திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் 15-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

.


யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் 15-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முக்கந்தர் சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம்(தபால்அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சசிகலா, கலாவாணி, துளசிராம், மேஜர். துளசி(குகபாலிகா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லைநாயகி(இலங்கை), கோகுலநாயகி(மலேசியா), அகிலாண்டநாயகி(பிரித்தானியா), விமலநாயகி(இலங்கை), நவநீதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. செந்தில்வால், பாலச்சந்திரன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், சிவசுப்பிரமணியம், மற்றும், யெயபாலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவகுருநாதபிள்ளை, சியாமா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. சயன், சரணியன், றோசாந், இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உயர்வினையே உணர்ந்திடலாம் !

                                 
      
       ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) 

        உலகத்தில் பிறந்திடுதல் உயர்வான நிலயென்று 
        உம்பர்களே எண்ணுவதாய் உரைத்திடுவார் வாசகரும் 
        உலகத்தில் பிறந்தாரோ பிறப்பதனை உணராமல் 
        பித்தேறி பலசெய்து  பேதலித்துநிற்கின்றார் !

        மானிடராய் பிறந்துவிடல் மாநிலத்தில் பெருப்பயனே
        ஆறறிவை பெற்றுநிற்கும் அருமையவர்க் அமைந்ததுவே 
        தாறுமாறாய் நடக்காமல் தடம்புரண்டு போகாமல்
        நேரான வழிசெல்ல நிற்கிறதே அறிவாகும் !

        அறிவுபெற்ற மனிதனிடம் அசிங்கம்பல இருக்கிறது
        ஐந்தறிவு ஜீவன்கூட அசிங்கம்பல செய்வதில்லை 
        பேரறிவு பெற்றுவிட்டோம் எனவெண்ணி நின்றுநிதம்
         பிரியமில்லாக் காரியங்கள் பெருமளவில் செய்கின்றார் !

        வாழ்கின்ற வேளையிலே மற்றவர்க்கு இடைஞ்சலின்றி 
        வாழ்க்கையினை அமைத்துவிட்டால் வாழ்வினுக்கே வளமாகும்
        வாழ்க்கைதனை வீழ்த்துதற்கு வழியாக வாழ்ந்திடுவார் 
        வாழ்க்கையிலே பிறப்பதனை வரட்சியாய் ஆக்கிநிற்பார் !

        பூமிதனில் பிறப்பார்கள் சாமியாய் மாறுவதும்
        பூனிதனில் பிறப்பார்கள் சாத்தானாய் மாறுவதும் 
        யார்கொடுத்த வரமென்று நாமொருக்கால் சிந்திக்கின் 
        அவரவரின் மனவெழுச்சிதான் அதற்குக் காரணமாம் !

வாழ்வின் சுமைகள் சுகமானது - முருகபூபதி

.
வாழ்வின்  சுமைகள்  சுகமானது  என்பதை  உணர்த்திய இலக்கிய  வாழ்வின்  முதல்  அத்தியாயம்
எனது  முதலாவது  நூல் - சுமையின் பங்காளிகள் வெளீயீட்டு  அனுபவம்



கடலும்  கடல்  சார்ந்த  நிலமும்  நெய்தல்  என  அழைக்கப்படுகிறது. ஐந்து   திணைகளில்  ஒன்றென  நெய்தல்  கருதப்பட்டாலும்,  இந்தத் தொன்மையான  தகவல்  ஏதும்  தெரியாமல் -  மழைக்கும் பாடசாலைப் பக்கம்   ஒதுங்காமல்  உழைப்பும்,  பரிசுத்த  வேதாகமும்தான் வாழ்க்கை   என  வாழ்ந்த  மக்கள்  மத்தியில்  பிறந்தேன்.
 எங்கள்  ஊரை  நீர்கொழும்பு  என  அழைப்பார்கள்.   கடலின் அலையோசையை  தினம்  தினம்  கேட்டவாறே   வளர்ந்தேன்.   எங்கள் வீட்டிலிருந்து  பார்த்தால்  கடல்  தெரியும்.   சிறுவனாக இருக்கும்பொழுது   எனது  விளையாட்டு  மைதானம்  எங்கள் கடற்கரைதான்.
இந்துசமுத்திரத்தாயின்   அரவணைப்பில்  வாழ்ந்த  கடற்றொழிலாளர் குடும்பத்துப் பிள்ளைகள்  எனது  பால்யகாலச்சிநேகிதர்கள். அவர்களின்  பேச்சுமொழியை   சிறுவயதிலேயே உள்வாங்கிக்கொண்டேன்.
சூரியன்   அஸ்தமிக்கும்  ரம்மியமான  காட்சியையும் அந்தக்கடற்கரையில்  நடு  இரவு  கடல்தொழிலுக்கு  புறப்படவிருக்கும் அந்த   ஏழைச்செம்படவர்கள்  மீன்பிடி  வலையில்  மீன்களினாலும் கடல்   பாறைகளினாலும்  அறுந்துபோன  நூல்களை இணைத்துக்கொண்டிருக்கும்  காட்சியையும்  ரசிப்பேன்.


.


மட்டக்களப்பு, பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று மாலை நடைபெற்றன. உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து கலை இலக்கிய கலாசார போக்கும் சவாலும் என்னும் தலைப்பில் மூன்று தினங்கள் நடைபெறும் முத்தமிழ் விழாவில் இரண்டாம் நாள் நிகழ்வு சுவாமி விபுலானந்தர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.


தமிழ் மக்கள் பேரவையின் உபதலைவர் த.வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நாடகம் மற்றும் இசை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இன்று சனிக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசிர் அகமட் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
.


மன்னார் கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படுகின்ற, அகழ்வாராய்ச்சியொன்றில், 1400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் புஸ்பரட்னம் கூறுகின்றார்.
அவருடைய தலைமையில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்கள் இந்த ஆய்வகழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அகழ்வாராய்ச்சியில் இரண்டு விதமான குடியிருப்புக்கள் இருந்தமைக்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. ஒன்று கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்திருக்கின்றது. இதற்கான தொன்மைச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இது பெரும்பாலும் குளத்துக்கு உள்ளேயும், நாங்கள் ஆய்வு செய்த இடத்திற்கு அப்பாலும் இந்தச் சான்றுகளுக்கான அடையாளப் பொருட்கள் காணப்படுகின்றன என்றார் பேராசிரியர் புஸ்பரட்னம்.


சைவமன்ற பக்தி மாலை 20 09 2016

.

ஈழத்து இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரி 'குறமகள்' வள்ளிநாயகி ( 1933 - 2016) - முருகபூபதி

.
ஈழத்து  இலக்கியக் குடும்பத்தின்  மூத்த சகோதரி    'குறமகள்'  வள்ளிநாயகி ( 1933 - 2016)
அயராமல்  இயங்கிய  ஆளுமைக்கு   அஞ்சலிக்குறிப்பு
                                                                         

இரண்டு  வயதில்  வாசிக்கத்தொடங்கி,  நான்கு வயதில் கட்டுரை எழுதி, பதினேழு வயதில் சிறுகதை படைத்து, உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து, ஆசிரியராகி, வெளிவாரி பட்டப்படிப்பு பயின்று, நாடகத்துறையிலும் பயின்று,  எழுத்தாளராக, பெண்ணிய ஆளுமையாக, சமூகச்செயற்பாட்டளராக, பேச்சாளராக பரிமளித்து அயற்சியின்றி இயங்கி,   கனடாவில்  மௌனமாக  விடைபெற்ற  ஈழத்தின்  மூத்த எழுத்தாளர் பற்றி அறிந்திருக்கிறீர்களா...?

அவர்தான் வள்ளிநாயகி என்ற இயற்பெயருடனும் குறமகள் என்ற புனைபெயருடனும்  வாழ்ந்து தமது 83 ஆவது வயதில்  இம்மாதம் 15 ஆம் திகதி கனடா ரொரண்டேவில் மறைந்த இலக்கியவாதி.
இலங்கையின் வடபுலத்தில் 1933 ஆம் ஆண்டு ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்த வள்ளிநாயகியையும் அன்றைய சமூக அமைப்புத்தான் ஒரு படைப்பாளியாக்கியிருக்கிறது.
" வாழ்வின் தரிசனங்களே தாம் எழுதும் படைப்புகள் " என்றுதான் எழுத்தாளர்கள் சொல்வார்கள். வள்ளிநாயகியும்  இதற்கு விதிவிலக்கல்ல.  அவருக்கு  பன்னிரண்டு வயதிருக்கும்போது அவர் வீட்டுக்கு   அயலில்  ஒரு  குடும்பத்தில்  நிகழ்ந்த  மனதை  உருக்கும் சம்பவத்தால்  மனதளவில்  பெரிதும்  பாதிப்படைந்திருந்து  ஐந்து ஆண்டுகள்  கடந்தும்  அந்தச்சம்பவம்  தந்த  அழுத்தத்தினால் அவர் தமது  17 வயதில் எழுதிய  முதலாவது  சிறுகதைதான்  போலி கௌரவம். அந்நாளில் வடக்கில் வெளிவந்த  ஈழகேசரியில் பதிவாகியது.


யுகத்துக்கு ஒருவன் ! வைரமுத்து

.

ஒரு மகாகவியின் உடலென்ற பொருளைத் தீ தின்று தொண்ணூற்றைந்தாண்டுகள் தொலைந்தழிந்தன. காலமென்ற கானற்
கடலில் கலந்து கழிந்தன வருஷநதிகள். அவனது சமகாலத் தோழர்களும் தொண்டர்களும் தலைவர்களும் ஐம்பூதங்களோடு ஐக்கியமாகிப் போயினர். ஆயின், அவன் கவிதையாகிய உயிர்ப்பொருளை அழிப்பதற்கு ஐம்பூதங்களால் ஆகாது. காரணம், பாரதி கவிதைகள் காலத்தின் நித்தியங்கள்; கற்பனையைச் சற்றே தொட்டுக்கொண்ட சத்தியங்கள். அவை உடல்சார்ந்து வாழவில்லை; உண்மை சார்ந்து வாழ்கின்றன.

ஒரு நற்கவிதை என்பது பழையது புதியது என்ற காலப்பரிமாணம் கடந்தது. காற்று பழையதாயினும் உள்ளிழுக்கும் போதெல்லாம் உயிராற்றல் ஊறுமாறு போல - சூரியன் பழையதாயினும் அதன் கிரண விரல்கள் சென்றுக் கிச்சுகிச்சு மூட்டும் போதெல்லாம் கமலமொட்டுகள் கட்டவிழுமாறு போல - எழுதி நூறாண்டுகள் கடந்த பின்னும் அக்கினிக் கொழுந்துகளின் ஆவேசத்தோடு துடிதுடிக்கின்றன பாரதி பாடல்கள்.

இலங்கைச் செய்திகள்


முன்னாள் போராளிகளுக்கு விசேட மருத்துவ பரிசோதனை

பம்­ப­லப்­பிட்டி குடி­யி­ருப்­பி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எமக்கு அழுத்தம் : தொடர்­மாடி குடி­யி­ருப்பு மக்கள் விசனம் (காணொளி இணைப்பு)

இலங்கையில்  காணாமல்போனோர் குறித்த விசேட உபகுழு  கூட்டம் ஜெனிவாவில்

இலங்கை தொடர்பில் எதனையும்  குறிப்பிடாத செய்ட்  அல் ஹூசேன் 

புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்

24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி.!

இலங்கை அகதிகள் 90 பேர் நாடு திரும்பினர்



உலகச் செய்திகள்


பெங்களூரில் கலவரம் உச்சக் கட்டம் ; 90 பஸ், லொரிகள் மீது தீ வைப்பு

 தமிழகத்திற்கு நீர் வழங்க  உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்கு உத்தரவு : கலவரங்கள் உக்கிரம் (காணொளி இணைப்பு)

வீடொன்­றில் தீ அனர்த்தம் ; 6 சிறு­வர்கள் உட்­பட 9 பேர் உயி­ரி­ழப்பு


---------------------------------------------------------------------------------------------------------------


பெங்களூரில் கலவரம் உச்சக் கட்டம் ; 90 பஸ், லொரிகள் மீது தீ வைப்பு

12/09/2016 பெங்களூரில் இன்று காலை 11 மணியில் இருந்து இதுவரை 90 இற்கும் மேற்பட்ட பஸ், லொரிகள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழக பதிவு எண் கொண்ட பஸ், லொரிகளை தேடித் தேடி வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மைசூர் வீதியில் அமைந்துள்ள லொரிகள் தரிப்பிடத்தில்  27 லொரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 27 பஸ், லொரிகளும் அதில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளுடன் தீயிற்கு இரையாகியுள்ளது.


தமிழ் சினிமா


இருமுகன்


கடின உழைப்பு, தொடர் முயற்சி விக்ரம் கூடவே பிறந்தது. என்றும் தோல்விகள் கண்டு அஞ்சாது புதுபுது முயற்சிகளை எடுத்துவரும் விக்ரமின் அடுத்தக்கட்ட முயற்சி தான் இந்த இருமுகன். ஐ படத்தை மிஞ்சும் அளவிற்கு அதிக திரையரங்குகளில் இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் இன்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு கெமிக்கல் எடுத்துக்கொள்கிறார் என்பது தெரிய வருகிறது.
பிறகு தன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் விக்ரமை இந்த கேஸில் நியமிக்கின்றனர். அவரும் ஒரு பெயரை கேட்டதும் உடனே ஓகே சொல்கிறார். அவர் பெயர் தான் லவ்.
பிறகு தான் தெரிகிறது இந்த கெமிக்கல் மருந்தை தயாரிப்பது லவ், விக்ரம் மனைவி இறந்ததற்கும் லவ் தான் காரணம் என்று. இதை தொடர்ந்து லவ் யார், விக்ரம் இந்த சதிதிட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதை பரபரப்பான காட்சிகளால் கதையை நகர்த்தியுள்ளார் ஆனந்த் ஷங்கர்.

படத்தை பற்றிய அலசல்

விக்ரம் இன்னும் எத்தனை படத்தை தாங்கி பிடிப்பார் என்று தெரியவில்லை. ஒரே ஆளாக முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். ரா (Raw) அதிகாரியாக ஒரு பக்கம் மிரட்ட, லவ்வாக மறுபக்கம் கவர்ந்து இழுக்கிறார். இன்னும் ஸ்பெஷலாக தன் வாய்ஸ் கூட சற்று மாற்றி கலக்கியுள்ளார். லவ்வாக அவர் செய்யும் சேட்டைகள் அப்படியே டார்க் நைட் ஜோக்கரை நினைவுப்படுத்துகின்றது.
நயன்தாரா தான் படத்தின் பெரிய டுவிஸ்ட். இவரை வைத்து தான் படமே அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் என்று நினைக்கும் நேரத்தில், என்னம்மா அவ்வளவு தானா? என கேட்கத்தோன்றுகின்றது. நித்யா மேனன் எல்லாம் கெஸ்ட் ரோல் கதாபாத்திரம் தான்.
படத்தின் முதல் பாதியில் பரபரப்பாகவே செல்கின்றது, யார் இந்த லவ் என்று விக்ரம் தேடி செல்லும் காட்சிகள், அதற்கு வரும் இடையூறுகள் என அடுத்து என்ன, அடுத்து என்ன என்று செல்கின்றது. அப்படியிருக்க இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறுகிறது.
அதற்கு முக்கிய காரணம் லாஜிக் மீறல்கள், படத்தை விறுவிறுவென கொண்டு செல்ல வேண்டும் என்று தான் ஆனந்த் ஷங்கர் நினைத்தாரே தவிர, எந்த ஒரு லாஜிக்கையும் பார்க்கவில்லை போல.
எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எதையும் செய்து விடுவார் விக்ரம். மலேசியா கவர்மெண்டில் இருந்து ஏதோ கண்ணாமூச்சி விளையாடுவது போல் ஒளிந்து ஒளிந்து விளையாடுவது லாஜிக் மீறல் கூட இல்லை, அத்துமீறல் சார்.
ராஜசேகரின் ஒளிப்பதிவு ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உள்ளது. டெக்னிக்கலாக நிறைய விஷயங்கள் படத்தில் இருப்பதால், நிறைய ஒர்க் அவுட் செய்துள்ளது படக்குழு, ஹாரிஸ் ஜெயராஜின் ஹலனா பாடலை தவிர வேறு ஏதும் கவரவில்லை, ஆனால், பின்னணி இசையில் மிரட்டிவிட்டார்.
இயக்குனர் முருகதாஸ் உதவி இயக்குனர் என்பதை இதில் நிரூபித்து விட்டார். கொஞ்சம் போதி தர்மன் கதை போல் தான் உள்ளது, என்ன இந்த படத்தில் ஹிட்லர் கதை வருகிறது.

க்ளாப்ஸ்

விக்ரம் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு எடுக்கும் முயற்சிகள், சின்ன சின்ன விஷயத்தை கூட சிறப்பாக செய்துள்ளார்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கின்றது. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு.
லவ் கதாபாத்திரத்தை உருவாக்கிய விதம், மிகவும் ஜாலியான வில்லனாக கவர்கிறார்.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி கொஞ்சம் வேகம் குறைகிறது, முதல் பாதியை விட வேகமாக சென்றிருக்கலாம். நித்யா மேனன் போன்ற நல்ல நடிகையை இப்படியா பயன்படுத்துவது?.
லாஜிக் மீறல்கள், அரிமா நம்பியில் பார்த்து பார்த்து கவனித்த இயக்குனர் பெரிய பட்ஜெட் படத்தில் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
மொத்தத்தில் வழக்கம் போல் இந்த இருமுகனையும் விக்ரமே தன் முழுப்பலத்தால் கரை சேர்க்கிறார்.

நன்றி  cineulagam