இயறகையின் முன் - கவிதை - செ .பாஸ்கரன்

.

அடுத்து என்ன நடக்கும்
விழி எறியும் தூரம்வரை
பார்வை நகர்கிறது
எங்கும் மழைத்துளியின்
வானத்துக்கும் பூமிக்குமான
அரவணைப்பு
கண்ணாடிக் கதவுகளை
உடைத்துவிடுவதுபோல்
சாரல் காற்று
தட்டிப்பார்க்கிறது
மழைக்குளிரை நீக்கிவிட
போர்வை தேடுகிறேன்
நேற்றுவரை
வெப்பத்தின் அனல் கரங்கள்
பொசுக்கி எடுத்த பூமி
தண்ணீரில் மிதக்கிறது
தாளம் தவறிய வாத்தியம் போல்
உரத்தும் சிறுத்தும்
மழை கூரையில் சந்தமிசைக்கிறது
இயற்கையின் விளையாட்டை
எண்ணிச் சிரிக்கிறேன்


இங்குதான் மனிதனும் மரங்களும்
விலங்குகளும் பறவைகளும்
கட்டுப் படுத்த முடியாத
காட்டுத் தீயோடு
கருகி மடிந்த அவலங்கள்
இன்றும் கேட்கிறது
உதவிக்குரல்கள்
வெள்ளத்தில் இருந்து
வெளியே வருவதற்காக \
இயறகையின் முன்
மண்டியிடுபவனாக இருந்து விடுகிறேன்

சிட்னி முருகன் ஆலயத்தில் தைப்பூசம் 08.02.2020

.


கன்பராவின் இரு நெருப்புகள் - கன்பரா யோகன்

.
                                           
                                  


நீண்ட நாட்களின் பின் நேற்று வானம் இருண்டு கொண்டு வந்தது. இம்முறை  புகை மூடியதால்  அல்ல. மழைக்கான இருட்டுதான் அது.  பல நாட்களாய்த்  தொடரும் நமாஜி தேசிய வனப் பிரதேசம்  தீப்பிடித்ததனால் ஏற்பட்ட நெருப்பும் புகையும் இன்னும் முற்றாக குறைந்து விடாத நிலையில் இந்த  வெந்த காட்டைத் தணிவிக்க மழையை எல்லோரும் எதிர்பார்த்துள்ளனர்.

கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாய் கன்பராவின் இரு வெவ்வேறு இடங்களில்  தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 
ஜனவரி 22 இல் கன்பரா விமான நிலையத்திற்கு மிக அண்மையிலுள்ள பியாலிகோ ரெட்வூட் காடுகள்  தீப்பற்றியமையும் , அதன் பின் சரியாக ஐந்து நாட்கள் கழித்து  ஜனவரி 27 இல்  நமாஜி தேசிய வனப் பிரதேசத்திலுள்ள ஒறோறல் பள்ளத்தாக்கு காட்டுத்தீ ஏற்பட்டமைக்கான காரணமும் தவறுதலாலான  மனித செயற்பாடுகளே என்பது தெரிய வந்தது.

நமாஜியில் ஏற்பட்ட தீயுடன் ஒப்பிடுகையில் பியாலிகோ தீ சிறிதளவாயினும் விமான நிலையம் மற்றும் பல  வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்களுக்கு அண்மித்திருந்ததால் அவையெல்லாம் அவசர அவசரமாக மூடப்பட்டதுடன், ஊழியர்களும் அவ்விடங்களிலிருந்து  வெளியேற்றப்பட்டனர்.

அணையா நெருப்பின் நூற்றியைம்பது ஆண்டுகள்

.


வடலூரைச் சென்றடைந்தபோது, உச்சி வெயில் தகித்துக்கொண்டிருந்தது. நீண்ட பிராயணத்தின் வழிச் சென்றடைந்ததாலோ என்னவோ, வடலூரே அன்றைக்கு ஒரு அடுப்பு மாதிரி கனன்றுகொண்டிருந்தது. நெய்வேலி சுரங்கம் விரிவாக்கம் நடக்க நடக்க சுற்று வட்டாரம் முழுக்க தகிப்பதாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொன்னார் உடன் வந்த உள்ளூர் செய்தியாளரும் நண்பருமான முருகவேல். உஷ்ணம் இடத்துக்குள் இருக்கிறதா, காலத்துக்குள் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. பசி வயிற்றை எரித்துக்கொண்டிருந்தது.

மே 22, 2017. வள்ளலார் சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை மூட்டி ஆங்கில நாட்காட்டி கணக்குப்படி, 150 வருஷங்கள் நிறைந்த நாள் அது. 1867 மே 23 (வைகாசி 11) அன்று சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை ஏற்றி வைத்தார் வள்ளலார். சத்திய தருமச்சாலைக்குச் செல்வதற்கு முன்னதாக, உள்ளூரிலேயே வசித்துவரும் வள்ளலார் வாழ்க்கை வரலாற்று நூல் தொகுப்பாசிரியரும் சத்திய ஞான சபையின் நெடுநாள் அறங்காவலரும் சன்மார்க்க அறிஞருமான ஊரன் அடிகளாரையும் உடன் அழைத்துக்கொண்டு செல்வதாகத் திட்டம். அடிகளாருக்கு அன்றைய நாள் 85-வது பிறந்த நாள். தவிர, அவர் துறவறம் மேற்கொண்டு 50 வருஷ நிறைவு நாள். “பசியோடு வடலூர் வருவதும் பசியோடு சத்திய தருமச்சாலைக்குள் நுழைவதும் சன்மார்க்கத்தை அறிந்துகொள்ள வருபவர்களுக்கு ஒரு சரியான மார்க்கம்தான். ஜீவகாருணியத்தை ஏன் பசியாற்றுதலோடு வள்ளலார் பொருத்தினார் என்பது இங்கு பசியோடு வந்து பசியாறும்போது புரியும்” என்றார் ஊரன் அடிகளார். “150 வருஷங்கள்… எத்தனை லட்சம் வயிறுகள் பசியாறியிருக்கும், எத்தனை லட்சம் பேர் பசித்தீயை இந்த அடுப்பு அணைத்திருக்கும்!” என்றார்.


படித்தோம் சொல்கின்றோம்: அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசை - முருகபூபதி

.


 .முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசை
உலக யுத்தங்களில் பயன்படுத்தப்பட்ட அமோனியா, இன்று விவசாய நிலங்களின் உயிரைக்குடிக்கும் அவலம்!!
                          
                              
 எங்கள் ஏரோட்டம் நின்றுபோனாஉங்க காரோட்டம் என்னவாகும்…?    இந்த  பாடல் வரிகளை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.  அரைநூற்றாண்டுக்கு முன்னரே கவியரசு கண்ணதாசன் அனுபவி ராஜா அனுபவி என்ற கே. பாலச்சந்தரின் திரைப்படத்திற்காக எழுதியது.
1967 இல் இந்தப்படம் வெளியானது.
தெருவெங்கும் காரோட்டம் நிற்கவில்லை. தொடருகிறது. எரிபொருளை உறிஞ்சி கரியமிலவாயுவை உமிழ்ந்து, சூழலை மாசடையசெய்கிறது.
சமீபத்திய அவுஸ்திரேலியாவின் காட்டுத்தீயினால் எழுந்த புகைமண்டலம் அயல் நாடுகளை மட்டுமல்ல, முழுஉலகையுமே பெரிதும் பாதிக்கப்போகிறது என்ற செய்தியையும் படித்தோம்.
உழவின் திசை என்னும் நூலை எழுதியிருக்கும் எமது நண்பர் .முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இந்த மண்ணுக்கு வருமுன்பு,   சுமார் ஆறுவருடங்களின் முன்னர் அந்தப்பாடல் பிறந்துவிட்டது.
இந்தியக்கிராமங்கள் பலவற்றில் ஏரோட்டம் நின்றுவிட்ட இக்காலத்தில் முத்துக்கிருஷ்ணன், உழவின் திசை எதனை நோக்கிச்செல்கிறது என்பதை  களத்தில் நின்று ஆய்வு பூர்வமாகவும், திடுக்கிடவைக்கும் புள்ளிவிபரங்களுடனும் செய்தி ஆதாரங்களுடனும் சமூக அக்கறையுடனும் இதழ்களில் பதிவுசெய்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் உழவின் திசை.  

“புகழேந்தி” தரப்போகும் திரை அனுபவம் ⚔️ கானா பிரபா

.



ஒரு பிரமாண்ட மேடை அனுபவத்துக்குத் தயாராகின்றது சிட்னித் தமிழ் சமூகம்.
விதை என்ற அமைப்பின் (Vidhai Entertainment) என்ற அமைப்பின் நிறுவகர் சக இயக்குநர்   செல்வன் ஆதி ( ஆதித்தன் திரு நந்தகுமார்) இன் எண்ணக் கருவில் உருவான மேடைப் படைப்பு ஒன்று நிகழ் நடிப்பின் வழியே ஒரு திரை அனுபவத்தைத் தரப் போகின்றது.
இந்தப் படைப்பை இயக்கும் பொறுப்பை இன்னுமொரு இளையவரான செல்வன் ஜனா ( ஜனார்த்தன் குமார குருபரன்) ஏற்றிருக்கிறார்.

புகழேந்தி, ஆறு வயதில் இருந்து பல்கலைக் கழக மாணவர்கள், மூத்த நாடகக் கலைஞர்கள் உள்ளிட்டோரை உள்வாங்கி 60 க்கு மேற்பட்ட கலைஞர்கள், அரங்கக் கலை நிபுணர்களை ஒருங்கிணைத்து நிகழ்த்தப்படவிருக்கின்றது.

வீடியோஸ்பதி காணொளி வலைப்பதிவின் சந்திப்பாக செல்வன் ஆதி மற்றும் செல்வன் ஜனாவைச் சந்தித்தேன்.

அந்த உரையாடலின் காணொளியோடு “புகழேந்தி” முன்னோட்டமும் இதோ

தெய்வங்களின் சங்கமம் - Vasunthara Pahiratha

.


சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர்
ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில்
கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..
கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..
கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.
பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.
இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர
கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்
கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்
எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.
ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..
இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..
இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?
நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்
4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..
பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட
கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..
இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு
அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல
அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்
புகை மண்டலமாகத்தான் இருக்கும்..
ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்
5 அடிதான்..
மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?
இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு
அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..
பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்
இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.
அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,
ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..


ஸ்வீட் சிக்ஸ்டி - பாக்தாத் திருடன் - ச. சுந்தரதாஸ்

.


இலட்சக் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இஸ்லாமியராக வேடம் ஏற்று நடித்த ஒரு சில படங்களில் ஒன்று ‘பாக்தாத் திருடன். ஐம்பதாம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில் தயாரிக்கத் தொடங்கிய இந்தப் படம் 1960ம் ஆண்டு திரைக்கு வந்தது.

தமிழில் குறைந்தளவிலான படங்களில் மட்டும் நடித்திருந்த ஆடல் அழகி வைஜந்திமாலா இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமும் இதுவேயாகும். வைஜந்திமாலா நடித்ததினால் அவருடைய நடனங்களும் தாராளமாகப் படத்தில் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்தன. அவருடைய அழகான தோற்றமும் ரசிகர்களைக் கட்டியிழுத்தது.

பாக்தாத் நாட்டின் பாதுஷா அவரின் தளபதியினால் சதி மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்படுகிறான். ராணியும் மாண்டு விட சிறு குழந்தையான இளவரசன் திருடனாக வளர்கிறான். அதே சமயம் தளபதி பாதுஷாவாகி போலி இளவரசனை மக்கள் முன் நிறுத்துகிறான்.

பாக்தாத் திருடனான இளவரசனுக்கும் அடிமைப் பெண்ணான சரீனாவுக்கும் காதல் மலர்கிறது. அதே சமயம் தளபதியின் மகளும் இளவரசனைக் காதலிக்கிறாள்.

இப்படி எம்.ஜி.ஆருக்காகவே அமைக்கப்பட்ட படத்தின் கதையின் இளவரசனாக வரும் எம்.ஜி.ஆர் ஏழைகள் மீது இரக்க குணம் உள்ளவராகவும் வீரராகவும் சித்தரிக்கப்படுகிறார். படத்தின் கதை வசனம் இரண்டையும் ஏ.எஸ் முத்து எழுதியிருந்தார். வசனங்கள் சுவையாக அமைந்திருந்தன.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 5 – நமரி - சரவண பிரபு ராமமூர்த்தி

.


நமரி/ கௌரிகாளம்/ கௌரிகாளைகாற்றுக்கருவி






அமைப்பு
நமரி ஒரு நீண்ட ஊதுகருவி. இரண்டு அல்லது மூன்று பாகங்களை உடைய நீண்ட குழல்வடிவ கருவியான நமரி, யானையின் பிளிறலைப் போன்ற சத்தத்தை எழுப்பவல்லது. நமரி கருவியானது எக்காளத்தை விட நீளம் குறைவாகவும் வாய் பகுதி எக்காளத்தின் வாய் பகுதி போன்று அகன்று இல்லாமலும் இருக்கின்றது.

குறிப்பு
எக்காளம், கொம்பு, தாரை, திருச்சின்னம் மற்றும் நமரி கிராமிய ஐந்திசை (பஞ்ச வாத்திய) கருவிகள் எனப்படும். யாழ்ப்பாணம் முதல் சென்னை வரை தமிழர்களாகிய நாம் கேரள செண்டை மேளம்/ பஞ்ச வாத்தியம் பின்னால் சென்று நமது நிகழ்வுகளுக்கு அழைப்பதை தவிர்த்து நமது கிராமிய ஐந்திசை கருவிகளை ஆதரிக்க வேன்டிய நேரமிது. இதனால் இக்கலைகளை அழியாமல் நாம் பாதுகாக்கலாம். தாரை, தப்பட்டை, கொம்புடன் இணைத்து, சிறுதெய்வக் கோயில் திருவிழாக்களிலும், வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் நமரி இசைக்கப்பட்டு வந்தது. போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், இப்போது இறப்பு வீடுகளில் கூட வாசிக்கிறார்கள்.சில பத்தாண்டுகள் வரை புழக்கத்தில் இருந்து காணாமல் போன சூரிய வளையம், சந்திர வளையம், கனகதப்பட்டை, கொடுகொட்டி, சிறுமுரசு போல் மிக வேகமாக காணாமல் போக இருக்கும் கருவிகளில் இதுவும் ஒன்று.

நமரியை சில ஊர்களில் கௌரிகாளம் என்று அழைக்கிறார்கள். காஞ்சி சங்கர மடத்தில்  இரண்டு வெள்ளி கௌரிகாளம் கருவிகள் உள்ளன. இரண்டு பாகங்களாக கழற்றி மாட்டும் வசதியொடு உள்ளது. இரண்டு பாகங்களை சேர்த்தால் சுமார் ஆறடி நீளம் உள்ளது. மடத்து பூசை வேளைகளில் இசைக்கப்படுகிறது. மடாதிபதிகளின் ஊர்வல நிகழ்வுகளிலும் இசைக்கப்படுகிறது. முன்பு காஞ்சி மடத்தில் கௌரிகாளம் உள்ளிட்ட கருவிகளை இசைக்க உடையார்பாளையம் வன்னிய சமஸ்த்தானத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பபட்டு வந்ததாக மடத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.(ஸ்ரீசந்த்ரமௌளீச்வர சுவாமியின் பூஜா மண்டபம், அம்பாரி, சிம்மாசனம்  மற்றும் பல்லக்கைத் தூக்கிவரும் போகிகள், தலைப்பாகையணிந்து ராணுவ உடுப்புடன் கருப்பு மற்றும் வெள்ளைக் குதிரைகளின் மீதேறி சிப்பாய்கள்,தீவட்டிக் காரர்கள், மரச் சாமான்களைத் தம் தலையில் சுமந்தபடி உடன் ஓடி வரும் காலாட்கள், கௌரிகாளை ஊதுகிறவர்கள்,  திமிரி நாகஸ்வரம் வாசிக்கிறவர்கள், நகரா, தவண்டை,  மத்தளம் மற்றும் தவில் வாத்தியங்களை வாசிக்கிறவர்கள், உள்பாரா மற்றும் வெளிப்பாராக்காரர்கள், யானைப்பாகர்கள், மாட்டுவண்டி ஓட்டுபவர்கள், இதர பணி செய்பவர்கள் என்று 200க்கும் மேற்பட்டவர்). சமஸ்த்தானங்கள் மடாதிபதிகளுக்கு அளித்த முக்கியத்துவமும் சன்னியாசிகளான மடாதிபதிகள் அரச வாழ்க்கைக்கு நிகரான வாழ்க்கை வாழ்ந்ததையும் இக்குறிப்புகள் உறுதி செய்கின்றது.

மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 22 - முருகபூபதி

.



கற்பகம் ரீச்சர் தவிர்ந்து, ஏனைய மூன்று டிக்கட்டுகளும்  வேலைக்கு அடுத்தடுத்து புறப்பட்டுவிட்டன.
ஒவ்வொரு டிக்கட்டையும் அனுப்புவதற்கிடையில் அபிதாவுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.   வார நாட்களில் காலையில்   அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டு,                  மொபைலை எடுத்தீர்களா…? தண்ணீர் போத்தல் வைத்துக்கொண்டீர்களா..? வீட்டு  சாவிக்கொத்து இருக்கிறதா…?    ஒவ்வொன்றையும் நினைவு படுத்தியும் விடுபவள் அபிதா.
அதனையும் தினசரி  கடமைகளில் ஒன்றாக ஏற்று இயங்குவதற்கு அபிதா பழக்கப்பட்டுவிட்டாள்.

இனி புறப்படவேண்டியது கற்பகம்தான். அவளும் போய்விட்டால், மளமளவென்று இதர வீட்டு வேலைகளை முடித்து, குளித்து, உடை மாற்றி அருகிலிருக்கும் வேர்ல்ட் கொமியூனிக்கேசன் சென்டருக்கு  காலை பத்து மணிக்கு முன்னர் செல்லவேண்டும்.
ஒரு மணிநேரத்தில் திரும்பிவந்து, எஞ்சியிருக்கும் வேலைகளை கவனிக்கவேண்டும். வீட்டில் இருக்கும் தொலைபேசி அந்த ஒரு மணிநேரத்திற்கிடையில் அலறாமலும் இருக்கவேண்டும்.
எவரும் பேசலாம். அவ்வூர் திருடர்கள் எவ்வாறு வீடுகளை நோட்டம் விட்டு, திருடுவார்கள் என்பதையும் ஜீவிகா, அபிதாவுக்கு சொல்லியிருக்கிறாள்.

வீட்டுத்  தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டால், அங்கிருப்பவர்கள் எவரேனும் எடுத்தால், ஆட்கள் வீட்டிலிருக்கிறார்கள் என்பது அர்த்தம்.
தொடர்ந்து அது சிணுங்கிக்கொண்டிருந்தால், எவரும் இல்லை என்பது அர்த்தம்.  அபிதாவுக்கு ஒரு யோசனையும் வந்தது, ரிஸீவரை  இணைப்பிலிருந்து எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டுப்போனால்,  எங்கேஜ்  ஒலிதான் கேட்கும். யாரோ வீட்டிலிருந்து யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அர்த்தம்.
ஜீவிகாதானே வீட்டின் எஜமானி. அவளிடம்  தனது கம்பியூட்டர் பயிற்சி வகுப்பு பற்றி ஏற்கனவோ சமயோசிதமாக சொல்லியிருப்பதனாலும், அந்த வீட்டிலிருந்து வெளியே வேலைக்கு செல்லும் அந்த நான்கு டிக்கட்டுகளும் ஏதும் அவசரமென்றால் தனது கைத் தொலைபேசிக்கு தொடர்புகொள்வார்கள்தானே என்ற  ஆறுதலும் அபிதாவுக்கு இருந்தது.