`விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர். தன் முதல் படத்தில் சறுக்கினாலும் கோலிசோடா என்ற படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டியவர். கோலிசோடா என்றாலே எளியவரை வலியவர் மிதிக்க, அவர்களை ஒரு கட்டத்தில் எளியவர் எப்படி திரும்பி அடிக்கின்றார் என்பதே கதை. இதே பார்முலா தான் கோலிசோடா-2வில் என்றாலும், இது எந்த விதத்தில் ரசிகர்களை கவர்ந்தது பார்ப்போம்.
கதைக்களம்
சமுத்திரக்கனி ஆரம்பத்திலேயே போலிஸாரால் கைது செய்யப்படுகின்றார், கௌதம் மேனன் அவரை விசாரிக்கின்றார்.
இதை தொடர்ந்து மூன்று இளைஞர்களை சமுத்திரக்கனி குறிப்பிட்டு பேச ஆரம்பிக்கின்றார். அந்த மூன்று இளைஞர்களுமே வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முயற்சி செய்கின்றார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கனி உதவுகின்றார்.
ஒருவர் ஆட்டோவிலிருந்து கார் வாங்க வேண்டும், மற்றொரு இளைஞர் ரவுடியிடமிருந்து விலகி நல்ல வேலைக்கு போகவேண்டும், இன்னொருவர் பேஸ்கட்பால் ப்ளேயர் ஆக வேண்டும்.
ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு சில அதிகார வர்க்கத்தால் திசை மாறுகின்றது. முன்னவே சொன்னது போல் இந்த எளியவர்கள் வலியவர்களை எப்படி எதிர்த்தார்கள் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கோலிசோடா என்றாலே ஒரு வகை யதார்த்தம் படத்தில் இருக்கும். சிறுவர்கள் பெரிய ரவுடிகளை எதிர்க்கின்றார்கள் என்றாலும், 4 பேர் ஒருவரை அடிப்பார்கள். ஆனால், இதில் 3 பேர் 300 பேரை கூட அடிப்பார்கள் போல, அந்த அளவிற்கு படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் அடிதடி தான்.
முதல் பாதி கதைக்குள் படம் வருவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கின்றது. மாறனின் காதல், நல்ல வேலை, ஒளியின் பேஸ்கெட் பால் ப்ளேயர் ஆசை மற்றும் காதல், ஆட்டோ சிவாவின் கார் ஆசை என மூன்று இளைஞர்கள் கனவு எப்படி ஒரு புள்ளியில் சந்தித்து பிறகு எப்படி அது சிதைகின்றது என்பதை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் சூப்பர் விஜய் மில்டன்.
அதைவிட மூன்று வில்லன்கள் அவர்களை ஒரே ஜாதி என்ற புள்ளியில் இணைக்கும் இடம் சூப்பர். தற்போது மூவருக்குமே பொது எதிரி என்பது போல் கொண்டு வந்து இளைஞர்கள் எப்படி அந்த பெரும் சக்தியை எதிர்க்கின்றார்கள் என்பதையும் தெளிவாக காட்டியுள்ளார்.
ஆனால், இத்தனை தெளிவு இருந்தும் கோலிசோடா முதல் பாகத்தில் இருந்த ஒரு யதார்த்தம் இதில் கொஞ்சம் கூட எங்கும் இல்லை. அதிலும் சண்டைக்காட்சிகள் எல்லாம் கொஞ்சம் செயற்கையாகவே இருந்தது.
முதல் பாதியில் அடி வாங்கினால், இரண்டாம் பாதியில் திருப்பி அடிக்கத்தான் போகின்றார்கள் என்று ஆடியன்ஸ் மைண்ட் செட் முன்னாடியே செட் ஆனதால், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றாலும், யூகிக்க கூடிய காட்சிகளாகவே அடுத்தடுத்து வந்தது. அதிலும் கிளைமேக்ஸில் சமுத்திரக்கனி ப்ளேஷ்பேக் ஓபன் செய்யும் போதே இது தான் நடந்திருக்கும் என தெரிகின்றது.
அச்சு ராஜமணியின் இசை பாடல்களை விட பின்னணியில் கலக்கியுள்ளார். அதே நேரத்தில் சண்டைக்காட்சிகளில் கொஞ்சம் இரைச்சலையும் தருகின்றது. தானே ஒளிப்பதிவு என்பதால் கேமராவை கையில் கட்டி ஓடியிருப்பார் போல விஜய் மில்டன்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கின்றது.
படத்தின் வசனம் குறிப்பாக பேங்க் மேனேஜர் ஒருவர் இந்த உலகமே ஒரு மிஷின் தான், உங்களை போல சிறிய சக்கரத்தினால் தான் ஓடுகின்றது நீங்கள் முன்னேறி விட்டால் பிறகு நாங்க எப்படி பிழைப்பது என்று கேட்கும் இடத்தில் நம் அரசாங்கம் மீதே நமக்கு சந்தேகம் வருகின்றது.
நடிகர், நடிகைகளின் நடிப்பு, குறிப்பாக சமுத்திரக்கனி.
பல்ப்ஸ்
கோலிசோடாவில் இருந்த யதார்த்தம் இதில் மிஸ்ஸிங்.
படத்தின் முதல் பாதி ஒரு சில நிமிடம் படம் எதை நோக்கி போகின்றது என்றே தெரியவில்லை.
மொத்தத்தில் கோலிசோடா 2 முதல் பாகம் அளவிற்கு பொங்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு தாகத்தை தணிக்கும். நன்றி CineUlagam