.
நெடிதுயர்ந்த பாறை ஒன்று நின்றது.
சூரியன் ஒளியில் இலங்கும் வெண் மஞ்சள் நிறமும், பளபளப்பான பக்கங்களும்,உயர்ந்த அழகிய உருவமுமாய்க் கம்பீரமாகவே நின்றது.
நதி ஒன்று ஓடி வந்தது.
சேறும், இலை தழைகளும், கடப்பம் பூக்களும், முல்லை மொட்டுகளும், பசுவின் கோமயமும், பச்சைப் புல்லின் வாசனையும் அள்ளி வரும் சிற்றாறு.
பாறையின் காலடியில் வந்து இழைந்தது.
'வருகிறாயா என்னோடு? தொலை தூரம் போகலாம்" என்றது.
பாறை சிரித்தது.
"பார்க்கவில்லையா என் உயரமும் கம்பீரமும்? என் காலடியில் நெளியும் சிற்றாறு நீ! மூக்கைப் பொத்திக் கொள்ளத் தோன்றுகிறது உன்னைப் பார்த்தால். நிற்பதானால் என் காலடியில் நின்று நிமிர்ந்து பார்க்க உன்னை அனுமதிக்கிறேன். நான் உன்னோடு வருதல் நடக்காது" என்றது.
நதி புன்னகை செய்தது.
"இன்று நான் சிறு நதி தான். என்றாலும், என்றும் ஓடிக் கொண்டே இருப்பேன் - தேங்குவதில்லை. அசைவே வாழ்க்கை. அசைவே பலம். அசைவே சக்தி. மாற்றம் ஒன்றே மாறாதது. வருகிறேன் பாறையே!"
நதி நகர்ந்தது.
மேலும் மேலும் தண்ணீர் சேர வேகம் பிடித்தது.
வெள்ளை நுரைகள் மின்னித் தெறித்திட விரிவும் வலிமையும் கொண்டது.
பச்சை வயல்களை வழியெங்கும் பாய்ச்சிச் சென்றது.
பகலவன் ஒளியில் பாறை பளபளத்து மின்னிப் பகட்டாய் நின்றது.
ஆயிரம் ஆண்டுகள் சென்றன.
வெப்பமும் காற்றும் மழையும் தாக்கப் பாறை மண்ணோடு மண்ணாகி விட்டது.
நதியோ இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.
பாதை வேறு. படுகை வேறு. பாசனம் செய்யும் வயல்கள் வேறு. ஆனால் இன்னும் அசைகிறது. வாழ்கிறது.
வரலாற்றில் பல விதமாய் வாழலாம்.
பாறை மீது சிற்றுளி கொண்டு சிலையும் எழுத்தும் கல் வெட்டுமாகச் சிற்பி செதுக்குவது ஒரு வரலாறு.
மாற்றம் ஒன்றே மாற்றம் இலாததாய், எதிலும் எதனாலும் கட்டப் படாததாய், எவரின் காலிலும் தேங்கி நிற்காததாய், நெல்லுக்கும் புல்லுக்கும் நீரைத் தருவதாய் ஓடும் நதி ஒரு வரலாறு.
பாறையாய் இருப்போமா? இல்லை நதியாய் நடப்போமா?