.
மணல் திரைப்படம் அமைதியாக இருந்து ஆழமான விடயத்தை சொல்லி சென்ற இலங்கை தமிழ்த் திரைப்படம்
இன்று சிட்னி ரீடிங் சினிமாவில் திரையிடப்பட்ட மணல் திரைப்படத்தை பார்க்கக்
கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளரான விசாகேச சந்திரசேகரத்தின் தயாரிப்பில், விசாகேச சந்திரசேககர் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் நடிகர், நடிகைகளால் குறிப்பாக யாழ்ப்பாணத்து நடிகர்களையும், பின்னணி கலைஞர்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம், பல விருதுகளை குறிப்பாக நெதர்லாந்து ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விசேட ஜூரி விருதினையும் வேறு பல விருதுகளையும் பெற்றிருந்த இத்திரைப்படம் என்பதாலும் இலங்கை தமிழ் திரைப் படங்களை தவறாது பார்ப்பவன் என்பதாலும் அந்த திரைப்படத்தை சென்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டிருந்தது.
திரைப்படத்தின் கதை ஒரு இலங்கையின் போர்க்காலத்துக்கு பின்பான ஒரு
கதையாகும். போராட்டத்திற்கு உதவிய ஒருவருக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின்
கீழ் குற்றம் சாட்டப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய காணாமல்
ஆக்கப்பட்ட காதலியை தேடுகின்ற ஒரு கதையாக தான் இந்த கதை
அமைக்கப்பட்டிருந்தது. ஒரு கத்தியின் மேல் நடப்பது போல் மிக அழகாக
திரைப்படத்தை நகர்த்திச் சென்றிருந்தார் நெறியாளர்.
பல பாத்திரங்கள் மவுனமாக பேசியது. மௌனம் பேச்சை விட மிகப்பெரிய ஆயுதம்
என்பார்கள் அது மிக அழகாக கையாளப்பட்டிருந்தது. இங்கே குறிப்பாக சொல்வதாக
இருந்தால். அவன் தேடிய தன் காதலியை கண்டு அவளுடன் கதைப்பதற்கு
எவ்வளவோ முயன்று பின்பு கதைக்கும் போது அவள் மௌனமாக விழிகளாலும்
உதடுகளாலும் மட்டுமே பேசுகின்ற காட்சி, அவளுக்கு ஏற்பட்ட கொடுமைகள்
எப்படி இருந்திருக்கும் என்பதற்கு அவள் எந்த மொழியையும் பேசாமல்,
கற்பழிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை
அந்த மொழி மூலமும், அவளுடைய கையில் அவன் வளையல்களை அணிவிக்கின்ற
போது காட்டப்பட்ட வெட்டு காயம் மூலமும், மிகப்பெரிய விடயத்தை பேசியிருக்
கின்றார் நெறியாளர் என்று தான் கூற வேண்டும்.
அதேபோல் இன்னொரு பக்கமாக துரோகி என்று அழைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக
காட்டப்பட்ட ஒரு காட்சி எந்த இடத்திலும் கொல்லப்பட்டதாகவோ அல்லது
காட்சியாகவோ காட்டப்படாமல் மிகப்பெரிய விடயத்தை ஒரு பிளாஸ்டிக் பை என்ற
பையை வைத்துக்கொண்டு குறிப்பிடுகின்றார், இது எல்லாம் மனித நேயம்
உள்ளவர்களால் மாத்திரம் தான் இப்படியாக கொடுமைகளை மிக நாசுக்காக
சொல்ல முடியும். பார்ப்பவர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்பது
நெறியாளருடைய நெறியாள்கையில் தெரிகின்றது. இப்படி ஒவ்வொரு விடயமும்
மிக அழகாக நகர்த்திச் செல்லப்படுகின்றது.