.
கிழக்குச் சூரியன் இருள் கிழித்து
மெல்ல எழுந்து வருகிறான்
வழமைபோலவே வானம் செம்பொன்னாய்
கோடுகாட்டி சிரித்து வரவேற்கிறது
வடக்குத்திசை நோக்கி கதிரெறிந்து
மெல்லப் பார்த்த கதிரவன்
திகைத்து நிற்கின்றான்
பூமியெங்கும் செங்கம்பளம் விரித்து
என் வரவிற்காய் காத்துக் கிடக்கிறதா
மணப்பெண்ணின் மனம்போல
குளப்பமும் திகைப்பும்
ஒன்றாய் ஒட்டிக்கொள்ள
விரைந்து மேலெழுந்து மீண்டும் பார்க்கிறான்
செங்கொடிகள் காற்றில் கையசைக்கின்றன
செஞ்சேலை சுற்றிய கட்டிடங்களும்
செங்கம்பளங்கள் விரித்த புல்தரையுமாய்
வடபுலத்தின் யாழ்நகர் சிவந்து கிடக்கிறது
மேதினக் கூட்டங்களும் ஊர்வலங்களும்
பட்டுக்களால் அலங்கரிக்கப்பட
மாற்றுத்துணிகூட இல்லா மனிதக் கூட்டம்
மருட்சியுற்றுப் பார்த்து நிக்கிறது
வறுமையே தேசியமான நாட்டில்
உழைப்பாளர் உதிரம் குடிப்பவரே
ஊர்வலத்தின் முன்னணியில்
உதிரம் குடிக்கும் அடையாளம்தான்
செங்கொடியாய் மாறியிருக்கிறதா?
புரியாத புதிருக்கு விடைதேடி
கதிரவன் மேற்கே விழுந்து
மறைந்து கொள்கிறான்