புதுமாற்றம் ! ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )



        புத்தாண்டில் புதுமாற்றம் வருதல்வேண்டும்
            புத்தூக்கம் மனமெழுந்து நிலைக்கவேண்டும்
        இத்தரையில் எல்லோரும் இன்பமாக
              இருப்பதற்கு நல்லவழி பிறக்கவேண்டும்
        தப்பான வழிதன்னை தடுக்கவேண்டும்
                 தாராள குணத்துடனே வழங்கவேண்டும்
         எப்பவுமே இரக்கமுடன் இருத்தல்வேண்டும்
                இதுபோன்று புதுமாற்றம் வருதல்நன்றே  !

        ஆட்சியுள்ளார் மனநிலைகள் மாறவேண்டும்
               ஆன்மீகம் அகமெல்லாம் நிறையவேண்டும்
         போட்டிநிலை மனமிருந்து அகலவேண்டும்
                 பொறுமைக்குணம் மனமெங்கும் பூக்கவேண்டும் 


          சாத்வீகம் சன்மார்க்கம் நிலைக்கவேண்டும்
                   சஞ்சலங்கள் சலனங்கள் போதல்வேண்டும் 
          ஈத்துவக்கும் உணர்வுநிலை எழுதல்வேண்டும்
                  இதுபோன்ற புதுமாற்றம் வருதல்நன்றே ! 

பரமட்டா பொங்கல் 2018

.
பரமட்டா பொங்கல் 2018, தமிழர்களின் பொங்கல் திருநாள் . தை மாதம் 13 ம் திகதி சனிக்கிழமை  காலை 9.30 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணிவரை பரமட்டா சதுக்கத்தில்  ( infront of town Hall) இடம்  பெற உள்ளது.



முருகபூபதியின் "பாட்டி சொன்ன கதைகள்" இலங்கையில் மூன்றாவது பதிப்பு வெளியீடு



-->
முருகபூபதி 1997 இல் வெளியிட்ட பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம்) நூலின் மூன்றாவது பதிப்பு கொழும்பில் அண்மையில் வெளியாகியுள்ளது.
இலக்கியன் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் முதல் பதிப்பை மல்லிகைப்பந்தல் 1997 இல் சென்னையில் பதிப்பித்திருந்தது.
சென்னை குமரன் பதிப்பகத்தினால் அச்சிடப்பட்ட இந்நூல், சிறுவர் இலக்கிய வரிசையில் சென்னை நூலக அபிவிருத்தி சபையினால் அங்குள்ள ஆரம்ப பாடசாலைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு மீண்டும் ஒரு பதிப்பு வெளியானது.
இருபது வருடங்களிற்குப்பின்னர் குமரன் பதிப்பகத்தின் ஏற்பாட்டில் இலக்கியன் வெளியீட்டகத்தால் ஓவியங்களும் இடம்பெற்ற மற்றும் ஒரு பதிப்பு வெளியாகியுள்ளது.
சிறுவர்களை கவரும் வகையில் ஓவியர் ஆர். கௌசிகன் வரைந்த வண்ணப்படங்களுடன் பாட்டிசொன்ன கதைகள் மீண்டும் வெளியாகியிருக்கிறது. 1996 ஆம் ஆண்டில் பாரிஸில் இருந்து வெளிவந்த  ' தமிழன்' வார இதழில் பாட்டிசொன்ன கதைகள் வெளியாகி,  முன்னர்  நூலுருவானது என்பது குறிப்பிடத்தகுந்தது.
" வாய்மொழி மூலம் கதை என்று சொல்லப்பட்ட கலை தோன்றியதே இந்தப்பாட்டிமாரிடமிருந்துதான். தாங்கள் கண்டது, கேட்டது, அனுபவத்தில் அறிந்தது எல்லாவற்றையும் சேர்த்து செதுக்கிக் கதை பண்ணுவதில் இந்தப்பாட்டிமார்கள் தனித்தகுதி பெற்றுத்திகழ்ந்துள்ளதுடன், அக்கலையைக் காலங் காலமாக வாய்மொழி மூலம் தங்கள் பேரர்களிடம் சொல்லிச்சொல்லியே தக்கவைத்துக்கொண்டு வந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கதொன்றாகும்"
                                           -  டொமினிக் ஜீவா - மல்லிகை ஆசிரியர் 
" எவரும் எவராகவும் மாறமுடியாது. அவரவர் தத்தமது தனித்துவத்தை பேணவேண்டும். நீயா? நானா? உயர்வு என்ற வாதத்தில் நன்மையும் விளையாது. பகைமைதான் வளரும். ஒரு கருமத்தை செய்துமுடிக்க தந்திரங்கள் பல செய்யக்கூடிய மூளையும் அவசியம். காட்டு ராஜா சிங்கத்தையும் மடக்கக்கூடிய வல்லமை தந்திர புத்தியுள்ள நரியிடம் இருக்கிறது. இவ்விதமாக உருவகம் மூலம் சொல்லப்படுகிறது. அரசியலையும் இக்கதைகள் தொட்டிருந்தாலும் எவரையும் வஞ்சிக்காத பாணியில்  எழுதப்பட்டிருக்கிறது."
                               எஸ்.கே. காசிலிங்கம் - தமிழன் ஆசிரியர்
" சிறுவர் இலக்கியங்கள் என்றாலே மரம், செடி, கொடிகள், மிருகங்கள் யாவும் பேசத்தொடங்கிவிடும். அதற்கு இப்புத்தகமும் விதிவிலக்கல்ல. அச்சூழல் சிறுவர்களை கவரக்கூடியவை. அவர்களுக்கு அக்கதைகளைக்கேட்பதில் ஆர்வம் அதிகரிக்கிறது"
                              எஸ்.கணேஷ் ஆனந்தன் - தினகரன் வாரமஞ்சரி
"பாட்டி சொன்ன கதைகள் புத்தகத்தில் உள்ள அத்தனை கதைகளையும் நான் படித்துச்சுவைத்தேன். அவை யாவும் சிறந்த, அறிவிற்கு விருந்தான அம்சங்களாகவே அமைந்திருந்தன. இக்கதைகளில் அறிவுறுத்தப்பட்டது  சமுதாய  சீர்திருத்தமே. கேள்விஞானத்தினால் பாட்டி சொன்ன கதைகளை உருவகம் என்ற இலக்கிய வடிவத்தில்  சிறைப்படுத்த முனைந்ததன் விளைவாக அவை இப்போது எம்போன்ற சிறுவர்களின் கரங்களில் தவழ்ந்திடும் வேளையில் அவர்களின் அறிவுத்திறன் மென்மேலும் மெருகேற்றப்படுகிறது."

"ஓவியர்களல்ல ஓவியங்களே பேச வேண்டும்" ஓவியர் குலராஜும் அவரது ஓவியங்களும் சி. மௌனகுரு



1972 ஆம் ஆண்டு.
சென்னை அடையாறு கலாசேத்திராவில் ஒரு விழா ஒழுங்கு செய்கிறார்கள்.
அங்கு ஓவியம் கற்கச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த 21 வயதான ஒரு மாணவனிடம் வாசலில் கோலம் போடும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
அம்மாணவனுக்குக் கோலம் போடுவதில் கொள்ளை ஆசை.
அவன் கோலம் போடத் தொடங்குகின்றான்,
ஏற்கனவே அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை சற்று மெருகூட்டிப் போடுகிறான்.
அதன் அழகு கண்டு பலரும் வியக்கிறார்கள்.
விழா ஆயத்தங்களை பார்வையிட்டுக்கொண்டு வந்த கலாசேத்திர ஸ்தாபகரான ருக்மணி அருண்டேல் அக்கோலத்தைப் பர்வையிடுகிறார்.
மாணவன்,  ருக்மணி அம்மையரின் வாயில் இருந்து வரும் பாராட்டுரைக்குக் காத்திருக்கிறான்.
அந்தக்கோலத்தை உற்றுப் பார்த்த அவர், "முன்னே இருந்த ஒன்றைப்போலப் போடுவது கலை அல்ல. அது புது ஆக்கமாக இருக்க வேண்டும்,  அது உன்னுடையதாக இருக்கவேண்டும்.  மற்றவரை பிரதி பண்ணல் கலை ஆகாது. புதிதாக எதாவது செய்யும்" என்று கூறி விட்டுச் செல்கிறார்
மாணவன் சோர்ந்துவிடுகிறான். எனினும் அவனுள் ஒரு ஞானத்தை அந்த அம்மையார் விதைத்து விட்டுச் சென்றுவிடுகிறார்.
அதுதான்,"மற்றவரைப் பார்த்துக் கொப்பி பண்ணாதே
நீ உனக்கெனப் புதிதாக ஒன்றை உருவாக்கு"
இந்த வேத மந்திரமே தனித்துவம் மிக்க ஓவியராக அந்த மாணவன் வளர உதவிய வேதோபதேசமாகும்.
அந்த மாணவன் பெயர் குலராஜ்.
ஓவியர் குலராஜின் ஓவியங்களை ஒருங்கு சேரப்பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் எனக்குக் கிட்டியது. நம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற அற்புதமான அந்த ஓவியர் பற்றியும், அவரது ஓவியங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்ற தூண்டுதலும் எனக்குள் எழுந்தது.
இது ஓர் சிறு அறிமுகக் குறிப்பே!
ஓவியர் குலராஜை நான் அறிந்தது 2000 ஆம் ஆண்டுகளில். அப்போதுதான் அவர் தமிழ் நாட்டிலிருந்து மீண்டுவந்து மட்டக்களப்பில் தனது வாழ்வை ஆரம்பித்திருந்தார். அப்போது நான் கிழக்குப்பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறைத் தலைவராகக் கடமை புரிந்து கொண்டிருந்தேன்.
நாங்கள் வருடம் தோறும் உலக நாடக தின விழாவை நடத்திக்கொண்டிருந்தோம். ஒரு வாரம் அவ்விழா நடைபெறும். அந்நாடக விழாக்களுக்கு முகப்புப் பந்தல், தோரணம் அமைக்க ஒருவரைக் கண்டுபிடித்தோம். அவரே குலராஜ்
அழகாக மரபு தவறாமல் அவர் போட்ட நாடக விழா முகப்புப் பந்தல்கள் அவர் பக்கம் அனைவரது கவனத்தையும் திருப்பியது. அவர் ஓர் மரபு வழி ஓவியர் என அறிந்தோம் ,அத்தோடு கலசேத்திர மாணவரும் கூட.

கடும்கோடையில் மலர்ந்த கலை, இலக்கிய, சமூகச்சிந்தனைகள் மெல்பனில் ஆவணப்படத்தயாரிப்பாளர் 'கனடா மூர்த்தி'யுடன் நடந்த கலை இலக்கிய சந்திப்பு ப. தெய்வீகன்



ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் கங்காருவை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதெல்லாம் அந்தக்காலம், கல்பனாக்காவை பார்க்கவேண்டும் என்று இங்கு வந்து ஒன்றரைக்காலில் நிற்பது இந்தக்காலம்.

அந்த வகையிலான ஒரு பேரார்வத்தோடும் அதேவேளை மேலும் பல பண்பாட்டு - கலாச்சார ஆர்வங்களோடும் போனவாரம் மெல்பேர்னில் வந்திறங்கியவர்தான் "கனடா" மூர்த்தி. "காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி" நூல் கனடாவில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட நிகழ்வில் புத்தகத்தை கிழித்து தோரணம் கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்ற குழுவில் குணச்சித்திர வேடம் வகித்தவர்.
நேரில் பார்த்தால் கிட்டத்தட்ட வடகொரிய பிரதமருக்கு மீசைவைத்துவிட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு கண்ணியமாக காட்சி தருபவர்.

அவரைப்பற்றி பலர் பல வழிகளில் பேசியிருப்பினும், அவர் குறித்து சுருக்கமாக கூறுவதென்றால் பன்முகத்தன்மைகள் வாய்ந்த ஒரு படைப்பாளி என்று சொல்லலாம். அவரது இலக்கிய ஆர்வம் ஒருபுறம் இருக்க, காட்சி ஊடகத்தில் பன்னெடுங்காலமாக பணியாற்றிய அனுபவமும் வரலாற்று விடய விதானங்களின் மீதான அவரது தீரா ஆர்வமும் அவரை ஏனைய படைப்பாளிகளிலிருந்து தனியாக இனங்காண்பிக்கும்.
படைப்புலக பரப்பில் எந்த விடயத்தினை கேட்டாலும் மணிக்கணக்காக பேசி வதை செய்யக்கூடிய அருமையான திறமை எம்மிடையில் பலருக்கிருக்கிறது. ஆனால், மூர்த்தி அண்ணன் இந்த விடயத்தில் தனது அனுபவத்தின் ஊடான விடயங்களை கூடுதலாக முன்நிறுத்தி பேசக்கூடியவர். அவரது அந்த அணுகுமுறை அவர் மீதும் அவரது படைப்புலகத்தின் மீதும் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமையும்.

அதேவேளை, இவர் மிகத்தரமானதொரு ஊர் சுற்றி. கல்விக்காக இலங்கையை விட்டு வெளியேறிய எழுபதுகளிலிருந்து தொடர்ந்து நாடுவிட்டு நாடு தாவிக்கொண்டிருக்கிறார். போகும் இடங்களில் எல்லாம் தனக்கு உவப்பான படைப்புலக பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டிருக்கிறார். இவரது இந்த பயண திறனையும் சுருக்கமாக கூறுவதென்றால், தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். துபாயிலும் இருப்பார்.

இப்போது மெல்பேர்னில் இருக்கிறார்.

ஆக, இவருடனான ஒரு இலக்கிய சந்திப்பு நேற்று  முன்தினம் சனிக்கிழமை மெல்பேர்னில் நடைபெற்றது. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இலகுவில் இப்படியான நிகழ்வுகள் உலகின் எந்தப்பாகத்தில் இருப்பவர்களுக்கும் அமைந்துவிடுவதில்லை. ஆனால், மெல்பேர்ன் இலக்கிய ஆர்வலர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அது எப்படியென்றால் - நேற்று முன்தினம்  மெல்பேர்ன் வெப்பநிலை 45 பாகை செல்சியஸ். புறநகர் பகுதியில் ஒரிரு பிதேசங்களில் காட்டுத்தீ கொழுந்து விட்டெரிந்துகொண்டிருந்தது. ஊரே களேபரமாக ஆறு, குளம், குட்டை என்று தண்ணி உள்ள இடங்களை தேடி ஓடிப்போய் பாம்புகள்போல படுத்துக்கிடந்தது. இன்னும் பலர் ஒஸியில் ஏஸி குடிப்பதற்காக ஷொப்பிங் சென்ரர்களில் போய் பதுங்கிக்கிடந்தார்கள்.

அன்பின் ’காந்த’ ஈர்ப்பு - ரிஷி - (லதா ராமகிருஷ்ணன்)

.


உயிர்த்திருந்த நாளில் அவர் தன் சடாமுடியில்
ஆகாயகங்கையாய் சூடிக்கொண்டாடியவள்
இன்று அந்திமக்காலத்தில் அமைதியாய்
தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்…..
அன்பின் பெயரால் தன்னை ஒப்புக்கொடுத்தவரிடம்
என்றும் அன்பை மட்டுமே யாசித்திருந்தாள்.
அவருடைய அரைக்காசுக்கும் உரிமைகொண்டாட
வழியற்ற தன் நிலைக்காய்
வருந்தியதேயில்லை யவள்.
பார்புகழும் படைப்பாளியின் பாதியாக இருந்தது பற்றி
பத்திகளோ, புத்தகங்களோ எழுதப் புகாதவள்;
பக்கம் பக்கமாய் தங்கள் அந்நியோன்யத்தை
கடைவிரிக்கப் பழகாதவள்;
புத்தியில்லாதவளல்ல,

இலக்கிய அரங்கிலிருந்து அரசியல் அரங்கிற்கு வருகைதந்த படைப்பாளி எம்.எச்.எம். அஷ்ரப் நினைவுகள் முருகபூபதி


-->
" பூரணி காலாண்டிதழ் தற்பொழுதுதான் வெளியாகத்தொடங்கியிருக்கிறது. ஒரு சில இதழ்களே வெளியாகியிருக்கும்  இச்சந்தர்ப்பத்தில்  அதன் குறைகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில், அதன்


வளர்ச்சிக்காக உழைக்கும் பூரணி குழுவினருக்கு அதில் உள்ள  நிறைவுகளை எடுத்துக்கூறி ஊக்குவிக்கவேண்டியது நம்போன்ற வாசகர்களது கடமையாகும். அதற்கு இப்படியான விமர்சன அரங்குகள் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்ச்சிதரக்கூடிய விஷயமாகும். சஞ்சிகைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய மாதிரி வெளிவருவது சிரமசாத்தியமாகும். வாசகர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இலக்கியம் மக்களிடம் ஒரு சாதனமாக அறிவிக்கப்படவேண்டும். பூரணியில் ஒரு சில அசட்டுத்தனமான கவிதைகள் இடம்பெற்றது கண்டிப்புக்குரிய விடயம். அதுபோன்றவை இனிமேலும் வெளிவந்து விமர்சகர்களின் கண்டனத்திற்கு ஆளாகக்கூடாது. "
இவ்வாறு 25-06-1973 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு  கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ்மன்றத்தில் நடந்த " பூரணி" காலாண்டிதழ் விமர்சன அரங்கில் உரையாற்றிய ஒரு மாணவர் பேசினார்.
அந்த நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கியவர் அங்கு சட்டம் படித்துக்கொண்டிருந்த குமாரசாமி விநோதன். அவர்தான் அச்சமயத்தில் தமிழ் மன்றத்தின் தலைவர்.
அவர் தலைமையுரையாற்றத்தொடங்கியதுமே அடிக்கடி குறுக்கிட்டு இடையூறு செய்துகொண்டிருந்தார் ஶ்ரீகாந்தா என்ற மற்றும் ஒரு மாணவர். இவர் குதர்க்கம் பேசி  தலைவருக்கு சினமூட்டிக்கொண்டிருந்தார். 
எனினும் சினம்கொள்ளாமல் பவ்வியமாக நிகழ்ச்சியை விநோதன் நடத்தினார். இந்த விமர்சன அரங்கிற்கு பூரணி இணை ஆசிரியர் என்.கே.மகாலிங்கம் அவர்களுடன் சென்றிருந்தேன்.  சட்டக்கல்லூரி மாணவர்கள் பலரும் வந்திருந்தார்கள்.
எழுத்தாளர்கள் இளம்பிறை எம். ஏ. ரஹ்மான், எச்.எம்.பி. மொஹிதீன் ஆகியோருடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் எம்.எச்.எம் அஷ்ரப், பெரி. சுந்தரலிங்கம், மனோகரன், வரதராஜா, சிவராஜா ஆகியோரும் உரையாற்றினர்.
பின்னாளில் சிறந்த மேடைப்பேச்சாளராக வளர்ந்த செல்வி சகுந்தலா சிவசுப்பிரமணியமும் சபையில் அமர்ந்திருந்தார். அவரும் அங்கு சட்டம் படித்துக்கொண்டிருந்தவர்.
ஏறக்குறைய நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் அந்த விமர்சன அரங்கை நினைத்துப்பார்க்கின்றேன். அவ்வாறு நினைக்கத்தூண்டியவர்தான் எம்.எச். எம் அஷ்ரப். இந்தப்பதிவின்  தொடக்கத்தில் நான் எழுதியிருக்கும் அந்தவரிகளைப்பேசியவர்தான் அஷ்ரப்.
இவர் சட்டக்கல்லூரி மாணவராக அன்று  எனக்கு அறிமுகமான இலக்கியவாதி. கவிஞர். பேச்சாளர். 1983 மார்ச் வரையில் இந்த இலக்கியத்தளத்தில்தான் எனக்கு  இவர் நெருக்கமானவர்.
1972 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பூரணி காலாண்டிதழ் கொழும்பில் வெளியாகத்தொடங்கியது. அதன் வெளியீட்டுவிழா கொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் நடந்தவேளையில் அங்குசென்றதனால் பல இலக்கியவாதிகளின் அறிமுகம் கிடைத்தது.
பூரணியிலும் எழுதுவதற்கு களம் கிடைத்தது. இணை ஆசிரியர்கள் என்.கே. மகாலிங்கம் - க.சட்டநாதன், பூரணி குழுவினர் மு.நேமிநாதன், த. தங்கவேல், இமையவன், இரா. சிவச்சந்திரன், கே.எஸ். பாலச்சந்திரன் ஆகியோரும் அறிமுகமாகி இலக்கிய நண்பர்களானார்கள்.
சட்டக்கல்லூரி தமிழ் மன்றம் பூரணிக்காக ஒரு விமர்சன அரங்கை நடத்தும் செய்தியறிந்து,  அங்கு சென்றதனால் சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்திருந்த எச்.எம்.பி. மொஹிதீனையும் பூரணி விமர்சன அரங்கில் சந்தித்தேன்.  பூரணி அந்த அரங்குவரையில் மூன்று  இதழ்களைத்தான் வெளியிட்டிருந்தது.