ஆன்மீகம்


துருவ மகாராஜாஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில வாரங்களாக வாழ்க்கை நெறி, மற்றும் பல உன்னத கருத்துக்களை பற்றி ஆராய்ந்தோம், இன்று சற்று மாறுதலாக புராணத்தில் உள்ள கதைகளை பற்றி காண்போம்.

இன்று துருவன் என்னும் ஒரு உன்னத பக்தன் பற்றி பார்க்கலாம்.

துருவன் என்னும் 5 வயது பாலகன் ஒரு அரச குமாரன். அவனுக்கு ஒரு நாள் தானும் அவனது சித்தியின் மகனை போல் தன் தந்தை மடியில் அமர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசை படுகிறான், ஆனால் அவனது தந்தை அதை வரவேற்கவில்லை மேலும் அவனது சித்தி அவன் மேல் கோபித்துக்கொண்டு , நீ என் வயிற்றில் பிறக்க வில்லை அதனால் உன் தந்தை மடியில் அமர உனக்கு உரிமை இல்லை. அப்படி நீ உன் தந்தை மடியில் அமர ஆசை இருந்தால் பரம புருஷனின் மேல் கடும் தவம் செய்து அடுத்த பிறவியில் என் கற்பத்தில் வந்து பிறந்தாயானால் நீ அமரலாம் என்று கூறி அவனை அந்த இடத்தை விட்டு விரட்டி விடுகிறாள்.

அந்த சிறு பாலகன் அழுதுகொண்டே அவன் பெற்ற தாயை நோக்கி ஓடினான். அவனை சமாதான படுத்த முயன்றும் அதில் தோல்வி அடைந்த அவன் தாய், அவள் தன் இயலமையை வெளிப்படுத்தினாள். நான் என்ன செய்ய முடியும் துருவா! உன் தந்தை என் வார்த்தையை கேட்க மாட்டார், உன் சித்தி கூறியது நிஜமே, நீ அந்த பரம புருஷனை தியானம் செய்தால் தான் உன் தகப்பனார் மடியில் அமர முடியும் என்று கூறினாள்.

பிறப்பில் ஷத்ரியன் ஆன துருவன் கடவுளை கண்டு விட வேண்டும் என்று உறுதி பூண்டான். கடவுள் எங்கு பார்க்கலாம் ? என்று அந்த பாலகன் வினவினான். பெரிய துறவிகள் எல்லாம், காட்டிலே தான் சென்று தேடுவர்கள் என்று கூறினாள். இந்த 5 வயது பாலகன் காட்டிற்கு பரம் பொருளை காண புறப்பட்டான். அவன் காட்டில் உள்ள எல்லா ஜீவராசிகளிடம் கடவுள் எங்கு உள்ளார் என்று வினவினான். இந்த சிறு பலகனின் உறுதியான நம்பிக்கையும் பக்தியும் கண்ட தேவ ரிஷி நாரத முனிவர் அவன் முன் தோன்றி "குழந்தை! நீ உன் தந்தை உதாசீன படுத்தியத்தை எல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளாதே , அந்த ஆதிமூலத்தை காண்பது மிகவும் கடினம். மிக கடினமான யோகமும், தவம் புரிய வேண்டும், நீ இன்னும் சிறு பாலகன், நீ உன் அரண்மனைக்கு சென்று விடு என்று கூறினார், ஆனால் துருவனோ கேட்பதாக இல்லை, பதிலுக்கு, நாரத முனிவரே! , உம் வாக்கை மிகவும் மதிக்கிறேன், ஆனால் அந்த பரம புருஷனை கண்டு , என் ஆசையை நிறைவு சேய்த்து கொள்ளாமல் நான் திரும்ப செல்ல மாட்டேன் என்று திடமாக கூறினான்.

பாலகனின் உறுதியை கண்ட நாரதர் அவனுக்கு பக்தில் எப்படி ஈடுபடுவது, பரம் பொருளை தியானம் செய்ய மூல மந்திரம், ஆஸ்டாங்க யோகம் எல்லாம் கற்று கொடுத்தார்.

ஆதிமூலத்தை காண, கடும் துவம் புரிய துவங்கினான். முதல் மாதத்தில் வெறும் பழங்களை தின்று தவம் புரிந்தான். இரண்டாவது மாதத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு முறை உண்டும், வெறும் இல்லை தழைகளை உண்டும் தவம் புரிந்தான். நான்காவது மாதத்தில் பிராண வாயு பயிற்சியில் தேர்ந்தான். 12 நாட்களுக்கு ஒரு முறை மூச்சுக்காற்றை உள் வாங்கினான். பிற நேரங்களில் அந்த விஷ்ணு(கிருஷ்ணர்) தியானத்தில் இருந்தான். பிறகு அவன் சுவாசிப்பதயே நிறுத்தி விட்டான். இதனால் உலகமே நின்று விடுவது போல் ஆகியது. இத்தனை அறிந்த தேவர்களும், பிற தேவதைகளும் அந்த பரம் பொருளான பகவன் விஷ்ணுவிடம் சென்று கூறினார்.
பக்தனின் தவத்தில் இறங்கி, அந்த பகவன் நான்கு கைகளோடு சங்கு சக்கிர கதாபாணியாக அவன் முன் தோன்றினான். அந்த பகவானை நேரில் கண்ட சந்தோஷத்தில் அவனுக்கு வார்த்தை கூட வரவில்லை. பக்தனின் நிலை அறிந்த பகவான் கருணா சிந்துவான அவன் அந்த பாலகன் மேல் கருணை பொழிந்தான். பக்தனின் மனத்தையும், லட்சியதையும் அறிந்த பகவன் அவனை என்றும் மிளிரும் துருவ நக்ஷத்திரத்தை பெற வரம் கொடுத்தான். துருவன் மேலும் பிரார்த்தித்தான், "பகவானே உன் காட்சியால் எனது தூங்கிக்கொண்டு இருக்கிற எல்லா புலன்களும் விழித்து கொண்டன . முட்டாள் தனமாக இத்தனை நாளும் பிரபு இறப்பில் இருந்து முக்தியை கொடுக்க வல்ல அந்த பகவானிடம் போய் சிறு ஆர்ப்ப சந்தோஷமான இவ்வுலக பதவி, செல்வத்திற்காக உன்னை தியானம் செய்த என்னை மன்னித்து விடு என்று கண்ணீர் மல்க வேண்டினான். உடைந்த கண்ணாடி துண்டை தேடி வந்த எனக்கு ஒரு பெரும் ஆபரணம் கிடைத்து விட்டது. எனக்கு எதுவும் வேண்டாம் என்றுகூ றி கண்ணீர் சிந்தி பகவானிடம் சரண் அடைந்தான்..

பிறகு துருவன் தனது அரண்மனைக்கு சென்றான். அவனது தகப்பனாரும், சித்தியும் மனம் திருந்தி அவனை வரவேற்றனர். மேலும் அரசன் தனது சிம் மா- ஸனத்தை துருவனுக்கு கொடுத்துவிட்டு பக்தி மார்க த்தை மேற்கொண்டு காட்டி ற் க்கு சென்றா ர். துருவன் மேலும் 36,000 ஆண்டுகள் பக்தி நெறியோடு நல் ஆட்சி செய்தான். அவன் வாழ்நாள் முடிந்த பின் துருவன் முக்தி அடைந்து பகவானை சென்று அடைந்தான்.

இந்த கதையில் இருந்து பகவன் ஸ்ரீ கிருஷ்ணர் உலகியல் இன்பம் மட்டும் இல்லாமல் மாறாத கிருஷ்ண பக்தியும், முக்தியும் அவரை சரண் அடைந்தவர்களுக்கு கொடுக்கிறார் என்பது தெரிகிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில்
அனண்யாச் சிந்தாயந்தோ மாம்
ஏ ஜனா பர்யுபாசதே
தேஷாம் நித்யபியுக்தானாம்
யோக-க்ஷேமம் வாஹம்யஹம்
பகவத் கீதை 9.22
அர்த்தம்: ஆனால் எனது தெய்வீக உருவின் மீது தியானம் செய்து கொண்டு , பக்தியுடன் என்னை வழிபாடு செய்கிறவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து , அவர்களிடம் இருப்பதை காத்தும் நான் பாலிக்கிறேன்.

அரிது அரிது மானிடராக பிறப்பது அரிது. இந்த மனித பிறவியை பயன் படுத்திக்கொண்டு, பகவானை வாயார பாடி அவனை அடைவதே குறிக்கோள்ளாக கொள்ள வேண்டும். அவரை சரண் அடைந்தால் அவர் முக்தியோடு, இவ்வுலகில் அவர் பக்தர் சுகமாக வாழ எல்லா ஏற்படும் செய்கிறார்.
குறிப்பு: வாசகர்கள் இந்த புராணத்தில் குறிப்பிட்டுள்ள கடும் தவம், மற்றும் யோகம் புரிய முற்பட வேண்டாம். அந்த காலத்தில்(வேறு யுகம்) 1000 கணக்கான வருடங்கள் வாழ்ந்தார்கள், அதனால் அவர்களுக்கு அது எல்லாம் சாத்தியம் ஆகியது, ஆனால் இந்த கலி யுகத்தில் நமது ஆயுள் 100 மேல் சென்றால் மிக அதிசயம் , ஆகையால் தான் இந்த கலிக்கு நாம சங்கீர்த்தனமே உகந்தது என்று கூறப்பட்டு உள்ளது.

ஆகையால் வாருங்கள் அந்த உன்னதமான கிருஷ்ண நாமத்தை வாயார பாடி மனமார மகிழலாம்.

ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சந்தோஷம் - ஹரே கிருஷ்ணா

  


.ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வாரம் எல்லோரும் விரும்பும், தேடும் உண்மையான சந்தோஷத்தை பற்றி காண்போம். சந்தோஷம் என்றால் என்ன? எதற்காக மகிழ்ச்சியை மனம் நாடுகிறது ? எதற்காக இன்பத்தை போல் துன்பத்தை ஏற்க மனம் மறுக்கிறது? நான் இன்பமாக உள்ளேன் என்று கூறும் போது நிஜமாகவே சந்தோஷமாகவே இருக்கிறேனா? ஒரு மனிதன் எப்போதும் இன்பமாகவோ (சந்தோஷமாக) இருக்க முடியுமா? இருக்க என்ன வழி? இதை பற்றி இன்று ஆராயலாம்.

சந்தோஷம் என்பது மனத்தின் ஒரு நிலை. அது காதல், நிறைவு, மகிழ்ச்சி,போன்ற உணர்வுகளினால் ஏற்படுகிறது. ஒரு உதாரணம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெண்ணை சந்தோஷ படுத்த வேண்டுமா? மிகவும் சுலபம், அவளுக்கு பூவோ அல்லது கடைகளுக்கு அழைத்து அவளுக்கு பிடித்ததை கொடுத்தால் அவள் மனத்தில் இடம் பிடிக்கலாம் என்பது ஒரு பரவலான கருத்து. பொதுவாக நாம் இந்த நிலையற்ற அழிய கூடிய உடலை பொருட்களினால் சந்தோஷ படுத்துவதே உண்மயான சந்தோஷம் என்று நினைக்கிறோம். இந்த அழிய கூடிய செல்வங்கள் எல்லாம் நிலையற்றவை என்று தெரிந்தும் அதன் பின்னே தான் செல்கிறோம். அதிகமான பணமோ, பெரிய வீடு, பெரிய வாகனம் எல்லாம் வந்தால் வாழ்க்கை இன்பமயமாகி விடும் என்று பல சமயம் நினைக்கலாம்.

பணமோ, பொருளோ வேண்டிய சந்தோஷத்தை தருவதானால், உலகின் பெரும் பணக்கார “பில் கேட்ஸ் “ முதலிடம் பெற வேண்டும். பணக்கார நாடுகள் மிகவும் நிம்மதியோடு இருக்க வேண்டும். பில் கேட்ஸ் தான் உலகில் சந்தோஷ மான மனிதர் என்றால் அவர் முதல் 100 சந்தோஷாமன மனிதர் பட்டியலில் முதலில் வர வேண்டும்" பார்க்க போனால் அப்படி ஒரு பட்டியலே கிடையாது,. ஏனென்றால் சந்தோஷத்தை அளவிடுவது மிகவும் கடினம். சிலருக்கு பணம் இருந்தால் எல்லாம் இன்பமயம் என்று நினைப்பார்கள், சிலர் நல்ல குடும்பமே இன்பம் தரக் கூடியது என்று நினைப்பார்கள், சிலர் நல்ல மக்களே இன்பம் தரக்கூடியவர்கள் என்று நினைப்பார்கள். இவை எல்லாமே நிலை ஆனவை இல்லை. நான் மிகவும் நிறையாக, இன்பமாக உள்ளேன், இனி ஒரு சொட்டு அதிகமானாலும் வெடித்து விடுவேன் என்று கூற முடியுமா? அந்த ஒரு நாள் வருமா? அந்த நாள் வருவதற்கு கிருஷ்ணர் கீதையில் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

மாத்ராஸ்பர்ஷாஸ்த்து கெளந்தேய சீதோஷநஸூகத்துக்கதா:
ஆகமாபாயிநொ (அ)னித்யாஸ்தாம் திதிஷஸ்வ பாரத

பகவத் கீதை 2.14
அர்த்தம்:

குந்தி மகனே ! இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலப்போக்கிலான அவற்றின் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவது போலவே, புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றனவாதலால், இவைகளால் பாதிக்கப்படாமல் பொறுத்துக்கொள்ள கற்றுகொள்வாயக

இது ஒரு அற்புதமான உபதேசம் ஆகும். இதில் கிருஷ்ணர் இன்பம் துன்பம் இரண்டும் நிரந்தரமானது இல்லை என்று ஆணி தரமாக கூறுகிறார். அதற்கு இந்த குளிர் காலமே ஒரு நல்ல உதாரணம். குளிர் தாங்கமாட்டாமல் நல்ல வெய்யில் அடித்தால் எத்தனை இன்பமாக இருக்கும் என்று நினைக்கிறோம், ஆனால் அதுவே வெய்யில் காலத்தில் மழை இன்பமாக இருக்கும். ஆகவே சந்தோஷமும் நிலையானது இல்லை.

அப்படியானால் பொருள் எல்லாம் நிலையான இன்பம் தராது . ஆக உண்மையான இன்பம் என்றால் என்ன? உண்மையான இன்பம் பரம் பொருளிடம் இருந்தே வரவேண்டும். எல்லாம் நிறைந்தவன். அதனால் தான் அவரை "பகவான்" என்று அழைக்கிறோம். உண்மயான இன்பம் அந்த கண்ணனின் கருணையில் தானே வர முடியும். உண்மையான பக்தியோடும் அன்போடும் அவனைத் தொழுது அவர் நாமங்கள் வாயார பாடினால் எத்தனை இன்ப தரும் என்பதை ஒவ்வொருவரும் அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டும். அந்த இன்பம் நிரந்தரமானது, எப்போதும் சாசுதமானது .

சந்தோஷத்தின் உண்மயான அளவு கோல் - நாம் எத்தனை தூரம் கிருஷ்ணர் மேல் ஈடுபாட்டொடு உள்ளோம் என்பதைப் பொருத்து உள்ளது. அவர் அருகில் செல்லச் செல்ல எல்லாம் இன்ப மயம் ஆகிறது.

கிருஷ்ணர் மேலே குறிப்பிடுவது போல் இன்பமும் துன்பமும் புலன்களின் எண்ணங்களே! ஆகையால் புலன்களை, அவர் மேல் திருப்பினால், அவர் நாமங்களைப் பாட வைத்தால் என்றும் எப்போதும் இன்பமாக இருக்கலாம்.

வாருங்கள் எல்லோரும் வாயார பாடி மனதார மகிழலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சைவ உணவின் மகத்துவம்  25.07.10


ஹரே கிருஷ்ணா ! மீண்டும் உங்களை இந்த வாரம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில இதழ்களில் நான்கு விதிமுறைகளை பற்றி கண்டோம், இன்று அதில் முதன்மையான மாமிசம் உண்ணாமை பற்றியும், சைவ உணவின் முக்கியத்தை பற்றி காண்போம்.


மாமிசம் உண்ணுவதன் மூலம் நமக்கும் நாம் இயற்கைக்கும் எத்தனை கேடு என்பதை பற்றி பார்க்கலாம். இதோ ஒரு சிறு ஆய்வு

நாம் எத்தனை மரங்களை வெட்டுகிறோம் தெரியுமா? எத்தனை மண் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? எவ்வளவு நீரை அசுத்த படுத்துகிறோம் தெரியுமா? இத்தனை பற்றின உண்மைகளை காண்போம்.

1. பாதிக்கு மேல் உள்ள அடர்ந்த மழை காடுகளை மனிதன் மாட்டு மாமிசக் கூடம் கட்ட அழிக்கிறான். ஒரு பௌன்டு (pound) ஹாம் பர்கர் (ham burger) 55 சதுர அடி மழை காடுகளை அழிகிறது. ஒருவர் மாமிசத்தை துறந்தாலும் வருடத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தை காப்பாற்றலாம்.

2. பாதிக்கு மேல் தானியங்களை பிராணிகளுக்கு ஊட்டி அதன் மாமிசத்தை அறுத்து திண்ணுவது மனித தன்மை அற்ற செயல். 1 பௌன்டு (pound) மாட்டு மாமிசத்துக்கு , 14 பௌன்டு தானியங்கள், மற்றும் சோயா தீனி போடுகிறான். இது எத்தனை பயன் இல்லாத செயல்?

. அமெரிக்காவில் மட்டும் எல்லா சோயா மற்றும் தானியங்களையும் மனித உணவிற்காக எடுத்து வைத்தால் அது 1.3 பில்லியன் மக்களுக்கு தாராளமாக உணவு கொடுக்க முடியுமாம். 1 அசைவ உணவு உண்ணுபவனுக்கு தேவையான நிலத்தில் 20 பேர்களுக்கு சைவ உணவு கொடுக்கலாம்.

4. ஒரு மாமிச பிரியருக்கு சராசரி 4200 காலன் நீர் தேவை படுகிறது. அதுவே ஒரு சைவ உணவு உண்ணுபவனுக்கு 1200 காலன் மட்டுமே செலவு ஆகிறது. மேலும் வெறும் 25 காலன் நீர் மட்டுமே 1 பவுண்டு கோதுமை தயாரிக்க தேவை, ஆனால் 2500 காலன் நீர் செலவளித்தால் தான் 1 பவுண்டு மாமிசத்தை தயாரிக்க முடியும்.

நாம் சிறு வயதில் நாம் தாய் பால் மட்டுமே அருந்தி வளர்கிறோம், அதே போல் பெரியவர் ஆனா பின் பசுவின் பால் அருந்துகிறோம். பால் கொடுப்பதனால் அந்த கமதேனு தாய்க்கு சமானம் அல்லவா? சற்று சிந்தியுங்கள்.

சிலர் எனக்கு பிற உயிர்களை பற்றி, இயற்கையை பற்றியெல்லாம் கவலை இல்லை, என்று நினைப்பார்கள், சைவ உணவினால் பிறருக்கு மட்டும் பயன் இல்லை, நமக்கும் நாம் சிந்தைக்கும் மிக்க பலன் உள்ளது.

சுடுகாட்டில் போய் நிம்மதி தேட முடியுமா? இறந்த பிராணியின் உடலை உண்டு வயிற்றில் புதைபதனால் நாம் வயிறும் சுடுகாடு ஆகிறது அல்லவா? எப்படி நிம்மதி மற்றும் சாந்தி கிட்டும்? மேலும் இயற்கையில் மனிதனின் உடல் அமைப்பும் மாமிசம் உண்ணுவதற்கு ஏற்றவாறு இல்லை. நமக்கு மிருகங்களை போல் மாமிசத்தை உண்ண கோரை பற்கள் இல்லை. நம் குடல்கள் நீளமானவை, மாமிசத்தை ஜீரணிக்கும் போது வரும் தேவை அற்ற பொருளை இரத்தத்தோடு கலக்கிறது. இதனால் பல விதமான வித்தியாசமான நோய்களும் வருகிறது.

அது மட்டும் இல்லாமல் 3/4 கப் பருப்பு+ 2 கப் அரிசி 1/4 கிலோ ஸ்டீக் சமமான சத்தை தருகிறது. பருப்பில் இரும்பு சத்து மற்றும் விடமின் B உள்ளது. இன்னும் இப்படி நிறைய உதாரணங்கள் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் இந்த ஸ்லோகத்தின் வாயிலாகக் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

பத்ரம் புஷ்பம் பழம் தோயம்
யோ மே பக்திய ப்ரயச்சதி
தத் அஹம்́ பக்தி-உபஹ்ர்̣தம்
அஸ்நாமி ப்ரயதத்மநஹ ̣ [9.26]

அர்த்தம்: அன்புடனும், பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஒரு இலையோ, பூவோ, பழமோ, நீரோ அளித்தல் அதை நான் ஏற்கிறேன்.

ஒருவன் பரமன் அன்புதொண்டில் ஈடுபட வேண்டுமானால் அவை எதை விரும்புகிறார் என்பதை கண்டு கொள்ள வேண்டும். அவர் கேட்காத அல்லது விரும்பாத பொருட்களை தவிர்ப்பான். இவ்வாறாக மாமிசம், மீன், முட்டை இது போன்றவை கிருஷ்ணர் ஏற்க மாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நீ என்ன உண்ணுகிறாய் என்று சொல், நான் நீ யார் என்று சொல்லுகிறேன் - அந்தேள்மெ பிரில்லாத் சால்வின்(1826).
நாம் உண்ணும் உணவு 3 வகையாக பிரிக்கப்படுகிறது. சத்துவ, ரஜஸ் மற்றும் தாமச உணவு. அதாவது
சத்வ - நல்ல எண்ணங்களை வளர்க்கும் உணவு.
ரஜஸ் - வெறியை தூண்டும் உணவுகள்
தாமச - அறியாமையை தூண்டும் உணவு.
மீன் மாமிசம், முட்டை எல்லாம் தாமச உணவு வகைகள். இது அறியாமையும் மன இருளையுமே வளர்க்கும். இது பக்திக்கு உகந்தது அல்ல.

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில்
யஹ்நசீஷ்டசின: ஸந்தோ முச்யந்தே சர்வ- கில்பிஷை:
புஞ்சதேதே த்வகம்பாபா யே பஸன்த்யத் மகாரணத் [3.13]
அர்த்தம்: யாகத்திற்க்காக முதலில் படைக்கப்பட்ட உணவை உண்ணுவதால் பக்தர்கள் எல்லா விதமான பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார். சுய புலனின்பதிற்காக உணவு தயாரிப்பவர்களோ பாவத்தையே உண்ணுகிறார்கள்.

கிரிஷ்ணார்பணம் செய்த உணவு புனிதம் அடைகிறது. அது உடலுக்கும், உள்ளத்துக்கும், பக்திக்கும் உகந்த உணவு ஆகும். ஆகையால் எளிமையான தாவர உணவை தயார் செய்து அவருக்கு நாம் அன்பொடும், பக்தியோடும் நேய்வேதியம் செய்து ஊட்கொள்வது வாழ்வில் முன்னேறுவதற்கும் , உடலை தூய்மை செய்வதற்கும், நல்ல சிந்தனை சக்திக்காக நுண்மையான மூளை திசுக்களை உண்டாக்குவதற்கும் நிச்சியமாக ஒருவனுக்கு உதவுகிறது. அதை கிருஷ்ண பிரசாதம் என்று கூறுவர்.

ஆகையால் இயற்கைக்கும், சமூகத்திற்க்கும் கேடு விளைவிக்காமல் இருக்க ஒருவன் மாமிசம் உண்ணாமல் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நான் ஒருவன் மாறினால் என்ன பெரிய வித்தியாசம் ஏற்பட போகிறது என்று எண்ணாமல் " சிறு துளியும் பெரு வெள்ளமாக ஆகும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவர் நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண்டு ஒரு புரட்சியை ஏற்படுத்தி , கண்ணனின் திரு நாமங்களை வாயால் பாடி மனத்தால் மகிழ வேண்டும் என்று வேண்டி அமைகிறேன்.

ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நான்கு வகை பக்தர்கள் யார்?  17.07.10


ஹரே கிருஷ்ணா! வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். கடவுளை வழிபடும் அனைவரும் பக்தர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த பக்தர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் என்ன கூறியுள்ளார் என்பதை இந்த
வாரம் காண்போம் .


 


சதுர்விதா பாஜந்தேமாம் ஜனா: ஸுக்ருதினோர்ஜூந
ஆர்த்தோ ஜிக்யசூர்த்தார்தீ க்யாநி ச பரதர்ஷப
- பகவத் கீதை - 7 .16
அர்த்தம்:

பரதர்களின் சிறந்த அர்ஜுனா நான்கு விதமான நல்லோர் எனக்கு தொண்டு செய்கின்றனர் - துயருற்ரோர் , செல்வம் விரும்புவோர் கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவை தேடுவோர் என்பவர் ஆவார்

இத்தகு நான்கு விதமான மனிதர்கள் பக்தி தொண்டிற்காக பரம புருஷனிடம் வரும் போது , தூய பக்தர்களின் உறவால் தூய்மையடைந்து தரமும் தூய பக்தர்களாகி விடுகின்றனர் .

அதனால் கண்ணனை வழிபடும் காரணத்தை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. காரணம் எதுவாக இருந்தாலும், பக்தியுடன் கூப்பிட்டவார்களுக்கு அருள் புரியும் கருணா மூர்த்தி அவன். இந்த வழியில் பகவத கதையான "கஜேந்திர மோக்ஷம்" பற்றி இந்த வாரம் காண்போம்.

திரிகூட பர்வதத்தில் கஜேந்திரன் என்னும் யானை தலைவன் அவன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாழ்ந்து வந்தான் . அவன் மிக பலசாலியான யானை யாக இருந்தான் , அவனது வாடையை முகர்ந்த புலி, சிங்கம் , சிறுத்தை எல்லாம் அலறி அடித்து ஓடுமாம். அவனால் காதில் மான், முயல், எருமை மற்றும் எல்லா ஜீவராசிகளும் பயமில்லாமல் திரிந்தன.

ஒரு நாள் அவனும் அவனது தோழர்களும் சேர்ந்து அருகில் உள்ள ஒரு பூஷ்கரணியில் நீர் பருகிய பின், அதில் குளித்து தான் நாள் முழுதும் நடந்த களைப்பை போக்கிகொண்டு இருந்த வேளையில் திடீரென ஒரு முதலை நீரில் இருந்து கஜேந்திரனின் காலை பிடித்து, கடித்து உண்ண தொடங்கியது. கஜேந்திரன் கடும் முயற்சி செய்து விடுவித கொள்ள முயன்றும் அவனால் முடியவில்லை, அவனது நண்பர்கள் அவனை விடுவிக்க முயன்றும் எதுவும் நடக்கவில்லை. கஜேந்திரன் அந்த முதலையிடம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் போர் புரிந்து விடுவித்துக்கொள்ள முயன்றான், வருடங்கள் ஓடியது, கஜேந்திரன் தான் பலத்தை இலக்க தொடங்கினான். நீரில் இருக்கும் முதலைக்கு பலம் கூடிக்கொண்டே சென்றது. கஜேந்திரன் சுற்றும் முற்றும் பார்த்து, எண்ணினான் நான் ஆயிரம் வருடங்களாக போராடியும், என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போர் புரிந்தும் இன்னும் நான் நீரில்லேயே இருக்கிறேன், என் முடிவு அருகே வந்து விட்டது, இந்த நிலையில் இருந்து என்னை ஒருவன் காப்பாற்ற வேண்டுமானால் அவன் சர்வரக்ஷகனாக தான் இருக்க முடியும் என்று உறுதி கொண்டு , தான் தும்பிக்கையால் பூஷ்கரணியில் உள்ள தாமரை மலரை எடுத்து தான் மனதார " கிருஷ்ணா ஆதி மூலமே " என்னை காப்பாற்று , நான் ஆபத்தில் உள்ளேன் என்று பகவானை பிரார்த்தனை செய்தது. ஆதி மூலமே என்று கதருகின்ற பக்தனின் மனக் குரல் கேட்டு அந்த சர்வ அந்தரியாமியான அந்த "ஆபத் பாந்த அநாத ரக்ஷகன் " கருட வாகனத்தில் வந்து தான் சுதர்சன சக்கரத்தினை ஏவி அந்த முதலை இடம் இருந்து கஜேந்திரனை காப்பாற்றினார். .

ஆகையால் பிறப்பிலேயே கிருஷ்ண பக்தனாக இருந்தால் தான் பகவன் ரக்ஷிப்பான் என்பது எல்லாம் கிடையாது , கிருஷ்ண என்று யார் உள்பக்தி மற்றும் அன்போடு கூப்பிடலும் ஓடி வருவார். துயரத்தின் போது பகவானை நினைப்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு வரலாறு பார்த்தோம், கூடிய விரைவில் செல்வத்திற்காக பகவானை வழிபாடு செய்து பயன் அடைந்தவர்களை காண்போம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்,
கனஷியாம் கோவிந்த தாஸ்


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

புருஷோத்தமா மாதம் - இரண்டாம் பகுதிஹரே கிருஷ்ணா! பத்ம புராணத்தில் இருந்து புருஷோத்தமா மாதத்தின் புகழின் முதல் பகுதியினை போன வாரம் பார்த்தோம். இரண்டாம் பகுதியினை இந்த வாரக் கட்டுரையில் பார்ப்போம்.

முழுமுதற் கடவுளின் இருப்பிடம் சென்றவுடன் பகவான் விஷ்ணு, கோபியர் சூழ இருந்த பகவான் கிருஷ்ணரை சந்தித்தார். ரமாதேவியின் கணவரான பகவான் விஷ்ணு, பகவான் கிருஷ்ணருக்கு தனது மரியாதையை தெரிவித்துக்கொண்டார். அழுதுக்கொண்டிருப்பினும், மல மாதத்தையும் பகவான் கிருஷ்ணரின் கமல பாதத்தில் மரியாதை செய்யும்படி பகவான் விஷ்ணு கூறினார். உடனே பகவான் கிருஷ்ணர் வினவினார்"அவள் ஏன் அழுதுக்கொண்டிருக்கிறாள்? கோலோக விருந்தாவனத்தில் இருப்பினும் அவள் அழுகிறாளே ஏன்?" என்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து இந்த வார்த்தைகளை கேட்ட பகவான் விஷ்ணு, இருக்கையிலிருந்து எழுந்து மல மாதத்தின் துயரமான நிலைமையை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்தார். பாதுகாப்பின்றி இருந்த அந்த உபரி மாதத்தை காக்கும்படி மன்றாடினார். "பகவான் ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை தவிர இந்த நரக நிலையில் இருக்கும் உபரி மாதத்தை காத்து இரட்சிக்க யாராலும் முடியாது". இவ்வாறாக கூறி, பகவான் விஷ்ணு கை கூப்பியவாறு, பகவான் கிருஷ்ணர் முன் நின்றார்.

அதன் பிறகு ஸுத கோஸ்வாமி பேச ஆரம்பித்தார், "ஒ முனிவர்களே! பகவான் விஷ்ணு இருக்கையில் அமர்ந்த பிறகு, பகவான் கிருஷ்ணர் அவரிடம் மிகவும் தனிப்பட்ட விஷயத்தை பற்றி கூறினார். அந்த வார்த்தைகளை உங்களிடம் கூறப்போவதால், நீங்கள் அனைவரும் மிகவும் கவனமாக கேளுங்கள்".

புருஷோத்தமரான ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதாவது, "ஒ விஷ்ணு, இந்த உபரி மாதத்தை இங்கே கூட்டிக்கொண்டு வந்தது நீ செய்த நல்ல காரியமாகும். இந்த நடவடிக்கையால் உனது புகழ் இன்னும் அதிகரிக்கும். இந்த மல மாசத்தை நீ ஒப்புக்கொண்டதால், நானும் அவளை ஒப்புக்கொள்கிறேன். நான் இந்த மலமாசத்திற்கு என்னை போலவே தரம்,புகழ் , செல்வம், உணர்வு, வெற்றி மற்றும் பக்தர்களுக்கு வரம் அளிக்கும் குணங்களை தருகிறேன். இந்த மாதம் என்னை போலவே சக்தி வாய்ந்ததாக இருக்கும். நான் எனது எல்லா தெய்வீக குணங்களையும் இந்த மாதத்திற்கு அளிக்கிறேன், எனது பெயரை கொண்டு இந்த மாதம் புருஷோத்தம மாதமென்று இந்த உலகில் புகழப்படும்.

ஓ ஜனார்த்தனரே ! இவள் எனது எல்லா குணங்களையும் பெற்று இருக்கிறாள்,நானே இந்த புருஷோத்தம மாதத்தின் பாதுகாவலரும்,கணவனுமாய் இருப்பேன்.எனக்கு சமமாய் இருப்பதால் இவள் மற்ற எல்லா மாதங்களுக்கு தலைவியாய் இருப்பாள். இப்பொழுது முதல் இந்த மாதம் எல்லோராலும் வணங்கப்படும் .அனைவரும் இவளுக்கு நமஸ்காரங்ககளை செலுத்த வேண்டும் மற்றும் இவளை வணங்க வேண்டும். இந்த மாதம் என்னை போலவே அதனை பின்பற்றுபவர்களுக்கு எல்லா வரங்களையும் தர வல்லது. இந்த மாதத்தை வழிபடுபவர்களின் எல்லா பாவ விளைவுகளும் சாம்பலை போல எரிந்து விடும்,இந்த ஜட உலகில் எல்லா இன்பங்களையும் பெற்று இறை நாட்டிற்கு திரும்புவார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார் "ஓ கருடத்வஜா!தபஸ் செய்பவர்கள்,நற்காரியங்களில் ஈடுப்பட்டுள்ள மகாத்மாக்கள்,பிரம்மசாரியத்தை கடைபிடிப்பவர்கள்,வாழ்நாள் முழுவதும் நோன்பு மேற்கொள்பவர்களால் கூட எனது கோலோகத்தை அடையமுடியாது. அனால் இந்த புருஷோத்தம மாதத்தை கடை பிடித்து பக்தர்கள் ஆகுபவர்கள் இந்த ஜட உலகை கடந்து எனது இறை நாட்டிற்கு திரும்புவார்கள். அனைத்து தவங்களை காட்டிலும் புருஷோத்தமா மாதத்தை கடைபிடிப்பதே சிறந்ததாகும். எவ்வாறு உழவன் சிறந்த அறுவடையை, பயிரினை செழுமையான நிலத்தில் விதைப்பதால் பெறுகிறானோ அவ்வாறே அறிவுள்ளவன் இந்த புருஷோத்தம மாதத்தில் பக்தி தொண்டினை முழுமுதற் கடவுளிடம் செலுத்தி அதன் பயனாய் இந்த உலகில் மகிழ்ச்சியான வாழ்வையும், இந்த உடலை நீத்த பின்பு இறை நாட்டிற்கும் செல்கிறான்".
துரதிர்ஷ்டமான அறியாமையில் இருக்கும் மனிதன் , எந்த விதமான் ஜபங்களையும் செய்யாமல் இருப்பவன், யாருக்கும் தானம் வழங்காமல் இருப்பவன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும்,அவரது பக்தர்களுக்கும் மரியாதை அளிக்காமல் இருப்பவன், பிராமணர்களிடம் தவறாக நடந்து கொள்பவன் , மற்றவர்களிடம் பகைமையை வளர்த்து கொள்பவன் , புருஷோத்தம மாதத்தை தூற்றுபவன் ஆகியோர் அளவற்ற காலம் நரகத்தில் இருப்பார்கள்". பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார் "எவ்வாறு ஒரு மனிதன் இந்த புருஷோத்தம மாதத்தில் பக்தி தொண்டினை செய்யாமல் தனது வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்? "எவன் ஒருவன் புலன் இன்பங்களில் முழ்கி இந்த புனித மாதத்திற்கு முக்கியத்துவம் தர மறுக்கிறானோ அவன் நரகம் செல்லுவதற்கு தகுதியானவன் ஆகிறான். எல்லா மனிதர்களும் இந்த புருஷோத்தம மாதத்தில் சில பக்தி தொண்டினையாவது கீழ்கண்டவாறு செய்ய வேண்டும்.

· பகவான் ஸ்ரீ கிருஷ்ணரான என்னை எனது நாமங்ககளால் ஜபம் செய்தல்
· பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தை பாரயணம் செய்தல்,முக்கியமாக பதினைந்தாவது அத்தியாயமான புருஷோத்தோம யோகத்தை பாரயணம் செய்தல்
· தானம் தருதல்
· தினமும் நெய் விளக்கு காண்பித்தல் போன்றவையாகும்

எனது ஆணையை ஏற்று எவன் ஒருவன் இந்த புருஷோத்தம மாதத்தை முறையாக நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறானோ அந்த அதிர்ஷ்டமிக்க நபர் புகழ், செல்வம்,நல்ல புத்திரனை இந்த ஜென்மத்திலேயே அடைவான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்த பின்னர் அவர்கள் எனது கோலோக தாமிற்கு வருவான்.ரமா தேவியின் கணவரே (விஷ்ணு) உங்களது இந்த மாதத்தை பற்றியான எல்லா சந்தேகங்களையும் விட்டு விடுங்கள். இந்த புருஷோத்தம மாதத்தை தங்களுடன் உங்களது வைகுந்தத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.

புருஷோத்தம மாதத்தின் சிறிய வரலாற்றை கூறிய பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மிகுந்த கருணையோடு யுதிஷ்டரையும் திரோபதியையும் நோக்கி பின்னர் அர்ஜுனரிடம் பேச தொடங்கினார்.

ஓ சிங்கம் போன்றவனே ! இப்பொழுது புரிகிறதா ஏன் பாண்டவர்களாகிய நீங்கள் துன்ப படுகிறீர்கள் என்று ? சிறிது காலத்திற்கு முன்பு முடிந்த புருஷோத்தம மாதத்தை நீங்கள் அங்கீகரிக்கவில்லை ,அதனை கௌரவிக்கவுமில்லை.விருந்தவன சந்திரனின் அன்பிற்குரிய புருஷோத்தம மாதத்தை காட்டில் வாழ்ந்து வந்த பாண்டவர்களாகிய நீங்கள் வழி படவில்லை .அதனால் நீங்கள் துன்ப படுகிறீகள்.வியாசர் உங்களுக்கு கொடுத்த சடங்குகளை செய்தீர்கள், அனால் புருஷோத்தம மாதத்தை வழிபடாதவர்களுக்கு என் மீதான தூய பக்தி கிட்டாது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார்.நான் தற்போது திரௌபதியின் முந்தய ஜன்மத்தின் மிக முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சியை பற்றி கூறபோகிறேன்.பூர்வ ஜன்மத்தில் திரௌபதி ஒரு பெரிய பிராமண ரிஷியான மேதாவியின் புதல்வி. அவளது தாயார் அவள் சிறு குழந்தையாக இருந்தபொழுதே இறந்ததால் அவள் அவளது தந்தையின் பராமரிப்பிலே வளர்ந்தாள்.அவள் ஒரு அழகி இருப்பினும் அவளுக்கு திருமணம் செய்ய அவளது தந்தை சிறிதும் அக்கறை காட்டவில்லை. அவளது தோழியர்கள் தமது கணவனுடனும், குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு தனது நாட்களை மிக துயரத்துடன் கழித்தாள்.சிறிது காலத்தில் அவளது தந்தை இந்த ஜட உலகை விட்டு ஹரியின் புனித நாமங்களை கூறியவாறு சென்றார்.

இது அவரது மகளை மிகவும் துயரமடைய செய்தது.அதிர்ஷ்டவசமாக சிறந்த முனியான துர்வாசர் அவளது தந்தையின் மறைவிற்கு பின்னர் அவளது ஆஷ்ரமத்திற்கு வந்தார். முனிவரை கண்ட அந்த பெண் அவருக்கு நமஸ்காரங்களை தெரிவித்து, மிகுந்த மரியாதையுடன் அவரை வழிப்பட்டாள்.அவருக்கு பூவும், பழமும் அளித்தாள்.அவளது வரவேற்பில் மகிழ்ந்ததை முனி தெரிவித்த பொழுது அவள் புலம்பி அழ தொடங்கினாள். கவலைப்பட்ட முனி அவளது புலம்பலைப் பற்றி வினவத்தொடங்கினார்.அந்த பிராமண பெண் கூற தொடங்கினாள் "ஓ முனி துருவாசரே!எனது கடந்த காலம்,நிகழ் காலம் மற்றும் எதிர் காலத்தை நீர் அறிவீர்!எனக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை.நான் எனது உறவினர்களை இழந்துவிட்டேன்.எனது பெற்றோர்கள் இறந்து விட்டனர்.எனக்கு மூத்த சகோதரன் என்று யாரும் இல்லை.எனக்கு திருமணமும் ஆகவில்லை ஆதலால் என்னை காப்பாற்ற கணவரும் இல்லை. ஆதலால் முனிவரே தயவு செய்து எனக்கு எதவது செய்து உதவுங்கள்.இந்த துயரத்திலிருந்து விடுப்பட ஏதேனும் உபாயம் கூறுங்கள் என்றாள்.இவளது பிரார்த்தனையை கேட்ட துருவாசர் இவளது துயர நிலையை கண்டு இவள் மீது இரக்கம் கொண்டார்.துருவாச முனி கூறினார் "ஓ அழகியே !இப்பொழுது முதல் மூன்று மாத காலங்களில் மிக சிறந்த மாதமான புருஷோத்தம மாதம் தொடங்கும்.இது ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிக உகந்த மாதம் ஆகும்.இந்த புனித மாதத்தில் புனித தீர்த்தத்தில் குளிப்பதால் ஆணோ,பெண்ணோ அவர்களது பாவம் அனைத்தும் அவரை விட்டு நீங்கும். இந்த புருஷோத்தம மாதமானது எல்லா மாதங்களை காட்டிலும் , ஏன் கார்த்திகை மாதத்தை காட்டிலும் சிறந்தது.மற்ற அனைத்து மாதங்களின் புகழ் இதன் பதினாறின் ஒரு பங்கை கூட பெறாது. இந்த மாதத்தில் புனித தீர்த்தத்தில் நீராடும் ஒருவருக்கு கிடைக்கும் தகுதியானது 12,000 வருடம் கங்கையில் நீரடுவதால் ஏற்படும் பலனுக்கு ஒப்பானது.அல்லது பிரகஸ்பதி சிம்ம லக்னத்திற்கு செல்லும்பொழுது கங்கையில் அல்லது கோதவரியில் நீராடும் பலனை பெறுகிறான். நீ இந்த மாதத்தில் புனித தீர்த்தத்தில் நீராடினாலோ,தானம் கொடுத்தாலோ,பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை உச்சாடனம் செய்தாலோ,உனது துயரம் அனைத்தும் ஓடி விடும்.உனது வாழ்க்கை பூரணமாகும்,உனது ஆசைகள் பூர்த்தியாகும்.தயவு செய்து எனது அறிவுரையை கேள்.வரவிருக்கும் புருஷோத்தம மாதத்தை நல்ல முறையில் வழிப்பட மறந்துவிடாதே என்றார்.
இதனை கூறிய பிறகு துருவாச முனி மௌனமானர்.துரதிருஷ்டவசமாக அந்த பிரமண பெண் இவரது வார்த்தையை நம்பவில்லை, மாறாக இவரிடம் கோபம் கொண்டு அவரை தூற்ற தொடங்கினாள்."ஓ முனியே நீங்கள் பொய் கூறுகிறீர்கள்." எவ்வாறு இந்த உபரி மாதம்,மல மாதம் என்று அழைக்கப்படும் மாதம்,மகம்,கார்த்திகை,விஷாக மாதத்தை காட்டிலும் சிறந்ததாய் இருக்க முடியும்? எனக்கு உங்களது வார்த்தையில் நம்பிக்கை இல்லை.நீங்கள் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள்.இந்த உபரி மாதம் எந்த நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்றது அல்ல என்றாள்.

அடுத்த வரம் தொடரும்...
என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


புருஷோத்தமா மாதம் - முதல் பகுதிஹரே கிருஷ்ணா! வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். புராணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பதாகவும், ஏதாவது ஒரு புராணத்தில் இருந்து ஒரு பகுதியைப் பற்றி எழுதுமாறு ஒரு வாசகர் எனக்கு இனைய அஞ்சல் அனுப்பி இருந்தார். அவருக்காக பத்ம புராணத்தில் இருந்து புருஷோத்தம மாதத்தின் புகழ் குறித்து இதோ ஒரு பகுதி. இந்த வரலாற்றை மொழிபெயர்ப்பு செய்து உதவிய சகோதரி ஸ்ரீ குரு பக்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தக் கட்டுரை சற்று நீலமாதலால், மூன்று பகுதிகளாக இந்தவாரமும், இனி வரும் அடுத்த இரண்டு வாரமும் வெளி வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். புராணங்கள் மிக விரிவானவை. சிலர் இதைப் படிப்பதில் சிரமம் இருப்பதாகக் கூட உணரலாம். இவற்றை படிப்பதால் நாம் பகவத் கீதையை இன்னும் அதிக மரியாதையுடன் கற்க முடியும். ஆதலால் சற்று பொறுமையுடன் இந்த மூன்று பகுதிகளையும் படிக்கும் படி வேண்டிக் கேட்டு கொள்கிறேன்.


முன்னொரு காலத்தில் நைமிசாரண்யம் என்ற புண்ணியஷேத்திரத்தில் ஆயிரக்கணக்கான முனிவர்கள் யக்ஞம் செய்ய ஒன்று கூடினார்கள்.அவர்களது நற்பேரால்,பல புண்ணியஷேத்திரத்திற்கு சென்றுக் கொண்டிருந்த ஸூதகோஸ்வாமி தனது சீடர்களுடன் அங்கு வந்தார்.அங்கு இருந்த முனிவர்கள் இவரை கண்டு உயிரூட்டம் பெற்றார்கள்.அவர்கள் எழுந்து அந்த உயர்ந்த மகானிற்கு மரியாதை செலுத்தி, சிறந்த வியாசசனம் அளித்து,கூப்பிய கைகளுடன் அவரை அதில் அமரும்படி வேண்டிக்கொண்டனர்.

நைமிசாரண்யம் முனிவர்கள் கூப்பிய கைகளுடன் சுதகோஸ்வாமியிடம் கீழ்க்கண்டவாறு கேட்டுக்கொண்டார்கள் "ஸூதரே,முழுமுதற்கடவுளின் அற்புத செயல்களைப் பற்றியும்,அவரது லீலைகளைப் பற்றியும் தயவு செய்து எங்களுக்கு கூறுங்கள்.அவரை பற்றி ஆயிரக்கணக்கான வரலாறு இருப்பினும்,அவற்றில் மிகுந்த பூரணமான ஒன்றை கேட்க விரும்புகிறோம்.அதன் மூலமாக இந்த சம்சார கடலிலிருந்து மீண்டு இறை நாட்டிற்கு நாங்கள் திரும்பவேண்டுகிறோம்.

சௌனக மகரிஷியின் தலைமையில் மற்ற முனிவர்களின் இந்த வேண்டுகோளை கேட்ட ஸூதகோஸ்வாமி கீழ்கண்டவாறு கூற தொடங்கினார். "ஓ முனிவர்களே! தயவு செய்து நான் கூறுவதை கேளுங்கள்.நான் முதலில் புஸ்கர தீர்த்ததிற்கு சென்றேன், பிறகு ஆயிர கணக்கான புண்ய ஸ்தலங்களுக்கு சென்ற பிறகு ஹஸ்தினபுரத்தை அடைந்தேன். அங்கு கங்கை கரையில்,ஆயிரகணக்கான முனிகள் பரிஷித் மஹாராஜாவுடன் அமர்ந்திருப்பதை கண்டேன். அப்பொழுது சிறந்த முனியான ஸுகதேவர் தோன்றினார்,மேலும் அங்கு இருந்த அனைத்து முனிவர்களும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து கூப்பிய கைகளுடன் தங்களது மரியாதையை செலுத்தினர். எல்லா முனிவர்களும் ஒருமனதாக ஸுகதேவருக்கு வியாசசனத்தைக் கொடுத்து,பரீஷித் மஹராஜாவிற்கு கிருஷ்ணா கதையை கூறும்படி வேண்டினர்.

ஸுதர் கூறினார் "முனிவர்களே,நான் இப்பொழுதுதான் ஹஸ்தினாபுரத்தில்,சுகதேவரின் திருவாயால் ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டு வந்துள்ளேன்.இப்பொழுது நான் பகவானின் வசீகர செயல்களையும், லீலைகளையும் உங்களுக்கு கூறுகிறேன் என்றார்.

பல காலங்களுக்கு முன்னர் ஒரு முறை, நாரத முனி, நாராயண ரிஷியின் இருப்பிடமான பத்ரிகா ஆஷிரமத்தை அடைந்தார்.அவரது பாத கமலங்களிருந்து அலகநந்தா அருவி வழிந்து கொண்டிருந்தது. நாரதர் நாரயணரை நமஸ்கரித்து கீழ்கண்டவாறு துதித்தார்."தேவர்களின் எஜமானனே,கருணையின் கடலே,படைப்புகளின் தலைவனே!உண்மையின் உருவே, உண்மையின் சாரமே ,தங்களுக்கு எனது நமஸ்காரங்களை அர்ப்பணிக்கிறேன்”. பகவானே!இந்த ஜட உலகில், அனைத்து ஜீவராசிகளும்,தங்களது புலனின்ப மகிழ்ச்சியில் மும்மரமாக இருக்கின்றார்கள்.அவர்கள் அனைவரும் வாழ்க்கையின் லட்சியத்தை மறந்துவிட்டனர். ஆதலால் தாங்கள், குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும், என்னை போன்ற துறவறத்தை மேற்கொண்ட சந்நியாசிகளுக்கும்,தன்னை அறிந்து இறைநாட்டிற்கு செல்ல உதவும் விஷயங்களை தயவு செய்து விளக்குங்கள் என்றார்.

நாரதரின் இந்த இனிமையான வார்த்தைகளை கேட்ட பகவான் நாரயணர் புன்னகைத்தார்.ஓ நாரதா! முழுமுதற்கடவுளான பகவான் கிருஷ்ணரின்,அற்புத லீலை ஒன்றை கூறுகிறேன் கேள், இது அனைத்து பாவங்களையும் அழித்துவிடும். நீ பகவானின் அனைத்து லீலைகளையும் அறிவாய், இருப்பினும் மற்றவர்களின் பயனுக்காக நீ இதனை கேட்கிறாய் என்பதை நான் அறிவேன். ஆதலால் இப்பொழுது நான் மிகசிறந்த புருஷோத்தம மாதத்தின் புகழை கூறுகிறேன்.புருஷோத்தம மாதத்தின் புகழானது ஜட உலகின் மகிழ்ச்சியை மட்டும் அளிப்பத்தன்று,வாழ்வின் இறுதியில் இறைநாட்டிற்கு செல்ல எல்லா தகுதியையும் அளிக்கவள்ளது.

நாரதர் கூறினார்,"பகவானே நான் கார்த்திகை,சித்திரை போன்ற மாதங்களின் புகழை கேட்டுள்ளேன், ஆனால் எந்த மாதம் புருஷோத்தம மாதம்? கருணையின் கடலே, தயவு செய்து இந்த புனித மாதத்தை பற்றி கூறுங்கள். இந்த மாதத்தை எவ்வாறு புகழ வேண்டும்?இந்த மாதத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?எவ்வாறு நீராட வேண்டும்?எதனை தானமாக தர வேண்டும்?எந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்?யாரை வழிப்பட வேண்டும்? இந்த மாதத்தில் உபவாசம் இருக்க வேண்டுமா? தயவு செய்தி எல்லாவற்றையும் விளக்கமாக கூறுங்கள் என்றார்.

ஸுதர் கூறினார் "ஓ முனிவர்களே நாரதரின் கேள்விகளை கேட்ட பகவான் நாரயணர் தனது தாமரை திருவாயால் கீழ்கண்டவாறு கூறினார் "ஓ நாரதரே நான் முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மஹராஜ் யுதிஷ்டரிடம் விவரித்ததை உனக்கு கூறுகிறேன். ஒருமுறை தருமராஜாவான யுதிஷ்டர், சூதாட்டத்தில் தனது ராஜ்ஜியம்,அரண்மனை,தர்ம பத்தினியான திரௌபதி ஆகியவற்றை துரியோதனிடம் இழந்தார்.அப்பொழுது திரௌபதி துச்சாதனனால் அனைத்து சபையோர் முன்பாக அவமானப் படுத்தப்பட்டாள். ஆனால் துச்சாதனன் திரௌபதியை துயிலுரிக்க முயன்றபொழுது,அவள் பகவான் கிருஷ்ணரால் அந்த கடினமான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றபட்டாள்.இந்த நிகழ்ச்சிற்கு பின்னர்,யுதிஷ்டர மகராஜா, தனது சகோதரர்களுடன் தனது ராஜ்ஜியத்தை விட்டு, காம்யாவனம் விருந்தவனத்தில் வசித்து வந்தனர்.

ஒரு முறை, தேவகியின் மகனான கிருஷ்ணர்,பாண்டவர்களை காண காட்டிற்கு சென்றார்.திரௌபதி உட்பட அனைத்து பாண்டவர்களும் அவரை கண்டதும் மகிழ்ந்தனர், தங்களது காட்டில் வசிக்கும் கடினமான நிலையை மறந்தனர். கிருஷ்ணரின் தரிசனத்தை பெற்ற அவர்கள் புத்துணர்வு பெற்றதை உணர்ந்தார்கள்.பகவானின் பாத கமலங்களுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.பாண்டவர்களின் துயர நிலையை கண்ட கிருஷ்ணர் வேதனை அடைந்தார்.அதே சமயம் துச்சாதனின் மீது கோபமும் அடைந்தார். பகவானின் கோபமானது அவர் இந்த பிரபஞ்சத்தையே அழித்து விடுவார் போல இருந்தது,அதனை கண்டு அஞ்சிய பாண்டவர்கள், பணிவான மனநிலையில் அவரை துதிக்க தொடங்கினர்.அர்ஜுனனின் பிரார்த்தனையை கேட்ட பகவான் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு கூற தொடங்கினார் "ஓ அர்ஜுனா! நான் உங்கள் அனைவரையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், நான் உங்களது பக்திற்கு கட்டுப்பட்டுள்ளேன்.இப்பொழுது நான் உங்களுக்கு புருஷோத்தம மாதத்தின் மகிமையை கூறுகிறேன்.

ஒருமுறை பகவானின் விருப்படி இந்த உலகில் ஒரு உபரி மாதம் தோன்றிற்று. அனவரும் இந்த மாதத்தை மிகுந்த துரதிருஷ்டமான மாதமாய்,ஸ்தூல மாதமாய் கருதினர்.எவ்வாறு ஒருவர் மலத்தை சீண்ட மாட்டர்களோ அவ்வாறே இந்த மாதத்தை யாரும் சீண்டவில்லை. அது ஓயாது பாதுகாப்பற்று,இழிக்கப்பட்டு, ஆன்மீக காரியங்களுக்கும்,நல்ல காரியங்களுக்கும் தகுதியற்ற மாதமாய் நிராகரிக்கப்பட்டது.
அனைத்து மனிதர்களால் நிராகரிக்கப்பட்டு, தொடர்ந்து இழிசொற்களையும்,சாபத்தையும் கேட்டு வந்த இந்த மாதம் மிகுந்த துக்கத்தை பெற்றது.அவள் தனது சோகமான நிலையை பகவானிடம் விளக்கி கூற வைகுந்தம் வந்தாள். பகவான் விஷ்ணுவை அவரது சிம்ஹாசனத்தில் கண்ட அவள், மிகுந்த துயரத்துடன் அவரது பாத கமலங்களில் வீழ்ந்தாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.அவள் பகவானை துதிக்க தொடங்கினாள்."கருணையின் கடலே!எனக்கு யாரும் உதவாதலால் நான் உன்னிடம் வந்துள்ளேன்.என்னை உலகில் உள்ள அனைவரும் நிராகரிக்கிறார்கள், சபிக்கிறார்கள். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்,தயவு செய்து உங்களது கருணையை என்னிடத்தில் காட்டுங்கள்,என்னை அலட்சியபடுத்தி விடாதீர்கள்.இவ்வாறு கூறிய அந்த உபரி மாதம் தொடர்ந்து அழுது அவர் முன்னால் மிக்க துயரத்துடன் அமர்ந்தாள். அவளது பணிவையும்,துக்கம் நிறைந்த சூழ்நிலையையும் கண்ட விஷ்ணு அவளிடம் இரக்கம் கொண்டார். அவர் வருத்தப்படாதே !நான் உனக்கு எல்லா விதமான பாதுகாப்பும் தருகிறேன்.தயவு செய்து அழாதே !எனது பாத கமலங்களில் சரணடைந்த பின்னர் வருத்தப்படுவது முறையல்ல என்றார்.

பகவானின் வார்த்தைகளை கேட்டு தேற்றமடைந்த உபரி மாதம் "ஓ பகவானே!எனது வேதனை நிலையை நீ அறிவாய்.இந்த மூன்று உலகங்களில் என்னைப் போல வேதனையை அனுபவிப்பவர் யாரும் இல்லை. முதலவாதாக, மற்ற அனைத்து மாதங்களும்,வருடங்களும், நாளும், இரவும் ,திசையும் உனது பாதுகாப்பின் கீழ் உள்ளனர்,ஆகையால் அவர்கள் எந்தவித பயமுமின்றி உற்சாகத்துடன் உலா வருகிறார்கள். ஆனால் உபரி மாதமான எனக்கு,பெயரோ,பாதுகாவலரோ,பாதுகாப்பு அளிக்க கணவரோ இல்லை. எல்லா தேவர்களும், மனிதர்களும் என்னை எல்லா நல்ல காரியங்களில் இருந்தும் ஒதுக்கிவிட்டனர்.இந்த காரணத்தால் நான் இறக்க வேண்டும் என்றாள்.ஓ நாரதரே! இந்த மாதமானது மீண்டும் மீண்டும் நான் இறக்க வேண்டும் !நான் இறக்க வேண்டும் !நான் இறக்க வேண்டும் ! என்று கூறி பகவானின் பாதங்களில் மயக்கமடைந்தாள்.
பகவானின் வேண்டுக்கோளுக்கிணங்க கருடன் அவளுக்கு சாமரம்வீசினார்.சிறிது நேரத்திற்கு பின்பு கண்விழித்த அவள் மீண்டும் பேச தொடங்கினாள் "இந்த பிரபஞ்சத்தின் இறைவனே எனக்கு உங்களது பாதுகாப்பு வேண்டும்,என்னை தயவு செய்து காப்பாற்றுங்கள்" என்றாள்.பகவான் விஷ்ணு அந்த உபரி மாதத்திடம் கூறினார் "குழந்தாய், தயவுசெய்து புலம்பாதே, கூடிய விரைவில் உனது துன்பம் முடிந்து விடும். எழுந்து என்னோடு முனிவர்களால் கூட அடைய முடியாத கோலோக விருந்தாவனதிற்கு வா. கோலோகம் என்பது கிருஷ்ணர் வசிக்கும் இடம் ஆகும். இங்கே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது இரு கை உருவத்தோடு, கோபியர்கள் சூழ, தனது நித்ய லீலைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். கோலோக வாசியான ஸ்ரீ கிருஷ்ணரால் உனக்கு துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும். ஆதலால், என்னோடு வா" என்றார். அதன் பிறகு, பகவான் விஷ்ணு மலமாஸத்தை(உபரி மாதம்) கை பிடித்து கோலோகம் கூட்டிச்சென்றார்.

சிறிது தூரத்திலிருந்து பகவான் விஷ்ணுவும் மலமாசமும் கோலோகத்தின் ஒளிப்பிழம்பை கவனித்தனர். இந்த பிரகாசமான ஒளிப்பிழம்பால் மலமாசத்தின் கண்கள் தானாக மூடின. அதனால், பகவான் விஷ்ணு மலமாசத்தை தனது பின்னிற்கு தள்ளி நுழை வாயில் நோக்கி சென்றார். அங்கே, நுழை வாயில் காப்பாளன் அவருக்கு மரியாதை செலுத்தினான்.

அடுத்த வாரம் தொடரும்...

என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்


333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
பகவத் கீதை - மரணம் என்றால் என்ன? ஹரே கிருஷ்ணா!

அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் இந்த இணைய ஆசிரியர் மதுர மகாதேவ் அவர்களின் மைத்துனி காலமானார். மேலும் சிலர் காலமான செய்தியினைப் படித்தேன். அதனால் இந்த வாரம் மரணம் என்றால் என்ன? மரணத்திற்கு பின் என்ன? இந்த கேள்விகள் குறித்து ஆராயலாம் என்று முடிவு செய்தேன். இந்த வாரக் கட்டுரையை இந்த இணைய தளத்தில் வெளியான, சமீபத்தில் காலமான அனைவரின் சார்பிலும் பகவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

மரணம் என்றால் என்ன? அநேகமாக நம்மில் அனைவருக்குமே "மரணம்" என்ற சொல்லைக் கேட்டாலே பயம் வந்துவிடுகிறது. சிலருக்கு தங்கள் மரணம் குறித்து கவலை இல்லாமல் இருந்தாலும், தங்களுடைய நண்பர்கள், பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினரின் மரணம் குறித்து பயம் ஏற்படுகிறது. ஆக மரணம் என்பது நாம் விரும்பாத ஒரு சொல். இதை யாரும் மறுக்கவே முடியாது. ஒருவர் மரணம் அடைந்த பின்பு எங்கே போகிறார்? இந்த கேள்வியை நான் சிறுவனாக இருந்த போது பிரபல மருத்துவரான என் அன்னையிடம் கேட்டேன். "அதிகப்பிரசங்கியாகப் பேசாதே!" என்று பதில் கிடைத்தது. அதனால் நானே எனது அறிவை வைத்து புரிந்து கொள்ள முற்பட்டேன். ஒருவர் இறந்த பின்பு அவர் கடவுள் ஆகி விடுவார் போலும். அதனால் தான் அவரின் படத்திற்கு மாலை அணிவித்து வணங்குகிறார்கள் என்று நானே முடிவு செய்தேன். இறந்த ஒருவரின் படம் முன்னால் நின்று வேண்டினால் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்று கூட எனது நண்பர்கள் கூறக்கேட்ட நினைவும் இருக்கிறது.

பிறகு என்னுடைய சிறு அறிவு வளர வளர நானே புரிந்து கொண்டேன். மரணம் என்றால் துக்கம் தரும் ஒரு நிகழ்வு. மரணம் அடைந்த ஒருவர் திரும்பிவராத இடம் ஒன்றிக்கு செல்கிறார். ஒருவரின் மரணம் அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கின்றது. ஒருவரின் மரணம் அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல முடியாத கஷ்டத்தை அளிக்கிறது. ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, அழகற்றவனாக இருந்தாலும் சரி - அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆக மரணம் என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். ஆனால் யாரும் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று புரிந்தது. இன்னும் சற்று ஆராய்ந்தபோது இந்த உலகத்தில் நல்லவராக வாழ்ந்தவரும் ஒரு நாள் மரணிக்கிறார். கெட்டவரும் மரணிக்கிறார். இறந்த பின்பு அனைவரும் கடவுள் என்றால் ஒருவர் நல்லவராக வாழ்ந்ததற்கு அர்த்தமே கிடையாது. அனைவரும் அவரவர் விருப்பப்படி தவறாக வாழலாமே! ஒரு வேலை அப்படி நடந்தால் இந்த சமுதாயமே சீர்கெட்டு நிலைகுலைந்து விடும். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது நடக்கும். இதுதான் நாம் அனைவரும் புரிந்து கொண்ட உலக நெறி. அதனால் ஒருவர் இறந்த பின்பு கடவுள் ஆகிறார் என்ற பிரபலமான கூற்று தவறு என்று புரிந்தது. ஆனால் இறந்த பின்பு என்ன நடக்கிறது என்ற இந்த கேள்வி மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.

அதைப் போலவே ஒருவர் குழந்தையாக பிறப்பதற்கு முன்பு எங்கே இருந்தார்? இறப்பு எவ்வளவு புதிரான ஒரு விஷயமோ அது போலவே பிறப்பும் ஒரு புதிரான விஷயம். சமுதாயத்தில் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? ஒரு குழந்தை செல்வந்தருக்கு செல்வ மகனாக பிறக்கிறது. மற்றொரு குழந்தை ஏழைக் குடிசையில் மூன்று வேளை உணவு இல்லாமல் பிறக்கிறது. சில குழந்தை ஆரோக்கியமாக பிறக்கிறது. வேறு சில குழந்தை ஆரோக்கியம் இல்லாமல் சில நேரங்களில் ஊனமாக கூட பிறக்கிறது. கஷ்டம் என்பது யாரும் விரும்பி பெரும் ஒரு விஷயம் அல்லவே. நாம் யாரும் கஷ்டத்தை விரும்பி ஏற்பது கிடையாது. ஆனாலும் கஷ்டம் எதாவது நமக்கு வந்தால், நாம் முன்பு செய்த தவறான ஒரு விஷயத்தின் பலன் என்று நமக்கு சுலபமாகப் புலப்படும். ஆனால் பிறக்கும் ஒரு குழந்தை அப்படி என்ன ஒரு பெரிய தவறு செய்திருக்க முடியும்? கேட்டேன் பலரிடம். பதில் கிடைக்கவில்லை. "உனக்கு என்றாவது பதில் கிடைத்தால் என்னிடம் கூறு" என்று பல நண்பர்கள் கூறினர். அந்த வாக்கினைக் காப்பாற்றுகிறேன் இப்பொழுது!

பிறப்பு, இறப்பு - இந்த இரு விஷயங்களுக்கும் நம்முடைய சிறு அறிவைக்கொண்டு ஆதரப்பூர்வமான பதில் தேட முடியாது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆகவே வேதத்தின் சாரமான, பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். பிறப்பு என்றால் என்ன? இறப்பு என்றால் என்ன? பதில் இதோ...

தேஹினோ' ஸ்மின் யதா தேஹே

கௌமாரம் யௌவனம் ஜரா

ததா தேஹான்தரப் ப்ராப்திர்

தீரஸ் தத்ர ந முஹ்யதி

பகவத் கீதை 2.13

மொழிபெயர்ப்பு: "உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை"

சில வாரங்களுக்கு முன்பு நாம் இந்த உடல் அல்ல. நாம் ஒரு ஆத்மா என்று புரிந்துகொண்டது உங்களுக்கு நினைவிருக்கும். மேலே இருக்கும் படத்தினை சற்று கூர்ந்து கவனியுங்கள். இந்த படத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையின் உடலில் ஒரு ஒளிப்பிலம்பான ஆத்மா உள்ளது. பிறகு அந்த ஆத்மா குழந்தை உடலை விட்டு சிறுவன் உடலுக்குச் செல்கிறது. பிறகு அந்த ஆத்மா சிறுவனின் உடலை விட்டு இளைஞனின் உடலுக்கு செல்கிறது. பிறகு முதியவரின் உடலுக்குச் செல்கிறது. பிறகு அந்த முதியவர் இறக்கிறார். அதற்கு பின்பு அந்த முதியவரின் உடலை விட்டு அந்த ஆத்மா வேறு ஒரு குழந்தையின் உடலுக்கு சென்று தன்னுடைய அடுத்த பிறவியை ஆரம்பிக்கிறது. ஆக மரணம் என்பது ஆத்மா ஒரு உடலை விட்டு மற்றொரு உடலிற்குச் செல்லும் ஒரு சம்பவம். அவ்வளவே! மரணம் என்பது ஒரு புதிய ஆரம்பம். ஆத்மா ஒரு உடலில் தங்கி இருக்கும் அந்த காலகட்டத்தைத் தான் நாம் பிறவி என்கிறோம். ஆத்மா ஒரு பிறவியில் மேற்கொள்ளும் நல்ல மற்றும் தீய செயல்களைப் பொருத்துதான் அந்த ஆத்மாவிற்கு அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. அதனால் தான் பிறப்பில் நாம் எற்றத்தால்வினைக் காண்கிறோம். நம் வாழ்க்கையில் நடக்கும் நிறைய துன்பங்கள் ஏன் ஏற்படுகிறது என்று இப்பொழுது நமக்கு புரியும். "நான் யாருக்கும் தீங்கு விளைவித்ததே இல்லை. இருந்தாலும் எனக்கு நிறைய கஷ்டம் வருகிறது" என்று பலர் கூறக் கேட்டு இருக்கிறோம். இதற்கான பதில் உங்களுக்குப் புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

"ஆத்மாவுக்கு பிறப்போ, இறப்போ கிடையாது. ஒருமுறை இருந்து பிறகு அவன் இல்லாமல் போவதுமில்லை. அவன் பிறப்பற்ற , நித்தியமான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனாவான். உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை"

- பகவத் கீதை 2.20

ஆக ஆத்மாவான நமக்கு அழிவே கிடையாது. ஆத்மா நம்முடைய கண்ணுக்கு தெரியாது. அதனால் ஆத்மா கிடையவே கிடையாது என்று கூற முடியாது. X-ray எனப்படும் கதிரலை கூட கண்ணுக்குத் தெரியாது. அதனால் X-ray என்று ஒரு கதிர் இல்லவே இல்லை என்று கூறிவிட முடியாது. X-ray கண்ணுக்கு புலப்படவில்லை என்றாலும், அந்த கதிரை ஒருவருடைய உடலில் பாய்ச்சி X-ray sheet மூலம் அந்த கதிரின் இருப்பினை அறியலாம். அது போல ஆத்மா நம்முடைய கண்ணுக்கு புலப்படாமல் இருந்தாலும், ஒரு உடலில் ஆத்மா உள்ளதா இல்லையா என்று அந்த உடலின் இரு தன்மைகளை வைத்து அறியலாம் - வளர்ச்சி(growth) மற்றும் உணர்ச்சி(consciousness). இவ்வாறு ஆத்மா குறித்து நிரூபணமாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு பழைய கார்(car) ஒன்றை விட்டு புதிய கார் ஒன்றை வாங்கினால் நாம் கவலைப்படுவோமா என்ன? கிடையாது. மிகவும் மகிழ்ச்சியுறுவோம். ஆனால் மரணம் என்ற ஒரு நிகழ்வினால் ஒரு பழைய உடலை விட்டு புதிய உடலை பெரும்பொழுது மட்டும் எதற்காக துக்கப்படுகிறோம்? நாம் இந்த உடல் என்று நினைத்துக் கொண்டிருகிறோம். அதனால் மரணம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று பயம் கொண்டு அழுகிறோம், துடிக்கிறோம். அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் "நீ இந்த உடல் இல்லை. நீ ஒரு ஆத்மா" என்று திரும்ப திரும்ப கூறுகிறார். நாம் இந்த உடல் இல்லை. நாம் ஒரு ஆத்மா என்ற இந்த ஒரு உண்மை புரிந்தால், நம்முடைய வாழ்க்கையில் ஒரு துன்பமும் வராது. ஆனால் இந்த ஒரு உண்மையை புரிந்து கொள்ள மறந்தால் வாழ்க்கையில் துன்பம் மட்டும் தான் மிஞ்சும். நாம் இந்த உடல் அல்ல. நாம் ஒரு ஆத்மா என்ற ஒரு உண்மையை முற்றிலுமாக உணர நாம் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை தினமும் ஜெபிக்க வேண்டும்.

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரேஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!!
அதெல்லாம் சரி. நாம் இந்த உடல் அல்ல. நாம் ஒரு ஆத்மா தான். ஆனால் இந்த ஆத்மா இப்படியே பிறந்து பிறகு இறந்து பிறகு மறுபடியும் பிறந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன? இப்படியே நாம் பிறந்து கொண்டே இருக்க வேண்டியது தானா? - என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. இது குறித்து நாம் கூடிய விரைவில் ஆராய்வோம்.

வழக்கம் போல உங்களுடைய சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்கத் தவறாதீர்கள்.
என்றும் அன்புடன்,
கனஷியாம் கோவிந்த தாஸ்
பகவத் கீதை - புகைப் பழக்கத்தை விடுவது எப்படி?ஹரே கிருஷ்ணா!


வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரக் கட்டுரை குறித்து கேள்வி கேட்ட ஒருவர், தீய பழக்கங்களை எப்படி கை விடுவது என்று கேட்டு இருந்தார். அது குறித்து இவ்வாரம் கலந்தாராயலாம் என்று தீர்மானித்தேன்.
அதிலும் குறிப்பாக புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை முற்றிலுமாக எப்படி விட்டொழிப்பது என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை மூலம் கூறும் அறிவுரையைப் பார்ப்போம்.


இந்த வாரக் கட்டுரையில் புகைக்கும் பழக்கத்தை குறித்து மட்டும் நான் எழுதினாலும் எல்லா வித கேட்ட பழக்கத்திற்கும் இந்த வார கட்டுரை பொருந்தும். வழக்கம் போல தங்களுடைய சந்தேகங்களைக் கேட்க தவறாதீர்கள்.
ஒருவர் எதற்காக சிகரெட்(cigarette) பிடிக்கிறார்? இந்த கேள்வி எனக்குள் பலமுறை எழுந்துள்ளது. எனது சந்தேகத்தை எனது புகை பிடிக்கும் நண்பர்களிடம் சிலமுறை கேட்கவும் செய்திருக்கிறேன். பல விதமான பதில்கள் வரும். "புகை பிடிக்கும் போது வரும் அனுபவத்தை விவரிக்க இயலாது. அது காதல் போன்ற ஒரு விஷயம். விவரிக்க இயலாது " என்றனர் சிலர். வேறு சிலர் "எனக்கு மனது சரி இல்லை என்றால் புகைப்பேன். மனது அமைதியாகும்" என்றனர். இன்னும் சிலரோ "இந்த பழக்கம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. நண்பர்கள் கற்றுக் கொடுத்தனர். இப்பொழுது நண்பர்கள் அனைவரும் பிரிந்து விட்டோம். ஆனால் இந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. காரணம் இல்லாமல் இன்னும் புகைக்கிறேன்" என்றனர்.


சரி. இந்த புகை பிடிக்கும் பழக்கம் நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், நம் குழந்தைகளுக்கும் கேடு விளைவிக்கின்றது என்று நாம் அனைவருக்கும் தெரியும். அப்படியென்றால் இந்த தீய பழக்கத்தை விட வேண்டியதுதானே? இந்த கேள்வியையும் என் நண்பர்கள் முன் வைத்தேன். " புகைப்பது தீய பழக்கம் என்று எனக்குத் தெரியும். ஆனால் எவ்வளவு முயன்றும் என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை" என்று நேர்மையாக பலர் ஒப்புக்கொண்டனர். இன்னும் சிலரோ "சிகரெட் பிடிப்பதை விட வேண்டும் என்று ஆசை தான். ஆனால் எனக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு இதை விட வேறு மருந்து எனக்கு இப்பொழுது இல்லை" என்று மிக கவலையாக கூறினர்.


இங்கு நான் கூறியது அனைத்தும் எனது நண்பர்கள் மத்தியில் வந்த விவாதங்கள் மட்டுமே. இதை போல நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதை போன்ற நிகழ்வுகளும் அனுபவங்களும் ஏற்படுவது இயல்பே. "Cigratte smoking is injurious to health". அதாவது புகை பிடிப்பது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். இந்த வாசகம் உலகத்தில் உள்ள அனைவருக்கும், அதிலும் குறிப்பாக புகை பிடிப்பவர்களுக்கு மிக நன்றாக மனப்பாடமாகத் தெரியும். ஆனாலும் இந்த கெட்ட பழக்கத்தை எப்படி விடுவது என்று தெரியாமல் நாள்தோறும் திண்டாடிக் கொண்டிருகின்றனர். நான் சில வாரங்களுக்கு முன்பே கூறி இருந்தது போல நாம் எதிர்நோக்கும் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை ஆகும். இது குறித்து கிருஷ்ணர் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.


ஒருவர் எதற்காக புகைபிடிக்கிறார்? இந்த கேள்விக்கு விடை தேடுவோம். ஒரு சிறுவன் எதற்காக இனிப்பான தின்பண்டத்தை உண்கிறான்? அவனுக்கு இனிப்பின் சுவை பிடித்து இருக்கின்றது. அதனால் அந்த சுவையினால் ஈர்க்கப்பட்டு, அந்த சுவைக்கும் அனுபவத்திற்காக இனிப்பினை உண்கிறான். அது போலத் தான் புகை பிடிக்கும் நண்பர்கள் தாங்கள் புகைக்கும் போது ஏற்படும் ஒருவிதமான அனுபவத்தை நாடி இந்த தீய பழக்கத்திற்கும் அடிமையாகின்றனர். எப்படி ஒரு சிறுவனுக்கு இனிப்பு ஒரு சுவையை தருகின்றதோ அது போல நம் நண்பர்களுக்கும் புகைக்கும் அனுபவமும் ஒரு சுவையை தருகின்றது. சிறுவனிடம் இருந்து இனிப்பை பறித்தால் அவன் துடி துடித்துப் போவான். புகைப்பவர்களிடம் இருந்தும் சிகரெட்'ஐ பறித்தால், அவர்களுக்கும் அதே கதி தான். சிறுவனிடம் இருந்து இனிப்பை பறிக்க வேண்டுமெனில் அதற்க்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவனுக்கு அந்த இனிப்பை விட மகிழ்ச்சி தரக்கூடிய வேறொரு பொருளைத் தர வேண்டும். உதாரணமாக ஒரு விளையாட்டு பொம்மையைத் தந்தோமேயானால் அவன் எந்தவித அழுகையும் இல்லாமல் இனிப்பை விட்டு விட்டு பொம்மையுடன் விளையாட போய்விடுவான். பொம்மையின் சுவை இனிப்பின் சுவையினை விட இனியதாக இருக்கும் அவனுக்கு. அது போல புகை பிடிப்பவர்களிடம் இருந்து சிகரெட்'ஐ பறிக்க வேண்டுமானால் அவர்களுக்கு சிகரெட்'ஐ விட இன்னும் அதிக சுவை தரக்கூடிய வேறு ஒன்றைக் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு திடீரென்று சிகரெட்'ஐ நிறுத்தச் சொன்னால் நிறுத்த முடியாது. அப்படியே நிறுத்தினாலும் அந்த நிறுத்தம் அதிக நாள் நீடிக்காது. ஏனென்றால் எந்த ஒரு விஷயத்தை மறக்க நினைக்கின்றோமோ, சொல்லி வைத்தது போல மனது அந்த ஒரு விஷயத்தைப் பற்றி மற்றும் தான் நினைக்கும்.


ஒரு ஊரில் ஒரு போலி வைத்தியன் ஒருவன் இருந்தான். ஊரை ஏமாற்றி, மக்களின் நோய்களை தீர்ப்பதாகச் சொல்லி நிறைய செல்வங்களைக் குவித்தான். அவனிடம் ஒரு நாள் வயிற்று வழியால் துடித்த ஒரு நோயாளி வந்தான். அவனின் நோய் குறித்து ஆராய்ந்த வைத்தியன் அவனிடம் மருந்தைக் கொடுத்து, "இந்த மருந்தினை நீ ஒரு நாளைக்கு மூன்று முறை உண்ண வேண்டும். மிக முக்கியமான விஷயம். இந்த மருந்தை உண்ணும் பொழுது நீ கரிய நிறமுடைய குரங்கைப் பற்றி மட்டும் நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் இந்த மருந்து வேலை செய்யாது. ஒரு வாரம் சென்று வா" என்று கூறி அனுப்பினான். அவன் கூறியதைப் போல நோயாளியும் ஒரு வாரம் கழித்து வந்தான். அவன் வைத்தியனிடம் "உங்கள் மருந்து வேலை செய்யவே இல்லை. எனக்கு இன்னும் வயிற்றுவலி இருக்கிறது" என்றான். அதற்கு வைத்தியன் "நான் குடுத்த மருந்தினை நீ உண்ணும் பொழுது கரிய நிறமுடைய குரங்கினை நினைத்தாயா?" என்று கேட்டான். அதற்கு நோயாளி கூறினான் "ஆமாம் வைத்தியரே. நான் குரங்கைப் பற்றி நினைக்க கூடாது என்று எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் குரங்கு மட்டும் தான் என் நினைவுக்கு வந்தது" என்றான்.


இந்த நோயாளியைப் போல தான் புகைப்பவர்களின் நிலைமையும். சிகரெட்'ஐ பிடிக்க கூடாது என்று நினைத்து நினைத்தே மறுபடியும் சிகரெட்'ஐ குறித்து நினைக்கின்றனர். அதனால் அவர்களால் புகைப்பதை நிறுத்தமுடியவில்லை. துரதிஷ்டவசமாக "nicotin patch"(நிகோடின் பாச்) எனப்படும் செயற்கை முறையும் உடலுக்கு கெடுதலைத்தான் விளைவிக்கின்றது. அதனால் புகைப்பதை யாராலும் முழுமையாக நிறுத்த முடியவில்லை.


ஆகவே புகைப்பதை நிறுத்த ஒரே வழி சிகரட்'ஐ விட சுவை தரக்கொடிய மற்றொரு பொருளை அடைய வேண்டும். அப்பேற்பட்ட ஒரு பொருள் கிடைத்தல் பிறகு புகைப்பழக்கத்தை தூர எறிந்து விடுவர். அப்படி புகைப்பதை விட சுவை தரக்கூடிய பொருள் தான் என்ன?
விஷயா வினிவர்தந்தே


நிரஹாரஸ்ய தேஹின


ரசவர்ஜம் ரசோபச்ய


பரம் திருஷ்ட்வா நிவர்த்ததே


- பகவத் கீதை 2 .59


"புலன் நுகர்வினின்றும் உடலை உடைய ஆத்மா கட்டுப்படுத்தப் பட்டாலும் கூட புலன் நுகர்வுப் பொருட்களுக்கான சுவை இருக்கலாம். ஆனால், உயர்ந்த சுவையொன்றை அனுபவிப்பதால், அத்தகு ஈடுபாடு முழுவதுமாய் முற்றுப்பெற, அவன் உணர்வில் நிலை பெறுகின்றான்."


கீழ்த்தரமான சுவையிலிருந்து விடுபட வேண்டுமெனில் உன்னத சுவையினை நாம் நாட வேண்டும். நம்முடைய ஐந்து புலன்களில், நாம் அடக்குவதற்கு மிக கடினமான புலன் நம்முடைய நாக்கு ஆகும். உதாரணமாக நாம் ஒரு ஊசியின் மெல்லிய துளையில் நூலைக் கோர்கின்றபோது நம்முடைய நாக்கு என்ன செய்கின்றது என்று கவனியுங்கள்.இரண்டு உதடுகளில் ஒன்றைத் தொட்டுக்கொண்டு அசையாமல் நிற்கும். அது அசைந்தால் மற்ற நான்கு புலன்களும் பாதிக்கும், நூலைக் கோர்க்க முடியாது. இந்த நாக்கை கட்டுப்படுத்தாமல் மற்ற புலனைக் கட்டுப்படுத்த முடியாது. அதே நேரத்தில் இந்த நாக்கு ஒன்றினைக் கட்டுப்படுத்தினால் மற்ற புலன்களை சுலபமாக அடக்கிவிடலாம்.


சிகரெட் பிடிப்பவர்களுக்கு அந்த சிகரெட்'இல் இருந்து ஒரு விதமான சுவையினை இந்த நாக்கு தான் அனுபவிக்கின்றது. இந்த நாக்கு ஒன்றைக் கட்டுப்படுத்தினால் சிகரெட்'ஐ மிக சுலபமாக விட்டு விடலாம். இந்த நாவினைக் கட்டுப்படுத்த, அதற்கு உயர்ந்த சுவை அளிக்கக் கூடிய இரண்டு விஷயங்களைத் தர வேண்டும் - ஒன்று ஸ்ரீ கிருஷ்ணருக்குப் படைத்த பிரசாதம், மற்றொன்று நாம் சென்ற வாரம் ஜெபித்த ஹரி நாமம்.


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே!


ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!!


இந்த இரண்டு உணவினை நம்முடைய நாவிற்கு அளித்தால் நம்முடைய நாக்கு இந்த சிகரெட் என்ற கேடு விளைவிக்கும் சிறிய சுவையினை விட்டு விட்டு, அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய பெரிய சுவையான கிருஷ்ண பக்தியை நாடும். பிரசாதம் மற்றும் ஹரி நாமம் என்ற இந்த இரண்டு மருந்தினை நாம் உண்டால் எல்லாவிதமான தீய பழக்கத்தில் இருந்தும் 100% பூரண நிவாரணம் ஏற்படும். இந்த முறையைப் பின்பற்றி புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் என்ற இரு தீய பழக்கத்திலிருந்தும் முழுமையாக விடுபட்டவன் என்ற முறையில் என்னால் இந்த உண்மையை ஆணித்தரமாக கூற முடியும்.


உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த கட்டுரையை காண்பித்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள். இக்கட்டுரை குறித்த எல்லாவித சந்தேகங்களையும் கேள்விகளையும் வரவேற்கிறேன்.


என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்பகவத் கீதை - ஹரி நாமம்சென்ற வாரம் நாம் இந்த உடல் அல்ல, மாறாக நாம் ஒரு ஆத்மா என்று பார்த்தோம். இந்த ஆத்மாவிற்கான உணவினை நாம் அளிக்காத வரை நம்முடைய வாழ்க்கையில் முழுமையான சந்தோஷம் ஏற்படாது. நம்முடைய ஆத்மாவின் உணவு என்ன? அதை உண்ணும் முறை தான் என்ன? - இவை குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

"அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதிலும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது" என்பது ஒளவையாரின் வாக்கு. உலகத்தில் மொத்தம் 84 லட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன என்று வேதங்கள் கூறுகின்றன. இந்த எல்லாவிதமான உயிரினங்களிலும் மிகவும் அரியது மனிதப் பிறவி ஆகும். மனிதன் ஒருவனுக்கு மட்டுமே ஆன்மிகம் மற்றும் பகவான் குறித்து புரிந்து கொள்ளும் அறிவு உண்டு. நாம் யார்? நாம் ஏன் துன்பப்படுகிறோம்? பிறப்பு, இறப்பு, முதிர்வு மற்றும் நோய் - இந்த நான்கு துன்பங்களில் இருந்து எவ்வாறு மீண்டு எழுவது? இந்த கேள்விகளுக்கான விடையினை மற்ற உயிரினங்களால் ஆராய்ந்து புரிந்து கொள்ள முடியாது. மனிதன் ஒருவனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இப்பேற்பட்ட உன்னதமான மனிதப் பிறவியினைக் கொண்டு, நாம் நம்முடைய ஆத்மாவிற்கு உணவளித்து எப்படி நிரந்தர சந்தோஷத்தை அடைவது என்று பார்ப்போம்.

காலச்சக்கரத்தில் மொத்தம் 4 யுகங்கள் உண்டு - சத்ய யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம் மற்றும் கலி யுகம். நாம் இப்பொழுது கலி யுகத்தில் இருக்கிறோம் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த ஒவ்வொரு யுகத்திலும் நம்முடைய ஆன்மாவிற்கு உணவளிக்கும் முறை சற்று வேறுபடும்.

கரிதே யாத் த்யாயதோ விஷ்ணும்
த்ரேதயம் யஜதோ மகை
த்வாபரே பரிசார்யாயம்
கலௌ தத் ஹரி கிர்டனாத்

- ஸ்ரீமத் பாகவதம் 12.3.52

"சத்திய யுகத்தில் விஷ்ணுவை தவம் செய்து என்ன பலன் கிடைத்ததோ, திரேதா யுகத்தில் யாகம் செய்து என்ன பலன் கிடைத்ததோ, த்வாபர யுகத்தில் கோயில் கடவுள் வழிபாட்டில் என்ன பலன் கிடைத்ததோ, அதே பலனை கலியுகத்தில் ஹரி நாமம் ஒன்றை மட்டுமே ஜெபித்து முழுமையாகப் பெறமுடியும்."

ஹரி நாமத்தை ஜெபிப்பது தான் இந்த கலி யுகத்தின் தர்மமாகும் என்று ஸ்ரீமத் பாகவதமே கூறுகிறது. மேலும் உபநிஷதங்களும், புராணங்களும் மற்றும் பற்பல வேத இலக்கியங்களும் இந்த ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக அடிக்கடி வலியுறுத்துகின்றன. ஹரி நாமத்தை ஜெபிப்பது நாம் கேள்விபடாத ஒரு விஷயம் அல்ல. ஸ்ரீ ராமரின் பரம பக்தனான ஹனுமான் கூட சதா "ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்!" என்ற ஜெபித்துக் கொண்டிருக்கிறார். நாரதர் கூட எப்பொழுதும் "நாராயண! நாராயண!" என்று தான் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு ஏன்? தேவாதி தேவனான சிவா பெருமான் கூட "ஸ்ரீ ராமா ராமா ராமா" என்று தான் ஜெபித்துக்கொண்டிருகிறார். இதை அவருடைய திரு நாவினாலேயே விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூறி இருக்கிறார். ஆகா இப்பேற்பட்ட உன்னதமான பக்தர்களின் அறிவுரையைப் பின்பற்றி நாம் ஹரி நாமத்தை ஜெபித்தால் அனைத்துத் துன்பமும் நீங்கி வாழ்கையில் சந்தோஷமாக இருக்க முடியும். ஸ்ரீ கிருஷ்ணரின் பக்த அவதாரமான ஸ்ரீ சைதன்ய மகாபிரபு வங்கத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி யுக தர்மமான இந்த ஹரி நாமத்தைத்தான் பாடும்படி வலியுறுத்தினார். தென் இந்தியாவிலும் ஒப்பற்ற பக்தர்களான சங்கரர், ராமானுஜர், மாதவர், தியாகராஜர் மற்றும் அன்னமாச்சார்யர் போன்ற அனைவரும் கலியுக தர்மமான இந்த கடவுளின் நாமத்தையே பின்பற்றி வாழ்ந்தனர்.

அதெல்லாம் சரி. இந்த ஒப்பற்ற பக்தர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தனர். நான் இப்பொழுது ஆஸ்திரேலியாவில் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருகிறேன். என்னால் எப்படி இந்த யுக தர்மத்தைப் பின்பற்ற முடியும்? - இந்த கேள்வி நம் அனைவரின் மனதிலும் வருவது இயல்பான ஒன்றே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் முன்னமே தெரியும். அதற்காகவே அவர் ஸ்ரீ சைதன்ய மகாப்ரபுவாக அவதரித்தபோது அனைவரும் சுலபமாக ஜெபிக்கக்கூடிய ஹரே கிருஷ்ணா என்ற மஹா மந்திரத்தை நாம் பின்பற்றும் படி வலியுறுத்தினார்.

"ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே"

- கலி சந்தரன உபநிஷதம்(5;6)

இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் எப்பேர்பட்ட காலகட்டத்திலும் சொல்லலாம். இதற்கென்று எந்த ஒரு விதிமுறையும் கிடையாது. எல்லா நாட்டவரும், எல்லா குலத்தவரும், எல்லா இனத்தவரும், எல்லா வயதினரும், எல்லா ஆண்களும், எல்லா பெண்களும் யார் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம். சைவ உணவு உண்டலும் சரி, அசைவ உணவு உண்டாலும் சரி, எந்த பாவப்பட்ட செயலைச் செய்தாலும் சரி, எந்த கஷ்டத்திலும் இருந்தாலும் சரி - இந்த ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை ஜெபித்தே நாம் எல்லா கஷ்டத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் . நான் முன்பே கூறியதைப் போல ஸ்ரீ கிருஷ்ணருக்கு நாம் இந்த காலத்தில் படும் கஷ்டம் அனைத்தும் அவருக்குத் தெரியும். ஆகவே அவர் இப்பேற்பட்ட மகாமந்திரத்தை நமக்கு அளித்து உள்ளார்.

"பெரு முனிவர்களில் நான் பிருகு; சப்தங்களில் நான் தெய்வீகமான 'ஓம்'. யாகங்களில் புனித நாமங்களைக் கூறும் ஜெபம். அசையாதனவற்றிலோ நான் இமாலயமாக இருகிறேன்"

- பகவத் கீதை 10.25

இந்த ஹரி நாமத்தின் உன்னதங்களை சொல்லி மாளாது. ஸ்ரீமத் பாகவதம் எனப்படும் பாகவத புராணத்தில் அஜாமிளன் என்ற பிராமணனின் வரலாறு கூறப்பட்டுள்ளது. இளமையில் அவன் ஒரு நல்ல பிராமணனாக இருக்கிறான். ஒரு நாள் அவன் காட்டிற்கு விறகு எடுத்து வரச் செல்கின்றான். அங்கு அவன் வேறு குல பெண் ஒருத்தியை சந்திக்கிறான். தன்னுடைய கடமையை மறந்து அவளே கதி என்று ஆவலுடன் குடும்பம் நடத்துகிறான். இப்படியே அவன் வாழ்கையின் பெரும் பகுதி செல்கின்றது. அவனுடைய புது மனையாளின் மூலம் அவனுக்கு பத்து குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் பத்தாவது குழந்தைக்கு நாராயணன் என்று பெயர் சூட்டுகிறான். காலம் உருண்டோடுகின்றது. ஒரு நாள் அஜாமிளன் மரணப்படுக்கையில் விழுகிறான். சாகும் தருவாயில் இருக்கும் அவனுக்கு விகாரமான சில உருவங்கள் தெரிகின்றது. வேதத்தை இளமையில் கற்ற அவனுக்கு அந்த விகார தோற்றங்கள் அனைத்தும் யமதூதர்கள் என்று புலப்பட வெகு நேரம் ஆகவில்லை. "ஐயோ. பாவச்செயல் ஒன்றை செய்தே இந்த வாழ்க்கையை இழந்தேனே! இப்பொழுது யமலோகம் சென்று துன்பப்பட போகின்றேனே!!" என்று புலம்புகின்றான். யம தூதர்கள் அவனை நெருங்கி அவனுடைய சூச்சம சரீரத்தை கைது செய்ய எத்தனிக்கின்றனர். பயத்தின் எல்லைக்குச் சென்ற அஜாமிளன் தன்னுடைய பத்தாவது மகனைப் பார்த்து உதவி கேட்டு கதறுகிறான் "மகனே நாராயணா!!! என்னைக் காப்பாற்று" என்று. "நாராயணா" என்ற ஹரி நாமத்தை அவன் ஜெபிப்பதைக் கேட்ட உடனே விஷ்ணு தூதர்கள் அங்கு வருகின்றனர். யமதூதர்களிடம் அவர்கள் வாதம் செய்கின்றனர். "அஜாமிளன் என்ன தான் பாவம் செய்து இருந்தாலும் அவன் உதவியற்று இருந்த வேளையில் விஷ்ணுவின் நாமத்தை ஜெபித்து இருக்கிறான். இந்த நாமத்தை அவன் எந்த ஒரு தீய எண்ணம் இல்லாமல், ஒரு முறை அவன் ஒழுங்காக ஜெபித்ததால் அவனுடைய அனைத்து பாவங்களில் இருந்தும் அவன் விடுபட்டுவிட்டான். ஆகவே அவன் யமலோகம் செல்ல மாட்டான். நாங்கள் அவனை விஷ்ணுவின் இல்லமான வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கின்றோம்" என்று கூறி அவனை யமதூடர்களிடம் இருந்து விடுவித்து வைகுண்டம் செல்ல ஏற்பாடு செய்தனர்.

ஒரே ஒரு முறை ஹரி நாமத்தை ஜெபிப்பதால் இவ்வளவு பலன் என்றால், நம் வாழ்நாள் முழுவது ஜெபித்தால் எவ்வளவு பலன் கிடைக்கும்! கலியுகத்தில் நம்முடைய ஆத்மாவிற்கு ஒரே உணவு தான் இந்த ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம். இதை ஜெபிக்க எந்த ஒரு விதிமுறையும் இல்லை. எந்தச் செலவும் இல்லை. இந்த மந்திரத்தை மட்டுமே ஜெபித்தால் நம்முடைய நிரந்தர சந்தோஷம் நம் கைவசப்படும்.

இந்த மஹா மந்திரத்தை ஜெபிப்பது குறித்து உங்களுக்கு கேள்விகள் இருப்பின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நானே இலவசமாக உங்களுக்கு கற்றுத்தருகிறேன். இன்றைய கட்டுரையில் சில இடங்களில் நான் முழுமையாக விஷயம் சொல்லாதவாறு தங்களுக்குத் தோன்றலாம். புரியாத விஷயங்கள் குறித்து நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு எழுதி இருக்கிறேன். தங்களுடைய கேள்விகளை ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றேன்.

என்றும் அன்புடன்,
கனஷியாம் கோவிந்த தாஸ்

 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பகவத் கீதைஓம் நமோ பகவதே வாசுதேவாய!


வணக்கம். மீண்டும் தங்களை இந்த பகுதியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சென்ற வார கட்டுரை குறித்து தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.

இந்த காலத்தில் நம் வாழ்க்கை மிக வேகமாக உருண்டோடுகின்றது. சமையலாக இருந்தாலும் சரி, படிப்பாக இருந்தாலும் சரி அல்லது விளையாட்டாக இருந்தாலும் சரி - எல்லாவற்றிலும் நாம் விரைந்து செயல்பட வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கிறோம். நமக்கென்று நாம் ஒதுக்கி வைக்கின்ற நேரம் குறைந்து கொண்டே வருகின்றது. இது முக்காலமும் அறிந்த அந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிக நன்றாகத் தெரியும். அதற்காகவே அவர் நம்முடைய நலனை கருத்திற்கொண்டு, இப்படிப் பட்ட சூழலில் வாழும் நம்மை வழி நடத்திச் செல்ல பகவத் கீதையை பாடி இருக்கிறார். வேதங்களின் சாரமான இந்த நூலை வணங்கி நம்முடைய இந்த முதல் பாடத்தைத் துவக்குவோம்.

பொதுவாக பகவத் கீதை எதற்காக படிக்க வேண்டும் என்ற கேள்வியை நம் மக்களிடையே கேட்டால் அதற்கு பல விளக்கங்கள் கிடைக்கும். சிலர் அது ஒரு புனித நூல் அதற்காக அதை நாம் படிக்க வேண்டும் என்பார்கள். இன்னும் சிலர் அது ஒரு அறிவுப் பெட்டகம், ஆகவே அறிவை வளர்ப்பதற்காக அதை நாம் படிக்க வேண்டும் என்பார்கள். வேறு சிலரோ மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி குறித்து நாம் அறிய அதை கற்க வேண்டும் என்பார்கள். இது போல பல விளக்கங்களை நாம் அனைவரும் கேட்டு இருக்கிறோம். இதில் எதுவுமே முழுமையான பதிலாகாது. பகவத் கீதை என்றால் என்ன? பகவான் பாடிய அந்த கீதமே பகவத் கீதை. அவர் எதை குறித்து பாடினார் என்று பார்ப்போம். என் பெயர் கனஷியாம். என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் என் நண்பர்களிடம் விசாரிக்கலாம் அல்லது என்னுடைய பெற்றோரிடமோ உறவினரிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். அனைவரும் என்னைப் பற்றிய அவர்களின் எண்ணத்தைக் கூறுவர். ஆனால் அவை எதுவுமே முழுமையான பதிலாகாது. என்னைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் என்னிடம் கேட்க வேண்டும். அது போல பகவான் கிருஷ்ணரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரே அவருடைய திருநாவினால் பாடிய இந்த பகவத் கீதையை நாம் படிக்க வேண்டும். கடவுளே கடவுளைப் பற்றி இயற்றிய ஒரே நூல் தான் பகவத் கீதை. நாம் யார்? கடவுள் யார்? நமக்கும் கடவுளுக்கும் என்ன உறவு? நாம் ஏன் இந்த உலகில் அவதியுறுகிறோம்? கடவுள் என்பவர் இருக்கின்றாரா? ஒரு வேளை அவர் இருந்தால் ஏன் இந்த உலகத்தில் இவ்வளவு துன்பம் நடைபெறுகிறது? நம்முடைய ஒவ்வொரு கஷ்டத்திற்கும் தெளிவான விடை தான் என்ன? இப்படிப் பட்ட நமது எண்ணத்தில் உதயமாகும் பலதரப்பட்ட கேள்விகளுக்கும் நாம் விடை காணக் கூடிய ஒரே நூல் தான் பகவத் கீதை.

எப்படி சங்கீதம் கற்றுக்கொள்ள ஒரு முறை இருக்கிறதோ, எவ்வாறு மருத்துவம் கற்றுக்கொள்ள ஒரு முறை இருக்கிறதோ அது போல இந்த கீதையைக் கற்றுக்கொள்ளவும் ஒரு முறை உள்ளது. இந்த முறையை அர்ஜுனன் பின்பற்றினான். அதனால் அவன் போரிலும் வாழ்விலும் வெற்றி கண்டான். அர்ஜுனன் பின்பற்றிய அந்த முறையை நாமும் பின்பற்றி கீதையைக் கற்றோமேயானால் நமக்கும் வெற்றி நிச்சயம். அர்ஜுனனின் வெற்றியின் ரகசியம் தான் என்ன? இதற்கு ஸ்ரீகிருஷ்ணரே விளக்கம் தருகிறார். அர்ஜுனனுக்கு இரண்டு உன்னதமான தகுதிகள் உண்டு. ஒன்று அவன் கிருஷ்ணரின் பக்தன். மற்றொன்று அவன் கிருஷ்ணரின் நண்பன். நாமும் நம்முடைய மனதளவிலாவது கிருஷ்ணரின் நண்பனாகவும் பக்தனாகவும் இருந்தோமேயானால் பகவத் கீதை நமது அறிவுக்கு புலப்படும், நமக்கும் வெற்றி நிச்சயம்.

பகவத் கீதையின் இந்த அறிமுகத்துடன் நம்முடைய முதல் ஸ்லோகத்தைத் துவக்குவோம். மகாபாரதம் குறித்து, அதிலும் குறிப்பாக குருஷேத்ரப் போர் குறித்து நம்மில் பலருக்குத் தெரியும். அர்ஜுனன் ஒரு க்ஷத்ரியன் அதாவது ஒரு போர் வீரன். இந்தப் போரில் அவன் அவனுடைய உறவினருடனேயே சண்டையிடும் நிர்ப்பந்தம். கேவலம் ஒரு நாட்டை வெல்ல நான் எதற்கு என் உறவினரைக் கொல்ல வேண்டும் என்று குழம்புகிறான். அந்த நிலையில் அவன் ஸ்ரீகிருஷ்ணரிடம் தனது மனதை வெளிப்படுத்தி தன்னுடைய குழப்பத்தை தீர்த்து வைக்கும்படி கூறி, கிருஷ்ணரிடம் சீடனாக சரணடைகிறான். அப்பொழுது கிருஷ்ணர் கீழ்வரும் ஸ்லோகத்தைக் கூறுகிறார்.

தேஹினோ' ஸ்மின் யதா தேஹே
கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹான்தரப் ப்ராப்திர்
தீரஸ் தத்ர ந முஹ்யதி
பகவத் கீதை 2.13

தமிழ் மொழிபெயர்ப்பு: "உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை"

இந்த ஸ்லோகத்தின் மூலம் "நாம் யார்" மற்றும் "இறப்பு என்றால் என்ன" என்ற மிக முக்கிய கேள்விகளுக்கு விடையினை அறியலாம். முதலில் "நான் யார்" என்ற கேள்விக்கு இந்த வாரம் விடை தேடுவோம். நான் இந்த உடல் அல்ல. நான் ஒரு ஆத்மா. இதை நாம் அறிந்து கொள்வது வெகு சுலபம். உதாரணமாக நம்முடைய வீட்டை சுட்டிக்காண்பித்து "இது எனது வீடு" என்று கூறுகிறோம். நான் வீடு அல்ல. அதாவது நான் வேறு, எனது வீடு வேறு. நம்முடைய புத்தகத்தை சுட்டிக்காண்பித்து "இது எனது புத்தகம்" என்கிறோம். நான் புத்தகம் அல்ல. நான் வேறு, எனது புத்தகம் வேறு. அது போல நம்முடைய உடலை சுட்டிக்காண்பித்து "இது எனது கண். இது எனது வாய். இது எனது கை. இது எனது கால். இது எனது உடல்", என்று கூறுகிறோம். அதாவது நான் உடல் அல்ல. நான் வேறு எனது உடல் வேறு. நான் எனது உடல் இல்லையெனில் நான் யார்? நான் ஆத்மா. ஒரு சிறு குழந்தை கூட இந்த உண்மையினை கீதை மூலம் இவ்வாறு வெகு சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

நாம் இந்த உடல் இல்லை என்று புரிந்து கொண்டோம். நாம் ஆத்மா. ஆனால் நம்முடைய அன்றாட வாழ்கையில் நம்முடைய உடல் ஒன்றிற்கே நம்முடைய நேரம் அனைத்தையும் செலவு செய்கிறோம். எது நாம் இல்லையோ அதற்காகவே இரவு பகலாக உழைக்கிறோம். பிறகு நம்முடைய வாழ்வில் நிம்மதி இல்லை என்று வருந்துகிறோம். இந்த உடல் ஒன்றிற்கு மட்டுமே உணவளித்து மகிழ்ச்சியைத் தேடுகின்றோம். நாம் ஆத்மா. ஆனால் நம்முடைய ஆத்மாவிற்காக நாம் உணவளிப்பதே இல்லை. உடல் ஒரு ஜடப் பொருள் மட்டுமே. ஆத்மா அதில் குடி கொண்டிருபதால் மட்டுமே அதற்கு மதிப்பு உண்டு. எப்பொழுது ஆத்மா அதிலிருந்து ஒருவர் இறக்கும்பொழுது வெளியேருகிறதோ அப்பொழுது அது மீண்டும் ஒரு ஜடப் பொருளாகிவிடுகிறது.

ஒரு கிளி கூண்டில் இருக்கும்பொழுது, அந்த கிளிக்கு உணவளிக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த கிளி மகிழ்ச்சியாக இருக்கும். நாம் கிளிக்கு உணவளிக்காமல் கூண்டினை மட்டும் நன்றாக பராமரித்து வந்தால், கிளி வாடி வருந்தி ஒரு நாள் இறந்து விடும். நம்முடைய ஆத்மாவும் அது போலத்தான். நம்முடைய ஆத்மாவிற்கு நாம் எப்பொழுது உணவளிக்கின்றோமோ அன்று தான் நமக்கு வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். அதுவரை நமக்கு மகிழ்ச்சி கானல் நீர் தான். துரதிஷ்டவசமாக இன்றைய உலகில் அனைவரும் உடல் ஒன்றினை மட்டுமே கருத்திற்கொண்டு உழைக்கின்றனர். அதனால் தான் இன்று பெரும்பாலானோர் மன அழுத்தத்துடன் மகிழ்ச்சி இன்றி வாழ்கின்றனர். நாம் உடல் இல்லை. ஆகவே நாம் என்ன தான் நம்முடைய உடலுக்கு நல்லதொரு இனிய வாழ்வினைக் கொடுத்தாலும் நமக்கு மகிழ்ச்சி நிரந்தரமாகாது. ஏனென்றால் நம்முடைய உடல் நிரந்தரமானது இல்லை. உடலே நிரந்தரம் இல்லாதபொழுது உடல் எவ்வாறு நிரந்தர சந்தோஷத்தை நமக்கு கொடுக்க முடியும்? மேலே கூறப்பட்ட இந்த ஸ்லோகத்திலும் கிருஷ்ணர் இதைத்தான் கூறுகிறார்.
நம்முடைய உடல் நிரந்தரமானது கிடையாது. எனக்கு இப்பொழுது 29 வயது ஆகிறது. ஒரு காலத்தில் நான் குழந்தையாக இருந்தேன், பிறகு சிறுவனாக இருந்தேன், பிறகு குமரனாக இருந்தேன். இப்பொழுதோ குமரப் பருவத்தின் அந்தியில் இருக்கிறேன். என்னுடைய அந்த குழந்தை உருவம் எங்கே போனது? சிறுவனாக இருந்த உடல் என்ன ஆனது? குமரனாக இருந்த உடலும் இப்பொழுது என்னிடம் இல்லை. இந்த ஒரு வாழ்விலேயே நான் அதற்குள் நான்கு உடலை மாற்றி விட்டேன். நான் என்னுடைய உடலை மாற்றினாலும் கனஷியம் என்கிற என்னுடைய ஆத்மா மட்டும் மாறவே இல்லை. நான் இறந்தபின் நான் என்கிற இந்த ஆத்மா என்னுடைய இந்த உடலை விட்டு வேறு ஒரு உடலுக்குச் சென்று விடும். இதிலிருந்தே நாம் ஆத்மா தான் என்றும் நம்முடைய உடல் நிரந்தரமற்றது என்றும் புரிந்து கொள்ளலாம்.
நாம் இல்லாத ஒன்றிற்காக நம்முடைய நேரம் அனைத்தையும் செலவழித்து நம்முடைய வாழ்க்கையும் வீணடிக்கின்றோம். என்று நம்முடைய ஆத்மாவிற்கு உணவளித்து நம்முடைய ஆத்மாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறோமோ அன்று தான் நமக்கு உண்மையான மகிழ்ச்சி ஏற்படும். இந்த உன்னத அறிவையே ஸ்ரீகிருஷ்ணர் இந்த நான்கு வரிகளில் கூறி இருக்கிறார். ஆத்மாவிற்கான அந்த உணவு என்ன என்பது பற்றி அடுத்த வாரம் ஆராய்வோம்.

திருக்குறள் குறித்து கூறும் பொழுது கடுகைத் துளைத்து அது எழுகடல் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்பார்கள். பகவத் கீதையும் அது போலத்தான். கீதையின் ஒரு ஸ்லோகத்தை வைத்து நம்முடைய வாழ்நாள் முழுவதும் ஆராயும் அளவிற்கு அதில் அவ்வளவு விஷயம் உள்ளது. நான் சுவாமி பிரபுபாதாவின் "பகவத் கீதை உண்மையுருவில்" என்ற புத்தகத்தைப் போன இரண்டு வருடங்களாகத்தான் படித்து கற்றுக்கொண்டேன். உங்களுக்கும் இந்த புத்தகம் படிக்கும் ஆர்வம் இருப்பின் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.இதே புத்தகம் ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளது.

இந்த கட்டுரை குறித்து உங்கள் கேள்விகள் அனைத்தையும் இணைய அஞ்சலுக்கு அனுப்புங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
என்றும் அன்புடன்,
கனஷியம் கோவிந்த தாஸ்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

வள்ளுவப் பெருந்தகையின் இந்த குறளுக்கு ஏற்ப, நம்முடைய இந்த முதல் இணையவழி தொடர்பினை அந்த பகவானுக்கு சமர்பிப்போமாக! எந்த ஒரு நீண்ட பயணமும் நம் கால்கள் எடுத்து வைக்கும் ஒரு அடியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அது போலவே நம்முடைய ஆன்மிகம் குறித்த இந்த கருத்து பரிமாற்றமும் "பகவான்" என்ற இந்த ஒரு சொல்லைக் கொண்டு தொடரட்டும்.
இந்த காலத்தில் பகவான் என்ற சொல்லை மிகவும் தாராளமாக உபயோகிக்கின்றோம். பகவான் என்ற ஒரு சொல்லை சற்று கூர்ந்து கவனித்து ஆராய்ந்தால் அதிலிருந்து பல உன்னத உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம் . சத்தியவான் என்றால் சத்தியத்தைக் கொண்டவன் என்று பொருள். "சத்தியவான்" என்ற இந்த சொல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டது - "சத்தியம்" மற்றும் "வான்". "சத்தியம்" என்றால் உண்மை என்று பொருள். "வான்" என்றல் உருவமுள்ள ஒரு ஆள் என்று பொருள். அதைப்போலவே "தனவான்" என்றால் தனங்களைக் கொண்டவன் என்று பொருள். "வித்யவான்" என்றால் வித்யா அதாவது அறிவினைக் கொண்டவன் என்று பொருள்.
சத்தியவான், தனவான், வித்யவான் ஆக இந்த மூன்று சொற்களுமே இரண்டு வார்த்தைகளைக் கொண்டே அமைந்தது. அது போலவே பகவான் என்ற இந்த சொல்லும் இரண்டு வார்த்தைகளைக் கொண்டது. "பகம்" மற்றும் "வான்" - இதில் பகம் என்றால் செல்வங்கள் என்று பொருள். வான் என்றால் அந்த செல்வங்களைக் கொண்ட ஒரு ஆள் என்று பொருள். இதிலிருந்தே கடவுளுக்கும் உருவம் உள்ளது என்று அறியலாம். மகத்தான செல்வங்களைக் கொண்ட உருவமுடைய அந்த ஒரு ஆள் தான் "பகவான்". அந்த செல்வங்கள் எப்பேற்பட்டவை என்று பார்ப்போம்.
வேத வியாசரின் தந்தையும் மாபெரும் முனிவருமான பராசரர், "பகவான்" என்ற இந்த சொல்லிற்கு வேதங்களில் இருந்து விளக்கம் அளித்திருக்கிறார். "அழகு", "பலம்", "செல்வம்", "புகழ்", "அறிவு", "பற்றில்லாமை" ஆகிய இந்த ஆறு செல்வங்களையும் முழுமையாகவும் எண்ணிலடங்காமலும் ஒருங்கே பெற்ற அந்த ஒருவம் கொண்ட ஒரு ஆள் தான் பகவான். மனிதர்களில் சிலர் அழகுடையவராக இருக்கலாம். சிலர் பலசாலியாக இருக்கலாம். சிலர் செல்வந்தராக இருக்கலாம். சில மேதைகளும் சில பற்றில்லாதவர்களும் கூட இருக்கலாம். மேதையாக இருக்கும் ஒருவனுக்கு அழகு இருக்காது. பலம் கொண்ட ஒருவனுக்கு புகழ் இருக்காது. செல்வம் கொண்ட ஒருவனுக்கோ அறிவு இருக்காது. ஒரு வேளை இந்த ஐந்து செல்வங்களும் ஒருவனுக்கு இருப்பினும் ஆறாவது செல்வமான பற்றில்லாமை இருக்காது. ஆக இந்த ஆறு செல்வங்களும் ஒருங்கே கொண்டு நான் தான் தன்னிகரற்றவன் என்று மனிதரில் யாரும் பறை சாற்றிக்கொள்ள முடியாது. பகவான் ஒருவனுக்கே அந்த கூற்று பொருந்தும்.
இந்த காலத்தில் நான் தான் கடவுள் என்று பல முனிவர்களும், சாமிகளும் கூறிக்கொள்கின்றனர். அவர்கள் கூற்று சரியா தவறா என்று இந்த "பகவான்" என்ற ஒரு சொல்லை வைத்தே அறிந்துகொள்வோமாக!

புனித நூலான பகவத் கீதையில் இருந்து இனி வரும் ஒவ்வொரு வாரமும் ஒரு ஸ்லோகத்தை ஆராய்ந்து, நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் அதை எப்படி பின்பற்றுவது என்று புரிந்து கொள்வோம். உங்களுடைய கருத்துக்களையும் கேள்விகளையும் என்னுடையஇணைய அஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
கனஷியாம் கோவிந்த தாஸ்