சூப்பர் ஸ்டார் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தர்மதுரை. அந்த படத்தின் டைட்டிலுடன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் தர்மதுரை.
ஏற்கனவே விஜய் சேதுபதி- சீனுராமசாமி கூட்டணியில் இடம் பொருள் ஏவல் படம் திரைக்கு வராமல் இருக்க, பாசிட்டிவாக அடுத்த படத்தை தொடங்கி அதை இன்று வெளியே கொண்டு வர, படம் எப்படி வந்துள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
விஜய் சேதுபதி ஊரில் குடித்துவிட்டு, குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி என அனைவரிடமும் திட்டு வாங்கி தன் அம்மா(ராதிகா)வின் அன்பை மட்டும் பெற்றுக்கொண்டு சுற்றி வருகிறார்.
ஒருக்கட்டத்தில் இவரை ஏதாவது செய்தால் தான் நாம் நன்றாக இருப்போம் என அண்ணன், தம்பிகள் முடிவெடுக்க, ராதிகா, விஜய் சேதுபதியை எங்காவது போய் பிழைத்துக்கொள்ள சொல்கிறார்.
அவரும் தனக்கு பிடித்த இடங்கள், பிடித்த நபர்களை பார்க்க செல்ல, இவரின் கடந்த கால வாழ்க்கையில் என்ன நடந்தது, ஏன் இப்படி ஆனார், யார் எல்லாம் இவர் வாழ்க்கையில் வந்தார்கள், எதை நோக்கி செல்கிறார் என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார் சீனுராமசாமி.
படத்தை பற்றிய அலசல்
விஜய் சேதுபதி ஒன் மேன் ஷோ என்றுக்கூட கூறிவிடலாம், எங்கிருந்து தான் இப்படி ஒரு நடிப்பு வருகின்றதோ, சென்னை பையனோ, தேனி பையனோ, மதுரை பையனோ அப்படியே கதாபாத்திரத்தில் பொருந்துகிறார், அதிலும் குடித்துவிட்டு செய்யும் கலாட்டா, ஸ்டைலாக இங்கிலிஷ் பேசுதல் என செம்ம ஸ்கோர் செய்கிறார். தன் காதலை இழந்து அழும் இடத்தில் உருக வைக்கின்றார்.
தமன்னா, ஸ்ருஷ்டி என இருவரும் விஜய் சேதுபதியின் கல்லூரி நண்பர்களாக வருகிறார்கள், அவர்கள் விஜய் சேதுபதி வாழ்க்கையில் யார் என்பதை இயக்குனர் மிக நேர்மையாக காட்டியுள்ளார். எந்த இடத்திலும் பெண்களை குறைத்து பேசுவது போல காட்சிகளே இல்லை, ஒரு பெண்ணால் தான் ஆண்களின் வெற்றி உருவாகிறது என்பதை அழகாக காட்டியுள்ளார்.
ராதிகாவின் யதார்த்தமான நடிப்பு, சீனியர் நடிகை என்பதை அழுத்தமாக பதிக்கின்றார், எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் ஏதோ ஒரு பிள்ளை மீது அம்மாவிற்கு அதிக பாசம் இருக்கத்தான் செய்யும், அதை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகிறார், மற்ற 3 பிள்ளைகள் கஷ்டப்படும் நேரத்தில் கூட விஜய் சேதுபதிக்காக அவர் அழும் காட்சிகள் எல்லாம் சிரிப்பை தாண்டிய யதார்த்தம்.
ஐஸ்வர்யா இந்த பொண்ணு என்னம்மா நடிக்குது என படம் பார்த்தவர்கள் அனைவரும் பேசிய வார்த்தைகள், சுருக்கமாக கூறவேண்டுமானால் லேடி விஜய் சேதுபதி. படத்தின் முதல் பாதி காமெடி, கலாட்டா, கல்லூரி பருவம் என ஜாலியாக செல்கிறது.
இரண்டாம் பாதி மிகவும் எமோஷ்னலாக செல்வதால் ஒரு சில இடங்கள் கொஞ்சம் படம் நீளமாக இருப்பதாக எண்ண தோன்றுகின்றது, யுவனின் இசையில் மக்க கலங்குதுப்பா செம்ம குத்து, ஆண்டிப்பட்டி பாடல் ரசிக்கும் ரகம், பின்னணி இசையிலும் கிராமிய மணம்.
சுகுமாரின் ஒளிப்பதிவில் அத்தனை யதார்த்தம், ஒவ்வொரு ஊரும் நம் கண்முன் வந்து செல்கின்றது, இயக்குனராக சீனுராமசாமி இதிலும் தன் பதிவை அழுத்தமாகவே பதித்துள்ளார்.
க்ளாப்ஸ்
விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி, ஐஸ்வர்யா, ராதிகா என படத்தில் நடித்தவர்கள் அனைவரின் யதார்த்தமான நடிப்பு.
பெண்களை உயர்த்தி காட்டியதற்காகவே பாராட்டலாம், எந்த ஒரு இடத்திலும் தவறாக சித்தரிக்கப்படவில்லை.
யுவனின் இசை, சுகுமாரின் ஒளிப்பதிவு, படத்தின் முதல் பாதி. படத்தின் வசனங்கள்.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்று இருக்கலாம், என்ன தான் விஜய் சேதுபதி தெரியாமல் அந்த பணத்தை தூக்கி வந்தாலும் இத்தனை நாட்கள் அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது என்ன லாஜிக் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் அது சூப்பர் ஸ்டாரின் மாஸ் தர்மதுரை, இது சீனுராமசாமி- விஜய் சேதுபதியின் கிளாஸ் தர்மதுரை. கண்டிப்பாக விஜய் சேதுபதி பயணத்தில் நாம் பங்கு பெறலாம்.
நன்றி cineulagam.