தமிழ்முரசு 5ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது

.



அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை உங்கள் தமிழ்முரசு 5ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.

அன்பு மனத்துடன் வாழ்ந்திடுவோம் !

.
       [எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்]

ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே - நாங்கள்
ஆடிடுவோம் விளை யாடிடிவோம்
பாடிடுவோம் தினம் பாடிடுவோம் - எங்கள்
பரமன் புகழோங்கப் பாடிடுவோம்

அன்னையை தந்தையை போற்றிடுவோம் - நிதம்
ஆண்டவனின் புகழ் பாடிநிற்போம்
கன்னித்தமிழினை நாம் வளர்ப்போம் - என்று
காலம் முழுதும் உழைத்துநிற்போம்

நல்லதை என்றுமே செய்திடுவோம் - என்று
நாளும் பொழுதும் நினத்துநிற்போம்
தொல்லைகள் செய்வதை விட்டிடுவோம் - நிதம்
தூய மனத்துடன் வாழ்ந்திடுவோம்

வல்லவராக வளர்ந்திடுவோம் - என்றும்
வாய்மையே பேசி நின்றிடுவோம்
நல்லவரோடு இணைந்திடுவோம் - நாளும்
நட்புமலர்ந்திடச் செய்திடுவோம்

சோம்பலைத் தூக்கி எறிந்திடுவோம் - நாளும்
சுறுசுறுப் புடனேயே வாழ்ந்திடுவோம்
தேம்பி அழுவதை நிறித்திடுவோம் - என்றும்
சிந்தனை செய்துமே வாழ்ந்திடுவோம்

மற்றவர் மனம் நோகச்செய்திடாமல் - என்றும்
மகிழ்ச்சியை மற்றவர்க் கீந்திடுவோம்
அற்பக் குணங்களை அகற்றிடுவோம் - வாழ்வில் 
அகந்தையை ஒழித்து நின்றிடுவோம்

ஆண்டவனின் புகழ் பாடிடுவோம் - என்றும்
அன்பு மனத்துடன் வாழ்ந்திடுவோம்
வேண்டும் வரமெல்லாம் தந்திடுவான் - எங்கள்
விண்ணில் உறைகின்ற வேதப்பொருள்

தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2014

.

.

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா    இந்த ஆண்டிற்கான “தமிழ் வளர்த்த சான்றோர் விழா”வினை  மார்ச் மாதம் 16 ஆம் திகதி அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்துடன்  இணைந்து
ஹோம்புஸ் ஆண்கள் உயர் பாடசாலை மண்டபத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது.  சரியாக 5.30 மணிக்குத் அரங்கு நிறைந்த அவையினருடன்     விழா ஆரம்பித்தது. செந்தமிழ்க் கவிதைகளாலே நிகழ்ச்சிகளைப் பல் மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள் தொகுத்து வழங்கியமை விழாவிற்கு மெருகூட்டியது.

அமிழ்தமாம் இளமைகுன்றா அருந்தமிழ் மொழிக்கு
    அளப்பரிய பணியியற்றி அணிகள் பூட்டித்
தமிழ்மணக்க உலகரங்கிற் பெருமை சேர்த்த
    தனித்துவம்மிகு திருமுருக வாரியார் மற்றும்
புகழ்மணக்க யாழ்நகரில் வாழ்ந்த வணபிதா
    புனிதன்திரு தனிநாயக அடிக ளாரையும்
அகமகிழ்வொடு நினைவுகூர்ந்து எடுக்குமிவ் விழாவில்
    அன்பொடுநான் மங்கலவிளக் கேற்றிட அழைப்பது……

தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக் கழகந் தன்னில்
  தகைமைமிகு தமிழ்த்துறைத் தலைவராய்ப் புகழ்
விஞ்சவிரு தசாப்தங்கள் கடமை யாற்றி
    விருதுகள்பல பெற்றுயர்ந்து புலம்பெ யர்ந்து
எஞ்சியநாள் கழித்திடஅவுஸ் திரேலி யாவில்
   இணையிலாத்தமிழ் அமுதசுரபி யாய்த் தமிழைக்
கொஞ்சிமகிழ் ஞானாவைக் குதூகலமாய்  விழாவில்
   குத்துவிளக் கேற்றஅழைக் கின்றேன் வருக!

கந்தன் கருணைப்படுகொலை (30.03.1987)


அமலியா  சைனி அருண்
இந்தப் படுகொலை இடம்பெற்று 27 வருடங்கள் ஆகிவிட்டன. 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்தப் படுகொலை இடம்பெற்றது.

அரை மணித்தியாலத்திற்குள் அதாவது 30 நிமிடங்களுக்குள் 63 தarunaமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இரண்டே இரண்டு தமிழ் இளைஞர்கள் இந்த 63 பேரையும் சுட்டுக் கொன்றனர். ஒருவரின் பெயர் அருணா இவன் தன்னந்தனியனாக 50ற்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றான். சூடுபட்டு உயிர் இழக்காமல் முனகிக்கொண்டிருந்தவர்களை சந்தியா என்பவன் சுட்டுக் கொன்றான். அருணா, சந்தியா என்பது அவர்களுடைய இயக்கப் பெயர்கள். யாழ்ப்பாணம் நகருக்கு அண்மையிலுள்ள கல்லூரி வீதியில் இந்தக் கொடூரம் இடம்பெற்றது.
யாழ் இந்துக் கல்லூரிக்கும் இந்து மகளீர் கல்லூரிக்கும் இடையிலே இருந்த வீடொன்றிலேயே இக் கொலைகள் இடம்பெற்றன. அந்த வீட்டு உரிமையாளரின் பெயர் நடராஜா. அவர் யுத்தச் சூழல் காரணமாக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துவிட்டார். இவ்வாறு யுத்தச் சூழலிருந்து பாதுகாப்புத் தேடி வடக்கு கிழக்கிலிருந்து கணிசமான தமிழ் மக்கள் குடும்பத்துடன் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

தமிழ் சமூகத்தினரின் புதுவருட ஒன்றுகூடல்

.



சிட்னியில் சித்திரைத் திருவிழா - 13.04.2014


.

கவிஞர் அம்பியின் நனவிடை தோய்தல் குறிப்புகள்:முருகபூபதி

.
தந்தை    செல்வநாயகத்துக்காக   தேர்தல்  பிரசாரத்தில்  ஈடுபட்ட  அம்பி
                                            
                                                                                              
                                                                                                   குவின்ஸ்லாந்து    மாநிலத்தில்    எமது   அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்   கலை - இலக்கிய   சந்திப்பு   அரங்கு  நிகழ்வை முடித்துக்கொண்டு   சிட்னிக்கு    திரும்பினேன்.
கவிஞர்   அம்பியின்   ஏக புதல்வர்  திருக்குமாரன்  என்னை  சிட்னி   விமான  நிலையத்திலிருந்து    அழைத்துச்சென்றார்.    நீண்ட   நாட்களாக   படுக்கையில் தஞ்சமடைந்தவாறு    அவ்வப்போது    சக்கரநாற்காலியிலும்   வோக்கரிலும் வலம்வரும்   கவிஞர்   அம்பி    என்னைக்கண்டதும்    முகம்மலர   வரவேற்றார்.
எனது   வருகையை   அவர்   எதிர்பார்த்து   காத்திருந்தார்.   அவரை   எப்பொழுது சந்திக்க  நேரிட்டாலும்   எனக்கு   எழுதுவதற்கு   ஏதாவது   விடயதானம் கிடைத்துவிடும்.   அண்மைய   சந்திப்பில்   முதலில்  எமது   பேசுபொருளாக இருந்தது   மாயமாக    மறைந்துவிட்ட   மலேசியன்   ஏயர்லைன்ஸ்  (MH 370) விமானம்தான்.
 மலேசியப்பிரதமர்    உத்தியோகபூர்வமாக   தெரிவித்த   செய்திகளை உள்வாங்கிக்கொண்டே    -    சரிதான்   -   அனைவரும்    ஜலசமாதிதான்  -  என்று    ஏக்கப்பெருமூச்சு விட்டார்.
அப்பொழுது   அவரது    உடன்பிறந்த    சகோதரர்    ஒருவர்    மலேசியாவிலிருந்து    தொலைபேசியில்    தொடர்புகொண்டு   எம்மிருவரையும்    வியப்பில்    ஆழ்த்தினார்.    அந்தச்சகோதரர்   சோதிடம் பயின்றவர்.    பலருக்கு   சாதகக்குறிப்பு   பார்த்து   பலனும்   சொன்னவர்.

சங்கமம் -2014 12.04.2014

.

சங்க இலக்கியக் காட்சிகள் 2 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா



.
----------------------------------------------------------------------------------
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்> பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
----------------------------------------------------------------------------------
உறவா? பொருளா?

காட்சி 2
திரைகடல் ஓடித் திரவியம் தேடியவர்கள் நமது பண்டைத் தமிழ் மக்கள். அயல் ஊர்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் மட்டுமல்லாமல் கடல் கடந்த நாடுகளுக்கும் சென்று பொருளீட்டி வருவது அந்தக் காலத்தில் சாதாரணமாக இருந்திருக்கின்றது. அவ்வாறு செல்லும் ஆண்கள் தங்கள் காதலிகளைப் பிரிந்திருப்பதும்அதனால் அவர்கள் வாடியிருப்பதுமான காட்சிகள் சங்க இலக்கியங்களில் நிறையவே உள்ளன. அவ்வாறானதொரு காட்சியை இப்போது காண்போம்.
மனமொத்த காதலர் இருவர் களவு ஒழுக்கத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருநாள் அவளைச் சந்திக்காமல் இருப்பதற்குக்கூட அவனால் முடியாது. அவளும் அப்படித்தான். தினமும் அவனைக் காண்பதிலும் அவனோடு கதைப்பதிலும் உடலுறவில் கலப்பதிலும் மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருப்பவள். இருவருமே திருமணம் செய்து ஒன்றாக வாழும் நாளை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருப்பவர்கள். காதலில் வீழ்ந்த நாள்முதல் இதுவரையில் ஒருவரை ஒருவர் காணாத நாள் இல்லை என்றபடி காணாத வேளைகளில் நினைந்தும் கண்டபோது பிணைந்தும் தீராத காதலில் நனைந்து மகிழ்ந்து இன்புற்றிருப்பவர்கள்.
இந்த நிலையில் அவனுக்கு வெளியூர் சென்று பொருளீட்டி வருவதற்கான வாய்ப்பொன்று வருகிறது. நீண்டகால முயற்சியின் பின்னரே இந்த வாய்ப்புக் கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்தி வெளியூர் சென்றால் நிறையப் பொருளீட்டி வரலாம் காதலியுடன் இன்பமாக வாழலாம் என்பதையெல்லாம் அவன் அறிவான். அதனாலேயே அதற்கு அவன் முயற்சி செய்தான். இப்போது போவதற்கான தருணமும் வந்து விடுகிறது.

உலகச் செய்திகள்


சிலியில் மீண்டும் நில அதிர்வு

தாய்லாந்தில் இரண்டாம் உலகப்போர் கால குண்டு வெடிப்பு; 6 பேர் பலி!

காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்தான இறுதி தொடர்பாடல் வார்த்தையில் மாற்றம்

பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் அறிமுகம்

தூக்குத் தண்டனை எதிரான மனு இந்திய உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி


=======================================================================

சிலியில் மீண்டும் நில அதிர்வு

03/04/2014  சிலி நாட்டிற்கு அண்மையிலுள்ள பசுபிக் கடற் பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் 7.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய  தினம் 8.2 ரிச்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்து சுனாமி எச்சரிக்கை விடுக்கபப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 






தாய்லாந்தில் இரண்டாம் உலகப்போர் கால குண்டு வெடிப்பு; 6 பேர் பலி!


02/04/2014   தாய்லாந்தின் பாங்கொக் நகரிலுள்ள கழிவு உலோக களஞ்சியசாலையொன்றில் இரண்டாம் உலகப்போர் கால குண்டென சந்தேகிக்கப்படும் குண்டொன்று இன்று புதன்கிழமை வெடித்ததால் குறைந்தது 6 பேர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
 பணியாளர்கள் அந்த குண்டை வெட்டி திறக்க முயற்சித்தபோதே அது வெடித்துள்ளது.
நிர்மாணத்தளமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குண்டை நிர்மாணப் பணியாளர்கள் செயலிழந்த குண்டெனக் கருதி கழிவு உலோகங்களை சேகரித்து விற்பதில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் விற்றுள்ளனர்.
இதனையடுத்து கழிவு உலோகக் களஞ்சியசாலைக்கு கொண்டு வரப்பட்ட அந்த குண்டில் உள்ள உலோகப் பகுதியை பிரித்தெடுக்க பணியாளர்கள் முயற்சித்தபோது அது வெடித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பால் குறிப்பிட்ட களஞ்சியசாலை மட்டுமல்லாது அருகிலுள்ள வீடுகளும் கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.


நன்றி வீரகேசரி 






காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்தான இறுதி தொடர்பாடல் வார்த்தையில் மாற்றம்

01/04/2014   காணாமல் போன மலேசிய எம்.எச். 370விமானத்திலிருந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட இறுதித் தொடர்பாடல் வார்த்தை குறித்து திருத்தமொன்றை மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 
அந்த விமானத்திலிருந்து இரவு வணக்கம் மலேசியா 370 மற்றும் அனைத்தும் சரியில்லை இரவு வணக்கம்  என்பதே இறுதி வார்த்தையாக கூறப்பட்டதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. 
மேற்படி இறுதி வார்த்தை துணை விமானியால் கூறப்பட்டது என்பது தொடர்பில் தடயவியல் நிபுணர் ஆய்வை மேற்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கிறது. 
இதற்கு முன் அந்த விமானத்திலிருந்து கடைசியாக கேட்கப்பட்ட இறுதி வார்த்தை எல்லாம் சரி, இரவு வணக்கம் என கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
எனினும் மேற்படி விமானத்திலிருந்தான இறுதி வார்த்தை ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்தோ, அந்த வார்த்தை குறித்து சரியாக தீர்மானமெடுக்க அதிகாரிகள் ஏன் இவ்வளவு நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டார்கள் என்பது குறித்தோ தெளிவற்ற நிலை நிலவுவதாக கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி 






பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் அறிமுகம்

01/04/2014   இந்திய  ரிசர்வ் வங்கி நூறு கோடி பிளாஸ்டிக் 10 ரூபா நாணயத் தாள்களை கேரளாவின் கொச்சி, கர்நாடகத்தின் மைசூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஒரிசாவின் புவனேஸ்வர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா ஆகிய 5 நகரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.
அவுஸ்திரேலியா ,கனடா மற்றும் சிங்கப்பூர் உள்ளட்ட 30 நாடுகளில் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 






தூக்குத் தண்டனை எதிரான மனு இந்திய உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி

01/04/2014  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிராக மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்தது.
23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, கருணை மனு மீது முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதம் காரணமாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
அந்த மனுவில், 'தலைமை நீதிபதி ப.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.கே.சிங் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதி அமர்வு இந்த வழக்கின் தன்மையை பரிசீலிக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து அரசின் அதிகார வரம்புக்குள் நுழைய துணிந்திருக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பிறப்பித்த இந்த தீர்ப்பு அதற்கான அதிகாரம் இல்லாத 3 நீதிபதி அமர்வால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு, அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சட்டம் சார்ந்த பல்வேறு விளக்கங்கள் தொடர்புடையது என்பதால் 5 நீதிபதி அமர்வு விசாரித்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பு முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது என்றே மரியாதையுடன் நாங்கள் தெரிவிக்கிறோம். இந்த நீதிமன்றம் வகுத்துள்ளதும் மற்றும் அரசமைப்புச் சட்டம் மற்றும் இதர சட்டங்களில் இடம்பெற்றுள்ளதுமான காலம் காலமாக நடைமுறையில் உள்ள சட்ட கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன.
கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் அதில் தலையிட அதிகாரம் இல்லாத போதும் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 72ஆவது பிரிவு கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் நிராகரித்து பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதி மன்றம் தலையிட்டது அதன் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாகும்.
குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்துவிட்டால், அந்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு வரம்புக்குட்பட்ட அதிகாரமே இருக்கிறது. கருணை மனுமீது உரிய பரிசீலனை தரப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கருதி இருந்தால் மறு பரிசீலனைக்காக குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். தாமதம் பிரச் சினையாக இருந்திருந்தால், அந்த மனு மீது விரைந்து முடிவு எடுக்கும்படி குடியரசுத் தலை வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம். 3 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து தீர்ப்பு பிறப்பிக்கும்போது மத்திய அரசு வைத்த வாதங்கள் உரிய வகையில் பரிசீலிக்கப்படவில்லை' என்று அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவு பிறப்பித்தது.  நன்றி வீரகேசரி

















பண்பாடும் பண்பாளர் – எம். ஜெயராமசர்மா (மெல்பேண்)

.

photo_2
நெற்றியில் திருநீறும் முகத்தில் சாந்தமும் வாயில் புன் முறுவலும் கொண்டவர்தான் பண்ணிசையோடு தன்னை பிணைத்துக் கொண்ட பழனி ஓதுவார் மூர்த்திகள்- கணபதிப்பிள்ளை வெங்கடேசன் அவர்கள்.
தற்பொழுது மெல்பேண் — கரம் டவுண்ஸ் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெறும் சிவனின் மஹோற்சவத்தில் திருமுறை பாட வந்துள்ளார்.அவரைச் சந்தித்த பொழுது — பண்ணிசை பற்றியும், அவரது திருத்தொண்டு பற்றியும் , அவரைப்பற்றியும், அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.அவருடன் நான் கேட்டதும் அதற்கு அவர் தந்ததும் சுவையான விஷயங்கள்.அவற்றை பகிர்ந்து கொண்டால் யாவருக்கும் பயனுடையதாக இருக்கும் என்று கருதியதால் அவற்றை உங்கள் முன் வைக்கின்றேன்.
தந்தையார் கணபதிப்பிள்ளை கிராமத்தலைமை அதிகாரியாக இருந்தவர்.தாயார் ரஞ்சிதம் அம்மாள் சிறந்த இல்லத்தரசியாக விளங்கியவர். இவர்களது பூர்வீகம் விருத்தாசலமாகும்.இந்த ஊரில்த்தான் பண்பாடும் வெங்கடேசன் பிறந்தார்.இவர்கள் குடும்பமே இறைபக்தி மிக்கதாகும்.இதனால் தங்கள் பிள்ளையை எப்படியும் இறை பணிக்கே விடுவது என எண்ணிவிட்டனர் பெற்றோர்கள். நாம் நினைத்தது நடக்க திருவருளும் துணை செய்யவேண்டும்.திருவருளும் துணை நின்றதால் ஆரம்ப கல்வி கற்ற பின்னர் வெங்கடேசனை தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலையில் பெற்றோர்கள் சேர்த்து விட்டார்கள்.

இலங்கைச் செய்திகள்


தாதிய உத்தியோகத்தர்கள் இன்று கவனவீர்ப்பு போராட்டம்

ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் கைது

வைத்திய சாலை ஊழியர்களின் கவனயீனம் காரணமாக பெண் உயிரிழப்பு


இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

4 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது

நாட்டில் 100 ற்கும் அதிகமான காட்டு தீ சம்பவங்கள்

தேவாலயம் மீதான தாக்குதல்: ஞானசார தேரர் உள்ளிட்ட 12 பேர் விடுதலை

=================================================================

தாதிய உத்தியோகத்தர்கள் இன்று கவனவீர்ப்பு போராட்டம்

31/03/2014   யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள்இன்று கவனவீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
தாதிய உத்தியோகத்தர்களுக்கு மனநோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவம் ஆகிய இரு பயிற்சிகள் சுகாதார அமைச்சினால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இதற்கான சுற்றுநிரூபத்தை வெளியிட விடாமல் அரசாங்க வைத்திய சங்கத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனைக் கண்டித்தே தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதாக யாழ். போதனா  வைத்தியசாலையின் தாதிய சங்கத் தலைவர் நல்லையா நற்குணராஜா தெரிவித்தார்.
இன்று காலை 7 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை பணிப்புறக்கிணப்பு போராட்டத்தை முன்னெடுத்த அரச தாதிய உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி முழுநாள் சுகயீன விடுப்பு போராட்டத்தை  முன்னெடுக்கவுள்ளதாகவும் எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற அரச தாதிய உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்களும் ஆதரவு தெரிவித்து இன்று  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 




கலைச்சொற்களும் சுவாமி விபுலானந்தரும் - மணிவேலுப்பிள்ளை

.
அன்பு ஜெயமோகன்,
கலைச்சொல்லாக்கம் பற்றி கனடாவில் உங்களுடன் நான் நேரில் உரையாடியதுண்டு. அது பற்றி உங்கள் தளத்தில் உள்ள குறிப்புகளையும் வினாவிடைகளையும் நான் வாசித்துள்ளேன். கலைசொல்லாக்கம் குறித்து ஏற்கெனவே “காலம்” இதழில் வெளிவந்த எனது கட்டுரை ஒன்றை இத்துடன் இணைத்துள்ளேன்.
மணி வேலுப்பிள்ளை
கலைச்சொற்களும் சுவாமி விபுலானந்தரும்
மணிவேலுப்பிள்ளை
தமிழ் மொழியில் கலைச்சொல்லாக்கத்தை முன்னெடுத்துச் சென்ற புலமையாளர்களுள் விபுலாநந்த அடிகள் (1892-1947) பெயர் போனவர். தமிழில் அறிவியல் நூல்களை ஆக்கவும் பெயர்க்கவும் துணைநிற்கும் வண்ணம் ஈழத்திலும் தமிழகத்திலும் கலைச்சொல்லாக்கத்தை மேம்படுத்திய பெருமை அடிகளாரைச் சாரும்.
யாழ்ப்பாணம்-மானிப்பாயில் பணியாற்றிய அமெரிக்க மருத்துவர் கிறீன் (Dr.Samuel Fisk Green, 1822-1884) வெளியிட்ட “மருத்துவ விஞ்ஞான அகராதி” (1855), “அருஞ்சொல் அகராதி” (1875) என்பவை ஆங்கிலம்-தமிழ் கலைச்சொற்கோவைகளுக்கு முன்னோடிகளாய் அமைபவை. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏறத்தாழ 80 கலைச்சொற்களுடன் கூடிய “நூற்றொகை விளக்கம்” என்னும் நூலை பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை வெளியிட்டார் (1888). சி. ராஜகோபாலாச்சாரியார், வெங்கடசுப்பையர் இருவரும் தமிழ் அறிவியல் கலைச்சொற் சங்கத்தை அமைத்தார்கள் (1916). சென்னை அரசினால் அறிவியல் கலைச்சொற் குழு அமைக்கப்பட்டது. (1923). “சட்டச் சொற்றொகுதி” வெளியிடப்பட்டது (1930). சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் அறிவியல் கலைச்சொற் குழுவைத் தோற்றுவித்தது (1934).
இலங்கை, இந்தியப் புலமையாளர்களும் சென்னை, திருவாங்கூர் பல்கலைகழகங்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட அரும்பணியின் பெறுபேறாக இயற்பியல், வேதியியல், கணிதவியல், இயற்கை அறிவியல், உடற்றொழிலியல்-சுகாதாரவியல், புவியியல், வரலாறு, பொருளியல், நிருவாகம், அரசியல், குடியியல் சொற்களை உள்ளடக்கிய “கலைச்சொற்கள்” 1936ம் ஆண்டு டி. லக்ஷ்மணபிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், எஸ். வையாபுரிப்பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, எஸ். வேலாயுதபிள்ளை ஆகியோர் தலைமையில் இயங்கிய குழுவினால் அது மீள்நோக்கப்பட்ட பின்னர், 10,000 பதங்கள் கொண்ட புதிய “கலைச்சொற்கள்” விபுலாநந்த அடிகளால் பதிப்பிக்கப்பட்டது (1938).
மருத்துவர் கிறீன் கலைச்சொல்லாக்கம் குறித்து எழுதிய மடல் ஒன்றில் தமது உள்ளக் கிடக்கையை இவ்வாறு வெளிப்படுத்தினார்:

நிழலில் நீளிடைத் தனிமரம்

.
நாம் ஏன் பிறந்தோம்..?
மீண்டும் பிறக்காமலிருப்பதற்காகவே பிறந்தோம் என சமயங்கள் உரைக்கின்றன. நாம் செய்யும் நல்வினை, தீவினை அடிப்படையில் நமக்குப் பல்வேறு பிறப்புகள் உண்டு என்று சமயங்கள் அறிவுறுத்திச் செல்கின்றன. காவல்நிலையங்களும், நீதிமன்றங்களும் பல்வேறு சட்டங்களை வகுத்து மக்களை நல்வழிப்படுத்த முயற்சிசெய்கின்றன. இருந்தாலும் இந்த உலகம் சுயநலமிக்கதாகவே உள்ளது. உலகம் செல்லும் பாதையில் நாமும் செல்வோம் என்றே பலரும் செல்கிறோம். இந்த நிலையிலும் மனிதாபிமானத்தோடு, சீவகாருண்யத்துடன், பொதுநல உணர்வோடு வாழ்பவர்களைக் காணும்போது பெரு வியப்பு தோன்றுகிறது.
ஒரு நாளிதழில் ஒருவருடைய அனுபவம் படித்தேன்..

ன் தந்தையின் நினைவுநாளுக்காக ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருக்கின்றனர் அண்ணன், தம்பி இருவரும் அங்கு உள்ள முதியோருக்கு ஏதாவது தந்தையின் நினைவாகச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு..
அப்போது அங்கு முதியோரெல்லாம் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தார்களாம். இவர்களுக்கு மனதில் ஒரு எண்ணம். இந்த முதியோரின் முடிதிருத்தத்துக்கு ஆகும் செலவை நாம் ஏற்றுக்கொண்டால் என்ன? என்று தோன்றியதாம். தம் எண்ணத்தை அந்த விடுதிக் காப்பாளரிடம் கேட்டபோது அவர் சொன்னாராம்….
ஐயா இந்த முதியோர் இல்லத்துக்கு நீண்ட நாட்களாகவே முடிதிருத்தம் செய்ய வருபவர் அதற்காக பணம் எதுவும் வாங்குவதில்லை. தம் மனநிறைவுக்காக அவர் மாதம் ஒரு முறை இங்கு வந்து இலவசமாகவே முடிதிருத்தம் செய்துவிட்டுச்செல்கிறார் என்றவுடன் எங்களுக்கு வியப்பாக இருந்தது என்றுதம் அனுபவத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

தமிழ் சினிமா

மறுமுனை – விமர்சனம்

மறுமுனை – விமர்சனம்

காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பால் தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஒரு ஜோடிக்கு நேரும் கொடூரமே இந்த மறுமுனை. படம் துவங்கும்போதே புன்னகை மன்னன் ஸ்டைலில் நாயகனும் நாயகியும் மலை மேல் இருந்து குதிக்க வருகிறார்கள். ஆனால் நாயகி மட்டும் குதித்து தற்கொலை செய்து கொள்ள நாயகன் அங்கிருந்து சென்று ஒவ்வொருவராக கொலை செய்கிறான். ஒருவேளை ஹிரோவே இந்த படத்துல நெகட்டிவ் ரோல் பண்ணிட்டாரோ என்று சீட் நுனியில் நம்மை உட்கார வைக்கிறார் இயக்குநர்.
படம் அப்படியே ஃப்ளாஷ்பேக் செல்ல ஒரு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவம் படித்துவருகிறார் நாயகன் மாருதி(கதிர்). அதே ஊரில் வேறொரு கல்லூரியில் படித்து வருகிறார் நாயகி மிருதுளா பாஸ்கர்(சாருமதி). கதிரின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் கண்டெக்டர் வேலை செய்கிறார். தன் மகன் படித்து நன்றாக படித்து குடும்பத்தை பார்த்துப்பான் என்று நினைக்கிறார். ஆனால் எதார்த்தமாக நாயகி சாருவை சந்திக்கும் இவர் அவர் மேல் காதல் வயப்படுகிறார். ஊரிலேயே பெரிய கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு ரவுடியின் மகளை காதலிக்கிறோம் என்று தெரியாமல் பார்க், தியேட்டர் என்று சுற்ற அதை சாருவின் அப்பா காதில் ஓதிவிடுகிறார்கள் புண்ணியவான்கள். இதனால் எம்.எஸ்.பாஸ்கரை மிரட்டும் சாருவின் அப்பா மகன் வேண்டுமென்றால் இனி என் மகள் பின்னால் அவன் வரக்கூடாது என்று 1000 காலத்து பொன்மொழியை ஊதிவிட்டு செல்கிறார். இதனால் பயத்தில் உறைந்துபோன பாஸ்கர் மகனிடம் இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் கஷ்டப்படுகிறார். பின் பக்குவமாக மகனிடம் எடுத்துக்கூறி அந்த ரவுடியிடம் மன்னிப்பு கேட்க அழைத்து செல்ல சென்ற இடத்தில் சாருவின் அப்பாவிற்கே செக் வைத்துவிட்டு வருவதெல்லாம் செம அப்ளாஸ் தான்.
தன் மகனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பயப்படும் பாஸ்கர் அவரின் யதார்த்த நடிப்பால் நம்மை கவர்கிறார். குடும்பத்தை பற்றி சிறிதும் கவலைபடாமல் சாருவை அழைத்துக் கொண்டு ஏலகிரி மலைக்கு செல்கிறார். அப்படியே கல்யாணம் பண்ணிகிட்டு காதலை வென்றுவிடுவார்களோ என்று நினைத்த நமக்கு இதுவரை தமிழ்சினிமாவில் திருந்தாத அந்த காட்சியை வைத்து காதலர்களை கதறவிடுகிறார்கள். இனி எவனும் ஏலகிரி போகமாட்டான். அட இதுக்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா எப்பவும்போல கடிதத்தை எழுதி வைத்துவிட்டு அதை கையோடு கொண்டுபோய் மலை உச்சியில் வைத்து சாப்பிட்டுவிட்டு திரும்புகிறார் மாருதி… தன் காதலை அவசரத்தில் ஓப்பன் செய்த குக்கர் போல வெடிக்க செய்தவர்களை கொலை செய்யத்தான் இந்த விரட்டலோ என்று அமைதியடைய வைக்கிறது க்ளைமேக்ஸ்….
மாருதியின் முதல் படம் மறுமுனை என்றாலும் காதல் சொல்ல் ஆசை படம் முன்னதாகவே ரிலீஸ் ஆனதால் அறிமுகம் என்று சொல்ல முடியாது. எம்.எஸ்.பாஸ்கரின் தங்கை மகன் என்பதால் நடிப்பை மாமாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளவேண்டும் மாருதி… வல்லினம் படத்தில் நமக்கு ஏற்கனவே அறிமுகமான மிருதுளா நடிப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர் சிரிக்கிறாரா அழுகிறாரா என்றே தெரியாத புரியாத புதிராக ஒரு எக்ஸ்ப்ரஷன்ஸ்.
ஒளிப்பதிவு புன்னகை வெங்கடேஷ் என்பதாலோ என்னவோ முதல் காட்சியிலே புன்னகை மன்னன் ஸ்டைல் கொண்டு வந்துவிட்டார். ஒளிப்பதிவு நன்று. இசை சத்யதேவ் சிம்பு பாடிய பாடல் தவிர மற்றவை அனைத்தும் சுமார் ரகம் தான். பின்னணி இசை தாஜ்நூர் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது. 
நன்றி தமிழ்சினிமா