பனையோலை கொண்டுவேய்ந்த பதிவான கூரைவீடு!
பசுஞ்சாணத் தால்அம்மா மெழுகிவிட்ட பசுந்திண்ணை!
மனைமுழுதும் தெளித்ததனால் மணம்பரப்பும் மஞ்சள்நீர்!
மல்லிகையும் முல்லையொடு மலர்ந்தளித்த பூப்பந்தல்!
எனையன்று மகிழ்வித்த 'இளவல்கள்' சிரிப்பினொலி!
என்றுமெனைக் கண்டவுடன் துள்ளும்'பப்பி'வாலாட்டம்!
நினைத்தவுடன் முகர்வதெலாம் சொந்தமண்ணின் வாசனையே!
நெஞ்சிலின்பம் தந்தநாளை நினைந்தின்று மகிழ்கின்றேன்!
நாற்றிசையும் அருள்சுரக்கும் நல்லதிருக் கோவிற்கெலாம்
நற்றமிழாற் பதிகங்கள் நனிசிறக்கப் பாடிநின்று
ஏற்றம்பெற் றுயர்ந்திட்ட ஈடில்லாப் பெரும்புலவர்!
எனக்கெழுத்தை அறிவித்த சோமசுந்தரத் தாத்தாவைப்
போற்றித் தொழுகின்றேன்! புலமைமிகு அறிவாளர்
பொலிந்திலங்க இயற்கைதரும் பொற்பெல்லாம் அணிகூட்ட
ஊற்றின்றி நிறைந்தோடும் ஒழுகலாறு புகழ்சேர்க்கும்
ஓரரிய ஒப்பில்லா நவாலிநகர் என்னூரே!