களனி கங்கை தீரத்தில், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு
முன்னர் 1943 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார்.
குறிப்பிட்ட களனி பிரதேசத்திலிருந்து முதல்
முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37.
இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த
ஒரு பெண்மணிக்கும் முதலாவது ஆண்குழந்தையாக பிறந்தவர்தான் அந்த களனி தொகுதியை பின்னாளில்
பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
அவர் பிறந்த இல்லம் எது...? என்பதைச் சொன்னால் எவருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும்
இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை! அந்த இல்லம் கொழும்பு வடக்கில், களனி கங்கைக்கும்
ஆமர் வீதிக்கும் நடுவில் வரும் கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது.
இன்றும் நீங்கள் அந்த இல்லத்தின் முகப்பினை பார்க்கலாம்.
அந்த இல்லத்தில், நீதிக்கும் செல்வச்செழிப்பிற்கும் பெயர் பெற்ற அந்தக்குடும்பம் வாழ்ந்த
காலத்தில் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்
17 ஆம் திகதி பிறந்த குழந்தையின் பெயர் ஜூனியஸ்
ரிச்சர்ட் ஜெயவர்தனா.
இவரை ஜே.ஆர். எனவும் ஜே.ஆர். ஜெயவர்தனா எனவும்
அழைப்பர். 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து,
தார்மீக சமுதாயம் அமைப்பதுதான் தனது நோக்கம்
என்றும் சொல்லி, அதனை தமது தாய் மொழியில் தர்மிஷ்ட சமாஜய என வர்ணித்தார். ஆனால், அந்த தார்மீக ஆட்சியில்
நடந்த பல சம்பவங்களை பார்க்கும்போதும் அகில இலங்கை எங்கும் நிகழ்ந்த வன்முறைகள், தீவைப்புகள்,
படுகொலைகள் அனைத்தையும் சீர்தூக்கிப்பார்க்கும்போதும், அதுதான் அவர் கனவு கண்ட தார்மீக சமுதாயமா..? எனக்கேட்கத்தோன்றும்.
அதனால் அவரது அரசியல் எதிரிகள் அவரை "மிஸ்டர் தர்மிஸ்டர்" எனவும் அழைத்தனர்.
பதினொரு பிள்ளைகளில் மூத்த புதல்வனாக அவர் பிறந்த இல்லம்தான் ஏறக்குறைய 86 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கம் வீரகேசரி நாளிதழ் வெளியாகும் கட்டிடம்!
இலங்கை பிரித்தானியரின் ஆளுகைக்குள் இருந்த காலப்பகுதியில்
பிறந்திருக்கும் ஜே.ஆர்., ஒரு கத்தோலிக்க குடும்பப்பின்னணியை கொண்டிருந்தவர். அவரது
பெயரிலிருந்தே அதனையும் தெரிந்துகொள்ளமுடிகிறது. அவர் மட்டுமல்ல, சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா,
ஃபீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா ஆகியோரும் கத்தோலிக்கப் பின்னணி கொண்டிருந்தவர்தான்.
ஜே.ஆரின் அரசியல் பிரவேசம் 1938 இல் தொடங்குகிறது.
இலங்கை தேசிய காங்கிரஸில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு, முதலில் புதுக்கடை
வட்டாரத்திலிருந்து கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவாகி, அதன்பின்னர் களனி சட்டசபைத்தொகுதியின்
பிரதிநிதியாக வந்தார்.
சட்டசபை உறுப்பினராக, சுதந்திரத்தின் பின்னர்
நாடாளுமன்ற உறுப்பினராக, யூ. என்.பி. அரசுகளின் பதவிக்காலங்களில் நிதியமைச்சராக, ராஜாங்க
அமைச்சராக, அக்கட்சி தோல்வி கண்டபோது 1970 இல் எதிர்க்கட்சித்தலைவராக, பின்னர்
1977 இல் அறுதிப்பெரும்பான்மையுடன் வென்றபோது முதலில் பிரதமராக அதனையடுத்து நிறைவேற்று
அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக வளர்ந்தவர். அந்திம காலத்தில், ஜனாதிபதி பதவிக்காலம்
முடிந்ததும், அமைதியாக அரசியலை விட்டு ஒதுங்கி, 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம்
திகதி மறைந்தார்.