.
அபிதா,
திட்டமிட்டவாறு புதன்கிழமை மதியம் சுபாஷினியுடன் வங்கிக்குச்சென்று தனக்கென ஒரு கணக்கை திறந்து, ஜீவிகா தந்த சம்பளப்பணத்தில் இருபதினாயிரம் ரூபாவை வைப்பிலிட்டாள்.
நீண்ட
நாட்களுக்குப்பின்னர் அவள் பார்த்த ரொக்கப்பணம். கணவன் பார்த்திபன் இருந்தவரையில் அனைத்து வரவு – செலவுகளையும் அவனே பார்த்துக்கொண்டான்.
சேமிப்பு – செலவு பற்றி எதுவுமே தெரியாமல் பத்து ஆண்டுகளாக சில பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, கிடைத்த சொற்ப வருமானத்தில் வயிற்றை கழுவிக்கொண்டிருந்தவள்.
நல்லவேளை அம்மா, அப்பா, பார்த்திபன் உடனிருந்த காலத்தில் வெளியுலகம் தெரியாமல், குறைந்த பட்சம் நன்றாக சமைக்க கற்றுக்கொண்டாள்.
அந்த
அனுபவம் இப்போது உதவியிருக்கிறது. ஒரு தைப்பொங்கல் நாளில் வற்றாப்பளை
கண்ணகி அம்மன் கோயிலுக்குச்சென்றபோது, அங்கு
கடமையிலிருந்து தன்னைக்காணும் சந்தர்ப்பங்களில், “ நங்கி அப்பிட்ட பைத்தொங்கல் இல்லையா..? “ எனக்கேட்ட அந்த
தென்னிலங்கை சீருடைக்காரனுடைய உச்சரிப்பிலிருந்த தவறை திருத்தியபோது, “ நோ. பைத்தொங்கல்.
தைப்பொங்கல்
ஈஸ் கரக்ட் வோர்ட் “ எனச்சொன்னாள்.
அதன்பின்னர்
அபிதா அந்தப்பக்கமே செல்லவில்லை. ஒருநாள்
கனவில் அவன் வந்து தைப்பொங்கல் கேட்டான். அந்த உருவம் திடீரென கணவன் பார்த்திபன் உருவமாக மாறியதையடுத்து, திடுக்கிட்டு எழுந்தாள். அதன்பிறகு அத்தகைய கனவுகள் அவளுக்கு வரவில்லை.
இருந்தாலும்
வருடாந்தம் தைப்பொங்கல் தினம் வரும்போதெல்லாம்
அபிதாவுக்கு அந்தக்கனவு நினைவுக்கு வரும். பக்கத்தில் குடியிருந்த பாக்கியம் ஆச்சியிடம் அந்தக்கனவு பற்றி அவள் சொன்னபோது, “ உன்ர
புருஷன்ட ஆத்மா எங்கோ அலைந்துகொண்டிருக்கிறது. அவன்ர
படத்தை வைத்து ஒருநாளைக்கு சமைத்து படையல்போட்டு, இரண்டொரு பிச்சைக்காரர்களுக்கு கொடு. பிறகு அந்தமாதிரியான கனவுகள் வராது “ என்றா.
பின்னர்
அவ்வாறு அபிதா ஒருநாள் செய்தாள். பார்த்திபனுக்கு மிகவும் பிடித்தமான கருணைக்கிழங்கு கறியும் செய்து படைத்திருந்தாள்.
அப்போதும், “ நங்கி நங்கி “ என அழைக்கும் அந்த சீருடைக்காரனின் முகம் நினைவுக்கு வந்தது. அவன் அன்று
பொங்கலை ஆசையோடு கேட்டானா..? , அல்லது வேறு நோக்கத்துடன் கேட்டானா..? என்ற மனக்குழப்பமும்
அவளுக்கு வந்தது.
பாக்கியம்
ஆச்சியிடம் அவன் பற்றி அபிதா எதுவுமே சொல்லவில்லை. சொன்னால், கண்காது
வைத்து கதை வேறுவிதமாகத்திரும்பிவிடும்.
தன்னார்வத்தொண்டு
என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து வரும் சில ஆண்களிடம் சிக்கிய விதவைப்பெண்கள் பற்றியும் அதே பாக்கியம் ஆச்சிதான் கதைகள் சொல்லியிருக்கிறாள்.
அதெல்லாம் உண்மையா..
? பொய்யா…?
என்பதும் அபிதாவுக்குத் தெரியாது.