இலங்கை வானொலி மற்றும் லண்டன் பி. பி. சி . யில் முன்னர்
சேவையாற்றியவரும் இலங்கை நாடாளுமன்றில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவருமான புகழ் பூத்த அறிவிப்பாளர் ( அமரர் ) சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும், சுபத்திராவின் பாசமிகு தாயாரும், குலசேகரம் சஞ்சயனின் அன்பு மாமியாரும், சேந்தன், சேயோன் ஆகியோரின் பிரியத்திற்குரிய பேத்தியாருமான
திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்
அவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலையில் அவுஸ்திரேலியா சிட்னியில் அமரத்துவம்
எய்திவிட்டார் என்ற துயரச் செய்தியுடன்தான்
அன்றைய நாளின் காலைப்பொழுது எனக்கு
விடிந்தது.
சிட்னியிலிருந்து இலக்கியச் சகோதரன் கானா. பிரபா, காலை
வேளையில் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டால், ஏதோ ஒரு கலை, இலக்கியப் புதினம்தான் சொல்லப்போகிறார் என நினைத்துக்கொள்வேன்.
ஆனால், அவர் அன்று சொன்ன தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தத் தகவலைத்தான் இந்த அஞ்சலிக்குறிப்பின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன்.
எங்கள் கலை, இலக்கிய, வானொலி ஊடகக் குடும்பத்திலிருந்து மற்றும் ஒருவரை நாம் தற்போது இழந்து நிற்கின்றோம்.
எம்மால் அக்கா என அன்பு பொங்க அழைக்கப்படும் பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள், எமது அந்த நேசம் இழையோடும் உணர்வுபூர்வமான குரலை இனிமேல் கேட்கமாட்டார்கள்.
இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிட்னிக்குச் சென்றிருந்தவேளையில், என்னை அவரிடம் அழைத்துச்சென்றவர்கள் கவிஞர் அம்பியின் புதல்வன் திருக்குமாரனும், புதல்வி மருத்துவர் திருமதி உமாதேவி சிவகுமாரனும்தான்.
அன்று அக்கா, எங்களைக்கண்டதும் உற்சாகம் பொங்க நீண்டநேரம் உரையாற்றினார்.
சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்னர், அக்காவையும் அவரது கணவர் சுந்தா அண்ணரையும், இவர்களின் செல்வப்புதல்வி சுபத்ராவையும் முதல் முதலில் சந்தித்த கொழும்பு – 07 இல் பாமன்கடை வீதியில் அமைந்திருந்த இல்லத்தில் இவர்களுடன் மற்றும் ஒரு பகுதியில் வசித்த, பேராசிரியர்கள் மௌனகுரு – சித்திரலேகா தம்பதியருடன், அக்காவை அன்று உரையாடச் செய்வதற்காக இணைப்பினை ஏற்படுத்திக்கொடுத்தேன்.