அவுஸ்திரேலிய மாணவ செல்வங்கள் மியன்மாரில் வெற்றிவாகை - கானா பிரபா

.
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பெருமைக்குரிய அனுசரணையோடு
அனைத்துலக “பேசு தமிழா பேசு 2018”  போட்டி முடிவு



யங்கூன் நகரில் நேற்று நடைபெற்ற இவ்வாண்டுக்கான அனைத்துலக ‘பேசு தமிழா பேசு’ பேச்சுப் போட்டியின் மாபெரும் வெற்றியாளர் இந்தியாவைச் சேர்ந்த நரேன் கெளதம் நாகராஜன் ஆவார். இரண்டாம் நிலை வெற்றியாளராக மலேசியாவின் தேவேந்திரன் சுகுமார் வெற்றிப் பெற்றிருக்கிறார்.
அடுத்து, மூன்றாம் நிலை இந்தியாவின் முகம்மது துர்வேசுக்கும் அவுஸ்திரேலியாவின் பருணிதன் இரங்கநாதனுக்கும் கிடைத்தது.
அவுஸ்திரேலியப் போட்டியாளர் செல்வி மாதுமை கோணேஸ்வரனுக்கு சிறந்த பேச்ச்சாளருக்கான இளந்தமிழ்ச் சுடர்’ விருது கிட்டியது.
வணக்கம் மலேசியாவும் ஆஸ்ட்ரோ வானவில்லும் இணைந்து படைத்த இந்தப் பேச்சுப் போட்டி, 3-ஆவது ஆண்டாக நடைபெற்றது. இப்போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன.மலேசியா, இந்தியா, இலங்கை, மியன்மார், அவுஸ்திரேலியா,மொரீசியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 16 உயர்கல்வி மாணவப் பேச்சாளார்கள் போட்டியில் பங்கேற்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில் GANESH VISARJAN FESTIVAL












யாழ் இந்து மகளிர் பழைய மாணவர் கிளையின் 25 ஆண்டு வருடாந்த நிகழ்வு மலரும் மாலை எனது பார்வையில்

.
யாழ் இந்து மகளிர் பழைய மாணவிகளின் வருடாந்த மலரும் மாலை நிகழ்வு கடந்த வாரம் 1/9/2018 அன்று Silverwater Bahai Centre இல் மாலை 6 மணிக்கு இடம் பெற்றது. நானும் எனது கணவரும் மாலை 5.30 மணியளவில் மண்டபத்திற்கு சென்றோம். அங்கு மாடியில் நுழை வாயிலில் எமது தமிழ் கலாச்சாரத்தின் படி கோலம்  போட்டு நிறைகுடம் குத்து விளக்கு என்பன வைக்கப்பட்டு பழைய மாணவிகள் சங்க செயற்குழு  அனைவரும் பாடசாலையின் நிறத்திற்கேற்றார் போல் பச்சை வர்ண புடவை அணிந்து வெள்ளை மலர் மாலைகளை தலையில் சூடி, புண் முறுவலுடன் அனைவரையும் வரவேற்ற வண்ணம் இருந்தார்கள். அவர்களின் கணவர்மார்களும் தங்களுக்கு அளிக்கப்பட வேலைகளை செவ்வன செய்து தமது உதவிக்கரத்தை பல வழிகளில் புரிந்து கொண்டு இருந்தார்கள்.



மண்டபத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாக  மக்கள் வந்து அமர ஆரம்பித்து விட்டார்கள். அறிவித்தலில் இருந்தவாறு சரியாக 6 மணிக்கு இரு இளம் யுவதிகள் மேடையில் காட்சி அளித்து தங்களை அறிமுகம் செய்து அனைவரையும் வரவேற்றார்கள். இது யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவர்களின் சிட்னி கிளையின் 25 ஆவது வருட சிறப்பு நிகழ்ச்சி என அறிவித்து அவர்களின் தற்போதைய போஷகரும் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்று பின் அங்கு ஆசிரியையாக இருந்தவருமான திருமதி கனகாம்பிகை ஜெகநாதன் மற்றும் திரு ஜெகநாதன் இருவரையும்  மங்கள விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்குமாறு அழைத்தனர்.






உயர்வாய் நீயும் ! - ( எம் ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


கரையை தொடும் அலைகள் - செ.பாஸ்கரன்

.

.

குளிராக எனைத்தீண்டும்
அழகான நதியாகினாய்
நதிஎன்றால் அலையோடு
விளையாடும்
கரைமோதி நடை போடும்
தெரியாத இடம் தேடி
விரைந்தோடி இதமாக்கும்
நீயும் இதமாக்கி  நதியாகினாய்

அலை பேசும் கடலாகினாய்
நிதம் பேசி எனைச் சீண்டி
கரம் கொண்டு எனை நீவி
கரை மீது எனை மோதினாய்

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 16 மரஆலையில் பீனிக்ஸ் பறவையாகத் தோன்றிய மக்கள் விடுதலை முன்னணி - ரஸஞானி


-->
தென்னிலங்கையில் தோன்றிய அரசியல் கட்சிகள் பற்றி புதிதாக எதுவும் சொல்லவேண்டியதில்லை. அவற்றுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.  இலங்கை சுதந்திரம் பெற்றதும் தொடங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் நிறம் பச்சை. அதன் தேர்தல் சின்னம் யானை.
அதிலிருந்து எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா பிரிந்துவந்து தொடக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறம் நீலம். அதன் தேர்தல் சின்னம் கை.
இவை இரண்டினதும் தலைமைக்காரியாலயங்கள் கொழும்பில் மருதானை டார்லி ரோட்டிலும் (ஶ்ரீல.சு.கட்சி) கொள்ளுப்பிட்டியில் காலி வீதியிலும் (ஐ.தே.க. ஶ்ரீகோத்தா)  அமைந்துள்ளன. லங்கா சமசமாஜக்கட்சியின் காரியாலயம் யூனியன் பிளேஸிலும் இலங்கை கம்யூனிஸ்ட்  கட்சியினது    (மாஸ்கோ சார்பு) பொரளை கொட்டாவீதியிலும் ( இன்று கலாநிதி என். எம். பெரேரா வீதி) அமைந்துள்ளன.
இவை இவ்விதமிருக்க, ஶ்ரீல.சு.க.வுடன் பிரிந்து தனது மனைவி சந்திரிக்காவுடன் சேர்ந்து விஜயகுமாரணதுங்காவும் மக்கள் கட்சி என்ற ஒரு அரசியல் இயக்கத்தை தொடக்கி, கொழும்பில் தெமட்டகொடையில் அதன் காரியாலயத்தை அமைத்தார். அவர் கொல்லப்பட்ட பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களினால் அவரது  மக்கள் கட்சி மீண்டும் ஶ்ரீல.சு.கவுடன் இணைந்துவிட்டது.
இந்தப்பின்னணிகளுடன் மக்கள் விடுதலை முன்னணியை பார்த்தால் இந்தக்கட்சி முதலில் 1971 இல் ஆயும் ஏந்தி கிளர்ச்சி செய்தமையால் தடைசெய்யப்பட்டு, மீண்டும் 1977 இல் பொது மன்னிப்பின் கீழ் அதன் தலைவர்கள் விடுதலையாகி மீண்டும் பீனிக்ஸ் பறவையைப்போன்று எழுந்து பறந்து தங்களுக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டது.
இவர்களின் பார்வையில் பச்சை, நீலக்கட்சிகள் முதலாளித்துவக்கட்சிகள் எனவும் சிவப்புக்கட்சிகளாக விளங்கிய கம்யூனிஸ்ட், சமசமாஜக்கட்சிகள் சந்தர்ப்பவாதக்கட்சிகள் எனவும் சொல்லப்பட்டது.
இலங்கையிலிருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் வரலாறு இருப்பதுபோன்று ஜே.வி.பி. என்ற மக்கள் விடுதலை முன்னணிக்கும் சுமார் அரைநூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது.
1943 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருக்கும் ரோகண விஜேவீரா குழந்தையாக இருந்த சமயத்தில் அவரது தாயாரினால் மருத்துவத்தேவைகளுக்காக அப்பகுதியில் கிளினிக் நடத்திவந்த டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்காவிடம்தான் அழைத்துச்செல்லப்பட்டவர்.
விக்கிரமசிங்கா இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( மாஸ்கோ சார்பு) தலைவராக இருந்தவர். மத்திய தர குடும்பத்தைச்சேர்ந்த விஜேவீரா முதலில் குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராகவே இருந்தார். அதனால் ரஷ்யாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச்சென்று, அதனை பாதியில் நிறுத்திவிட்டுத்திரும்பி,  சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அங்கும் அதிருப்தியுற்று தொழிலாளர்கள், விவசாயிகள், பாட்டாளிகள் மற்றும் வேலையில்லாத்திண்டாட்டத்தினால் பாதிப்புற்றிருந்த பட்டதாரி இளைஞர்களை அணிதிரட்டிக்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தை உருவாக்கி அவர்கள் மத்தியில் ஐந்து வகுப்புகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை புகலிடத்திலும் அயராது இயங்கும் 'பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசா - முருகபூபதி


உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள் எங்கிருந்தாலும் இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தாயகத்தை விட்டு ஆபிரிக்காவுக்கு சென்றாலும் அவுஸ்திரேலியாவுக்குச்சென்றாலும், தாம் ஆழ்ந்து நேசித்த பணிகளை தொடருவார்கள்.
அவ்வாறு ஏறக்குறைய மூன்று தசாப்த காலமாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவாறு கலை, இலக்கியம் உட்பட , வானொலி ஊடகம், இதழியல், சமூக அமைப்புகள் தொடர்பான பணிகளில் இயங்கிவருபவர் கிழக்கிலங்கையின் மீன்பாடும் தேனாட்டின் பிரதிநிதியான சட்டத்தரணி ' பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசா.
பாடும்மீன் என்ற சொற்பதம் எமது தமிழ்சமூகத்தின் அழிக்கமுடியாத ஓர் அடையாளம். தண்ணீரில் மீன் அழுதால், அதன் கண்ணீரை யார் அறிவார்? என்று ஒரு பாடல் வரி இருக்கிறது. அதுபோன்று மீன்பாடுமா..? எனக்கேட்பார்கள். ஆம்,  பாடும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து முழுமதி நாட்களில் செவிமடுத்தால் பாலத்தின் கீழே ஒடும் வாவியிலிருந்து எழும் ஓசையை  கேட்கமுடியும் என்று அதனை ஒலிப்பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
ஏறக்குறைய ஆறு தசாப்தங்களுக்கு முன்னரே, கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை லாங் அடிகளார் அந்த ஒலியை பதிவுசெய்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார் என்ற செய்தியிருக்கிறது.
                             இந்த ஒலி,  இலக்கியங்களில் " நீரர மகளீர் இசை" என்றும் வர்ணிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த பாடும் மீன் பெயரில் இலக்கிய இதழ்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புகள் இருக்கும் அதேசமயம் அந்தப்பெயரையே தனது பொது வாழ்வின் முதல் எழுத்துக்களாக்கி இயங்கிவருபவர்தான் எம்மத்தியிலிருக்கும் ' பாடும் மீன்' சு. ஶ்ரீகந்தராசா.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்


நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா ஆகஸ்ட் மாதம் 16ம்  திகதி காலை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மஹோற்சவம் இடம்பெற்றது.
தேர்த் திருவிழா செப்டம்பர் மாதம் 8ம் திகதியும் தீர்த்தத் திருவிழா 9ம் திகதியும் இடம்பெற்றது.



--------------------------------------------------------------------------------------------------------------------------

பசிதீரா அலைகள் - பிச்சினிக்காடு இளங்கோ


அவை எப்போதும்
அழகாகவே
அலைகளோடு

நிலாவும்  நட்சத்திரங்களும்
அன்றாடம்
விழுந்து எழுகின்றன

அனைத்தையும்
அள்ளிக்கொள்ளும்
ஆகாயமாய்  இருக்கிறது

எல்லைகள் கடந்தும்
எல்லைக்குள்ளும்
அலைகளின் பயணம்
நித்தம்.

நடை பாதை நண்பர்கள் (நடைக்குறிப்பு)- யோகன்


பாதையெங்கும் இலை உதிர்த்திருந்த  பிளம் மரங்கள்  இப்போது  வெள்ளை, ஊதாப் பூக்களை  விரித்து   வசந்தத்தை வரவேற்க ஆரம்பித்து விட்டன. துளிர்கள் வர முந்தி பூக்களை மலர்த்தும் இம்மரம்தான் வசந்தத்தின் வரவுக்கான முதல் கட்டியகாரன்.
இப்போ நடை பாதையில் நாய்களுடன் போவோரை அதிகம் காணலாம்.
நாய்களை முன்னே ஓட விட்டு பின்னல் ஓடும் இளவயதினர், நாய்களுடன் நடக்கும் நடுத்தர வயதினர், நாய்களை நடக்க விட்டு பின்னால் மொபிலிட்டி ஸ்கூட்டரில் அமர்ந்து பயணிக்கும் முதியோர் என்று பல தரப்பினர்.
முதல் இரு தரப்பினருக்கும் உடற்பயிற்சி நாய்க்கும் அவர்க்கும். மூன்றாம் தரப்பினருக்கு  உடற்பயிற்சி நாய்க்கு மட்டும்தான்.
எதனை வகை தொகையான நாய்கள் ? கேட்டால்  ஏழு வயது என்பார்கள் ஆனால் நாயின் உயரம் ஒரு சாண்தான் இருக்கும். ஆனால்  வேறு சில ஒரு மீற்றரைத் தொடும் உயரத்தில், பார்த்தால் கரடிகளைப்  போலிருக்கும் ஆனால் வயதை கேட்டால்  ஆறு மாதம் தான் என்பார்கள். 
நாளாந்தம் கண்டு பழகி ஓரிரு நாய்கள் நாளடைவில் என்னையும் தமது நடை பாதை நண்பனாக்கியதன்  காரணமாக நின்று அவற்றை தலையில் தொட்டு விட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது.   இப்படி  இந்த நாய்களாவது என்னிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் ஒரு அற்ப திருப்தி.

இலங்கைச் செய்திகள்


பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

எனது மருமகன் அப்பாவி- அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து

ஆடைகளின்றி மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் மன்னார் மக்கள் மத்தியில் அச்சம்

“ஜனபலய” ஒருவர் பலி ; மதுபோதையால் 81 பேரும் உணவு ஒவ்வாமையால் 8 பேரும் வைத்தியசாலையில் அனுமதி

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் - சட்ட மா அதிபர் ஆலோசனை

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே-மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை


பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

04/09/2018 வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழ்.மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 

உலகச் செய்திகள்


25 ஆண்டுகளுக்கு பின் ஜப்பானை புரட்டி போட்ட “ஜெபி”

கேரளாவில் மீண்டும் சோகம்; எலி காய்ச்சலுக்கு 74 பேர் பலி

இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை இடமறித்து அழித்தது சிரியா

ஜப்பானில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மீட்பு பணிகள் தீவிரம்

ஏழு தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம்- வெளியானது அதிரடி தீர்ப்பு

டிரம்பை கடுமையாக சாடி ஒபாமா உரை


25 ஆண்டுகளுக்கு பின் ஜப்பானை புரட்டி போட்ட “ஜெபி”

04/09/2018 ஜப்பானின் மேற்கு பிராந்தியத்தை தாக்கிய ஜெபி சூறாவளியால் ஜப்பானின் பல பிராந்தியங்கள் பாதிப்படைந்துள்ளன.
25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜப்பானை தாக்கிய ஜெபி சூறாவளியால் 600ற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 

தமிழ் சினிமா - எச்சரிக்கை திரை விமர்சனம்


லட்சுமி, மா என்ற குறும்படங்களை இயக்கி வெற்றிகண்ட சர்ஜுன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் எச்சரிக்கை. பாலியல் சம்பந்தப்பட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் எச்சரிக்கை படத்தில் என்ன விஷயத்தை கூற வந்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

கிஷோர்-புதுமுகம் விவேக் ராஜ கோபால் இவர்கள் தான் கதையின் முக்கிய கதாபாத்திரம். கிஷோர் விவேகம் ராஜ கோபாலின் மாமா, இருவரும் 20 வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள். இருவருக்குமே பணம் தேவைப்படுகிறது, எப்படி பணம் சம்பாதிக்கலாம், கடத்தல் வேலை செய்யலாமா என்று முடிவு செய்து தன்னுடைய காதலியையே கடத்தி பணம் சம்பாதிக்கலாம் என விவேக் நினைக்கிறார், இந்த விஷயம் கிஷோருக்கு தெரியாது.
அந்த காதலி தான் வரலட்சுமி, அவரின் அப்பா பெண்ணை காப்பாற்ற போலீஸ் கமிஷ்னரான சத்யராஜை நாடுகிறார். சத்யராஜ் மகளுக்கு ஒரு கொடிய நோய் இருக்கிறது, அவருக்கும் பணம் தேவை. இப்படி கதையில் வரும் அனைவருக்கும் பணம் தேவைப்படுகிறது. கடைசியில் இவர்களுக்கு தேவைப்படும் பணம் எப்படி கிடைக்கிறது என்பதை மிகவும் சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் ஆரம்பமே மிகவும் எதார்த்தமாக சூப்பராக செல்கிறது, அதன்பிறகு எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லை. காமெடிக்காக யோகி பாபு இருந்தாலும் அவரை சரியாக பயன்படுத்தப்படவில்லை. முதல் பாதி கொஞ்சம் டல் அடித்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் சூப்பராக செல்கிறது, கடைசி 30 நிமிடம் சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது. டுவிஸ்ட் நிறைய வைத்து சுவாரஸ்யமாக நகர்த்திருக்கிறார் இயக்குனர்.
என்ன தான் கிரைம் திரில்லராக இருந்தாலும் காதல், உறவின் முக்கியத்துவம் என எல்லாவற்றையும் மக்களுக்கு புரியும் படி சொல்லியிருப்பது சூப்பர்.
குறிப்பாக சத்யராஜ் தன்னுடைய மகளுக்காக பணத்தை எரித்து காப்பாற்றுவது செம எமோஷ்னலாக இருந்தது. இப்படி படத்தில் நல்ல விஷயம் இருந்தாலும் படத்தின் நீளம் கொஞ்சம் நெருடலாக இருந்தது.

கிளாப்ஸ்

சத்யராஜ்-மகள் காட்சிகள்
ஒரு கிரைம் திரில்லரில் சென்டிமென்ட் விஷயங்கள் வைத்தது.

பல்ப்ஸ்

படத்தின் நீளம்
முதல் பாதி எதற்கு என்று கேட்க வைப்பது
மொத்தத்தில் முதலில் நம்மை சோதித்தாலும் இறுதியில் சீட்டின் நுனியில் உட்கார வைத்து எச்சரிக்கிறார் இயக்குனர்.
நன்றி  CineUlagam