அப்பா - ருத்ரா

.


"எக்ஸாம் ஃபீஸ் கட்டணும்."
குரல் கேட்டு
கனிவோடு
ஒரு கடினபார்வையுடன் நான்.
"பசங்களோடு டூர் போகணும்."
முறைப்போடு கூடிய 
ஆனாலும் 
ஒரு முறையான பார்வையுடன் நான்.
ஆனால்
ப்ராக்ரஸ் ரிபோர்ட் 
கையெழுத்துக்கு மட்டும்
எப்படியோ
அம்மாவிடம் போய்விடுகிறாய்.
மகனே!
சரித்திரப்பாடத்து
ஹிட்லரின் முரட்டு முகத்தை மட்டும் தான்
என்னிடம் படிக்கிறாயா?
எப்படிடா அது?
அன்றைக்கு
இருபது ஆயிரம் வரைக்கும் 
இழுத்துச்செல்லும்
ஸ்மார்ட் ஃபோனுக்கு
அம்மாவின் 
முந்தானையைப்பிடித்துக்கொண்டாய்.
முந்தானையோடு நிற்காது
அது
ஏதாவது ஒரு
சல்வார் கமீஸ் வரைக்கும் போகும்
என்று எனக்கு தெரிந்துவிடும்
என்று தானே 
அப்படி கண்ணாமூச்சி ஆடினாய்.
இருந்தாலும்
மகனே
ரோஜாவை மட்டும்
அம்மாவிடம் பார்த்துவிட்டு
முள்ளையா
என்னிடம் பார்ப்பது?
அன்று
நெஞ்சு வலியால்
சற்று
நாற்காலியில் நான் சாய்ந்தபோது
உனக்கு வலி பொறுக்காமல்
உன் கண்ணீர்ப்பூக்களையல்லவா
என் மீது சொரிந்தாய்.
இது போதும் மகனே!
நான் இனி 
கல்லறைக்கு கூட போகத்தயார்.
போதும் இந்த‌
சில்லறைப்பிரச்னைகள் நமக்குள்.

அன்புக்குரிய விக்னேஸ், திருத்த நடவடிக்கைகளை தாமதியாது எடுங்கள்” இப்படிக்கு உண்மையுள்ள சம்பந்தன்

.


கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள்,
முதலமைச்சர் – வடக்கு மாகாணம்.

அன்புக்குரிய விக்னேஸ்,

தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி.

எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். வுpசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படாதபோதிலும் நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்பங்கள் எழக் காரணமாகியுள்ளது.

உங்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சித் தலைவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக, ஏதேனும் விசாரணையின்போது இரண்டு அமைச்சர்களினதும் நடத்தை தொடர்பாக நான் ஓர் உத்தரவாதத்தைத் தந்தால், குறித்த அமைச்சர்கள் இருவர் தொடர்பான திருத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எனது கருத்தை, கட்சித் தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்ற ஆலோசனையைக் கூறியுள்ளீர்கள்.

விசாரணை தொடர்பாக இரண்டு அமைச்சர்களினதும் நடத்தையையிட்டு நான் உத்தரவாதமளிக்க வேண்டுமென்று எவ்வாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தகைய உத்தரவாதமொன்றை நிச்சயமாக நான் தரப்போவதில்லை. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். எனினும், ஒரு சட்டரீதியான, சுதந்திரமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என நான் குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை கூறுவேன்.

பயணியின் பார்வையில் ---- அங்கம் 02

.
கொழும்பின்  புறநகரில் ஓய்வெடுக்கும்,  புறா வளர்த்த மல்லிகை ஜீவா
இம்மாதம் அவருக்கு 90 வயது
                  இலங்கையிலிருந்து  முருகபூபதி

இலங்கைக்கு வந்தது முதல் அலைச்சலும் அதிகமாகிவிட்டது. கோடைவெய்யில் ஒருபுறத்தில் வாட்டிக்கொண்டிருந்தாலும் தென்னிலங்கையில் மாலையானதும் அடைமழை பொழிந்து  அந்த வெக்கையை தணிப்பதற்குப்பதிலாக வீதிகளில் வாகனப்போக்குவரத்து நெரிசலுக்குள் மக்களை திக்குமுக்காடச்செய்துவிடுகிறது.
எமது தாயகத்தவர்களுக்கு இது பழக்கப்பட்டதுதான். என்னைப்போன்று வெளியிலிருந்து வருபவர்கள் இந்தப்பழக்கத்திற்கு இசைவாக்கம் பெறுவதற்கு பல நாட்கள் தேவைப்படலாம். நேரவித்தியாசம்  இசைவாக்கத் தாமதத்திற்கு மற்றும் ஒரு காரணி. தாயகத்திற்கு வந்து பல நாட்கள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் அதிகாலை 3 மணிக்கு துயில் எழும்படலம் ஓயவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தை தொலைத்துவிட்டபோதிலும் பிரிந்திருந்தவர்களை மீண்டும் சந்தித்து உரையாடும்போது அலைச்சலினால் வரும் களைப்பு, திடீரென்று கொட்டும் மழை திடீரென்று காணாமல்போவதுபோன்று மறைந்துவிடுகிறது.

Mahajana Maalai 2017 - 24/06/2017

.

ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம்:

.

சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.
இந்த இடத்தில் தான் நுண்வரலாறுகள் (Micro histories) கைகொடுக்கின்றன. ஒரு ஆய்வுப்பொருள் பரந்த எல்லைக்குள் அடங்கும்போது, அதை தனிநபர் அல்லது தனிச்சமூகம் அல்லது குறித்த புவியியல் பிராந்தியம் சார்ந்து வரையறை செய்து கட்டியெழுப்புவதே, நுண்வரலாறு எனப்படுகின்றது. இத்தகைய நுண்வரலாறுகளின் தொகுப்பாக முழு வரலாறு உருவாக்கப்படும்போது, அது ஐயத்துக்கிடமற்ற நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் கொண்டிருக்கும். 

இலங்கையில் பாரதி அங்கம் - 22 - முருகபூபதி

.


இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்  பாரதி நூற்றாண்டை முன்னிட்டு அமைத்த குழுவினர்  தொடர்ச்சியாக  கொழும்பிலும் இலங்கையின்  இதர பிரதேசங்களிலும்  பாரதி விழாக்களையும்  நூல் கண்காட்சிகளையும்  ஈழத்து தமிழ் - முஸ்லிம்  எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சிகளையும்  நடத்தினர்.
  நூற்றாண்டு  விழாக்களுக்காக தமிழகத்திலிருந்து  பாரதி இயல் ஆய்வாளர்கள் தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்,  எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்  ஆகியோரையும் அழைத்திருந்த சங்கம்,  கொழும்பிலும்  யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, அட்டாளைச்சேனை, நீர்கொழும்பு,  கண்டி உட்பட பல பிரதேசங்களிலும்    நிகழ்ச்சிகளை  ஒழுங்குசெய்திருந்தது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கையில்  இவ்வாறு பாரதியின் கருத்தியல்கள்  குறித்த விழாக்களுக்கும் ஆய்வரங்குகளுக்கும்  அதன்மூலம் புதிய தேடல்களுக்கும்  வழிவகுத்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இலங்கையின் அனைத்துப்பிரதேசங்களிலும் வாழ்ந்த  தமிழ் எழுத்தாளர்ளையும்  கலைஞர்களையும்  ஊடகவியலாளர்களையும் கல்வித்துறை சார்ந்தவர்களையும் ஒன்றுகூடச்செய்து கருத்துப்பரிமாறல்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன் அகில இலங்கை ரீதியில் கவிதை, சிறுகதைப்போட்டிகளையும் நடத்தியது.
தொ.மு. சி ரகுநாதன் (1923 - 2001)


உலகச் செய்திகள்


அறுதி பெரும்பான்மையை நோக்கி செல்லும் மக்ரோன்..!

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ: பலியானோரின் எண்ணிக்கை 30ஆக உயர்வு

 அமெரிக்க யுத்தக்கப்பல் - பிலிப்பைன்ஸ் கொள்கலன் கப்பல் மோதி விபத்து : 7 பேரைக்காணவில்லை

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் கத்தியுடன் ஒருவர் கைது


சம்பூர் மகா வித்தியாலய உயர்தரவகுப்பு மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா - கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் உதவி

.

அவுஸ்திரேலியா  கன்பரா மாநிலத்தின் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடனும் அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரனையுடனும் கடந்த  9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  திருக்கோணமலை மாவட்டம்  சம்பூர் மகாவித்தியாலயத்தில்  உயர்தரவகுப்பு மாணவர்களுக்கான தகவல் அமர்வும், இம்மாணவர்களின் தேவைகருதி தெரிவுசெய்யப்பட்ட  மூன்று தொண்டர் ஆசிரியர்களுக்கான நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்ட நிகழ்வும் வித்தியாலய அதிபர் திரு. சோமசுந்தரம் பாக்கியேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இவ்வித்தியாலயத்தில் குறிப்பிட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு, இந்து நாகரீகம், புவியியல், தமிழ் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை கவனத்தில் கொண்டிருந்த   இலங்கை மாணவர்கல்வி நிதியத்தின் திருக்கோணமலை தொடர்பாளர் அமைப்பு Voluntary Organization for Vulnerable Community Development    (VOVCOD) விடுத்த வேண்டுகோளையடுத்து  அவுஸ்திரேலியா,  கன்பரா இலங்கைத்     தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. ரவீந்திரனும் மற்றும் சங்கத்தினரும்  சம்பூர் மகாவித்தியாலயத்திற்கு  ஆதரவு வழங்க முன்வந்தனர்.

நெஞ்சமே ஏங்கிறது ! - எம் .ஜெயராமசர்மா ... மெல்பேண் ...

.
   
     நிலம்பெயர்ந்து போனாலும் 
       நினைவுமட்டும் மாறவில்லை
    மனமுழுக்க ஊர்நினைப்பே
        மெளனமாய் உறங்கிறது 
    தலைநிறைய எண்ணெய்வைத்து
         தண்ணீரில் மூழ்கிநின்று 
    குளங்கலக்கி நின்றதெல்லாம்
           மனம்முழுக்க வருகிறது !

     பக்கத்து வீட்டினிலே
          பந்தல்போட்டுக் கல்யாணம்
     படுஜேராய் நடக்கையிலே
          பாய்ந்துசென்று அமர்ந்திருந்து
     சுட்டுவைத்த பலகாரம்
         அத்தனையும் சுவைபார்த்து
      சுருட்டிக்கொண்டு ஓடிவரும்
            சுகமங்கே கிடைத்ததுவே  !

      பழுத்தகுலை வாழைமரம்
          இருமருங்கும் சிரித்துநிற்கும்
      பழம்மீது எங்கவனம்
           விழுந்தபடி அங்கிருக்கும்
      வரவேற்கும் சாட்டினிலே
          வாழைக்குலை அருகணைந்து
      பழம்பறித்துப் பையில்போட்டு
            பாய்ந்திடுவோம் மறைவினுக்கு !

எமன்.... நெகிழி.... ! (ப்ளாஸ்ட்டிக் )

.


936)
நெகிழியில் சூடாய்த் தரும்உணவு ஆகும்,
தகழியின் மத்தியில் நஞ்சு

(தகழி = தட்டு)

937)
இளநீர் குடிக்க, நெகிழிக் குழாய்நட்ட
அன்றே விதைத்துவிட்டோம் நஞ்சு 


938)
நெகிழியை ஊரில் விதைத்தாய், அரிசிக்குள்
வந்து விளைகிறது பார் 


939)
வெண்கொக்கு அலைந்த வயல்வெளி எங்கிலும்
நுண்நெகிழிப் பைபறக்கும் இன்று


940)
மண்பானை வாழையிலை மஞ்சள்ப்பை கொன்று,
நெகிழிக்குத் தந்துவிட்டோம் வாழ்வு


941)
பாழ்மதுவோ பாட்டிலில் பாதுகாப் போடுவரும்,
பாழ்நெகிழிப் பாக்கெட்டில் பால்.

பாரிஸ் உடன்படிக்கை - பேராசிரியர் கே. ராஜு

.
பாரிஸ் உடன்படிக்கையை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
     
அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளராக இருக்கும்போதே டொனால்ட் ட்ரம்ப் பாரிஸ் உடன்படிக்கையை ஒரு `புரளி என்று அவதூறு செய்தார். பருவநிலையை சீராக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரத்தை அதிபர் பொறுப்பு அவருக்கு அளித்தது. பாரிஸ் உடன்படிக்கையை அர்த்தமற்றதாக்கும் நடவடிக்கைகளில் ட்ரம்ப் வெளிப்படையாகவே இறங்கிவிட்டதால் அந்த உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகுகிறது என்ற அவரது ஜூன் 2 அறிவிப்பு யாருக்கும் அதிர்ச்சியைத் தரவில்லை. 
     பாரிஸ் உடன்பாடே தன்னுடைய சொந்த நலனுக்காக அமெரிக்காவால் வளைக்கப்பட்ட ஒன்றுதான். "பொதுவான ஆனால் மாறுபட்ட பொறுப்பு" என அதுவரை பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த அடிப்படைக் கோட்பாடு பாரிஸில் கைவிடப்பட்டது. கடந்த காலங்களில் கார்பன் வெளியீடுகள் மூலம் காற்று மண்டலத்தை மாசுபடுத்தியதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்க மறுத்ததின் விளைவுதான் இது. 4-1-2016 தியிட்ட அறிவியல் கதிர் கட்டுரையில் பாரிஸ் ஒப்பந்தம் பற்றிய விரிவான பரிசீலனையைச் செய்திருந்தோம். ஒப்பந்தத்தை அன்று பெருமளவு நீர்த்துப்போக வைத்தது அமெரிக்கா. இன்று அதே ஒப்பந்தத்தை அமெரிக்கா நிராகரிப்பது ஒரு கொடுமையான நகைமுரண்தான். ட்ரம்பிற்குப் பதில் ஹில்லாரி கிளிண்டன் அதிபராக வந்திருந்தாலும் பருவநிலை மாற்றம் குறித்த சிக்கலைத் தீர்க்க அமெரிக்கா பெரிய அளவுக்கு உதவியிருக்காது என்பதுதான் அமெரிக்க அரசியல். 1990ஆம் ஆண்டினை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் 2030-க்குள் 23 சதம் அளவுக்கே கார்பன் வெளியீடுகளைக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது எனில் இந்த விஷயத்தில் அதன் ஈடுபாட்டினைப் புரிந்து கொள்ளலாம். ஒப்பீட்டு அளவில் இதே காலகட்டத்தில் ஐரோப்பிய யூனியன் 40 சதம் அளவுக்கு வெளியீடுகளைக் குறைக்க ஒப்புக் கொண்டிருக்கிறது. டெமாக்ரடிக் ஆட்சியாக இருந்தாலும் ரிபப்ளிக் ஆட்சியாக இருந்தாலும் உலகத்தைக் காப்பாற்ற தங்களுக்கு இருக்கும் பொறுப்பில் நியாயமான சமத்துவமிக்க பங்கினை (fair and equitable share) ஏற்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதுதான் இந்தப் பிரச்சினையின் மையப்புள்ளி.
     பருவநிலை மாற்றம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது என்றாலே தங்களது வாழ்வியல் சௌகரியங்களைக் குறைத்துக் கொள்வது என்ற புரிதல் அமெரிக்காவில் இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால்தான் கியோட்டோ உடன்படிக்கையை நீர்த்துப் போக வைத்த பிறகு பில் கிளிண்டன் ஏற்றுக் கொண்டார். ஜார்ஜ் புஷ் அதையும் ஏற்க மறுத்தார். பாரிஸ் உடன்படிக்கையை பலவீனமாக்கிய பிறகு ஒபாமா ஏற்றுக் கொண்டார். டிரம்ப் அதையும் ஏற்க மறுக்கிறார்.


இலங்கைச் செய்திகள்


வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு : மாதம்தோறும் வருகை தருவேன் - ஜனாதிபதி

நாடு முழு­வதும் பதினாறு இன,மத­வாத சம்­ப­வங்கள் ; 5 பேர் கைது

விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம் கையளிப்பு (நேரலை)

வடக்கு முதலமைச்சர் யார்..? ; இறுதி முடிவு இன்று மாலை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக போராட்டம்

சம்பந்தன் – விக்கி சமரசம் பிரேரணை மீளப்பெறப்படும்?

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில்  ஒன்று கூடிய பொதுஅமைப்புக்கள்

சி.வி.யின் கையிலேயே முடிவு இருக்கின்றது : சம்­பந்தன்


தமிழ் சினிமா

ரங்கூன்  

மணிரத்னத்தின் கடல் படம் மூலம் அறிமுகமானாலும் இன்னுமும் வெற்றியை ருசிக்காத கவுதம் கார்த்திக் படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முயற்சியோடு இன்று அவரது நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரங்கூன். தனது சிஷ்யன் ராஜ்குமார் பெரியசாமி இயக்குனராக அழகு பார்த்து படத்தை தயாரித்துள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

கதை

Rangoon பர்மாவை பிறப்பிடமாக கொண்டு சந்தோசமாக 8 வயது வரை காலம் தள்ளிய கவுதம் கார்த்திக், தனது குடும்பத்துடன் அப்பாவின் அழைப்பின் படி பிழைப்பிற்காக சென்னைக்கு வருகிறார். 1988 வருடம் பர்மாவிலிருந்து சென்னைக்கு பலதரப்பட்ட மக்கள் படையெடுத்தனர். சென்னை வந்தவுடனே அவருக்கு குமரன், சசி என்கிற நண்பர்கள் கிடைக்கின்றனர்.
ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக தனது அப்பாவை சிறுவயதிலே இழக்கிறார், அதன் பிறகு தனது நண்பர்கள் தான் வாழ்க்கை அம்மா, தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் பஜாரில் மிக பிரபலமான நகை வியாபாரியின் அறிமுகம் கிடைக்கிறது.
அவருக்கு அந்த ஏரியாவிலே பெரிய செல்வாக்கு உள்ள நபர், அவரிடம் வேலைக்கு செல்கிறார் கவுதம் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான குமரன், சசி. கவுதம் கார்த்திக்கின் உழைப்பும் தந்திரமான புத்திசாலித்தனம் குணசீலனுக்கு மிகவும் பிடித்து விடுகிறது. இந்த நேரத்தில் தொழில் ரீதியாக குணசீலனை கொலைசெய்ய முயற்சிக்கின்றனர், அந்த நேரத்தில் கவுதம் கார்த்திக் அவரை காப்பாற்றுகிறார்.
அதன் பிறகு கவுதம் கார்த்திக் மேல் மிகுந்த நம்பிக்கையில் தங்கம் கடத்தல் சம்பந்தமாக பல முக்கிய விஷயங்களை சொல்லி தருகிறார் குணசீலன். ஒரு கட்டத்தில் நகைக்கடை வியாபாரி சங்கத் தேர்தலில் தான் தலைவராக வேண்டும் என்றால் இங்கு இருக்கும் ரு. 6 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை பர்மா தலைநகர் ரங்கூனில் பணமாக மாற்ற வேண்டிய வேலையை குணசீலன் கவுதம் கார்த்திக்கிடம் தருகிறார்.
தங்க பிஸ்கட்டுகளை ஏந்திக்கொண்டு தனது நண்பர்களுடன் ரங்கூனுக்கு பறக்கிறார் கவுதம், பிஸ்கட்களை பணமாக மாற்றி எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த தருணத்தில் 6 கோடி ரூபாய் பணம் தொலைந்து போகிறது. அதன் பின் தொலைந்த பணம் கிடைத்ததா? குணசீலன் தலைவர் ஆனாரா? என்று எதிர்பாராத சில திருப்பங்களுடன் நகர்கிறது ரங்கூன்.

படத்தை பற்றிய அலசல்

இதுவரை நடித்ததிலேயே கவுதம் கார்த்திக்கு பெயர் சொல்லும் படமாக நிச்சயம் இந்த ரங்கூன் இருக்கும், அவர் பேசும் லோக்கல் வசன உச்சரிப்பும், நம்பிக்கைக்காக அவர் செய்யும் யதார்த்தமான நடிப்பும் சபாஷ் போடவைக்கிறார். நண்பர்களாக நடித்துள்ள குமரன் என்கிற லல்லு ஒரு யதார்த்தமான நண்பனாக வாழ்ந்துள்ளார்.
இதற்கு முன் கதை திரைக்கதை வசனம் இயக்கம், 8 தோட்டாக்கள் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் நிச்சயம் அவருக்கு கைகொடுக்கும்.
அதே போல் சசியாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் டேனி தான் கதையின் முக்கிய திருப்பமாக உள்ளார். அதனை நன்கு உணர்ந்து நடித்துள்ளார். வழக்கம் போல் கதாநாயகி சனாவிற்கு சொல்லும்படி கதாபாத்திரம் வலுவாக இல்லை. எதை வைத்து முருகதாஸ் சிம்ரன் போல் இருக்கிறார் என்று சொன்னார் தெரியவில்லை. அதே போல் குணசீலன் கதாபாத்திரம், சீரியல் நடிகர் ஸ்ரீ, போலீசாக நடித்துள்ள மணிவண்ணன் கதாபாத்திரம் என எல்லாருக்குமே ஏதோ ஒரு விதத்தில் படத்தின் முக்கிய புள்ளியாக கதை நகர்த்துகின்றனர்.
பலம் என்கிறது இருக்கப்பட்டவன் இல்லாதவனை கீழ மிதிச்சி தள்ளுறது மட்டுமில்ல, அதையும் தாண்டி வருகிறான் பாரு அதிலே தான் இருக்கு என்கிற கருவுடன் பாசிட்டிவான முடிவோடு இயக்குனர் ராஜகுமாரன் பெரியசாமி கொடுத்துள்ளார்

கிளாப்ஸ்

இயக்குனர் ராஜ்குமாரின் கதையமைப்பும், ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர் செய்த ஆராய்ச்சி ஆழமாக திரையில் தெரிகிறது
நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு
நேர்த்தியான ஒளிப்பதிவு

பல்பஸ்

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம் என்று தோன்றிய விஷயம்
பாடல், பின்னணி இசை சொல்லும்படியில்லை

மொத்தத்தில் ரங்கூனுக்கு ஒருமுறை போய் வரலாம்
நன்றி CineUlagam