சிங்கப்பூர் பொது நூலகம்
பற்றி, அந்த
2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேலும் தெரிந்துகொண்ட செய்திகளை சொல்லாமல் இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரை கடந்து செல்ல
முடியாது.
சிங்கப்பூரில் பொதுமக்கள்,
அரச துறையினர், தகவல் தொடர்பூடகத்துறையினர், மாணவர்கள், ஆய்வாளர்கள் உட்பட அனைத்து
துறை சார்ந்தவர்களுக்கும் இந்த நூலகம் சிறந்த தகவல் மையமாக விளங்குகிறது.
நண்பர்கள் மூர்த்தியும்
புஷ்பலதா நாயுடுவும் என்னை அந்த
பிரமண்டமான கட்டிடத்தின் ஒன்பதாவது தளத்திற்கு அழைத்து
வந்தார்கள். அங்கே சீன, மலாய், தமிழ் பிரிவுகள் இருந்தன. தமிழ்ப்பகுதியில் ஆயிரக்கணக்கான
நூல்களும் ஏராளமான இதழ்களும் காணப்பட்டன.
தமிழ்ப்பிரிவில் மொழி,
கலை, இலக்கியம் என மூன்று பகுதிகளை வகுத்திருந்தார்கள். மொழிப்பகுதியில் தமிழின் வரலாறு,
சுவடிகள், இலக்கண நூல்கள் அகராதிகள் என்பனவும்,
கலைப்பகுதியில் நாட்டுப்புறக்கலைகள், நாட்டுப்புற பாடல்கள், தெருக்கூத்துக்கள், நாடக
வரலாறு, மேடை நாடகத்துறை சம்பந்தமான நூல்கள், கர்நாடக இசை வரலாறு, கீர்த்தனைகள், திரைப்பட
வரலாறு, திரைப்படத்துறையினரின் நினைவுகள் சார்ந்த ஆவணங்கள், திரையிசைக் கலைஞர்கள் வரலாறு
என்பனவும்,
இலக்கியப்பகுதியில் சங்ககால
இலக்கியம் முதல், இன்றைய நவீன இலக்கியம் வரையிலான இலக்கியத்தின் பல கூறுகளும் இடம்பெற்றிருந்தன.
வார, மாத இதழ்களுக்கென
ஒரு தனிப்பிரிவு இயங்குகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகளிலிருந்தும்
இதழ்கள் தருவிக்கப்படுகின்றன.
ஒரு பல்லூடக மையமும் ( Multimedia Centre ) இங்கு இயங்குகிறது.
சிங்கப்பூர் பொது நூலகத்தை
முழுமையாக பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது. இங்கு என்னை பெரிதும் கவர்ந்த ஒரு தளம்தான்
சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகளின் காட்சியகம். இதன் தமிழ்ப்பிரிவை உருவாக்குவதில்
புஷ்பலதா நாயுடு வழங்கிய ஆத்மார்த்திகமான பங்களிப்பு மகத்தானது. இந்த காட்சியகம் ஏனைய
நூலகங்களுக்கு முன்னோடியாகவும் திகழக்கூடும் என்பது எனது சிற்றறிவு.
சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய
முன்னோடிகள் சிலரது பெரிய அளவிலான அழகிய உருவப்படங்களும் அவர்கள் பெற்ற விருதுகளும்
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அருகிலே – சுவரில் பொருத்தப்பட்டிருந்த
ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, நூலகம் இயங்கும் நேரங்களில் தொடர்ச்சியாக இந்த இலக்கிய
முன்னோடிகளைப்பற்றி காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இக்காட்சியகம் ஆவணகமாகவே திகழுகிறது.