ஜெயம் ரவி சத்தமே இல்லாமல் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருபவர். படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு கதையாக பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அப்படி ஒரு படமாக இந்த அடங்கமறு அமைந்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
நேர்மையான போலிஸ் அதிகாரியாக ஜெயம் ரவி, எப்படியாவது ஐபிஎஸ் ஆகிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றார். அதற்கு முன்னோட்டமாக போலிஸ் வேலையில் இவர் காட்டும் நேர்மை இவரை எந்த அளவிற்கு மோசமாக கொண்டு செல்கின்றது என்பதே படத்தின் ஒன் லைன்.
அமைச்சர் பையனாக இருந்தாலும் ரூல்ஸை மீறினால் அடித்து தும்சம் செய்யும் தைரியமான இளைஞனாக ஜெயம் ரவி, அன்பான காதலி, அழகான குடும்பம், பிடித்த வேலை என வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
அந்த சமயத்தில் ஒரு பெண்ணை கற்பழித்து ஒரு கும்பல் கொல்கிறது, அதை போலிஸார் தற்கொலை என்று கேஸை முடிக்க, அதை ரவி கையில் எடுக்க, அதை தொடர்ந்து அவர் வாழ்க்கை திசை மாறுகிறது, ஒரு கட்டத்தில் போலிஸ் வேலையை கூட விடும் நிலை ஏற்பட, அதை தொடர்ந்து ரவி அந்த கும்பலை எப்படி வேட்டையாடுகிறார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஜெயம் ரவி நாம் முன்பு சொன்னது போலவே கமர்ஷியல் படம் என்றாலும் அதில் ஒரு அழுத்தமான கதை இருக்க வேண்டும் என்று கவனமாக கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார், அதிலும் இதில் தனி ஒருவன் மித்ரனையும், நிமிரந்து நில் அரவிந்தனையும் ஒன்றாக சேர்த்தது போல் நடித்துள்ளார். தன் குடும்பத்தில் ஏற்படும் இழப்பிற்கு அவர் அழும் காட்சியெல்லாம் நம்மையும் கலங்க வைத்து பாஸ் மார்க் வாங்கி செல்கின்றார்.
ராஷிகண்ணா தமிழ் சினிமாவில் செம்ம வரவு என்றே சொல்லலாம், அலட்டல் இல்லாத நடிப்பு, அதிலும் அவருக்கு காஷ்டியூம் தேர்வு செய்தவர்களை பாராட்டலாம், அனைத்து காஷ்டியூமிலும் அழகாக காட்சி அளிக்கின்றார், இவரை தொடர்ந்து முனிஷ்காந்த், மைம் கோபி, சம்பம் என பலரும் தங்கள் நடிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒரு பெண் இரவில் தனியாக நடந்து சென்றால் தான் உண்மையான சுதந்திரம், ஆனால், இங்கு பகலிலேயே நடக்க முடியவில்லை என்பதை மையமாக கொண்டு படம் முழுவதும் ஒரு பரபரப்பான திரைக்கதையை கையாண்டுள்ளார் இயக்குனர், ஆனால், பல படங்களின் பாதிப்பு நம் கண்முன் வந்து செல்கின்றது.
உதாரணத்திற்கு சலீம் என்ற படம்(அதுவே ஒரு கொரியன் படம் காப்பி) அட, இது அப்படியே இதே கதை போல் உள்ளதே என்று நினைக்க வைக்கின்றது, அதுமட்டுமின்றி விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் போலவே கூட உள்ளது, என்ன அதில் ஒரு வில்லன், இதில் 4 வில்லன்.
படம் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இடைவேளைக்கு பிறகு பரபரப்பான திரைக்கதை இருந்தும் கொஞ்சம் ஏதோ மிஸ் ஆன பீல் தான், குறிப்பாக ஒரு வில்லனை வீடியோ கேம் மூலம் கொள்வது என்பது புதிதாக இருந்தாலும் கொஞ்சம் செயற்கைத்தனம் வருவதை தவிர்க்க முடியவில்லை, அதிலும் ஜெயம் ரவி ஒருவர் தன் நண்பருடன் சேர்ந்து ஒட்டு மொத்த சர்வரை ஹாக் செய்வது என்பது சிரிப்பை வரவைக்கின்றது.
படத்தின் மற்றொரு ஹீரோ சாம் சி.எஸின் இசை, பாடல்களை விட பின்னணியில் மிரட்டல், ஒளிப்பதிவும் பலம் சேர்த்துள்ளது.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி, விறுவிறுப்பாக செல்கின்றது.
ஜெயம் ரவி இதுபோன்று பல படங்களில் பார்த்த கதாபாத்திரம் என்றாலும் ஒன் மேன் ஷோவாக படத்தை தாங்கி செல்கின்றார். அதிலும் போலிஸ் விசாரணையை அவர் அசாட்டாக டீல் செய்யும் விதம்.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி பழிவாங்குதல் காட்சிகள் ஐ படம் போலவே இருப்பதை தவிர்க்க முடியவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் ஜெயம் ரவி சூப்பர் ஹீரோ போல் என்ன வேண்டுமானாலும் செய்வது கொஞ்சம் லாஜிக் மீறல்.
மொத்தத்தில் அடங்கமறு சுபாஷ்(ஜெயம் ரவி) தனி ஒருவனுக்கும், நிமிர்ந்து நில்லுக்கும் இடையில் நிற்கிறான். நன்றி CineUlagam