“ எங்கள் பாகிஸ்தானுக்கு வந்துவிடுங்கள். நான் உங்களை
எமது
நாட்டில் கௌரவப் பிரஜையாக ஏற்கின்றேன்.
காஸ்மீரை இந்தியாவுக்கு விட்டுக்கொடுத்துவிடுகிறேன் “ என்று ஒரு சமயம் சொன்னவர் பாகிஸ்தான் அதிபர் ஷியாவுல் ஹக்.
இவ்வாறு ஒரு நாட்டின் தலைவர்
தனது அண்டை நாடான இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்காரிடம் சொன்னதாக ஒரு செய்தியை
நாம் முன்பு படித்திருக்கின்றோம்.
அந்தளவுக்கு அனைவராலும்
நேசிக்கப்பட்ட இந்த இசைக்குயில், இம்மாதம்
06 ஆம் திகதி தனது இறுதி மூச்சைவிட்டு, விடைபெற்றுவிட்டது.
உலகில் எங்காவது ஒரு தேசத்தில்
- ஓரிடத்தில் ஒவ்வொரு நிமிடமும்
ஒலித்துக்கொண்டிருக்கும்
மதுரமான குரலுக்குச் சொந்தக்காரரான லதா மங்கேஷ்கார் தனது ஐந்து வயதில் இசைப்பயணத்தை
தொடங்கியவர்.
முப்பத்தியாறு மொழிகளில்
பாடி புகழ்பெற்றிருக்கும் லதா, இந்திய அரசின் பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகள் உட்பட,
வாழ்நாள் சாதனைக்கான ஜீ சினி விருது, தாதா சாகேப்
பால்கே விருது உட்பட பல விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்ற சாதனையாளர்.
2001 ஆம் ஆண்டில்
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றவர் இந்த இசைக்குயில்.
1974 ஆம் ஆண்டில்,
உலக சாதனைகள் பற்றி பதிவுசெய்யப்படும் கின்னஸ்
புத்தகத்திலும் லதா மங்கேஷ்கார் வரலாற்றில்
மிகவும் முக்கிய கலைஞராக பட்டியலிடப்பட்டுள்ளார்.
இந்தியா – சீனா போர் மூண்ட காலப்பகுதியில்,
அந்தப்போரை தவிர்க்கவேண்டியதன் அவசியம் குறித்து 1963
இல் கவிஞர் பிரதீப் இயற்றிய
“ ஏ மேரே வதன் கே லோகோன் “ என்ற பாடலை
லதா ஒரு மேடையில் பாடினார். அதனை அந்த சபையில் கேட்டுக்கொண்டிருந்த அன்றைய பாரதப்பிரதமர்
ஜவஹர்லால் நேரு கண்ணீர் சிந்தியதாக அக்காலப்பகுதியில்
செய்திகள் வெளியாகின.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும்,
அவர் மேடைக்குப்பின்புறம் சென்று காப்பி அருந்திக்கொண்டிருந்த லதாவை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் மராத்திய மாநிலத்தில்
தீனநாத் – ஷெவாந்தி தம்பதியரின் மூத்த புதல்வியாக
1929 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் "ஹேமா"
– தந்தையின் பாவ்பந்தன் என்ற நாடகத்தில் லத்திகா என்ற பாத்திரத்தில் நடித்து பாராட்டுப்பெற்றவர். அதனால், அவர் அன்று முதல் லதா என்றே அழைக்கப்படலானார்.