" கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள்
எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், பயிற்சியினாற் பாடுவது கவிதை என்பர் மற்றொரு சாரார். இவ்விரு கூற்றுக்களிலே ஒன்றே உண்மை என்று நாம் ஏற்கவேண்டியதில்லை. அதுமட்டுமன்று, ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவது, உண்மையைத்தேடும் முயற்சிக்கு வீணே வரம்புகட்டுவதுமாகும்." இவ்வாறு நான்கு தசாப்தங்களுக்கு முன்பே, பேராசிரியர் க. கைலாசபதியும் கவிஞர் இ.முருகையனும் இணைந்து எழுதியிருக்கும் கவிதை நயம் என்னும் நூலின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கவிதைக்கு மிகவும் முக்கியம் எளிமை. அந்த எளிமை திரைப்படப்பாடல்களில் மலினப்பட்டது வேறு விடயம். தமிழ்நாட்டில், பாரதியைத்தொடர்ந்து பாரதிதாசனும் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கம்பதாசனும், கண்ணதாசனும் வாலியும் கவிதைக்கு மற்றும் ஒரு பரிமாணம் வழங்கியமை போன்று, இலங்கையில் ஈழத்து பூதன் தேவனார் முதல் கவிஞர்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி, இ.முருகையன், நுஃமான், நீலாவணன், மு. பொன்னம்பலம், மு.தளையசிங்கம், அம்பி, நாகராஜன், அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், கே. கணேஷ், சி.வி. வேலுப்பிள்ளை உட்பட மேலும் பல மூத்த கவிஞர்கள் கவிதைத்துறையை வீச்சுடன் முன்னெடுத்தனர்.
இவர்களில் மஹாகவி உருத்திரமூர்த்தி " குறும்பா" என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.
பின்னாளில், இலங்கையில் மருதூர்க்கனி, சோ. பத்மநாதன், சேரன், வ.ஐ. ச. ஜெயபாலன், ஊர்வசி, அனார், ஜவாத்மரைக்கார், ஜின்னா ஷரிப்புத்தீன் , அன்புடீன், முத்துமீரான், மொழிவரதன், மேமன்கவி, சித்தாந்தன், கருணாகரன், காவ்யன் விக்னேஸ்வரன், முதலான எண்ணிறைந்த கவிஞர்கள் கவிதைத் துறைக்கு வளம் சேர்த்தனர். அவர்களின் பெயர்ப்பட்டியல் நீளமானது.
இலங்கையில் 32 நாடுகளைச்சேர்ந்த ஆயிரம் கவிஞர்களின் கவிதைகளும் தொகுக்கப்பட்டு வௌியாகியிருக்கிறது.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் 1970-1980 காலப்பகுதியில் புதுக்கவிதை எழுச்சிமிக்க இலக்கியமாக பேசப்பட்டது. தமிழ்நாட்டில் வானம்பாடி கவிஞர்களாக வீச்சுடன் எழுதவந்த வைரமுத்து, மேத்தா, அப்துல்ரஹ்மான், அக்கினிபுத்திரன், மீரா, சிற்பி, தமிழ்நாடன், தமிழவன், தமிழன்பன், கோவை ஞானி, வைதீஸ்வரன்,பரிணாமன், புவியரசு, இன்குலாப், கங்கைகொண்டான், உட்பட பலரின் புதுக்கவிதைகளின் தாக்கம் இலங்கையிலும் நீடித்தது.
அதேவேளை சிதம்பர ரகுநாதன், கலைமகள் கி.வா. ஜகந்நாதன் முதலானோர் புதுக்கவிதையை ஏற்காமல் எதிர்வினையாற்றினார்கள். வானம்பாடிகள் இதழ் சில வருடங்கள் அழகான வடிவமைப்புடன் வெளிவந்தது. இலங்கையில் 1970 இற்குப்பின்னர் ஏராளமான இளம்தலைமுறை படைப்பாளிகள் முதலில் புதுக்கவிதை கவிஞர்களாகவே அறிமுகமானார்கள்.
ஆங்கிலத்தில் New Poetry - Modern Poetry என அழைக்கப்பட்ட வடிவம் தமிழுக்கும் அறிமுகமானது. அத்துடன் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளும் தமிழ்க்கவிஞர்களுக்கு நெருக்கமாகின. சீர், தளை, அடி, தொடை முதலான வரையறைகளை கொண்டிராமல் புதுக்கவிதை நவீனத்துவம் பேசியது.
மஹாகவி உருத்திரமூர்த்தி புதியதொருவீடு, கோடை முதலான கவிதை நாடகங்களை எழுதியிருப்பவர். தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் கவிஞர் அம்பியும், வேதாளம் சொன்ன கதை, யாழ்ப்பாடி, அன்னம் விடு தூது முதலான கவிதை நாடகங்களை வரவாக்கியிருப்பவர். கவிஞர்கள் கவியரங்குகளிலும் பங்குபற்றுவதனால், கவியரங்கப்பாடல்கள் தொகுதிகளும் வாசகர் பார்வைக்கு கிட்டியிருக்கின்றன. இலங்கையில் சில்லையூர் செல்வராசன் ஊரடங்குப்பாடல்கள் என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.