மூத்த தலைமுறையினருக்கு
1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தென்னிலங்கையில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின்
ஆயுதக்கிளர்ச்சி பற்றி நன்கு தெரிந்திருக்கும்.
கியூபாவில் அரசியல் மாற்றத்தை
ஃபிடல் காஷ்ரோவுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தினால் ஏற்படுத்திய புரட்சி இளைஞர் சேகுவேராவின் பெயரை
அக்கால ஊடகங்கள் அப்போது அதற்குச் சூட்டி,
சேகுவேரா போரட்டம் என்று வர்ணித்தன.
ஏர்ணஸ்ட் சேகுவேராவுக்கும்
அந்தக்கிளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை !
அப்போது நான் படித்துவிட்டு,
வேலை தேடும் படலத்தில் இருந்தேன். எம்மைப்போன்ற
இளைஞர்கள் வெளியே நடமாடுவதற்கும் அப்போது அஞ்சினோம்.
எமது வீட்டிலே வளர்மதி
நூலகம் அமைத்து நண்பர்களுக்கிடையில் நூல்களை பரிமாறிப் படித்தோம். அந்த நூலகத்தில் இணைந்திருந்தவர்கள் மல்லிகை இதழையும்
யாழ்ப்பாணத்திலிருந்து தபாலில் வரவழைத்து படித்தோம்.
1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மல்லிகை நீர்கொழும்பு
பிரதேச சிறப்பிதழும் வெளியிட்டோம். அதில் எமது நூலகம் பற்றி ஒரு சிறிய கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.
குறிப்பிட்ட நூலகத்திற்குத்
தேவைப்பட்ட இலக்கிய நூல்களை வாங்குதற்காக கொழும்பில் ஆட்டுப்பட்டித் தெருவில் அமைந்திருந்த ரெயின்போ அச்சகத்தில் இயங்கிய அரசு
வெளியீட்டு நிறுவனத்திற்கு அக்காலப்பகுதியில் சென்று சில நூல்களையும் வாங்கினேன்.
அப்போதுதான் அதன் உரிமையாளர்
எழுத்தாளர் எம்.ஏ.ரஹ்மான் அவர்களை முதல் முதலில் சந்தித்தேன்.
அந்த அச்சகத்தில்தான் ஈழத்தின்
மூத்த எழுத்தாளர் எஸ். பொ. என்ற எஸ். பொன்னுத்துரையை முதல் முதலில் பார்த்தேன்.
ரெயின்போ அச்சகத்தில் அச்சிடப்பட்ட
அரசு வெளியீடுகளான மு. தளையசிங்கம் எழுதிய புதுயுகம் பிறக்கிறது, மஹாகவி உருத்திரமூர்த்தியின்
குறும்பா, அகஸ்தியரின் நீ ( உணர்வூற்று உருவகச்சித்திரம் ) எஸ். பொ. வின் வீ, எஸ். பொ. அறிக்கை, ஏ. ஜே. கனகரத்னாவின் மத்து, உட்பட சில நூல்களைப் பெற்றேன்.
நூலகத்திற்காக அவை வாங்கப்பட்டமையால்
ரஹ்மான், எனது இலக்கிய ஆர்வத்தை பார்த்துவிட்டு குறைந்த விலையில் தந்தார்.
இவ்வாறு அரைநூற்றாண்டுக்கு
முன்னர் எனக்கு அறிமுகமான ரஹ்மான் அவர்களுக்கு இந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி 90 வயதாகப்போகிறது.
கடந்த வாரமும் சென்னையிலிருந்து
என்னுடன் வெகு உற்சாகமாக நீண்டநேரம் தொலைபேசியில் உரையாடினார்.
இவரும் இரசிகமணி கனகசெந்தி
நாதன், எஸ்.பொ., மஹாகவி உருத்திரமூர்த்தி, வி. கந்தவனம், ஏ. ரி. பொன்னுத்துரை ஆகியோரும் எங்கள் நீர்கொழும்பூரில் மூன்று நாட்கள் நடந்த தமிழ்
விழாவுக்கு வருகைதந்தபோது எனக்கு பன்னிரண்டு வயது.
அந்த விழாவில் நாடகங்களும்
நடந்தன. இலக்கிய சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. நாடகங்கள் புரிந்தளவுக்கு இலக்கியப்பேச்சுக்கள்
புரியாத பருவம் அது.
வீரகேசரி நீர்கொழும்பு
பிரதேச நிருபர் பணிக்கு நான் 1972
இல் விண்ணப்பித்தபோது, மல்லிகையில் எனது ஆரம்பகால
எழுத்துகளை பார்த்துவிட்டு, என்னை பரிந்துரைத்து கடிதம் எழுதித்தந்தவர்தான் எம். ஏ.
ரஹ்மான்.
அந்தவகையில் என்னை ஊடகவியலாளனாக்கிய
பெருமையும் இவரையே சாரும் என்பதை நன்றியோடு தெரிவிக்கின்றேன்.
இவரது ரெயின்போ அச்சகத்திலிருந்துதான்
1964 ஆம் ஆண்டு தொடக்கம் இளம்பிறை மாத இதழும் வெளிவரத்தொடங்கியது.
இவர்தான் அதன் நிருவாக ஆசிரியர்.
அருள்
வாக்கி அப்துல் காதர் மலர், சாகித்திய
மலர் , கல்வி மலர், இளைஞர் மலர் , ஆசாத்
மலர் , திருக் குர் ஆன் மலர், மீலாத் மலர்,
மற்றும் காந்தி நூற்றாண்டு மலர் உட்பட பல
சிறப்பு மலர்களையும் இளம்பிறை அக்காலப்பகுதியில் வெளியிட்டது.
இஸ்லாமிய
தமிழ் இலக்கிய வரலாற்றை வாசகர்கள் தெரிந்துகொள்வதற்கும் இளம்பிறை இதழ்கள் பெரிதும் உதவியிருக்கிறது.
உள்ளடக்கத்தில்
இஸ்லாமிய மார்க்க சிந்தனைகள் மட்டுமன்றி, கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள், நூல் அறிமுகங்கள் என்பனவற்றுக்கும் போதிய களம் வழங்கியது.