இலங்கைக்கு 1999 ஆண்டு சென்று திரும்புகையில் அங்கே நேர்ந்திருந்த
துரிதமான மாற்றங்களைப் பார்த்து வியப்படைந்தேன்.
அந்த வியப்பு 1997 ஆம் ஆண்டு சென்றிருந்தபோதே ஆரம்பமாகியிருந்தது. இந்த இரண்டு ஆண்டு காலத்திலும் என்னால் வடக்கு
– கிழக்கு மாகாணங்களுக்குச் செல்ல முடியாமல்போனது மிகுந்த கவலையை தந்தது.
அங்கெல்லாம் போர் மேகங்கள்
சூழ்ந்திருந்தன. எங்கள் ஊருக்கு வடக்கிலிருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்த
காலப்பகுதி அது.
அவர்களின் குடும்பங்களைச்
சேர்ந்த யாராவது ஒருவர்
அவுஸ்திரேலியா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளை சென்றடைந்திருப்பார்கள்.
அவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்கள் அனுப்பும் பணத்தை வைத்துக்கொண்டு, வீடுகளுக்கு வாடகை முற்பணம் வழங்கி செலவுகளை சமாளித்துக்கொண்டிருந்த
சில குடும்பங்களை இந்தப்பயணத்தில் சந்திக்க நேர்ந்தது.
1987 ஆம் ஆண்டு தாயகத்தை விட்டு புறப்பட்டு வந்த எனக்கு
அந்த பன்னிரண்டு வருட காலத்தில் ( 1987 – 1999 ) எங்கள் ஊரிலும் எங்கள்
குடும்பத்திலும் நேர்ந்திருந்த மாற்றங்களும் வியப்பினைத்தந்தது.
எங்கள் குடும்பத்து வீடுகளில்
தொலைபேசி இணைப்பு வந்திருந்தது. இக்காலப்பகுதியில் எங்கள் ஊரில்
தொலைபேசி இல்லாத வீடுகளையே காண்பது அரிது.
மத்திய கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்த
எனது இளைய தம்பி ஶ்ரீதரன், நீர்கொழும்பில் ஒரு வீட்டைக் கட்டியிருந்தார்.
நானும் ஒரு வீட்டை 1990 களில் அங்கே வாங்கியிருந்தேன். 1990 வரையில் எங்கள் குடும்பத்திற்கென இருந்தது ஒரே ஒரு வீடு மாத்திரம்தான்.
அந்த வீட்டின் முகவரி:
இலக்கம் 20 , சூரிய வீதி, நீர்கொழும்பு. இந்த வீடு இலங்கை இலக்கிய உலகில் கொஞ்சம் பிரசித்தமானது. இலங்கை – இந்திய எழுத்தாளர்கள் பலர் வந்து சென்ற
வீடு.
இந்த வீட்டில்தான் 1972 காலப்பகுதியில் நாம் ஆரம்பித்த வளர்மதி நூலகம் இயங்கியது. வளர்மதி என்ற கையெழுத்து
சஞ்சிகையும் நடத்தினோம். இங்கு சில இலக்கிய சந்திப்புகளும் நடந்திருக்கின்றன.
1997 ஆம் ஆண்டு சென்றபோது அன்றையதினம் திங்கட்கிழமை
இரவு. அக்காவும் தங்கையும் என்னையும் மகன் முகுந்தனையும் வரவேற்பதற்காக விமான நிலையம்
வந்திருந்தார்கள்.
அவர்கள் எம்மை நேரே அப்போது
அக்காவின் குடும்பத்தினர் வசித்துக்கொண்டிருந்த எங்கள் பூர்வீக வீட்டுக்கு ( 20 – சூரியவீதி ) அழைத்துச்சென்றார்கள்.
அம்மா வாசலில் நின்று உச்சிமோந்து வரவேற்றார்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை. நானும் மகனும் சற்று தொலைவில் இருக்கும் எனது தம்பி
ஶ்ரீதரன் கட்டிய புதிய வீட்டுக்கு செல்லத் தயாரானோம்.
அம்மா நாள் – நட்சத்திரம்
பார்க்கும் இயல்புள்ளவர். “ தம்பியின் வீடு புதியது. நீ… நீண்ட காலத்திற்கு
பிறகு வந்திருக்கிறாய். இன்று செவ்வாய்க்கிழமை. வேண்டாம். நாளை அங்கே செல்லலாம். “ என்றார்கள்.
“ என்னம்மா சொல்கிறீர்கள்…? உங்கள் கடவுள் படைத்த
நாட்கள் எல்லாம் நல்ல நாட்கள்தானே..? “ என்றேன்.
“ விதண்டா வாதம் பேசாதே. நாளை புதன் கிழமை போகலாம்.
நீ… இன்று அயலில் இருக்கும் உனது நண்பர்களை பார்த்துவிட்டு வா. “ என்றார் அம்மா.
அந்த செவ்வாய்க்கிழமை எனது
பொழுது அம்மா சொன்னவாறே கழிந்தது.
மறுநாள் புதன் கிழமை. தம்பியின் புதிய வீட்டுக்குச் செல்லத்தயாரானேன். எனது மகனையும் தயார்ப்படுத்தினேன்.
அம்மாவைக் காணவில்லை. அக்காவிடம்
கேட்டேன்.