.
உனக்கு நான் வழங்குவது - ஆஸாங் வாங்கடெ (Jun 8)
சென்ற வாரம் உத்தரப்பிரதேசக் கிராமங்கள் சிலவற்றுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்றபோது, அவரைப் பார்ப்பதற்கு முன் அங்குள்ள தலித்துகள் தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு அந்த மாநில அரசாங்கம் சோப்பையும் ஷாம்பூவையும் வழங்கிய செயல் நாடெங்கிலும் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அரசாங்கத்தின் அந்த ஈனச்செயலுக்கு எதிர்வினையாக எழுதப்பட்ட கவிதையின் ஆங்கில மொழியாக்கம் 'thewire.in' இணையதள ஏட்டில் வெளிவந்துள்ளது. தலித் கவிஞரும் வழக்குரைஞருமான ஆஸாங் வாங்கடெ, டெல்லியிலுள்ள தேசியப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் – பெரியார் - புலே ஆய்வு வட்டத்தை நிறுவியவர்களிலொருவர்.
ஆங்கிலம் வழித் தமிழாக்கம்: வ.கீதா
மனு எங்களைச் சுத்தமற்றவனாக்கினான்
உனது காழ்ப்பேறிய மனம் காரணமாக
சாதிப் பெயர்கள், ஒதுக்குதல்
ஆகியவற்றின் வாடை என் உடம்பில்.
புண்களின் நாற்றத்தில் நான் ஒளிர்கிறேன்
நான் நாறுவது என் மீதான ஒடுக்குமுறையால்,
உனது மலத்தால் அல்ல.
உனது மலத்தால் அல்ல.
உனது எசமானனைத் திருப்திப்படுத்த
நீ எனக்கு சோப்பும் ஷாம்பூம் இன்று வழங்கினாய்
நாற்றமடிக்கும் அந்த நாக்குகளை
சிறுபான்மை மக்களைப் பாலியல் வன்முறை செய்வோம்,
வெட்டுவோம் என்று
வெட்டுவோம் என்று
கூறும் அந்த நாக்குகளைக் கழுவவோ
மனுவாதத்தையும் வருணதர்மத்தையும் போதிக்கும்
அந்த மூளைகளைச் சுத்தம் செய்யவோ
அவற்றை என்றைக்கேனும் பயன்படுத்தியுள்ளாயா?