மலர்ந்துள்ள 2023 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வந்தால்,
இலங்கையின் தமிழ்த்தேசிய தினசரியான வீரகேசரி பத்திரிகைக்கு 93 வயது பிறந்துவிடும்.
இலங்கைத் தமிழ் இதழியலில் காத்திரமான சேவையை மேற்கொண்டுவந்திருக்கும்
வீரகேசரி சமூக, அரசியல் செய்தி ஏடாக மாத்திரம்
துலங்காமல், கலை, இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும் காத்திரமான பணிகளை தொடர்ச்சியாக
வழங்கியது.
வீரகேசரி பாசறையில் வளர்ந்த பலர், பின்னாளில் சிறந்த ஊடகவியலாளர்களாகவும்,
படைப்பிலக்கியவாதிகளாகவும் உருமாறினர்.
எண்ணிலடங்கா சிறுகதைகள், தொடர்கதைகள் , அரசியல் ஆய்வுகளை வெளியிட்டு
வந்திருக்கும் வீரகேசரி , இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பதிப்புத்துறையிலும்
தீவிர கவனம் செலுத்தியது. 1971 ஆம் ஆண்டு முதல்
1983 வரையிலும் நாடெங்குமிருந்த வீரகேசரி விற்பனை நிலையங்களில் காணப்பட்ட வீரகேசரி பிரசுரங்களை மூத்த தலைமுறை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
வாசகர்கள் மலிவு விலையில் வாங்கிப் படிக்கத்தக்கவாறு, கண்ணையும்
கருத்தையும் கவரும் வண்ணத்தில் முகப்பு ஓவியங்களுடன் வெளியான வீரகேசரி பிரசுர நாவல்கள்
பற்றிய விரிவான ஆவணப்பதிவை வரவாக்கியிருக்கிறார் இங்கிலாந்தில் வதியும் நூலகர் என்.
செல்வராஜா.
எமது மத்தியில் நூலியல், நூலகவியல் துறைகளில் இவர் அயர்ச்சியின்றி
தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் பணிகளின் மூலம் தமிழ் உலகம் அறுபதிற்கும் மேற்பட்ட ஆவணங்களை
இவர் மூலம் பெற்றிருக்கிறது.
நூல்தேட்டம், நூலகவியல்
ஆகியவற்றின் ஆசிரியராகவும் விளங்கும் செல்வராஜா, எங்கட புத்தகங்கள், அச்சாண்டி
ஆகியன உள்ளிட்ட பல ஈழத்து இதழ்களின் ஆலோசகராகவும் இயங்கிவருபவர்.
நூலகர் செல்வராஜாவின் தீவிர தேடலும் உழைப்பும், இந்த ஆண்டு வெளியாகியிருக்கும்
வீரகேசரியின் பதிப்புலகம் நூலிலும் வெளிப்பட்டுள்ளது.
வீரகேசரி பிரசுரங்கள் மூலம் தங்கள் நாவல்களை கண்ட பல படைப்பாளிகள்
தற்போது எம்மத்தியில் இல்லை. எனினும் அவர்களின்
எழுத்துக்கள் இன்றளவும் தலைமுறை தாண்டியும்
பேசப்படுகின்றன.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி, பல பரிமாணங்களைப் பெற்று வளர்ந்து,
இறுதியில் போர்க்கால இலக்கியம், இடப்பெயர்வு இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம்,
புகலிட இலக்கியம் என நீட்சிகொண்டது.
வீரகேசரி பிரசுரங்கள், போர்க்காலம் கருக்கொள்ளத் தொடங்கிய
1983 காலப்பகுதியில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது.
1970 களில் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம், உள்நாட்டு உற்பத்திகளை
ஊக்குவித்து வளர்ப்பதற்கும், அதே சமயம் தென்னிந்திய வணிக இதழ்களை கட்டுப்படுத்தவும்,
திரைப்படக் கூட்டுத்தாபனத்தை உருவாக்கி அதன் மூலம் மானியம் வழங்கி, உள்நாட்டு தமிழ்த்திரைப்பட
தயாரிப்புக்கு வாய்ப்பு வசதிகளையும் வழங்கியது.