பண்டைத் தமிழருக்குச்
சித்திரை மாதம் சிறப்பான மாதமாக இருந்தது.
இந்த மாதத்தில் தான் அவர்கள் பெருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்ச்சியாக
இருந்தார்கள். சிலப்பதிகாரத்தில் சித்திரை
மாதத்தில் நடந்த விழாக்களைப் பற்றி இளங்கோ அடிகளார் ஒரு நேர்முக வர்ணனையே
தந்திருக்கின்றார்.
சித்திரை
மாதப் பிறப்பைப் புத்தாண்டின் தொடக்கமாகவும் அவர்கள் கொண்டாடி
வந்திருக்கின்றார்கள்.
அந்த வகையில் சிட்னியின் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சித்திரை
மாதத்தில் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவைச் சென்ற பதினொரு ஆண்டுகளாக சிறப்பாக நடாத்தி வருவது மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றது.
புலம்பெயர்ந்த
எந்தவொரு இனமும் தனது அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும்
அவசியமானதாகும். தனது அடையாளத்தை
இழந்துவிட்ட இனம் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ முடியாமற் போய்விட்டதை
உலகெங்கும் பல உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அப்படி அடையாளத்தைக் காப்பாற்றுவதில்
புலம்பெயர்ந்த முதலாவது சந்ததியினருக்குப் பெரும் பொறுப்பு இருக்கின்றது!
இவற்றை
எல்லாம் உணர்ந்து ஒரு தொலைநோக்குப் பார்வையோடு சித்திரைத் திருவிழாவைத் தமிழ்க்கலை
மற்றும் பண்பாட்டுக் கழகம் நடாத்தி வருவதைச் சென்ற 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
நடந்த நிகழ்ச்சிக்குச் சென்ற போது கண்டு மகிழ்ந்தோம்.
இந்த விழாவை
ஒரு கலை நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல் நாள் முழுவதுமான தமிழர் கொண்டாடமாக,
வர்த்தகமும், பிள்ளைகள் விளையாடத் தளமும் சேர்த்து நடாத்தி, நிகழ்ச்சிக்கு வருகின்ற
முழுக் குடும்பத்தினருமே பங்கு கொண்டு மகிழ்ச்சி அடையக் கூடிய நிகழ்ச்சியாக இதனை அமைத்திருந்தமை
பாராட்டுதற்குரியது.
அது மட்டுமல்ல. இந்த நிகழ்ச்சிக்குத் தேசிய அமைச்சர், மாநில அமைச்சர், தேசிய, மாநிலப் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், மூத்த சமூகத் தலைவர்கள் என்று பலரையும் அழைத்துக் கௌரவித்து அவர்களுக்கு எமது கலை வண்ணத்தைக் காட்டியமையும் சிறப்பாக இருந்தது. வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல அரசியற் பிரமுகர்களை ஒரே நேரத்தில் வரச்செய்து ஒரே மேடையில் கௌரவித்ததே ஒரு மிகப் பெரிய சாதனை தான். அதனைப் பார்த்த எமக்குப் பெரும் பிரமிப்பாகத்தான் இருந்தது!