சந்தர்ப்பங்கள்
மனிதர்களை உருவாக்கும் .
மனித வாழ்வையும் சந்தர்ப்பங்கள் திசை திருப்பிவிடும். என்று இந்தத் தொடரில்,
கடந்த 28 ஆம் அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இலக்கியத்திலும்
ஊடகத்துறையிலும் எனக்கு கிட்டிய சந்தர்ப்பங்களைப்போலவே அரசியலிலும் சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள் குறுக்கிட்டஎனது வாழ்க்கையில் திருப்பங்களை சந்திக்கநேர்ந்தது.
1970
இல் ஶ்ரீமாவோ தலைமையில் கூட்டரசாங்கம் அமைந்தபின்னர், எங்கள் ஊரில் அவரது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்
இளைஞர் அணியினால் அவரது மகன் அநுரா பண்டாரநாயக்காவுக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
அநுரா இரண்டு பிரதமர்களின் மகன் என்ற வாரிசு அந்தஸ்தை
மாத்திரம் மூலதனமாக வைத்துக்கொண்டு அரசியல்
பிரவேசம் செய்தவர். அவருக்கு அச்சமயம் 23 வயது.
எங்கள் ஊரின் நகர மத்தியிலிருந்து கடற்கரைக்கு சமீபமாகவிருக்கும்
முற்றவெளிவரையில் அநுரா ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.
அந்தச்செய்தியை
எழுதுவதற்காக முற்றவெளிக்குச்சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நிருபர்கள்
வரிசையில் அமர்ந்தேன்.
எனது
பாடசாலையில் ஓவியப்பாடம் கற்பித்த ரஸாக் மாஸ்டர் தமது வீட்டில் டொலர் ஸ்ரூடியோ நடத்திக்கொண்டு, ஒளிப்படம் எடுப்பதையும் பகுதி நேரத்தொழிலாக மேற்கொண்டிருந்தார்.
ஊர்வலத்தில்
வந்த அநுராவை அவர் மாலைகள் சகிதம் படம் எடுத்துக்கொண்டு தாமதிக்காமல் வீட்டுக்குச்சென்று,
அதன் நெகடிவ்வை கழுவி, பெரிதாக பிரிண்ட் எடுத்துக்கொண்டு, முற்றவெளி மேடைக்கு வந்தார்.
அநுராவிடத்தில்
அந்தப்படத்தில் கையொப்பம் வாங்குவதுதான் அவரது நோக்கம். மேடையைச்சுற்றி அநுராவின் ஆதரவாளர்கள் மொய்த்துக்கொண்டு
நின்றனர்.
அந்தப்படத்தை
வாங்கி, அநுராவிடம் நீட்டியபோது, அவர் ரஸாக் மாஸ்டரை அருகில் அழைத்து, தனக்கும் ஒரு
பிரதிவேண்டும் என்றார்.
அந்தப்படத்தில்
அநுரா அழகிய தோற்றத்திலிருந்தார். அரசியலுக்கு புதியவரான அவரது பேச்சில் அனுபவம் தொனிக்கவில்லை. .