மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண்டின் பேச்சுப் போட்டி - சோனா பிறின்ஸ் .

.


மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண்டின் பேச்சுப் போட்டி 11/5/2013 அன்று கொலிற்றன் பாடசாலையில் இடம்பெற்றது .ஒரு நிமிட மௌன அஞ்சலியை அடுத்து ,தலைவர் பெருமாள் குமார் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் Ed Husic அவர்கள் உரையாற்றிய பின்பு பேச்சுப் போட்டிகள் ஆரம்பமாகின .
யாமறிந்த மொழிகளிலே இனிதான தெங்கும் காணோம் எனும் பாரதியாரின் கூற்றுக்கமைய பூக்கள் போன்ற மழலைகள் பூவிதழ்களை மெல்ல விரித்து பூக்களைப் பற்றி பேசும்போது அக்குழந்தைகளின் முகங்கள் மட்டும் பூக்கள் போல் இல்லை ,குவளை போன்ற கண்களும் சிந்தனைக்கேற்றாற் போல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டு அழகைச் சொரியும் வேளை ,கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டா ,உன்கண்ணில் நான்கண்டேன் ,உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்றேன் எனும் கவிஞரின் பாடல் வரிகள் நினைவில் வந்து மணம் வீச பூக்களே பூக்கள் பற்றிப் பேசும் விந்தையில் என் சிந்தை மகிழ்ந்தேன் .

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..



வண்ணங்கள் ஏழு!  எண்ணங்கள் ஆயிரம்!
வாழும் வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களின் குணநலன்களும் பலவிதம்தான்!  சொந்தங்களாலும்
பந்தங்களாலும் மனிதன் சிறை வைக்கப்பட்டிருக்கிறான்
என்பது கூட மிகையில்லை.

காட்டு மனமிருந்தால் கவலை மறந்துவிடும்
கூட்டைத் திறந்துவிட்டால் குருவி பறந்துவிடும்!
என்பார் மற்றொரு பாடலில் கவியரசர்..
காலில் விலங்குமிட்டோம்..
கடமையென அழைத்தோம்
என்றதும் அவரே!

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதெல்லாம் ஏட்டில் மட்டும் எழுதப்பட்ட வாசகங்களாய் மாறிப் போயின!  உடன் பிறந்த சொந்தம்.. உயிர் வழி வளர்ந்த பந்தம் என்பதெல்லாம் பழைய கணக்காய் தெரிகின்றன! ஆயிரம்தான் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என ஆகிப்போன பூமியில் அட.. என்ன சொல்ல முடிகிறதுபந்தங்கள் தெறிக்கப்பட்டுத் தனித்தனியாய் வாழ்கின்றனர்!!

ஏட்டுக் கல்வியென்றும் தொழில் கல்வியென்றும் ஆயிரமாயிரம் படிப்புகள் புதிது புதிதாய் துவங்கப்படுகின்றன!  இந்த உறவுகளுக்குள் பாலம் அமைக்கும் எந்த முறையும் இதுவரையில்லை.  ஏன்? இந்தக் குழப்பங்கள்எதற்காக இந்தப் பிரச்சினைகள்விட்டுக்கொடுப்பதை விட்டுவிட்டு விலகி நிற்பதை ஏன் தேர்ந்தெடுக்கிறோம்?  பரஸ்பர உறவுகளைப் பாதுகாப்பதைவிட தண்டிப்பதை ஏன் விரும்புகிறோம்

 மன அழுத்தம், மன பாரம் இவைகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், நடைமுறைச் சாத்தியத்தில் வாழ்ந்து பார்க்க ஏன் முயற்சிப்பதில்லை!  பகுத்துப் பார்க்க வேண்டிய ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும்போது உறவுகளை மட்டும் ஏன் வகுத்துக்கொண்டே போகிறோம்ஈவு என்ன கிடைக்கும்
 மீதியென்ன வரும்??

காட்சிப் பிழை - கே.எஸ்.சுதாகர்






பாலகிருஷ்ணனின் மாமா அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். 'ஹோல்' மகிழ்ச்சியும் சிரிப்புமாக களை கட்டியிருந்தது.

விருந்தாளி, பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி கலைச்செல்வியையும் பார்ப்பதற்குத்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்திருந்தார்கள். கனடாவில் கலைச்செல்வியின் அப்பாவும் அண்ணனும் இருக்கின்றார்கள். வவனியாவிலிருந்து கொழும்பு வந்து பின்னர் கனடா வந்த களைப்பு இன்னமும் தீரவில்லை.

குளியலறைக்குள் பாலகிருஷ்ணன் 'ஷேவ்' செய்து கொண்டிருந்தான்.  முப்பது வருடங்களாகியும் பாலாவின் முகத்தினில் இருந்த தழும்புகள் மறையவில்லை. அதை தடவிப் பார்த்தான். காலம் போக வடுக்கள் எல்லாம் மறைந்து, உடம்பில் ஒரே ஒரு வடு மாத்திரமே தங்கும் என சொல்வார்கள். ஆனால் முப்பது வருடங்களாகியும் வடுக்கள் பத்திரமாக, அதே இடத்தில் அப்படியே இருந்தன. அவை நிலைக்கண்ணாடியில் இப்போது விஸ்வரூபமாகத் தெரிகின்றன.

வாழ்வை எழுதுதல் யாசகம் - முருகபூபதி




அவுஸ்திரேலியாவில் 90 களில் நாம், தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியபோது, இங்கு புலம்பெயர்ந்துவந்த தமிழ்க்குழந்தைகளுக்காக மனனப்போட்டிகளையும் நாவன்மைப்போட்டிகளையும் நடத்தினோம். இந்த நாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் ஒளவையாரின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதனை மனப்பாடம் செய்து கருத்தும் சொல்லுமாறு கேட்டிருந்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.
அப்பொழுது எனது மகனுக்கு நான்கு வயது.
அவன் அத்திசூடியை மனப்பாடம் செய்யும் பயற்சியில் பலநாட்கள் ஈடுபட்டான். கருத்தும் சொல்லிக்கொடுத்தபோது, ஒளவையார் முரண்படுகிறார் என்றான்.
அவனது வாதம் இதுதான். 
அறம்செய விரும்பு, ஐயம் இட்டு உண். இவை இரண்டும் தானதருமங்களை சொல்பவை. அதாவது இல்லை என்று கேட்டுவருபவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது பொருள்.
ஆனால் ஏற்பது இகழ்ச்சி என்றும் ஒளவையார் சொல்லிவிட்டாரே. எப்படி இதுசரியாகும்.?
அதாவது பிச்சை எடுக்காதே என்பதுதானே பொருள்.

இலங்கைச் செய்திகள்


வங்கியில் அடகு வைத்த நகை மீட்ட போது போலியானது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

எமது வற்புறுத்தலின் பேரிலேயே எனது தந்தை நீராகாரத்தை உட்கொள்கின்றார் : அமீனா அசாத் சாலி

மத்தல விமான நிலையத்திற்கான சேவைகளை எயார் அராபியா இரத்து செய்ய தீர்மானம்

பெடியள் விடாயினம்” என்றவர்கள் இன்று பெடியளை (கை)விட்டு விட்டார்களா?: சவாலாகியுள்ள புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் மீளொருங்கிணைப்பு

அஸாத் சாலியின் கைதுக்கு எதிராக ஹர்த்தால்

தமிழர் காணியில் தென்பகுதியினர் கட்டிடம் கட்ட நீதிமன்றம் தடை


வடக்கில் அமையும் தமிழ் அரசாங்கம் சர்வதேச பிரசங்கத்துடன் கூடிய பொறுப்புக்கூறும் விடயங்களை பின்னணிக்குத் தள்ளுவதற்கு முயற்சிப்பதன் மூலம்  ஒரு அரசியல் தீர்வுக்கு மீண்டும் வழிவகுக்கலாம்
 - என்.சத்தியமூர்த்தி

அஸாத் சாலி விடுதலை தொடர்பில் தமக்கு தெரியாது: ஹுலுகல்ல, புத்திக சிறிவர்தன, மொஹான் சமரநாயக

வெள்ளவத்தை விபத்து : சுவிஸிலிருந்து வந்த சகோதரியும், சகோதரனும் பலி, இருபிள்ளைகளையும் இழந்து பெற்றோர் பரிதவிப்பு

இலங்கை அணியில் உள்வாங்கப்பட்ட தமிழ் வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் 

 காத்தான்குடியில் பதற்றம்: பொலிஸ்,இராணுவம் குவிப்பு
======================================================================

வங்கியில் அடகு வைத்த நகை மீட்ட போது போலியானது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு


08/05/2013 தேசிய சேமிப்பு வங்கியின் நீர்கொழும்பு கிளையில் அடகு வைக்கப்பட்ட நகையை அடகு வைத்த பெண் மீட்டபோது அதில் ஒரு நகை போலியாக இருப்பதைக் கண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மே 18 தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - May 18 Tamil Genocide Remembrance Day





இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம்.

ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.

சர்வதேச அரசுகள் தத்தமது சொந்த அரசியல் நலன்களை முன்னிறுத்தினாலும் அடிப்படையான மனிதாபிமானத்தோடு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பேரவலத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்துவருகின்றன. ஆனாலும் இவை போதுமான அழுத்தங்களை சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்கவில்லை.

கொடியபோர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆனபோதும் தமிழர்களுக்கான ஆகக்குறைந்த அரசியல்அதிகாரங்களை வழங்கக்கூடாது என்பதில் சிறிலங்கா அரசு கவனமாக இருந்துவருகின்றது. அதேவேளையில் தமிழர்களின் இருப்பை இலங்கைத்தீவில் இல்லாமல் செய்வதற்கான திட்டமிட்ட இனவழிப்பை படிப்படியாக மேற்கொண்டு வருகின்றது.

எனவே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களின் ஒருமித்த குரலே அந்தந்த நாடுகளின் வெளியுறவுக்கொள்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, தாயகத்தில் வாழும் மக்களின் அரசியல் இருப்பை உறுதிசெய்யும்.

அந்தவகையில் தமிழீழத் தேசிய இனத்தின் ஆன்மாவை உலுக்கிப்போட்ட மே மாதத்தின் நினைவுகளைச் சுமந்தபடி, மரணித்துப்போன எம்முறவுகளின் கனவுகளைச் சுமந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெறும் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாளின் ஒன்றுகூடலில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.

சிட்னியில் நினைவு நாள் 18 May 2013




உலகச் செய்திகள்


அமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன் காணாமல்போன யுவதிகள் மூவர் உயிருடன் மீட்பு!

பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தல்

பாகிஸ்தானில் இன்று தேர்தல்

பங்களாதேஷ் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு 

 உளவுபார்க்கவும், தாக்குதல் நடத்தவும் கூடிய ஈரானின் ஆளில்லா விமானம்!

===================================================================

அமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன் காணாமல்போன யுவதிகள் மூவர் உயிருடன் மீட்பு!

08/05/2013 அமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன 3 யுவதிகள், அந்நாட்டின் ஒஹியோ மாநிலத்தில் கிளேவ்லாந்த் எனும் இடத்திலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட யுவதிகள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது உடல் நலம் நல்ல நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமண்டா பெரி, கினா டிஜீஸஸ், மெசெல் நைட் ஆகியோரே கடத்தப்பட்ட யுவதிகளாவர்.

தமிழ் சினிமா


கௌரவம் 

’மொழி’, 'அபியும்நானும்’ உள்ளிட்ட வெற்றி திரைக்காவியங்களை தந்த இயக்குனர் ராதா மோகன் - தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் தான் கௌரவம்.
படிப்பு, நாகரீகம், விஞ்ஞானம் என்று அனைத்து மாறுதல்களையும் ஏற்று அனுபவிக்கும் இந்த சாதிய கட்டமைப்பு, தலித் மக்களை மட்டும் அவர்களின் அடிப்படை உரிமையைக் கூட அனுமதிக்க விடுவதில்லை.
இன்னமும் செருப்புப் போட்டு தெருவில் நடக்க முடியாத நிலை, மேற்படிப்பு படித்தால் ஒதுக்கி வைக்கும் சாதீய கட்டுப்பாடுகள், தெருவோர டீக்கடைகளில் இரட்டை டம்ளர், மற்ற சாதியினருடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சினிமா கூட பார்க்க முடியாத கொடுமை, சாலை முனைகளில் மூடப்பட்டுக் கிடக்கும் சூரியனாய் அம்பேத்கர் சிலை.
இதையெல்லாம் முதன்முறையாக ஒரு சினிமாவில் காட்சிகளாய் வைத்திருக்கிறார்கள் என்றால் அது இந்த 'கௌரவ'த்தில்தான்.
குடும்ப கௌரவம் என்ற பெயரில், தன் சாதி கௌரவத்தைக் காக்க எதையும் செய்யத் துணியும் ஒரு குடும்பம் அல்லது கிராமத்தின் கதைதான் இந்தப் படம்.
தன் அலுவலக வேலையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும் வழியில் உடன்படித்த நண்பனின் கிராமத்தைப் பார்க்கிறார் நாயகன் அல்லுசிரீஷ்.
நண்பனைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது தான் அவன் உயர் சாதி பெண்ணை காதலித்து, ஊரைவிட்டே ஒடிப்போனதாகவும், அதன் பின்னர் அவனைப் பற்றியோ அந்தப் பெண்ணைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள்.
நண்பனைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என்று களமிறங்குகிறார். உடன் படித்த நண்பர்களுக்கும் தகவல் சொல்லி திரட்டுகிறார். நண்பனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
யாரும் தொடத் தயங்கும் தலித்களுக்கு எதிரான சாதீய கொடுமைகளை இந்தப் படம் மூலம் சாட முயன்றுள்ள இயக்குனர் ராதாமோகன்.
அதை நினைத்த மாதிரி சொல்ல முடியாமல் அல்லது எதற்காகவோ சமரசம் செய்து கொண்டதில் சற்றே சறுக்கிவிட்டார்.
ஆரம்ப காட்சிகளில் தெரியும் அழுத்தம், போகப் போக நீர்த்துப் போகிறது. ஊர் பெரிய மனிதர் பிரகாஷ்ராஜையும் அவரது மகனையும் காட்டும்போதே, காணாமல் போன ஜோடிக்கு என்ன நேர்ந்திருக்கும், அந்த குடும்பத்தின் சாதி கௌரவம் எப்படிக் காப்பாற்றப்பட்டிருக்கும் என்ற உண்மை தெரிந்துவிடுகிறது.
அதற்குமேல் நகரும் காட்சிகள் ஒரு சடங்கு மாதிரி ஆகிவிடுவதுதான் படத்தின் பெரிய மைனஸ். யாரும் போகத் தயங்கும் அந்த பேய்க் கோயிலில் மனநிலை பிறழ்ந்த சிறுவனைக் காட்டும்போதே, அவன்தான் இந்தக் கதையின் முக்கிய சாட்சி என்பதுகூட எளிதாய் புரிந்துவிடுகிறது.
பாதிக்கப்படும் சமூகத்தையும் அவர்களுக்கு நேரும் அவலங்களையும் காட்டிய ராதா மோகனால், பாதிப்பை ஏற்படுத்தும் சாதியை குறிப்பிட்டுச் சொல்ல முடியாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில், ஆதிக்க சாதி என்ற நிலையில் இருக்கும் எந்த சாதிக்கும் இந்த குணம் பொதுவானதுதானே.
நாயகன் சிரீஷுக்கு நடிப்பு, உடல்மொழி என்று எதுவும் சரியாக வரவில்லை. அவர் இந்தப் படத்துக்கு சரியான தெரிவுமல்ல. தெலுங்குக்கான ராதாமோகனின் இந்த சமரசம், தமிழையும் காவு வாங்கிவிட்டது. நாயகி யாமி குப்தா சில காட்சிகளில் பரவாயில்லை.
ஆனால் அவருக்கு படத்தில் என்ன வேலை என்பதுதான் புரியவில்லை. நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் நண்பர்களை இணைத்து போராடும் காட்சிகள், சமீபத்திய மாணவர் போராட்டங்களை நினைவூட்டின.
நாடகத்தனமாக இருந்தாலும், நடப்பது சாத்தியமே. நாசரை வீணடித்திருக்கிறார்கள். நான்கைந்து காட்சிகளில் வருகின்ற பிரகாஷ் ராஜ் அடக்கி வாசிக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாகத் தெரிபவரை, க்ளைமாக்ஸில் நல்லவராக்கியிருக்கிறார் இயக்குனர்.
வழக்கம்போன்று குமரவேலுக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். ப்ரீத்தியின் ஒளிப்பதிவும், தமனின் இசையும் பரவாயில்லை என்னும் அளவுக்குதான் உள்ளன.
ஆனால் விஜியின் வசனங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக சென்னையைப் பற்றியும், ஆதிக்க சாதியினரிடம் அடிபட்ட வலியில் 'நாம அடிச்சா ரத்தம் வராதாடா' என்று குமரவேல் கொந்தளிக்கும் காட்சியில் வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும் அந்த வலியை ekf;Fஉணர வைக்கிறது.
ஒரு கிராமம் கிடக்கு.. பச்சையுடுத்திய வயலுக.. அச்சமுடுத்திய பயலுக வாழ... என்ற பாடல் வரிகள் மதன் கார்க்கியை மெச்ச வைக்கின்றன. தலித்களின் வலியை ஒரு தலித்தான் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை.
சமூகத்தில் ஒரு பார்வையாளனாக நிற்கும் யாரும் சொல்லலாம். அப்படியொருவர்தான் ராதா மோகன். நல்ல முயற்சி முழுமையாக இல்லையே என்ற ஆதங்கத்துடன் விமர்சிக்க வேண்டியுள்ளது.   நன்றி விடுப்பு