மரண அறிவித்தல்

 .

திருமதி Virginia Sylvester

                                தோற்றம் :- 06.06.1962                 மறைவு :- 06.05.2022

இலங்கை கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேண் Bundoora வை  வதிவிடமாகவும் கொண்ட திருமதி Virginia Sylvester அவர்கள் கடந்த 06.05.2022 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் Sebastian Sylvester அவர்களின் அன்பு மனைவியும், Divya, Anya, Shanya ஆகியோரின் பாசமிகு தாயாரும், Fabian அவர்களின் அன்பு மாமியாரும், Clotilda Gregory, Jenita Foenander, Mervyn Xavier ஆகியோரின் அன்புச் சகோதரியும், Bamini, Rasiah ஆகியோரின் சம்பந்தியுமாவார்.

அன்னார் Pushparani Walter, Jeyarajah Sylvester, Vasanthi Joseph, Nirmala Shanmugalingam, Stanley Sylvester, Vishva Perera ஆகியோரின் மைத்துனியுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 13.05.2022 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணிவரை (6PM - 8PM)  WHITE LADY PARLOUR, COOPER STREET, EPPING இல் பார்வைக்காக வைக்கப்படும்.

14.05.2022 சனிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு இறுதி ஆராதனை நிகழ்வுகள் ST DAMIAN CHURCH, SETTLEMENT ROAD, BUNDOORA இல் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் FAWKNER MEMORIAL PARK, SYDNEY ROAD, FAWKNER இல் பிற்பகல் 12.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். 

தகவல். கணவன், பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

Fabian - மருமகன் -  + 61 422 091 380


அவள்பாதம் பணிந்திடுவோம் அன்னை தினநாளில் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா ஐயிரண்டு திங்கள் சுமப்பவள் அன்னை

மெய்வருந்தி எம்மை வளப்பவள் அன்னை
கண்ணிமையா எம்மைக் காப்பவள் அன்னை
கருணையின் வடிவா யானவளும் அன்னை 

பொய்மையிலா அன்பை பொழிபவள் அன்னை
வாய்மையினை மனதில் நிறைப்பவள் அன்னை
தாய்மையெனும் பெருமை பெறுபவளும் அன்னை 
தரணியிலே தெய்வ வடிவானவளும் அன்னை 

கருவுற்றால் மகிழ்வை காட்டுபவள் அன்னை

கருவளர்ந்தால் அதனைக் காப்பவளும் அன்னை
கருகலைந்தால் உள்ளம் கலங்குபவளும் அன்னை 
கருவுருவாய் மலர கடவுளையே நினைப்பாள்

உயிர்போகும் துன்பம் அனுபவிப்பாள் அன்னை
உள்ளிருக்கும் கருவை உயிர்ப்புடனே காண 
மடிமீது தவழும் மலர்முகத்தைக் கண்டு
வாழ்வளிக்க வந்த வரமெனவே மகிழ்வாழ் 

அன்றலர்ந்த மலராய் அழகுமுகம் பார்த்து 
அவள்பட்ட துன்பம் அகன்றதென நினைப்பாள்
அவள்வாழ்வில் அமுதம் அமைந்ததென எண்னி
ஆனந்த சாகரத்தில் அவள்மூழ்கி நிற்பாள்

இவ்வுலகில் சொர்க்கம் இறங்கியதாய் நினைப்பாள்
இன்பமெலாம் பெருகி வந்ததென மகிழ்வாள் 
தன்வாழ்வில் வரமே வாய்த்ததென எண்ணி
தன்குழந்தை முகத்தைப் பார்த்தபடி இருப்பாள்

கொழும்பு தமிழ் சங்கம் பற்றி உப தலைவர் ஜெயந்தி விநோதன் - செ .பாஸ்கரன்

 


அவுஸ்திரேலியாவில் தேவகி கருணாகரனின் " அவள் ஒரு பூங்கொத்து " வெளியீடு - திருமதி திலகா பிரபாகரன்

 திருமதி தேவகி கருணாகரன் அவர்களின் 'அவள் ஒரு பூங்கொத்து" புத்தக வெளியீட்டு விழா பற்றிய ஒரு கண்ணோட்டம்.


திருமதி தேவகி கருணாகரன் அவர்களின் 'அவள் ஒரு பூங்கொத்து" என்ற சிறுகதைத் தொகுப்பின் புத்தக வெளியீட்டு விழா கடந்த ஏப்ரில் மாதம் 30 ஆந் திகதி 2022 அன்று சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு அவுஸ்ரேலிய சிட்னி மாநில ஸ்ரத்பீல்ட் என்ற நகரத்தில் அமைந்துள்ள கரிங்ரன் சேர்ச் மண்டபத்தில் இடம்பெற்றது. திருமதி கருணாகரனின் அன்பான அழைப்பை ஏற்று நானும் அந்த விழாவிலே கலந்து கொண்டேன். அந்த மண்டப வாசலிலே ஏற்றப்பட்டு இருந்த குத்துவிளக்கோடு நிறைகுடம், விபூதி, சந்தனம,; பழங்கள,; கற்கண்டு யாவும் எம் தமிழரின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றி;க்கொண்டு இருந்தன. வாசலிலே திருமதி கருணாகரன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் அங்கு வருகைதந்த மக்களை அன்போடு வரவேற்றார்கள்.

விழாவின் ஆரம்பமாக திருமதி கருணாகரனின் பேரன் அஷான் கருணாகரன் ஆங்கிலத்திலும் திருமதி சரோஜாதேவி சுந்தரலிங்கம் அவர்கள் தமிழிலும் ஒரு சிறிய ஆரம்ப உரையைக் கூறி விழாவினைத் தலைமை தாங்கி நடாத்துவற்காக வைத்திய கலாநிதி பொன் கேதீஸ்வரன் அவர்களை மேடைக்கு அழைத்தார்கள்.

தலைவர் கேதீஸ்வரன் அவர்கள் மங்கல விளக்கேற்றுவதற்காக ஸ்ரத்பீல்ட் லோட் மேயர் கவுண்சிலர் மத்தியூ பிளக்மோ, கவுண்சிலர் சாண்டி றெட்டி, திருமதி சாந்தி பாஸ்கரன், பல்வைத்திய கலாநிதி திருமதி சிவரதி கேதீஸ்வரன் மற்றும் வைத்திய கலாநிதி ரதி நடனச்சந்திரன் ஆகியோரை அழைத்தார்.

அடுத்ததாக புத்தக ஆய்வு செய்வதற்காக திரு செ பாஸ்கரன் மற்றும் சௌந்தரி கணேசன் இருவரையும் மேடைக்கு அழைத்தார் 

அதனைத் தொடர்ந்து திருமதி கருணாகரனின் பேரப்பிள்ளை அலிஷா கருணாகரன் அவுஸ்ரேலிய தேசிய கீதத்தையும் அபிநயா பிரபாகர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் இனிமையாகப் பாடினார்கள்.

தொடர்ந்து விழாவைத் தலைமை தாங்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கினார். மேலும் திருமதி கருணாகரன் தனக்கு எவ்வாறு அறிமுகமானார் எனவும் ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய கலப்பை சஞ்சிகையிலே அவரது சிறுகதைகள் பிரசுரிக்கப்பட்டதாகவும் கூறினார். தொடர்ந்து கூறுகையில் திருமதி கருணாகரன் அவர்கள் தனது இளமைக்காலத்தில் எழுதிய நாடகங்கள் மற்றும் இசையும் கதையும் போன்றவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகியிருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் இவர் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் எனவும் இவரது சிறுகதைகள் கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, ஞானம் சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளன எனவும் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து புத்தகத்தை தலைவர் வைத்திய கலாநிதி பொன்  கேதீஸ்வரன் வெளியீட்டு வைத்தார்.

 தேவகி கருணாகரன் முதல் பிரதியை, திருமதி தேவி பாலா, வைத்திய கலாநிதிகள் கதிர் நடனச்சந்திரன், வி மனோமோகன் ஆகியோருக்கும் கவுண்சிலர் மத்தியூ பிளக்மோ அவர்களுக்கும் வழங்கினார்.

கடவுள் வழிபாடு??

முருகனையோ பிள்ளையாரையோ   வழிபடுபவர்கள் சிலர் சிவனை வழிபடுவதில்லை! இது ஓர் தவறான நம்பிக்கை!

 

முருகன் பிள்ளையார் வைரவர்  என்று உருவங்களைக்கொண்ட கடவுளர் எல்லோரும் சிவபெருமானின் அருட்சத்தி வடிவங்களே

! தடத்த நிலையிலே வேறுவேறான உருவ வழிபாடு நடைமுறையில் இருந்தாலும் சொரூப அருவ நிலையிலே இக்கடவுளர் எல்லாம் பரம்பொருளான சிவபெருமானின் சத்தி வடிவங்களே!. தடத்த நிலையிலே காணப்படும் வேறுவேறு உருவங்களுக்கு இயற்றும் வழிபாடு சிவனையே சென்றடையும்.   தூய மனதுடன் உண்மையாக வழிபடுபவர்களுக்கு அவரவர் வினைப் பயன்களுக்கு ஏற்ப உரிய பலன்களை அருள்பவர் சிவபெருமான் மட்டுமே!.

இதையே சைவசித்தாந்தம் இறுதியான மந்திர முடிவென வலியுறுத்துகிறது.

இதைவிட்டு ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

 

 

காலன் ஒத்திவைத்த மரணம் ! ஐ. தி. சம்பந்தன் வாழ்வும் பணிகளும் மொழிவழித் தொழிற்சங்கங்களை உயிர்ப்பிக்க ஒலித்த குரல் ஓய்ந்தது ! முருகபூபதி


பிறக்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் மரணம் நிச்சயமானதுதான்.  எமது தமிழ் சமூகத்தில் ஒருவர்  மரணம் எய்தி அமரத்துவம் அடைந்துவிட்டால்,  இயற்கை அநர்த்தத்தினால் அல்லது விபத்தினால், வேறு ஏதும் காரணங்களினால் கொல்லப்பட்டால்,   “  காலன் கவர்ந்துவிட்டான்  “  என்போம்.

உயிரைக்கவர வரும் எமதர்மன், தனது செயலாளர் சித்திரகுப்தனிடம் ஒருவரை எவ்வளவு காலம் பூவுலகில் வைத்திருக்கலாம் எனக்கேட்டுத்தான் மரணத்தீர்ப்பை வழங்குவார் என எமது முன்னோர்கள் சொல்வார்கள்.

சித்திரகுப்தனின் கணக்குத்தவறி, எமதர்மன் தனது கடமையைச்


செய்யாமல் திரும்பிச்சென்றால்,                                           “ மரணிக்கவிருந்தவர் மயிரிழையில்  உயிர் தப்பினார்   என்ற பிரயோகமும்   சமூகத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

இம்மாதம் 03 ஆம் திகதி லண்டனில் தமது 87  வயதில் இயற்கை எய்தியிருக்கும் மூத்த தொழிற்சங்கவாதியும், தமிழ் உணர்வாளரும்,  சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளரும் , ஆவணப்பதிவாளருமான ஐ.தி. சம்பந்தன் அவர்கள், இங்கு குறிப்பிடப்பட்ட எமதர்மராஜனதும் அவரது செயலாளர் சித்திரகுப்தனதும் கணிப்பின் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட மரணத்தை அடைந்திருக்கிறார்.

இதனை வாசிக்கும் வாசகர்கள்,    அது என்ன ஒத்திவைக்கப்பட்ட மரணம்…?   எனக்கேட்கலாம்.  ஆம்… அவர் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதியே முன்னாள் மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தருமலிங்கம், மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோருடன் எமதர்மனிடம் போய்ச் சேர்ந்திருக்கவேண்டியவர்.

அவர்களுடன், இவரையும் பரலோகம் அனுப்பவந்த தமிழ் இளைஞர்களிடமிருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பியவர். அக்காலப்பகுதியில் அத்தகைய கொலைகளைச் செய்பவர்களை இனந்தெரியாதவர்கள் என்றுதான் பத்திரிகை ஊடகங்கள் பதிவுசெய்தன.

நாதஸ்வரக் கச்சேரி

 27.3.2022  இல் சிட்னிமுருகன்  ஆலயக் கல்வி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தவில் நாதஸ்வரக்   கச்சேரிக்குச் சென்று வந்தபின்னர் என்னுள் ஏற்பட்ட சிந்தனைகளிலிருந்து ஒரு துளி...  

இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்.


கடந்த 2020, 2021 ஆகிய இரண்டு வருடங்களும் உலகின் இருண்ட காலப்பகுதி என்று சொல்லலாம். மனதிற்கு அமைதியை அளிக்கக் கூடிய அல்லது  மகிழ்ச்சியைத் தரக்கூடிய எந்த ஒரு நிகழ்வையும் நடத்த முடியாத ஒரு அவலம். உறவுகள் நண்பர்களோடு கூட மகிழ்வையோ துக்கத்தையோ அருகிருந்து பகிர்ந்து கொள்ள முடியாத துயரம். உலகத்தோடு ஒட்டி மக்களின் சுகாதாரத்தைப் பேண வேண்டி 2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய சிட்னி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவமும் தடைப்பட்டுப் போனது. 2021 ஆம் ஆண்டு மகோற்சவம் பல சுகாதாரக் கட்டுபாடுகளுடன் குறிப்பிட்ட பக்தர்கள் தொகையுடன் அமைதியாக நடைபெற்றது. ஆயினும் ஒவ்வொரு வருட மகோற்சவத்தின் போதும் அழைப்பது போன்று தவில் நாதஸ்வரக் கலைஞர்களை இலங்கையில் இருந்து அழைக்கமுடியாமற் போனது கவலைக்குரிய விடயமே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.  

இந்த ஆண்டு மார்ச் மாதம் 08.03.22 தொடக்கம் 19.03.22 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தில் இசைவிருந்து அளிப்பதற்காகத் தவில் நாதஸ்வரக் கலைஞர்களை அழைப்பது பற்றிய ஆலோசனைகளும் முயற்சிகளும் சுகாதாரக் கட்டுப்படுகள் தளர்த்தப்பட்ட பின்னரே சிட்னி முருகன் ஆலயச் சைவமன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. இதனாற் குறுகிய காலத்திற் கலைஞர்கள் சிட்னிக்கு வருவதற்கான விசாவைப் பெற்றுக்கொள்வதில் நிறையச் சவால்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. சமூகத்திற்கு நன்மை தரும் பயனுள்ள நல்ல காரியங்களைச் செய்வதற்கு முயற்சி செய்தல் என்பது மிகவும் முக்கியம். அது நடப்பதும் நடக்காமல் விடுவதும் இறைவன் சித்தம். எல்லாவற்றையும் தாண்டி 'முயற்சி திருவினையாக்கும்'; என்ற பழமொழிக்கு இணங்க சைவமன்றத் தலைவர் திரு. கமலசிறி வேலுப்பிள்ளை, செயலாளர் திரு எம்.தில்லைநடேசன், பொருளாளர் திரு.  ரட்ணகுமார் கார்த்திகேசு, ஆகியோரின் அனுசரணையுடன் கலாச்சாரப் பொறுப்பாளர் திரு விமலராஜன் தர்மபாலனின் விடாமுயற்சி, துரிதமான செயற்பாடு, கலைஞர்களை எப்படியும் மகோற்சவத்திற்கு வரவழைத்து விடவேன்டும் என்பதிற் காட்டிய உறுதி ஆகியவற்றுடன் சிட்னி முருகனும் துணை நின்றதால் மகோற்சவம் ஆரம்பித்து இரண்டு நாட்களிற்; இலங்கைக் கலைஞர்கள் சிட்னி முருகன் ஆலயமகோற்சவத்தில் இசைவிருந்து அளிக்க வந்துவிட்டனர். 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) மரணங்கள் மலிந்த பூமி ( Killing Field ) தொலைவிலிருந்து விம்மலோடு அவதானித்த காலம் ! அங்கம் - 12 முருகபூபதி


கடந்த  11 ஆவது அங்கத்தில் 1987 ஆம் ஆண்டு எவ்வாறு கடந்தது என்பதை குறிப்பிட்டிருந்தேன்.  1988 ஆம் ஆண்டும் இலங்கையிலிருந்து கிடைத்த செய்திகள் பதட்டத்தையே ஏற்படுத்திக்கொண்டிருந்தன.

விடுதலைப் புலிகளுக்கும்  இந்தியப் படைகளுக்குமிடையிலான மோதல் நீடித்துக்கொண்டிருந்தது.  இதற்குள் சில புத்திஜீவிகளும் சமூகப் பணியாளர்களும் சிக்கினர்.

அதில் ஒருவர் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழக ஸ்தாபக உறுப்பினர் சட்டத்தரணி கே. கந்தசாமி.

மறைவு என்றால், மரணமடைந்துவிட்டார் என்பதே அர்த்தமாக கொள்ளப்பட்டிருந்தபோது, அவரது மறைவு பல கேள்விகளை எழுப்பியிருந்தது. அவர் ஒரு தமிழ் இயக்கத்தினால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தார். அவர் இதய நோயாளியாகவும் இருந்தார்.

அவர்பற்றி முன்னர் வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில்


அறிந்திருந்தாலும், மெல்பனில்  நான் வாழத்தலைப்பட்டபோது, அவர் கடத்தப்பட்ட செய்தியறிந்து, அவரது தமிழ் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய மேலதிக தகவல்களை, அவருடன் நெருங்கிப்பழகியிருந்தவரான சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அண்ணன் அவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

நான் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் Brunswick இல்  5/249 , Victoria Street என்ற முகவரியில் அமைந்த குடியிருப்பில் அப்போது வசித்தேன்.  சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணன் அவர்களது அலுவலகம் மிகச்சமீபமாக சிட்னி வீதியில் அமைந்திருந்தது.

அக்காலப்பகுதியில் எனக்கு இரவு நேர வேலை.  அதனால், உறங்குவதிலும் எனக்கான சமையலை கவனிப்பதிலும் கடிதங்கள், கட்டுரைகள் கதைகள் எழுதுவதிலும் எனது பகல் பொழுதுகள் கரைந்தன.

மதிய வேளையில் ரவீந்திரன் அண்ணனிடம் சென்று பேசிக்கொண்டிருப்பேன். அத்தகைய ஒரு நாளில்தான் சட்டத்தரணி கே. கந்தசாமி காணாமலாக்கப்பட்ட செய்தி கசிந்திருந்தது.  ரவி அண்ணன் அதனை ஊர்ஜிதப்படுத்தினார்.

வீரகேசரி ஊடகத்துறை  நண்பர்களிடம் கேட்டால் ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகள்தான் வந்தன.  அதற்கு முன்னர் எனது இலக்கிய உலக நண்பன் -  எழுத்தாளன் காவலூர் ஜெகநாதன் 1985 ஆம் ஆண்டில் சென்னையில் காணாமலாக்கப்பட்டபோதும், அவ்வாறே ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகள்தான்  எனக்கு கிடைத்திருந்தன. அவர் எழுதிய ஒரு நாவல்,  அவரது கையெழுத்தில் எனக்கு முகவரியிடப்பட்டு தபாலில் வந்து ஒரு சிலதினங்களில் அவர் மறைந்தார். 

காணாமலாக்கப்படுபவர்கள் இறுதிவரையில் மறைந்தவர்கள்தான்.  இன்றும் வடக்கிலும் கிழக்கிலும்  போர்க்காலத்தில்  ஆயுதப்படைகளிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றன.

ஆனால், அன்று 1987 – 1988 – 1989 – 1990 காலப்பகுதியில் தமிழின விடுதலையை நோக்கி ஆயுதம் ஏந்திய இயக்கங்களினால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களுக்காகவும் கொல்லப்பட்டவர்களுக்காகவும் அவர்களின் உறவுகள் வாய் திறந்து குரல் எழுப்பமுடியாதிருந்தது.

ஸ்வீட் சிக்ஸ்டி 13 - போலீஸ்காரன் மகள் - ச சுந்தரதாஸ்

  .

பிரபல சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் மணிக்கொடி புகழ் பி எஸ் ராமையா.இவர் எழுதிய பல கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டு வெற்றி கண்டன.சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய எஸ் வி சகஸ்ரநாமம் இவரிடம் சில நாடகங்களை எழுதி வாங்கி தனது சேவா ஸ்டேஜ் அமைப்பின் மூலம் மேடை ஏற்றி , அவை வெற்றி பெற்றன.இப்படி வெற்றி பெற்ற நாடகமான போலீஸ்காரன் மகள் நாடகத்தை பிரபல டைரக்டரான ஸ்ரீதர் படமாக்க விரும்பினார்.நாடகத்துக்குரிய சன்மானத்துடன் அதில் நடித்த சகஸ்ரநாமம்,முத்துராமன் இருவரையும் படத்திலும் நடிக்க வைப்பதென ஒப்பந்தம் போடப்பட்டது.ஸ்ரீதரின் நிதி உதவியுடன் சத்தியம்,நஞ்சுண்டான் என்ற இருவரும் படத்தைத் தயாரித்தனர்.போலீஸ்காரர் குமாரசாமியின் மகள் ஜானகி.சூதுவாது தெரியாத அப்பாவியான இவள் தன் அண்ணன் சின்னையாவின் பணக்கார நண்பனான பிரபு மீது எதிர்பாராத விதமாக காதல் கொள்கிறாள்.மலருக்கு மலர் தாவும் குணம் கொண்ட பிரபு காலக்கிரமத்தில் ஜானகியின் உண்மைக் காதலை உணர்ந்து அவளை மனதார காதலிக்கத் தொடங்குகிறான்.தெய்வ சன்னதியில் இருவரும் மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.ஆனால் இந்த விஷயம் இருவருடைய குடும்பத்தினருக்கும் தெரியாது.இதற்கு இடையில் பிரபுவின் தந்தை தன் மகன் தான் பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் இல்லாவிடில் சொத்து எதுவும் அவனைச் சேராது என்று உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார்.பணம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் பிரபு ஜானகியை கை விடத் துணிகிறான்.இதற்கு இடையில் பிரபு மேல் கொலை வழக்கு ஒன்றும் பதிவாகிறது.காதல் தோல்விக்கு உள்ளாகும் ஜானகியோ உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் உருக்குலைந்து போகிறாள்.

அரசியலில் நண்பர்களும் எதிரிகளும் ! திரிசங்கு சொர்க்கத்தில் உழலும் பிரதமர் ! ! அவதானி


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு !

அத்துடன்,    எதிரிக்கு எதிரி நண்பன் என்பதும் சமூக வழக்காகிவிட்டது.  சமகாலத்தில் இலங்கை அரசியலில் தோன்றியிருக்கும் நெருக்கயானது


நாடாளுமன்றத்திலிருக்கும் 225 பேருக்கும்,  இவர்களையெல்லாம் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்திவைத்திருக்கும்  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கும் பெரிய தலையிடியை தந்திருக்கிறது.

இந்தப்பதிவை எழுதும்போது, கொழும்பு காலிமுகத்திடலில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டம் 25 நாட்களையும் கடந்துகொண்டிருக்கிறது.

இதே வேளை,  வடக்கிலும் கிழக்கிலும் போர்க்காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக நடத்தி வரும் அறப்போராட்டம் ஆயிரத்து ஐநூறு நாட்களை கடந்துவிட்டது.  அவர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள், ஏங்கி ஏங்கியே  தங்கள் இன்னுயிரையும் விட்டுவிட்டனர்.

இலங்கையில் தோன்றியிருக்கும் பிரச்சினை, நாடாளுமன்றில் ஆசனங்களை சூடாக்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியை மட்டுமன்றி, அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குரியதாக்கியிருக்கிறது.  அவர்களில் சிலர் வாரிசு அரசியல் கனவிலும் மிதந்தவர்கள். தமக்குப்பின்னர் தமது மனைவி, மகன், மகள் மற்றும் இரத்த உறவுகளை  நாடாளுமன்ற அரசியலில் இணைத்துக்கொள்ளும் உள்ளார்ந்த எண்ணங்களில் வாழ்பவர்கள்.

அண்மையில் பிரதி சபாநாயகர் தெரிவில் நடந்த சடுகுடு விளையாட்டு கேலிக்கூத்தானதுதான் மிச்சம் !

ஆளுமை மிக்க அந்தணப் பெரியார்

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ..    ஆஸ்திரேலியா
 

   அந்தணகுலத்தில் பல ஆளுமைகள் இருந்து அரும்பணிகள்

ஆற்றி இருக்கிறார்கள்.அவர்கள் ஆலயங் களில் கிரியகைகளை ஆற்றும் நிலையிலும்
 அரச பணிகளை ஆற்றும் பதவிகளிலும் இருந்திருக்கிறார் கள்.எங்கு அவர்கள் இருந்தாலும் தங்களின் அக வொழுக்கம்புற வொழுக்கங்களை எந்த நிலையிலும் கைவிடாதவர்களாகவே வாழ்வில் விளங்கியிருக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத் தக்க தாகும். அப்படி அவர்கள் வாழ்ந்த காரணத்தால் சமூகத்தில் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்ற நிலையிலே இருந்தார்கள் இன்னும் இருக்கிறார்கள் எனலாம்.

   வேதம் ஒதுவது வேதியர்க்கு அழகு. ஆண்டவனைத் தொட்டு ஆராதித்து அவனைப் பக்தி சிரத்தையுடன் பூசிக்கும் நிலையில் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதும் அந்தணரின் அழகென லாம்.கிரியைகளை ஆற்றி ஆலய கும்பிபிஷேகங்களை முறைப்படி செய்து மக்களும் நாடும் வளமுடன் இருக்கும் வழியிலே பயணிப்பதும்கூட அந்தணர்க்கு அழகு எனலாம்.

    கிராமத்தின் நன்மதிப்பைப் பெற்று அங்கு வாழும் மக்களுக்கு நாளும் பொழுதும் நல்ல குருவாய்நல்ல வழிகாட்டியாய்நல்ல ஆலோசகராய்விளங்கிய அழகும் -  விளங்கும் அழகும் அந்தணப் பெரியோருக்கு வாய்த்திருக்கிறது எனலாம். இப்படிப் பார்க்கின்ற வேளை ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மண்ணுக்கு அந்தணப் பெரியார்கள் பெருந் துணையாகவே விளங்கி இருக்கிறார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.

   வித்துவான் கணேசையர்வித்தியாதிபதி சதாசிவ ஐயர்காசிவாசி செந்திநாத ஐயர் வித்தியாதிபதி லக்ஷ்மண ஐயர்பேராசிரியர், கா.கைலாசநாதக் குருக்கள்பண்டிதர் பஞ்சாட்சரசர்மா இந்த வரிசையில் வந்து நிற்பவர்தான் காரைநகர் ஈந்த பேராளுமை வைத்தீஸ்வரக்குருக்கள் ஆவர். ஆலயத்திலும் நிற்பார். ஆன்றோர் அவையிலும் நிற்பார். வேதமும் ஓதுவார். வித்துவான்கள் மத்தியில்  தொல்காப்பியமும் செப்புவார்.இறைவனைப் பற்றி அருட்பாடல்களையும் பாடுவார். இலக்கியக்கூட்டங்களில் இலக்கியப் பாடல் களையும் எடுத்து நயமுரைப்பார்.ஆனாலும் அந்தண ஆசாரத்தை அகமிருத்தியே அனைத்தையும் ஆற்றுவார்.

நனவிடைதோய்தற் குறிப்புகள் கண்கள் கட்டப்பட்ட பண்டாரநாயக்கா சிலை முருகபூபதி


தென்னிலங்கையில் பிரபலமான சிங்கள  ஊடகவியலாளர் வசந்த என்பர் தனது தொலைக்காட்சி செனலுக்காக முக்கிய அரசியல்வாதிகளிடம் பத்துக்கேள்விகளை முன்வைத்துவருகிறார்.

அண்மையில் அவர்,  அத்தனைகல்லை தொகுதியில் கொரகொல்லையில்  முன்னாள்  பிரதமர் பண்டாரநாயக்காவின்    பூர்வீக வாசஸ்தலத்தில்   அன்னாரின் இரண்டாவது புதல்வியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்கவை சந்தித்து பேட்டி கண்டார். இவரிடமும் ஊடகவியலாளர் வசந்த  பத்துக் கேள்விகளை முன்வைத்தார்.

 “ காலிமுகத்திடலில் நடைபெறும் மக்களின் தன்னெழுச்சி


ஆர்ப்பாட்ட போராட்டத்தை பார்க்க நீங்கள் செல்லவில்லையா..?   “ என்ற கேள்வியையும் ஊடகவியலாளர் வசந்த எழுப்பினார்.

அதற்குச் சந்திரிக்கா, தனக்கு அங்கே செல்வதற்கு விருப்பம் இருந்தாலும், தயக்கமும் இருக்கிறது என்றார்.  அம்மக்கள் தன்னைக்கண்டுவிட்டு,  ஏளனமாக,     ஹூ  சத்தம் எழுப்பினால், அவமானமாகிவிடும்  “ என்கிறார்.

அவரது  இந்தப்பதிலில் நியாயம் இருக்கிறது. 

நாடாளுமன்றிலிருக்கும் 225 பேருடன் ஜனாதிபதியுடன் சேர்த்து மொத்தம் 226 பேருமே வீட்டுக்குப்போகவேண்டும் என்றும் காலிமுகத்திடலில் குரல் ஒலிக்கிறது.

இந்தப்பின்னணியில் சந்திரிக்காவின் தந்தையும்  இலங்கையில் பிரதமராகவும் இருந்து, பதவிக்காலத்திலேயே 1959 ஆம் ஆண்டு  ஒரு பெளத்த பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான  பண்டாரநாயக்காவின் சிலையின் கண்கள் கறுப்புத்துணியினால் மூடப்பட்டுள்ளது. 

காலிமுகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்கா சிலையின் மீது  ஒரு ஆர்ப்பாட்டக்காரர் ஏறி அச்சிலையின் ஒரு கையில் நின்றுகொண்டு, கண்களை கறுப்புத்துணியினால் கட்டி மூடுகிறார். பண்டாரநாயக்கா உருவாக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் சின்னம் கை என்பதும் குறிப்பிடத்தகுந்தது!

இச்செயல் எதனைக்குறிக்கிறது..?

யார் இந்த பேங்க்ஸி? கிறிஸ்டி நல்லரெத்தினம்

இடம்: சதபி  ஏல விற்பனைக் கூடம் (Sotheby's Auction House), லண்டன்

காலம்: ஆக்டோபர் 05, 2018


உலகின் பல செல்வந்தர்கள் இன்று நடக்கவிருக்கும் ஏல விற்பனையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றரக்கலந்து ஒரு உருவம், கடைசி இருக்கையில் அமர்ந்து, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காவண்ணம் மெதுவாக கையில் இருந்த ஒரு தொலையியக்கியை - remote control device - ஒரு முறை பார்த்து புன்னகைத்துக்கொள்கிறது.
ஏலம் ஆரம்பமாகிறது!
முதலில் ஏலத்திற்கு வந்த பொருள்... உலகில் பெயர்போன

ஆநாமதேய  தெருக்கிறுக்கல் ஓவியர் பேங்க்ஸியின் (Graffiti artist:  Banksy) "பலூனுடன் ஒரு சிறுமி - Girl with the balloon" எனும் ஓவியம். மிக அழகாக தங்கமுலாம்  பூசப்பட்ட அந்த பிஃறேமின் நடுவில்  பதிக்கப்பட்டிருந்தது.
நிமிடங்கள் நகர ஏலம் சூடு பிடித்து $1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதன் விலை நகர்த்தப்படுகிறது. இறுதி விலை அதுவாக நிர்ணயிக்கப்பட்டு சதபி விற்பனையாளர் தம் கையில் இருந்த மரச்சுத்தியலை  பலமாய் மேசையில் மோதி "SOLD"  என்ற வார்த்தையை உரக்கக்கூவி அந்த ஏலத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார்.
எல்லாம் முடிந்தது!

இலங்கைச் செய்திகள்

 இலங்கையில் மீண்டும் அவசரகால நிலை பிரகடனம்; அதி விசேட வர்த்தமானி

நாடளாவிய ரீதியில் பொது நிர்வாக பணிகள் பல முடக்கம்

தனியார் ஊடக வலையமைப்பு குற்றச்சாட்டுகளை நாமல் எம்பி முற்றாக மறுப்பு

பாராளுமன்ற வீதியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்

தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த நன்றிஇலங்கையில் மீண்டும் அவசரகால நிலை பிரகடனம்; அதி விசேட வர்த்தமானி

இலங்கையில் நேற்று (மே 06) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

சுவீடனின் மருத்துவரை தூக்கிலிட ஈரான் திட்டம் 

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

பிரான்ஸ் சென்ற மோடி மக்ரோனுடன் சந்திப்பு

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை ரஷ்யாவில் அழிப்புசுவீடனின் மருத்துவரை தூக்கிலிட ஈரான் திட்டம் 

உளவுபார்த்ததாக குற்றங்காணப்பட்ட சுவீடன் மற்றும் ஈரான் நாட்டு மருத்துவர் மீது ஈரான் மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடுவது தொடர்பில் சுவீடன் வெளியுறவு அமைச்சர் கடும் கவலையை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ஞாயிறு 15 மே 2022

 


பகவான் விஷ்ணு, இந்த பூமியில் தீய ஆட்சியை நிறுத்தவும், எல்லா இடங்களிலும் அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரவும் பத்து அவதாரங்களை எடுத்ததாக அறியப்படுகிறது.நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காவது அவதாரமாக கருதப்படுகிறது

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி மே 15 ஞாயிற்றுக்கிழமை ஹெலன்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் கொண்டாடப்படுகிறது.காலை 10.00 மணிக்கு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறும்.