சிவஞானச் சுடர் ’ கலாநிதி பாரதி இளமுருகனார் (வாழ்நாட் சாதனையாளர்)
உ
சிவமயம்
ஊரோடு ஒற்றுமையாய்க் கொண்டாடும் பக்தர்களைச்
சீரோடு வாழவைக்கும் சேந்தனவன் திருவிழாவில்
தாரோடு பொலிந்திலங்கும் சண்முகன்வேல் அமர்ந்ததிருத்
தேரோடு வலம்வருவோர் தெருவெல்லாம் நிரம்பிடுவர்!
ஆதிரையான் சொரூபநிலைச் சிவமான செவ்வேளே!
சோதிவைவேல் தேரேறி அருள்பொழியு மிந்நாளில்;
சாதிவேறு பாடின்றிச் சகலரிலுஞ் சிவங்கண்டு
வீதிசுற்றி வெண்மணலில் தேரிழுக்க ஊர்திரளும்!
குன்றுதோறும்; குடியிப்போன் கொடுஞ்சூரன் வதைத்தன்று
வென்றுவாகை சூடியசெவ் வேள்முருகன் தேர்விழாவும்
என்றுதானோ வருமென்று இனிதேகாத் திருந்தவர்கள்
நன்றுவந்தோம் எனநல்லூர் நாடிவந்து கூடிடுவர்!
முருகனுக்கு அரோகராவென் றதிரவெழும் ஒலியலைகள்!
கருதடியர் ஓதிவரும் பண்ணிசையில் திருமுறைகள்!
பெருகிவரும் பக்தியொடு விரவிவரும் காவடிகள்!
திருமுருகன் விழாக்காணப் போதாதே இருவிழி;கள்!