( கலைஞரும் மெல்பன் பாரதி பள்ளியின் நிறுவனரும், சமூகச்செயற்பாட்டாளரும் தன்னார்வத் தொண்டருமான மாவை நித்தியானந்தனின் பவளவிழா நேற்றைய தினம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் ஸ்பிரிங்வேல் மாநகர மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மெல்பன் பாரதி பள்ளி பெற்றோர் – ஆசிரியர்கள் இணைந்து கொண்டாடினர்.
மாவை நித்தியின் வாழ்வையும் பணிகளையும்
சித்திரிக்கும் ஆவணப்படத் தொகுப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் மாவை நித்தியின் சிறப்பியல்புகளை கூறும் நித்தியம் சிறப்பு மலரும்
வெளியிடப்பட்டது.
இம்மலரில் இடம்பெற்ற எழுத்தாளர்
முருகபூபதியின் ஆக்கம் )
மனிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே
ஊற்றெடுப்பது. அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் நதியாக்குவதில்தான் அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன்.
தனது ஆரம்ப பாடசாலைக் காலத்திலிருந்தும் யாழ். தெல்லிப்பழை
யூனியன் கல்லூரி வாழ்க்கை முதல், கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழக வளாகத்தின் தொழில்
சார் பயிற்சிக் காலத்திலும் தன்னிடம் சுரந்துகொண்டிருந்த கலை, இலக்கிய தாகத்தை சமூகத்தை
நோக்கி பயன்படுத்தியவர்தான் எழுத்தாளரும் நாடகக் கலைஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான மாவை நித்தியானந்தன்.
இவரை கடந்த ஐம்பது வருடகாலமாக
அவதானித்து வருகின்றேன். 1970 காலப்பகுதியில் மாவை நித்தி, மேற்சொன்ன கட்டுப்பெத்தை
பல்கலைக் கழகத்தில் மேற்கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தவேளையில் அங்கு நீண்ட காலம் இயங்கி
வந்த தமிழ்ச்சங்கம் வருடாந்தம் நடத்தி வந்த கலைவிழாவில்தான் முதல் முதலில் சந்தித்தேன்.
அந்தச்சங்கம் நுட்பம்
என்ற சிறந்த கலை, இலக்கிய, விஞ்ஞான ஆய்வு மலரையும் வெளியிட்டு வந்தது. அதிலும் மாவை
நித்தியின் ஆக்கங்கள் வெளிவந்தன.
நித்தி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய
ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி என பரவலாக அறியப்பட்ட
அம்பிகை பாகரின் மாணாக்கர்.
பாட நேரங்களையடுத்து வரும்
இடைவேளையின்போது, தான் எழுதிய கவிதைகளை அம்பி மாஸ்டருக்கு காண்பித்து,
அவரது செம்மைப்படுத்தலின் பின்னர் இதழ்களுக்கு அனுப்பினார். அதனால், அம்பி மாஸ்டரின் அபிமானத்திற்குரிய மாணவராகவும்
பின்னாளில் நல்ல நண்பராகவும் திகழ்ந்தார்.
சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு
முன்னர் மெல்பனில் மாவை நித்தி, பாரதி பள்ளியின்
வளாகத்தை தொடக்கியபோது சிட்னியில் வதியும் அம்பி அவர்களை அழைத்து பாரதி பள்ளியை அங்குரார்ப்பணம்
செய்ய வைத்தார்.
மாவை நித்தி கவிஞராகவும்
நாடக எழுத்தாளராகவும் இயக்குநராகவும் நன்கு
அறியப்பட்டிருந்தாலும், சிறுகதைகளும், புனைவு
சாரா பத்தி எழுத்துக்களும் எழுதி வந்திருப்பவர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியன மல்லிகை இதழில் ஒரு சில சிறுகதைகளையும் எழுதியிருப்பவர். அதில் லண்டன்காரன் என்ற சிறுகதை அக்காலப்பகுதியில் சிலாகித்து பேசப்பட்டது. அதேசமயம் இலங்கையில் புகழ்பூத்த சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசை நேரில் சந்தித்து நித்தி எழுதிய நேர்காணல் கட்டுரை மல்லிகையில் வெளிவந்தது. அந்த சந்திப்புக்கு இவருடன் சென்றவர்தான் மெல்பனில் வதியும் இவரது பல்கலைக்கழக நண்பர் தில்லைக்கூத்தன் என்ற புனைபெயரில் அறியப்பட்ட சிவசுப்பிரமணியம்.