“ நினைக்க
தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா..? பழகத்
தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா…? “
1963 ஆம் ஆண்டு வெளிவந்த
ஆனந்தஜோதி என்ற திரைப்படத்திற்காக கவியரசு
கண்ணதாசன் எழுதிய இந்தப்பாடலை, அவரது ஏனைய பல பாடல்களைப்போன்று என்னால் மறக்கவே முடியாது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நானும் எனது மாமா
மகன் முருகானந்தனும் யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் ( தற்போதைய கனகரத்தினம் மத்திய கல்லூரி
) ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்த
காலத்தில், அந்த விடுதிக்கு முன்னால் அமைந்திருந்த விளையாட்டுத்திடலில் நாம் மாலை வேளைகளில்
விளையாடுவோம்.
தாச்சி மறிப்பு ( கிளித்தட்டு ) கிரிக்கட்,
உதைபந்தாட்டம் என்பன எமது பிரியத்திற்குரிய விளையாட்டுக்கள்.
அந்த மைதானத்திற்கு அருகிலிருந்த ஒரு வீட்டிலிருக்கும்
வானொலியிலிருந்து குறிப்பிட்ட நினைக்கத் தெரிந்த
மனமே பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகும்.
அந்தத்திரைப்படத்தில் தோன்றும் நாயகி தேவிகா ( பின்னணிக் குரல் பி. சுசீலா
) , தனது
காதலனை
( எம்.ஜி.ஆர் ) நினைத்துப்பாடும் பாடல் அது.
கமல்ஹாசன் இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு ஒன்பது வயதுதான்! அந்தக்குழந்தை நட்சத்திரம் தற்போது உலகநாயகனாக பிக்பொஸ்
நடத்திக்கொண்டிருக்கிறார் !
அந்தப்பாடல் என்னை அக்காலப்பகுதியிலேயே கவர்ந்தமைக்கு
காரணம் இருக்கிறது.
தொலைதூரத்திலிருந்து ( நீர்கொழும்பிலிருந்து
) சொந்த பந்தங்கள் ஏதுமற்ற வடபுலத்திற்கு படிக்க வந்திருந்தமையால், எனக்கும் மாமா மகன் முருகானந்தனுக்கும் எப்போதும்
வீட்டு யோசனைதான். அதனை Homesick என அழைக்கத் தெரியாத பருவம் அது.
அடிக்கடி எங்கள் பூர்வீக ஊரும், குடும்பமும்,
பழைய நண்பர்களும் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். எமது வீட்டுக்கவலையை கடிதங்களில் எழுதி எழுதி, அடுத்து வந்த வருடங்களில் ஊர்போய்ச்சேர்ந்துவிட்டோம்.
குறிப்பிட்ட பாடல் பற்றி இந்த 92 ஆவது அங்கத்தில் நினைவூட்டுவதற்கும்
காரணம் இருக்கிறது.
கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை கன்பரா
மாநிலத்தில் தினகரன் முன்னாள் ஆசிரியர் ( அமரர் ) ஆர். சிவகுருநாதன் அவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வும் அவரது
நினைவுகளை பதிவேற்றிய இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகமும்
நடைபெற்றது.
இந்த நூலை தொகுத்திருக்கும் எழுத்தாளர் ஐங்கரன்
விக்னேஸ்வராவும், அமரர் சிவகுருநாதனின் மருமகன் மயூரன் சின்னத்துரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு
என்னையும் அழைத்திருந்தார்கள்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கன்பராவில், அமரர்
சிவகுருநாதனின் அன்புத்துணைவியார், சகோதரன்,
மகள், மகன், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் அன்னாரின் உறவினர்களையெல்லாம்
இந்த நிகழ்வில் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
கன்பரா மாநிலத்திற்கு சிட்னி, பேர்த், மெல்பன்
மாநகரங்களிலிருந்தெல்லாம் அன்பர்கள் வந்திருந்தனர். கன்பரா தமிழ் மூத்த பிஜைகள் மண்டபத்தில்
நிகழ்ச்சி நடந்தது.
கொவிட் பெருந்தொற்றுக்குப்பின்னர், எனது நீண்டகால
நண்பர்கள் சிலரையும் கன்பராவில் சந்தித்தேன். அவர்களுடன் பசுமையான பழைய நினைவுகளையும்
பகிர்ந்துகொள்ள முடிந்தது.
கலை, இலக்கிய ஆர்வலரும் சமூகப்பணியாளருமான
நண்பர் நித்தி துரைராஜா, என்னை தனது இல்லத்தில்
தங்கவைத்து நன்கு உபசரித்தார். அவரது சகோதர
வாஞ்சையான உபசரிப்பினால் நெகிழ்ந்துபோனேன்.