வீடுகள்

Homes_Castle_Houses_Lakes_Scenic_Serene_Dwelling_Stay_Places_Towns_Quaint_Residence
நெடுநாட்களுக்கு முன்பு
எங்கள் எல்லோருக்காகவும்
கட்டப்பட்டது
ஒரு வீடு
அதிலிருந்து
எங்கள் ஒவ்வொருவருக்குமான
தனித்தனி வீடுகளைப்
பிரித்தெடுத்து
நாங்களே கட்டிக்கொண்டோம்
ஒரு கார் நிறுத்துமிடமும்
ஒரு புத்தக அலமாரியும்
ஒரு மர நாற்காலியும்
வெண்ணிறக் கம்பிகள் கொண்ட
ஒரு ஜன்னலும்
அதன் வழி தெரியும்
ஒரு மரமல்லி மரமும்
மூன்று செம்பருத்திச் செடிகளும்
மட்டுமே கொண்டது
என் வீடு

சிட்னி துர்கை அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

.சிட்னி துர்கை அம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று 07 05 2017 பக்தர்கள் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து ஆச்சாரியர்கள் வருகை தந்திருந்தார்கள். இலங்கையில் இருந்து பிரபல நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்களான தட்சணாமூர்த்தி உதயசங்கர் மற்றும் பஞ்சமூர்த்தி குமரன் ஆகியோர் வருகை தந்து இசை மழை பொழிந்தார்கள்.
இன்று நடைபெற்ற இந்த விழ நிகழ்ச்சிகளை ATBC வானொலி நேரடி அஞ்சல் செய்திருந்தது.


உயர்திணையின் "ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளி" அறிமுக விழா

.

சென்ற வாரம் நடந்து முடிந்த  "ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளி" என்ற நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பற்றி உயர்திணை அமைப்பின்  ஸ்தாபகர் யசோ பத்மநாதன் அவர்களின் பார்வை .

தமிழை நிஜமாக நேசிக்கும் தமிழ் பற்றாளர்களே,
நேற்றய நிகழ்வை வந்து முழுமையாக்கிச் சிறப்பித்த உங்கள் எல்லோருக்கும் முதற்கண் என் கரம்கூப்பிய அன்பும் நன்றியும். 
ஞானம் ஐயா அவர்களுடய புத்தகத்தை மையமாக வைத்துக் கொண்டு  சிறந்த ஒரு சிந்தனைப்பகிர்வை;சிந்தனைக்கான சூட்சும இடங்களை அவரவர் பாணியில் அவரவர் அழகுகளோடு முன் வைத்த சான்றோர்களாகிய பேச்சாளர்கள் எல்லோருக்கும் முதலில் என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள். ஞானம் ஐயா அவர்களுக்கும் அது திருப்தியைத் தந்திருக்கும் என நம்புகிறேன்.

பிரவீனன் - தம்பி இல்லாத நான் என் தம்பி என உரிமைகோர ஆசைப்படும் இளவல். கேட்டவுடன் எனக்காக வரத்தக்க இயல்பு காட்டி என்னை மேலும் மேலும் பெருமை கொள்ள; பெருமிதமடையச் செய்கிற இளம் புத்திஜீவி! நேற்றய தினம் தன் தகுதிப் பாட்டினை மேலும் நிரூபித்து நமக்கும் பெருமை தேடித்தந்தவர். பிரவீனன், ஞானம் ஐயா சொன்னது போல சிட்னி கொண்டாடத் தக்க ஓராழுமை. அவரை நாம் பெற்றுக் கொண்டதில் உயர்திணையும் பெருமைக் கொள்கிறது. நேற்றய தினம் நிகழ்ச்சியை செவ்வனே நடாத்தி ‘வெளி’ என்ற சொல்லுக்கான பாதையைத் திறந்து வைத்து மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை நடாத்தி இருந்தார்.

நாதஸ்வர இசைக் கச்சேரி 12 05 2017

.

படித்தோம் சொல்கின்றோம்: - முருகபூபதி

.
" என்றாவது ஒரு நாள் "  ---   ஹென்றி லோஸன்    தமிழில் கீதா மதிவாணன்

அவுஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக்கதைகள்


 " புத்தாண்டின்  முன்னிரவுப்பொழுது.  வறண்ட  கோடையின் மத்தியில்   வெக்கையானதொரு  இரவு.  திசையெங்கும் திணறடிக்கும்  கும்மிருட்டு..!  காய்ந்த  ஓடைப்பாதையின் புதர்மூடிய  வரப்புகளும்  கண்ணுக்குத்தென்படாத  காரிருள். வானைக்  கருமேகமெதுவும்  சூழ்ந்திருக்கவில்லை.  வறண்ட நிலத்தின்  புழுதிப்படலமும்  தொலைதூரத்தில்  எங்கோ  எரியும் காட்டுத்தீயின்  புகையுமே  அந்த  இரவின் இருளைக்கனக்கச்செய்திருந்தன."

இவ்வாறு ஆரம்பிக்கிறது ஹென்றி லோசனின் ஒற்றைச்சக்கர வண்டி  என்ற சிறுகதை.

யார் இந்த ஹென்றி லோசன்...?


பசுமை நிறைந்த நினைவுகளே.......B.h. Abdul Hameed

.
பசுமை நிறைந்த நினைவுகளே.......
பறந்து சென்றதே - ஒரு பறவை.

இலங்கை வானொலி வரலாற்றில் 'சொற்சொரூபவதியாய்' போற்றப்பட்ட சகோதரி, செல்வி.சற்சொரூபவதி நாதன் அவர்கள், இன்று (4/5/17) பிற்பகல் 2.45 அளவில் தன் இன்னுயிர் நீத்த செய்தி, நம் வானொலிக்குடும்பத்தில் ஒரு 'மூத்த' சகோதரியை இழந்த துயரினைத் தருகிறது.
'யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கம்' அவருக்கு "சகலகலா வித்தகி" எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்தமைக்குப் பொருத்தமாக, வானொலித்துறையின் பல்வேறு அம்சங்களிலும் தன்னை ஈடுபடுத்தி மிளிர்ந்தவர்.
வானொலிக் கலைஞராக, அறிவிப்பாளராக,செய்தி வாசிப்பாளராக, செய்தி ஆசிரியராக, வானொலி எழுத்தாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, வானொலித்துறைக்கான 'பயிற்சிப் பட்டறைகள்' பலவற்றின் நெறியாளராக, பல்கலைக் கழகத்தில் 'ஊடகத்துறைக்கான' பகுதிநேர விரிவுரையாளராக, என அவரது பங்களிப்புகள் பரந்து விரிந்தவை.
சிறிது காலத்திற்கு முன்.........
சென்னைப் பல்கலைக் கழகத்தில், 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவ மாணவியர் முன்னிலையில் உரையாற்ற வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று அங்கு நான் சென்று, கேட்போர் கூடத்துக்குச் செல்லும் மாடிப்படிக்கட்டுகளில் கால்வைத்தபோது, மேல்தளத்துச் சுவரில் மாட்டியிருந்த மிகப்பெரிய படம் ஒன்று வரவேற்றது. அண்ணார்ந்து பார்த்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதலாவது 'பட்டதாரி' C.Y. தாமோதரம் பிள்ளை என, எங்கள் மண்ணின் மைந்தரது பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பெருமையால் நெஞ்சமும் நிமிர்ந்தது. கூடவே, இன்னும் யார் யாரெல்லாம் நம் மண்ணிலிருந்து இங்குவந்து கல்விகற்று பட்டம் பெற்றிருப்பார்கள்? என அறிய ஆவல் கொண்டு பார்த்தபொழுது, அவ்வரிசையில் எம் வானொலிக் குடும்பத்தின் மூத்த சகோதரி 'சற்சொரூபவதி நாதன்' என்ற பெயரும் இருக்கக் கண்டு இருமடங்குப் பெருமிதம் கொண்டேன்.
தன் 21 வது வயதிலேயே, 'ஜவஹர்லால் நேரு விருது' பெற்றவர் என்ற செய்தியும் அவர் பெருமையினைப் பறைசாற்றியது. 

உலகச் செய்திகள்


சிரிய எல்லைப் பகுதியில் தாக்குதல்; 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

டி.டி.வி.தினகரனுக்கு நீதிமன்ற காவல் ; டில்லி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

 ‘நிர்பயா’ கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு புதிய வழியை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்..! 


தகர்க்க முடியாத ‘தாசி’ சிறை

.

பல நூற்றாண்டுகளாகக் கோயிலுக்குள்ளேயே வாழ்ந்து கோயில் திருப்பணி களை அர்ப்பணிப்போடு செய்து வந்தவர்கள் தேவதாசிகள். ஆனால் ‘இறைவனின் அடிமை’ என்கிற அர்த்தத்தில் சிறுமிகளைக் கோயில்களில் பொட்டுக்கட்டிவிட்டு, அவர்களைப் பாலியல் தொழிலாளியாக்கியது தேவதாசி முறை. அதிலும் கடந்த நூற்றாண்டில் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டுச் சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டுக் கீழ்த்தரமாக அவர்கள் நடத்தப்பட்டார்கள்.
தடை மட்டும் போதுமா?
முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், பெரியார் உள்ளிட்டோரின் மிக நீண்ட சமூகப் போராட்டத்துக்குப் பிறகு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. “இந்த நாள்பட்ட கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது. ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகையால் இவ்வழக்கம் பெண்களின் கவுரவத்தைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாயிருக்கிறது” என 1930-லேயே குடிஅரசு இதழில் பெரியார் தலையங்கம் எழுதினார். தமிழகத்தில் 1947-லேயே தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் வந்துவிட்டாலும், தேசிய அளவில் 1988-ல்தான் இந்த முறை தடைசெய்யப்பட்டது.

சிட்னி துர்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக என்னைக் காப்பு

உரத்தகுரலை எழுப்புவோம் ! எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்

.
   உணவுக்குப் பின்னாலே ஒழிந்திருக்கும் உழைப்பு
          உறைவிடத்தின் ஆக்கமதில் நிறைந்திருக்கும் உழைப்பு
          அனைவருமே உடுத்திநிற்கும் ஆடைகளின் உழைப்பு
          அகிலத்தில் நினைக்கும் நாளதுவே நல்சிறப்பு !

          உழைப்பில்லா நிலையினிலே உலகமே இயங்கா
          உழைப்பவர்கள் உலகமதின் உன்னதமே ஆவார் 
          களைப்பின்றி உழைக்குமவர் கடின உழைப்பாலே
          கலகலப்பாய் யாவருமே வாழுகிறார் நாளும் !

           உழைக்கின்ற வர்க்கமே உலகத்தில் பெரிது
           உழைக்கின்றார் கஷ்டமதை உணர்ந்துவிடல் வேண்டும் 
           உழைப்பதற்குத் தகுந்தபடி ஊதியத்தை கொடுக்க
           உலக   முதலாளிகள் உளம்விரும்ப வேண்டும் !

           முதலைவைத்து ஒருநாளும் உழைப்புவர மாட்டா
           முதலோடு தொழிலாளி இணைப்பு வரவேண்டும் 
           தொழிலாளி உழைப்பினிலே முதலிணையும் போது
           உற்பத்தி புறப்பட்டு உலகெங்கும் பரவும் !

           மாடிமனை கோடிபணம் வாகனங்கள் எல்லாம்
           வாழ்க்கையிலே வருவதற்கு வருந்துகிறார் பலபேர் 
           கோடிபணம் கிடைத்தவுடன் கோபுரத்தில் ஏறி 
           குருதிசிந்தி உழைப்பாரைக் கொன்றுவிடல் முறையோ !

           சேற்றிலே காலைவைத்துத் தினமுமே உழைக்காவிட்டால்
           சோற்றிலே கையைவைத்துச் சுவைத்திடல் முடியுமன்றோ 
           ஆற்றையே மறித்துக்கட்டும் ஆற்றலை கொண்டுநிற்பார் 
           அகிலத்தில் உழைப்பதாலே அனைவரும் வாழுகின்றோம் !

           காலையில் எழுந்துநாளும் மாலையில் படுக்கும்போது
           கடினமாய் உழைத்துநிற்பார் காவலாய் நிற்கின்றார்கள்
           கஷ்டத்தைப் பார்த்திடாமல் இஷ்டமாய் உழைப்பதாலே
           களிப்புடன் நாளும்நாங்கள் களிக்கிறோம் வசதியாக !

இலங்கைச் செய்திகள்


யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

வரட்­சி­யினால் 9 இலட்சம் பேர் தவிப்பு : வடக்கில் 4 இலட்சம் பேர் பாதிப்பு 

கொட்டாஞ்சேனை தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை: கொமாண்டர் மாபாவின் விளக்கமறியல் நீடிப்பு

நீதிமன்ற உத்தரவை மீறி கொக்கிளாயில் சிங்களமீனவர்கள் உழவு இயந்திரத்தினால் கரைவலை இழுப்பு

 பூநகரி இரணைத்தீவு மக்கள் உண்ணாவிரத போராட்டம்!இலங்கையில் பாரதி - அங்கம் 18 - முருகபூபதி

.
 கடந்த வாரம்  தமிழ் முரசுவில்  எழுதியிருந்த இலங்கையில் பாரதி அங்கம் 17 இல், இந்திய மறுமலர்ச்சியின் பிதா ராஜாராம் மோஹனராயர், மற்றும் மகாகவி பாரதி, பேராசிரியர் கைலாசபதி, மு. தளையசிங்கம் ஆகியோரின் மறைவுக்குப்பின்னர் இறுதி நிகழ்வில் நடந்த விடயங்கள் விமர்சனத்திற்குரியவை என்ற தொனிப்பொருளில் எழுதியிருந்தோம்.
                இதுபற்றி, இந்தத்தொடரைத் தொடர்ந்து வாசித்துவரும் ஒரு வாசகி, " பாரதியைப்பின்பற்றியவர்களின் கருத்து அவர்களின் பின்னும் வாழ்கிறது. அவர்களுடைய சடலத்திற்கு நடந்தமை அவர்கள் பெருமையைப்பாதிக்க முடியாது." என்று எமக்கு எழுதியிருந்தார்.
அவரது கருத்து முற்றிலும் சரியானது.  அதுவே உண்மையானது. ஒருவர் மறைந்துவிட்டால் அதன்பின்னர் அவர்களுக்காக மற்றவர்கள் நடத்தும் சமயச் சடங்குகளுக்கும் மதம் சார்ந்த  பாரம்பரிய நம்பிக்கை நடைமுறைகளுக்கும்  மறைந்தவர் பொறுப்பேற்க முடியாது.
மறைந்தவர் மீண்டும் எழுந்து வரமாட்டார் என்ற திடமான நம்பிக்கையுடன் மறைந்தவர் பற்றிய நடவடிக்கைகள் தொடருகின்றன.
பாரதியின் மனைவி செல்லம்மாவுக்கு மொட்டை அடித்த காட்சியை சடலமாகிப்போன பாரதியால் எழுந்து வந்து பார்க்க முடியுமா....? உயிருடன் இருப்பவர்கள்தான் அதுபற்றி ஏதும் எழுதவும்  பேசவும் முடியும்!!!
அவ்வாறே பாரதி குறித்து தொடரும் சர்ச்சைகளுக்கும் அவருடைய பல்துறை  சிந்தனைகளுக்கும் தரப்படும் வியாக்கியானங்களுக்கும், பாரதி பற்றிய திறனாய்வில் சொல்லப்படும் மறு வாசிப்பு அனுபவங்களுக்கும் பாரதி மீண்டும் வந்து பதில் சொல்ல முடியாது.

"பாரதி மொழியுணர்வுக் கவிஞனா...? தேசிய உணர்வுக் கவிஞனா...?" என்ற தலைப்பில் பட்டிமன்றங்கள் இலங்கையில் பலபாகங்களிலும் நடந்திருக்கின்றன.


காலத்தின் வாசனை: கடைசி மீன்கொத்தி! - தஞ்சாவூர்க் கவிராயர்

.

சென்னையை ஒட்டியுள்ள இந்த புறநகர்ப் பகுதியில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சியளித்த கழனிகள் இப்போது காணாமல் போய்விட்டன. பூசணியும், வெள்ளரியும், கத்தரியும், வெண்டையும் காய்த்துக் குலுங்கிய மண் கட்டாந்தரையாகி விட்டது.
பெரிய ‘புல்டோசர்’கள், ராட்சத மரம் வெட்டி இயந்திரங்கள் உலோகக் கைகளுடன் மரங்களையும் செடிகளையும் வேரோடுப் பிடுங்கி எறிந்தன. பயிர்களின் தாகம் தீர்த்த விவசாயக் கிணறுகளின் திறந்த வாய்களில் மண் கொட்டப்பட்டு மூடப்பட்டது.
ஒரு பிரம்மாண்டமான ஏரி மெல்லப் பின்வாங்கியது.. பின் காணாமலே போனது.. அவ்வளவுதான்! சகல வசதிகளுடன் கூடிய ஒரு குட்டி நகரம் அங்கே உருவாகிவிட்டது. வீட்டுமனை விற்பனை அமோகமாக நடந்தது. அரசாங்கத்தின் மாநகர வளர்ச்சிக் குழும நிறுவனம், வரைபடம் போட்டு வயல்களின் வயிற்றை அறுத்துக் குடியிருப்புகளைப் பிரசவிக்கவைத்தது.
நானும் ஒரு வீட்டுமனை வாங்கிப்போட்டேன். சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய மனையின் மதிப்பு லட்சங்களாக உயர்ந்தது. பூர்வீக கிராமத்தின் விவசாயிகள், காலமெல்லாம் வயலே கதியென்று கிடந்தவர்கள், பத்திரப் பதிவு அலுவலகத்தில் வேட்டியும் சட்டையுமாய் நின்றார்கள்.
“விக்க வேணாம்ப்பா... வேணாம்ப்பா” - பெரியவர்கள் கெஞ்சினார்கள்.
“சும்மா கிட தாத்தா... கொண்டா உன் கட்டை விரலை..” - அவர்களின் கட்டை விரல்களில் மை தடவப்பட்டுப் பத்திரங்களில் உருட்டப்பட்டன. அவர்களின் வாரிசுகள் பயிர் நிலங்களில் பணம் காய்ப்பதைப் பார்த்துப் பிரமித்துப்போனார்கள்.

தமிழ் சினிமா


பாகுபலி


ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் கண் விழித்து காத்திருந்தது பாகுபலி-2 படம் எப்போது வரும் என்று தான். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், தேவசேனாவை ஏன் பல்வாள்தேவன் சிறை பிடித்தான், சிவகாமியை கொலை செய்ய சொன்னது ஏன்? என பல கேள்விகளுக்கு விடையாக இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது பாகுபலி-2. இப்படம் முதல் பாகத்தை மிஞ்சியதா? பார்ப்போம்.

கதைக்களம்

முதல் பாகத்தை தொடர்ந்து சிவகாமி உத்தரவின் பேரில் பாகுபலி, கட்டப்பா நாட்டில் மக்களின் நிலையை அறிய ஊர் முழுவதும் சுற்றி வருகின்றனர். அப்போது தேவசேனாவின் (அனுஷ்கா) தைரியத்தை பார்த்த பாகுபலிக்கு காதல் பற்றிக்கொள்கின்றது.
நாட்டை பாகுபலியிடம் இழந்த பல்வாள்தேவனுக்கு தேவசேனா மீது காதல் என்பதை விட, பாகுபலியிடமிருந்து அவளை பிரிக்க எண்ணி சிவகாமியிடம் தேவசேனாவை தனக்கு திருமணம் செய்துக்கொடுக்குமாறு கேட்கின்றார்.
இதன் பிறகு சிவகாமி தேவசேனாவை தன் மகனுக்கு மணம் முடிக்க கேட்க, தேவசேனா கடும் அதிர்ச்சிக்கு ஆளாகின்றார். இதை தொடர்ந்து என்ன ஆகின்றது? கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை சுவாரசியத்தின் உச்சமாக ராஜமௌலி விஷ்வல் ட்ரீட் கொடுத்துள்ளார்.

படத்தை பற்றிய அலசல்

முதன் முறையாக ஒட்டுமொத்த திரையுலகமும் ஓர் இயக்குனருக்காக படத்தை எதிர்ப்பார்க்கின்றது என்றால் அது ராஜமௌலியாக தான் இருக்க வேண்டும். தனி மனிதனாக 5 வருடம் இப்படத்தை செதுக்கியதற்காகவே எழுந்து நின்று பாராட்டலாம்.
முதல் பாகத்திலேயே பல பிரமாண்டங்கள் காட்ட, இதில் அதை மிஞ்ச வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் எந்த ஒரு இடத்திலும் பிரமாண்டத்தை திணிக்கவில்லை. கதைக்கு என்ன தேவையோ அதை தான் எடுத்துள்ளார். கதாபாத்திரங்களின் அழுத்தம் முதல் பாகத்தை விட இதில் நன்றாக உள்ளது.
மேலும், இதில் கட்டப்பா சத்யராஜ் முதல் பாகத்தில் அழுக்கு படிந்த முகம், அடிமை வாழ்க்கை என்று இருப்பார். ஆனால், இதில் கொஞ்சம் கலகலப்பாக காட்டப்பட்டுள்ளார். காமெடி ஒர்க் ஆகியுள்ளது, இருந்தாலும் ஏன் பாகுபலியை கொன்றார் அதை நாங்கள் சொல்ல முடியுமா? திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
பிரபாஸ் முழுவதுமாகவே தன்னை ராஜமௌலியிடம் ஒப்படைத்துவிட்டார். பாகுபலி, சிவுடு என இரண்டு கதாபாத்திரங்களிலும் கம்பீரமாக மிரட்டியுள்ளார். அதிலும் பல்வாள்தேவனிடம் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் அத்தனை கோபங்களையும் கண்களின் வழியே நம்மிடம் சேர்க்கின்றார்.
அனுஷ்கா முதல் பாகத்தில் வெறும் சங்கிலியால் மட்டுமே தான் கட்டப்பட்டு வருவார். ஆனால், இதில் ஹீரோவிற்கு நிகராக தூள் கிளப்பியுள்ளார். அட இதெல்லாம் எப்ப எடுத்த சீன், அனுஷ்கா இவ்வளவு அழகா என கேட்க வைக்கின்றது. (தற்போது தான் எடைப்போட்டுவிட்டார்), அதிலும், மகிழ்மதிக்குள் இவர் வரும் காட்சி சிலிர்க்க வைக்கின்றது.
படத்தின் முதல் பாதி ’ஆ’ என்று அசர வைக்க, இடைவேளை மேலும் நம்மை வேறு லெவலுக்கு எடுத்து செல்கின்றது. அத்தனை எதிர்ப்பார்ப்புடன் இருக்க, இரண்டாம் பாதி ‘முதல் பாதி அளவிற்கு இல்லையே, என்ன கிளைமேக்ஸ் கொஞ்சம் எதிர்ப்பார்த்த மாதிரி இல்லையே’ என்று நினைக்க வைக்கின்றது. படத்தின் இரண்டாவது ஹீரோ மரகதமணி என்று சொல்லிவிடலாம், பல இடங்களில் நம்மை அறியாமலேயே எழுந்து நின்று கைத்தட்ட வைக்கின்றது அவரின் பின்னணி இசை.
படத்தில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன், நாசர், ராணா, பிரபாஸ், சத்யராஜ் என மொத்த கலைஞர்களும் செமயாக நடித்துள்ளனர்.

க்ளாப்ஸ்

படத்தின் விஷுவல் ட்ரீட், இசை, ஒளிப்பதிவு, காஸ்டியூம் மற்றும் செட் என அனைத்து டெக்னிக்கல் டீமும் 100 சதவீத உழைப்பை கொடுத்துள்ளனர்.
எல்லா நடிகர்களுக்கும் கொடுத்த முக்கியத்துவம்.
படத்தில் இடம்பெறும் மாடு சண்டை காட்சிகள்.
இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளை மிஸ் பண்ணவே கூடாது.

பல்ப்ஸ்

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் ஒருசில இடங்களில் மிஸ்ஸிங்.
கிளைமேக்ஸ் காட்சியில் குறை கூற முடியாது, இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருக்கலாம். ஒரு சில இடத்தில் லிப் சிங்க் சரியாக இல்லை.
மொத்தத்தில் இந்திய சினிமாவே பெருமை கொள்ளும் ஒரு படம், இந்த பிரம்மாண்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க.

Review in English