பூம்புகார்.
புகாரில் ஒருநாள் கவிதையிலே, நான் பூம்புகாரைத் தமிழ் செய்து நான் சித்திரித்துக்காண்பித்தமைக்கே அறிஞர் அண்ணாவின் தங்கப்பதக்கம் பரிசாகக் கிடைத்தது.
பல்லாயிரம் மக்கள் குவிந்திருந்த பேரவையிலே பத்துக் கவிஞர்களுக்கு தமிழக முதல்வர் அண்ணா சார்பாக எமக்கு வழங்கியவர், அச்சமயம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அன்றையதினம் என் மனதில் பேரின்பமே தோன்றியது. ஈழத்து தமிழ்த்தேசிய அரசியலில் கால் ஊன்றிய காலத்தில் கவிதை எழுதத்தொடங்கிய நான், உலகத்தமிழராய்ச்சி மாநாட்டில் தங்கப்பதக்கம் பெற்றது எப்படி…?
எண்ணி எண்ணிப்பார்க்கின்றேன்.  எதுவுமே விளங்கவில்லை!
( தொடரும் )
      




No comments: