ஒரேசமயத்தில் இரண்டு அல்லது
மூன்று வேலைகளை செய்வதற்கு என்னை பழக்கியது, புலம்பெயர் வாழ்க்கைதான். இனிமேல் இதனை
புகலிட வாழ்க்கை என்றுதான் கூறவேண்டும்.
நேரத்தோடு போராடிக்கொண்டிருப்பவர்கள்
இந்த உத்தியை கையாண்டால்தான் பிழைத்துக்கொள்ள முடியும். வேகமும் விவேகமும் இல்லையென்றால்,
இந்த அவசர யுகத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாது.
எழுத்தும் வாழ்க்கையும்
தொடரின் கடந்த 53 ஆவது அங்கத்தில் நான்
குறிப்பிட்ட இலக்கிய ஆளுமை
ராஜஶ்ரீகாந்தனின் நினைவாக எழுதிய நூலை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்டுவைத்த
பின்னரே அவுஸ்திரேலியாவுக்கு புறப்படவேண்டும் என தீர்மானித்திருந்தேன்.
2005 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி
சிட்னியில் ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலையும்,
விமர்சன அரங்கில் இணைத்துவிட்டு, அந்த நிகழ்ச்சி முடிந்து மெல்பன் திரும்பியதையடுத்து, கொழும்புக்குச் செல்லத் தயாரானேன் என்று கடந்த அங்கத்தில்
சொல்லியிருந்தேன் அல்லவா..?
அவ்வாறு சென்று 2004 இறுதியில் சுநாமி கடற்கோள் அநர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கான
நிவாரண உதவிகளை பகிர்ந்தளித்துவிட்டு, கொழும்புக்கு வந்தபோது, ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலின் இதர பிரதிகளை வந்து
எடுத்துச்செல்லுங்கள் என்று நண்பர் கிறிப்ஸ் கிறிஸ்ணமூர்த்தியிடமிருந்து தகவல் வந்தது.
கொழும்பு கொட்டாஞ்சேனையில்
அப்போது வசித்துக்கொண்டிருந்த ராஜஶ்ரீகாந்தனின் துணைவியார் லீலா, மற்றும் அவர்களது
பிள்ளைகள் அபர்ணா, அனோஜா, ஆகியோரிடமும் மல்லிகை ஜீவா, மேமன்கவி, வதிரி சி. ரவீந்திரன்
ஆகியோரிடத்திலும், அவுஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னர் அந்த நூலின் வெளியீட்டு அரங்கினை
அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ( 26-02-2005 ) நடத்தப்போகின்றேன் எனச்சொன்னேன்.
கிழக்கிலங்கை சென்று திரும்பி
வந்த களைப்பு தீருவதற்குள் மற்றும் ஒரு நிகழ்ச்சியை எவ்வாறு நடத்தப்போகிறீர்…? என மல்லிகை
ஜீவா கேட்டார்.
“ எல்லாம் நடக்கும். நீங்கள்தான் தலைமை தாங்குகிறீர்கள். மேமன் கவி வரவேற்புரை,
சோமகாந்தன், வன்னியகுலம், திக்குவல்லை கமால்,
வதிரி. சி. ரவீந்திரன், அன்னலட்சுமி இராஜதுரை, சிவா. சுப்பிரமணியம் ( தினகரன்
ஆசிரியர் ) ஆகியோர் உரையாற்றுவார்கள். புரவலர் காசிம் உமரும் வருகிறார். “ என்று எனது மனக்கணக்கினை அவரிடம் ஒப்புவித்தேன்.
“ எல்லோரிடமும் சொல்லிவிட்டீரா..? “ என்று அடுத்தகேள்வியை ஜீவா கேட்டார் .
அவர்கள் எல்லோரும் நிச்சயம் வருவார்கள். பேசுவார்கள். எனக்காக இல்லாது விட்டாலும்,
ராஜஶ்ரீகாந்தனுக்காக வருவார்கள். தெணியானையும்
அழைக்க விரும்புகின்றேன். அவருக்கும் வருவதற்கு விருப்பம் இருந்தாலும், சமகால சூழ்நிலையினால் பொலிகண்டியிலிருந்து அவரால்
வரமுடியாது . எனினும் இந்த நூலின் அறிமுகம் வடமராட்சியிலும் நடக்கும். ஆனால், நான்தான்
அப்போது இங்கே இருக்கமாட்டேன் “ என்றேன்.
ஜீவா என்னை வியப்போடு பார்த்தார்.
“ எல்லாம் அவுஸ்திரேலியா உமக்குத் தந்த ட்ரெயினிங் “ என்று மாத்திரம் சொன்னார்.