எனது எழுத்துலக வாழ்வு வெள்ளீயத்தில் தயாரிக்கப்பட்ட அச்சு ஊடகங்களில் ஆரம்பமாகி, பின்னாளில் இணைய ஊடகத்தை நோக்கி வளர்ந்தது.
1970 களில் எனது எழுத்துக்கள் வீரகேசரி, தினகரன் முதலான நாளேடுகளிலும் மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம், மாணிக்கம் முதலான சிற்றிதழ்களிலும்தான் வெளிவந்தன. அவுஸ்திரேலியாவுக்கு வரும்வரையில் ஒவ்வொரு வெள்ளீய அச்சு எழுத்துக்களினால் கோர்க்கப்பட்டு அச்சாகிய எனது படைப்புகள், 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கணினியில் பதிவாகி இணைய ஊடகங்களிலும் பரவத்தொடங்கியது.
இணையத்தின் வருகையுடன், தமிழ் எழுத்து உருபுகளும் அறிமுகமானதும் அதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பேனையை எடுத்து, காகிதத்தில் எழுதி, தபாலில் அனுப்பும் வழக்கம் முற்றாக மறைந்தது. முதலில் பாமினி உருபுகளில் கணினியில் எழுதத்தொடங்கியதும், எனது மனைவி வழி உறவினரான திருமதி பாமினி என்பவர் , தனது அண்ணாதான் அந்த தமிழ் உருபை கண்டுபிடித்து,
அதற்கு தனது பெயரையும் சூட்டினார் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதன்பின்னர் யூனிகோட்டில் எழுதிப்பழகினேன்.
இவ்வாறு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் மெல்பன் நண்பர் எழுத்தாளர் நடேசன், எனக்கு தேனீ இணைய இதழை அறிமுகப்படுத்தினார். முதலில் அவர் ஊடாகவே எனது ஆக்கங்களை ஜெர்மனியிலிருந்து வெளிவந்த தேனீ இணைய இதழுக்கு அனுப்பினேன். அவற்றை ஏற்று தொடர்ச்சியாக பிரசுரித்த தேனீ இணையத்தளத்தை நடத்தும் ஜெமினி கங்காதரன், என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தோழமை பூண்டார். அதன்பிறகு நானே நேரடியாக அவருக்கு எனது ஆக்கங்களை அனுப்பத்தொடங்கினேன்.
இவ்வாறு தொடங்கிய எமது தோழமையினால், எனது இலக்கிய மற்றும் அரசியல் ஆய்வாளர்களான நண்பர்களின் ஆக்கங்களையும் தேனீக்கு அறிமுகப்படுத்தினேன். அவற்றையும் தேனீ ஆசிரியர் ஜெமினி கங்காதரன் மனமுவந்து ஏற்று பதிவேற்றினனார்.
தமிழ்நாட்டில் வெளியான யுகமாயினி இதழில் வெளியான எனது சொல்ல மறந்த கதைகள் தொடர், நடேசனின் வலைப்பூவிலும், அதேசமயம் , தேனீயிலும் தொடர்ந்து வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பிருந்தமையால், அதனை நூலாகத் தொகுத்து வெளியிடுமாறு கிளிநொச்சியிலிருந்து இலக்கிய நண்பர் கருணாகரன் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.
பின்னர் அவரது ஏற்பாட்டிலேயே சொல்லமறந்த கதைகள் தமிழ்நாடு மலைகள் பதிப்பகத்தினால் 2014 ஆம் ஆண்டில் வெளியானது. அதன் வெளியீட்டு அரங்கு மெல்பனில் நடந்தபோது, தொலைபேசியில் என்னை வாழ்த்தியதோடு, அது போன்ற தொடர்களை தொடர்ந்தும் எழுதுமாறு தோழர் ஜெமினி கங்காதரன் உற்சாகமூட்டினார். அவரது ஊக்கமூட்டும் வார்த்தைகளினால்தான் எனது சொல்லவேண்டிய கதைகள், சொல்லத்தவறிய கதைகள் என்பனவும் அடுத்தடுத்து வெளியாகின.
சொல்லவேண்டிய கதைகள் யாழ்ப்பாணம் ஜீவநதி மாத இதழிலும் சொல்லத்தவறிய கதைகள் யாழ்ப்பாணம் காலைக்கதிர் வார இதழிலும் வெளியாகி, பின்னர் நூலுருப்பெற்றன. அவற்றில் வெளியான பல ஆக்கங்கள் அவுஸ்திரேலியா தமிழ் முரசு, அக்கினிக்குஞ்சு, கனடா பதிவுகள், தமிழ்நாடு திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் கொழும்பில் தினக்குரல் வார இதழிலும் நடேசனின் வலைப்பூவிலும் மறுபிரசுரமாகியிருக்கின்றன.