பொய்யா விளக்கு 🎬 என் பார்வையில் - கானா பிரபாஈழத்தமிழினத்தின் துயர் தோய்ந்த பக்கங்களில் 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிகழ்ந்த யுத்தத்தின் கோர அனர்த்தம் ஒரு இருண்ட காலமாக யுகங்கள் கடந்தும் நிற்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது பொய்யா விளக்கு.

புலம் பெயர் வாழ்வியல் சூழலில் இருந்து கொண்டு வானொலி ஊடகராக ஈழத்தின் நிலவரங்களை எடுத்துப் பகிர்ந்த அந்தக் கனதியான போர்ச் சூழலின் வீரியத்தை உள்ளவாறு உணரக்கூடிய நிலையிலும் இருந்தேன்.
ஏனெனில் ஷெல் வந்த காலத்தில் இருந்து, விமானக் குண்டு வீச்சுகளிலும், இடப் பெயர்வுகளிலும் மயிரிழையில் தப்பிப் பிழைத்துக் கரை சேர்ந்தவர்களில் ஒருவன் நான். 
ஆனாலும் இந்த அழிவு நாம் கடந்து வந்த பாதையில் எத்தனையோ மடங்கு கொடூரம் மிகுந்ததாகவும், ஆண்டாண்டுகளாக அனுபவித்தவை ஒரு சில நாட்களிலேயே அரங்கேறுவதையும் கண்டு கலக்கமடைந்திருந்தோம். வன்னியில் இருந்து செய்திகளைப் பகிரும் ஊடகர்கள் மெல்ல மெல்ல உதிர்ந்தார்கள். 

கொட்டும் ரத்தக் காயங்களோடும், மருந்துக் கட்டுகளோடும் கொட்டிக் கிடந்த உடலங்களையும், பயந்தழுது ஓடும் சக உயிர்களையும், குழந்தைகளையும், நடைப்பிணங்களையும் காட்டிக் கொண்டே போகும் வன்னியிலிருந்து வந்து கொண்டிருந்த காணொளிகளைக் காணும் சக்தி கிட்டவில்லை. இன்னும் ஆறா வடுவாக மனசின் அடியாழத்தில் இருந்த இதையெல்லாம் கல் தடக்கிய புண் போல மீளக் கிளப்பி விட்டது “பொய்யா விளக்கு” பார்த்து முடித்த போது.

ஈழத்தின் அந்த முள்ளான நாட்களை ஆவணப் பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும் காணொளிகள், நூல்கள் வெளிவந்தாலும் முள்ளிவாய்க்காலின் நேரடிச் சாட்சியம் மருத்துவர் வரதராஜா அவர்கள் அந்த மரண பூமியில் தினம் தினம் செத்து மடியும் சனங்களோடும், காயப்பட்டுத் துடி துடித்த குழந்தைகளோடும் வாழ்ந்த அந்த மரணத்துக்கு நெருக்கமான நிமிடங்கள் ஒரு முழு நீளத் திரைப் படைப்பாக, யதார்த்த மீறல்கள் அற்ற பதிவாக வந்திருப்பது புதுமையானதொரு காண்பியல் அனுபவம்.

மருத்துவமனைகள் போரியல் இலக்குகள் அல்ல, இது போர்ச் சட்டங்களின் அடிப்படை நியதி. ஆனால் அரை உயிரோடு துடித்துக் கொண்டு வந்து கொட்டப்படும் அந்த உயிர்களை அடுத்த சுற்றுக் காவு வாங்க வானத்தில் வட்டமிடும் இயந்திர வல்லூறுகள் ஒரு பக்கம், மிச்சம் மீதி இல்லாமல் வழித்துத் துடைத்துத் தீர்ந்து போன அடிப்படை மருந்துகள் இல்லாத நெருக்கடி இவற்றோடு அந்தக் களத்தில் இருந்து செத்து மடியும் உயிர்களைத் தன் சக்தியில் எல்லை வரை போராடிப் பிழைக்க வைக்கும் மனிதக் கடவுள்கள், அவர்களில் ஒருவராக மருத்துவர் வரதராஜாவின் நாட்குறிப்பு என்று கூட இந்தப் படைப்பைச் சொல்லலாம். அவ்வளவு துல்லியமாக அந்தக் களத்தைப் பதிவாக்குகின்றது. 

வன்னியில் இருந்து அப்போது சுடச் சுட வந்த அவலம் தோய்ந்த காணொளிகளின் உள்ளே நுழைந்து அந்தச் சூழலில் வாழ்ந்து விட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு எழுந்தது “பொய்யா விளக்கு” பார்த்து முடித்த போது. 
மருத்துவமனைகளை மரணச்சாலைகளாக்கிய வரலாறு இந்திய அமைதிப்படை காலத்தில் அவர்கள் யாழ் பொதுமருத்துவமனை வைத்து எழுதிய வரலாற்றின் நீட்சியும், பருமனும் கொண்டதான முள்ளிவாய்க்கால் காலத்தின் புறச் சூழலில் எழுந்த நெருக்கடிகள், வைத்தியர் வரதராஜா தான் ஒரு மருத்துவராக அந்தக் களத்தில் நின்று கொண்டு காய்ப்பட்டுச் செத்துக் கொண்டிருக்கும் சனங்களோடு போராடும் கணங்கள்,  இன்னொரு பக்கம் குடும்பத் தலைவனாகத் தன் குடும்பத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிமிடங்கள் என்று இரண்டு பக்கமும் பதிவாகியிருக்கின்றது. அவருக்குத் துணை நின்றவர்கள் இன்று காணாமல் போனவர்களாகப் பதியப்பட்டிருக்கலாம், முள்ளிவாய்க்கால் மண்ணின் இரத்தம் தோய்ந்த மண்ணா சாட்சி சொல்ல வரும்?

போர்ச் சூழலில் இருந்து வெளியேறிப் புலம் பெயரும் மருத்துவர் வரதராஜாவின் மனச் சிக்கலை நான் அனுபவ ரீதியாக அனுபவித்திருக்கிறேன் இந்திய அமைதிப்படை காலத்தில். 
அப்போது எனக்குப் பதின்ம வயது, வீட்டில் இருந்து வெளியேறி, அகதி முகாமிலும், கோயிலிலும் அடைக்கலம் புகுந்து மயிரிழையில் ஷெல்லடியில் உயிர் பிழைத்த அந்தக் காலங்கள், கோயிலின் முன் முற்றத்தில் கிடத்திய இரத்தம் தோய்ந்த உடலங்களை அப்புறப்படுத்திக் கழுவிக் கடந்து போன அந்த நாட்கள் கடந்து நாம் வீடு திரும்யிய போது கொஞ்சக் காலம் என்னால் அதிர்ந்து பேசவே பயமாக இருந்தது. அம்மாவுக்குப் பக்கத்தில் போய் சன்னமான குரலில் தான் பேசுவேன். இதுவொரு உளவியல் ரீதியான தாக்கம் என்று எனக்குப் பிடிபட வருடங்கள் பிடிபட்டன.  இங்கே மருத்துவர் வரதராஜன் தினமும் நூற்றுக்கணக்கான சதை கிள்ளப்பட்ட இரத்தம் தோய்ந்த உடலங்களைத் தொட்டு மருந்திட்டவர் அவருக்கு எழுந்த மனச் சிக்கலோடே படத்தின் ஆரம்பம் தொடங்கி வன்னி மண்ணின் போர்க்கால நாட்களுக்கு நகர்கிறது இந்தப் “பொய்யா விளக்கு”.

மருத்துவர் வரதராஜன் அவர்களே இந்தப் படைப்பின் மூலப் பாத்திரத்திலும் தோன்றியிருப்பதால் இன்னும் நெருக்கமாகப் படைப்பை அணுக முடிகின்றது. போர்க்காலத்தில் இருந்து புனர்வாழ்வுச் (?)  சிறைக்குள் போய் அவரும், சக தமிழரும் அனுபவிக்கும் சித்திரவதைகள், போராளிப் பெண்ணாக மாற்றப்பட்டு இராணுவ வல்லூறுகளிடம் அகப்பட்டும் அப்பாவிப் பெண், நிமிர்ந்த நடை போட்ட போராளிப் பெண்கள் கூனிக் குறுகி இராணுவ வாகனத்தில் அடைக்கப்பட்டுப் பயணிக்கும் வலி தோய்ந்த நிமிடங்கள் என்று மருத்துவர் வரதராஜாவின் பார்வையில் அந்த 2009 காலத்தின் முழு அவலமும் இங்கே பதிவாகின்றது.

“பொய்யா விளக்கு” உண்மையின் சாட்சியாக நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கும் படைப்பைக் கவனம் சிதையாமல் படத்தின் திரைக்கதை சக இயக்கத்தைக் கவனித்த இயக்குநர் தனேஸ் கோபால், மருத்துவர் வரதராஜாவுடன் இணைந்து பயணித்த பாத்திரங்கள், அந்தப் போர்க்களம் என்று எல்லாமே மீள நிகழ்த்திக் காட்டிய யதார்த்தபூர்வமான சித்திரம். அந்தக் களத்தை மீளக் கொண்டு வருவதற்கு எவ்வளவு தூரம் மினக்கெட்டிருக்கிறார்கள் என்ற ஆச்சரியமும் எழுந்தது. நம்மவரின் வலியை நிகழ்த்திக் காட்டியதில் அதீத உணர்ச்சி வசப்படுதல் இல்லாத ஒப்புதலாகவே இருந்தது.

ஈழத்தின் வலி உணர்ந்தோரும், பதினோரு வருடங்கள் கடந்து நீதிக்காக வேண்டுவோரும், மற்றோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய படைப்பிது. இந்தப் படம் சர்வதேச ரீதியில் பல விருதுகளைப் பெற்றதில் வியப்பேதுமில்லை. 

பொய்யா விளக்கு திரைப்படம் குறித்து மருத்துவர் வரதராஜா


படத்தில் இடம் பெற்ற மண்ணை இழந்தோம் பாடல் காணொளி


பொய்யா விளக்கு தற்போது கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறைமையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள் 


No comments: