எனது சிறிய வயதில் நான்
நேசம் பாராட்டிய குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாகி, மணம் முடித்து பிள்ளைகள் பெற்று,
அந்தப் பிள்ளைகளுக்கும் மணமாகி குழந்தைகள் பெற்றபின்னர் , மூன்றாவது தலைமுறையை நான்
சந்திக்க நேர்ந்தாலும், தொடக்கத்தில் நான்
நேசம் பாராட்டிய அந்தக் குழந்தைகள், என்னதான் வயதால் முதிர்ச்சியடைந்திருந்தாலும், எனது பார்வையில் இன்னமும் குழந்தைகள்தான்.
எனக்கு 1954 ஆம் ஆண்டு நீர்கொழும்பில், விஜயதசமியன்று
ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்து வைத்த ஆசிரிய பெருந்தகைகளில் ஒருவரான ( மற்றவர் அமரர்
பண்டிதர் க. மயில்வாகனன் ) திருமதி மரியம்மா திருச்செல்வம் அவர்களுக்கு மூன்று பெண்பிள்ளைகள்.
எமது நீர்கொழும்பு விவேகானந்தா
வித்தியாலயம் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) 1954 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்டபோது, என்னோடு சேர்த்து 32 குழந்தைகளுக்கு ஏடு துவக்கினார்கள்.
அந்தப்பாடசாலையின் முதலாவது
மாணவனாக
( சேர்விலக்கம் -01 ) நான் இணைத்துக்கொள்ளப்பட்டேன்.
திருமதி திருச்செல்வம்
அவர்கள் எமக்கு ஆசிரியையாக மாத்திரம் அறிமுகமாகவில்லை. எமக்கு அவர் மற்றும் ஒரு தாயார். அவரது கணவரை நாம் “ பப்பா “ என அழைப்போம். அதற்குக் காரணம் : அவர்களின் மூன்று
குழந்தைகளுமான செல்வராணி, செல்வமணி, செல்வ நளினி ஆகியோரும் தமது தந்தையாரை “ பப்பா“ எனத்தான்
அழைப்பார்கள்.
அவர் இலங்கை விமானப்படையில்
உயர் அதிகாரியாக பணியாற்றியவர். 1960
களில் அவர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றபோது,
இரண்டாவது குழந்தை செல்வமணிக்கு மூன்றுவயதுதான்
இருக்கும்.
பப்பா லண்டன் போனார் என்பதை, யன்னலுக்குப் போனார் என்றுதான் மழலைக்குரலில்
சொல்லி எம்மை சிரிப்பில் ஆழ்த்துவார்.