புத்தாண்டே நீ வாராய் 2016 - செ.பாஸ்கரன்

.

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இயற்கையின் நியதி
ஒரு ஆண்டு இன்றோடு
ஒழிந்து கொள்கிறது
நாட்காட்டியின்
இறுதித் தாளும் இன்றுடன்
கிளித்தாகி  விட்டது
காகிதத்தாள்களை
தாங்கி நின்ற
கடவுள் படங்களை
குப்பைக் கூடையில்
எறிந்துவிட மனமின்றி
முன்னைய  சாமிகளோடு
சாய்த்து வைக்கிறாள்  மனைவி
"சாமிப்பட கலண்டர்கள்  வாங்காதீங்க "
சிவனுக்கு  உபதேசம்  செய்த
முருகக் கடவுள் போல்
தெரிகிறாள் என்மகள்
அந்த வார்த்தைகள்
இன்று நறுக்கென்று  தெறிக்கிறது .
தமிழ் வருடங்கள்
வந்து வந்து போனாலும்
ஆங்கிலத்  தேதியோடும்
அட்டைப்பட சாமிகளோடும்தான்
நம் நாட்காட்டிகள்
நமக்கு நேரம் குறிக்கிறது

நகர்ந்து செல்லும் புத்தாண்டில்
நடந்தவற்றை
திரும்பிப் பார்க்கிறேன்
நண்பர்களும் உறவுகளும்
பிரிவும் துயரும்
நல்லவையும் கெட்டவையும்
முகநூலின் புதுப் புது
சொந்தங்களுமாய்
கடந்துவிட்ட ஒரு வாழ்க்கை
வயதிலும் ஒன்றைத் தட்டிச் செல்கிறது

வா புத்தாண்டே
கதிரவனின் கதிர் முகங்களொடு
எட்டுத்திசையும்
வெள்ளொளி பரப்பி
துயர் நீங்கும்  நல்ல செய்தியொடு
எழுந்து வா
நாடற்றலையும் ஏதிலி வாழ்வில்
தாயென  அணைக்கும்
பண்புகள் பெருகும்
நாளென நாளை
மலர்ந்திட வேண்டும்
பொன் ஒளி வீசி
கவலைகள்  போக்கும்
புலரும் பொழுதென
விடிந்திடல்  வேண்டும்
அகமும் முகமும்  மலர்ந்திட
நமக்கோர்
அழகிய புத்தாண்டாகிடல்  வேண்டும்
வருக புத்தாண்டே
எழிலும்  நலமும் இலங்கிட வருக .

சிறப்புடனே வந்திடுவாய் ! ( எம். ஜெயராமசர்மா .மெல்பேண் )

.

   புத்தாண்டே  நீவருக
      புதுச்சேதியுடன் வருக
      சொத்தாக நினைக்கின்றோம்
      சுமையகற்ற நீவருக
      மொத்தமுள்ள முடைநாற்றம்
      அத்தனையும் களைந்துவிட்டு
      சுத்தநிறை சுகமனைத்தும்
      சுமந்துவர வேண்டுகின்றோம் !

      எங்களது வாழ்வினிலே
     இடர்கள்வந்து மோதாமல்
      சங்கடங்கள் தீர்த்துவிட
      சந்தோஷத்துடன் வருக
      மங்களங்கள் கொண்டுவந்து
      மனமகிழச் செய்துவிட
      செங்கதிரேன் போலநீயும்
      சிறப்புடனே வந்திடுவாய் !

       ஏழையொடு பணக்காரர்
       இயைந்துமே இருப்பதற்கு
       வேளைவரும் எனவெண்ணி
        விடியலையே வேண்டுகிறோம்
        நாளைவரும் புத்தாண்டே
        நற்சேதியுடன் வந்து
        நல்லவொரு ஆண்டாக
        யாவர்க்கும்  அமைந்துவிடு !

        உலகமெல்லாம் நல்லாட்சி
        ஓங்கிவர வேண்டுகின்றோம்
        நிலவுலகில் சமதர்மம்
        நிலைத்துவிட நினைக்கின்றோம்
        விளைநிலங்கள்  வீணாகப்
        போவதையும் வெறுக்கின்றோம்
         நலமுடனே வளம்பெருக
         நல்லாண்டே வந்திடுவாய் !

        அரசியலார் மனட்சாட்சி
        அறிந்துணர வேண்டுகின்றோம்
        ஆதீனம் அத்தனையும்
        ஆண்டவனை நினைந்திடட்டும்
        நீதித்துறை அத்தனையும்
        நிமிர்ந்துநிற்க வேண்டிடுவோம்
        நிம்மதியைத் தருவதற்கு
        நீவருவாய் புத்தாண்டே !

        உளம்மகிழ வந்திடுவாய்
        உன்வரவு சிறந்திடட்டும்
        மனதிலுறை அத்தனையும்
        வண்ணமுறத் தந்துவிடு
        எண்னமெலாம் இனித்துவிட
        இனியமுகம் கொண்டுநீயும்
        எழிலுடனே வந்திடுவாய்
        எங்களக்கு புத்தாண்டாய் !

உலகச் செய்திகள்


டில்லியில் பாலியல் வன்செயல் 

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உலக அழகிப் பட்டம்..! 

ரஷ்யா வான்வழி தாக்குதல் :சிரியாவில் 200 பொதுமக்கள் பலி

டில்லியில் பாலியல் வன்செயல் 

21/12/2015 இந்தியத் தலைநகர் டில்லியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஓடும் பேருந்தில் ஐவர் கொண்ட குழு பெண் ஒருவரை  பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதில் ஒருவரின் விடுதலைக்கு எதிராக இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை நிராகரித்துவிட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் குற்றச்செயல் இடம் பெற்ற போது, அந்த நபருக்கு 17 வயது என்பதால், இந்திய சிறார் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக் காலம் முடிவடைந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக பெண்கள் அமைப்பு ஒன்று மேல்முறையீடு செய்தது.


இலங்கைச் செய்திகள்


நாடு திரும்பிய எனது மகனை  காணவில்லை : பரிதவிக்கும் தந்தை


















நாடு திரும்பிய எனது மகனை  காணவில்லை : பரிதவிக்கும் தந்தை

21/12/2015 கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று புத்தி சுவாதீனம் காரணமாக அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்ட தனது மகனைக் காணவில்லை என மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த தந்தையான சாமித்தம்பி நவரெட்ணம் கட்டுநாயக்க  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 கடந்த 12ஆம் திகதி தனது மகன் நவரெட்ணம் குணராஜா கட்டாரிலிருந்து அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்தார். அவருடன் வந்த நண்பரை விட்டுவிலகி வெளியில் சென்றுள்ளார்.
இதுதொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்து போது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் தனது மகன் விமான நிலையத்தை விட்டு வெளியேறியமை தொடர்பான சி.சி.டிவி. காட்சி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் இறுதியில்  கட்டாருக்கு  தொழிலுக்காக சென்ற என்னுடைய மகன் புத்தி சுவாதீனமாகியுள்ளதாகவும் அவர் நாட்டுப்கு திருப்பி  அனுப்பப்படவுள்ளதாகவும் அவருடைய நண்பர் மூலம் அறிந்தேன். அதன் பின்னர் கடந்த  வெள்ளிக்கிழமை மாலை எனக்கு அவர் தொலைபேசியில் அழைத்து என்னுடைய மகன் நாடு திரும்பியுள்ளதாக அறிவித்தார்.
நான் அன்றிரவு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கே விமான நிலையம் செல்ல முடிந்தது. அப்போது என்னுடைய மகன் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறி விட்டார் என மூலம் தெரிந்து கொண்டேன்.
அதன் பின்னர் விமான நிலையப் பொலிசார், அதிகாரிகளிடம் விசாரித்த போது எவ்வித பயனில்லாமல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன். 
பின்னர் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்தேன். இருந்த போதும் என்னுடைய மகன் இதுவரையில் கிடைக்கவில்லை. எனவே கொழும்பிலோ வேறு எங்காவது என்னுடைய மகனைக் கண்டால் எனக்கு என்னுடைய 0779424185 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ, பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
கூலித் தொழில் செய்யும் நான் என்னுடைய குடும்ப நிலைமை காரணமாகவே மகனை வெளிநாட்டுக்குத் தொழிலுக்காக அனுப்பினேன் என்று தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி



தமிழ் சினிமா


தங்கமகன் 




தனுஷிற்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்ற நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. தற்போது மீண்டும் இதே கூட்டணி இணைய ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது.
தனுஷ், எமி, சமந்தா, கே,எஸ்.ரவிக்குமார், ராதிகா, சதீஸ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைய வேல்ராஜ் இயக்கியுள்ளார்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே கணவன், மனைவியான தனுஷ்சமந்தாமற்றும் தனுஷின் அம்மாவான ராதிகா மிகவும் கஷ்டப்படுவது போல் காட்டப்படுகின்றது. அங்கிருந்து படம் ப்ளாஸ் பேக் செல்கிறது.
அன்பான குடும்பம் அழகான அப்பா, அம்மா, நல்ல நண்பர்கள் என தனுஷின் வாழ்க்கை சந்தோஷமாக செல்கின்றது. இவரின் வாழ்க்கையை மேலும் சந்தோஷப்படுத்த எமி ஜாக்ஸன் வருகிறார். தனுஷிற்கு பார்த்தவுடன் காதல்.
பின் என்ன வழக்கம் போல் எமி செல்லும் இடமெல்லாம் சென்று அவர் மனதில் எப்படியோ இடம்பிடிக்கிறார். எல்லா விஷயத்தையும் தன் அப்பா, நண்பர்களிடம் சொல்லும் தனுஷ் இதை மட்டும் மறைக்கின்றார். இவர்கள் காதலிப்பது சதீஸுக்கு மட்டும் தெரிய மற்றொரு நண்பருக்கு சொல்ல மறுக்கின்றார்.
இதனால் நண்பர்களுக்குள் சண்டை வந்து பிரிய, அதே நேரத்தில் எமி, நமக்கு திருமணமானால், தனியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அப்பா, அம்மாவை விட்டு உன்னுடன் தனியாக வர முடியாது என்று தனுஷ் சொல்ல வாக்குவாதம் பெரிதாகி இருவரும் பிரிய நேரிடுகிறது.
இதை தொடர்ந்து அனைத்தையும் மறந்து தனுஷ், சமந்தாவை திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கின்றார். இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அவருடைய உயர் அதிகாரி ரூ 5 கோடி கொடுத்து வைக்கின்றார்.
அவருக்கு மறதி அதிகம் என்பதால் பணத்தை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்துக்கொள்கிறார். இதன் பிறகு தனுஷ் பொறுப்புணர்ந்து அந்த பணம் எங்கு சென்றது, தன் அப்பா நல்லவர் அவர் அந்த பணத்தை திருடியிருக்க மாட்டார் என நிரூபிக்க போராடுவதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
தனுஷ் இனியும் தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒவ்வொரு அம்மாவும் இப்படி ஒரு பையன் வேண்டும் என்கின்ற அளவிற்கு திரையில் வாழ்கின்றார். அவர் சிரித்தால் ஆடியன்ஸ் அனைவரும் சிரிக்கிறார்கள், அழுதால் அனைவரும் அழுகிறார்கள் அந்த அளவிற்கு தன் திரை ஆளுமையை வளர்த்துள்ளார்.
எமி காதலியாக முதல் பகுதியில் வருகிறார். படத்தின் முதல் பாதி முழுவதும் 3 படத்தையே தூக்கி சாப்பிடும் ரொமான்ஸ் காட்சிகள், அதிலும் அவர் நிறத்திற்கு கூட ஒரு விளக்கம் கொடுத்து, ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்திருப்பது சூப்பர். இரண்டாம் பாதியில் கதையின் திருப்பத்திற்கு உதவுகிறார்.
சமந்தா, தனுஷின் மனைவியாக கதாபாத்திர பொருத்தம். தன் கணவரின் பெயர் கெடக்கூடாது என்பதற்காக அம்மா வீட்டில் இருந்து வெளியேறும் காட்சியில் இருந்து, தனுஷிற்கு முதல் காதலி இருப்பது தெரிந்தும் ஜாலியாக அரட்டை அடிப்பது என நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பிறகு ஒரு நல்ல கேரக்டர்.
கே.எஸ்.ரவிக்குமார் இத்தனை அப்பாவியாக அவர் நடித்த எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டோம். காமெடி, வில்லன் கலந்து தான் அவர் நடித்த ஒரு சில படங்களிலும் தான் பார்த்திருப்போம். இதில் செம்ம ஸ்கோர் செய்கிறார். ராதிகாவும் அப்பாவி அம்மாவாக தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.
சதீஸ் கவுண்டர் கொடுப்பதும், கலாய் வாங்குவதும் என லிட்டில் சந்தானமாக வளர்ந்து வருகிறார். இத்தனை சிறப்பு இருந்தும் படத்தின் மிகப்பெரிய மைனஸ் வில்லன் கதாபாத்திரம் தான்.
ஒரு படத்தில் ஹீரோ வெற்றி பெற்றால் அதை நாம் ரசித்து கைத்தட்ட வேண்டும், ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய போராட்டம் இருக்க வேண்டும். ஆனால், இதில் வில்லன் மிகவும் அமுல்பேபியாக இருப்பதால், தனுஷ் வெற்றிபெறும் போது ரசிகன் கூட கைத்தட்டவில்லை.
க்ளாப்ஸ்
தனுஷ்-எமி காதல் காட்சிகள், இன்றைய ட்ரண்ட் இளைஞர்களுக்கு செம்ம விருந்து. அதே போல் தனுஷ்-சமந்தா திருமண உறவுகள் நிஜ தம்பதியினர்களே அசந்து போகும் யதார்த்தம். குடும்ப உறவுகள் பற்றி பேசும் காட்சிகள்.
அனிருத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அதிலும் அறிமுக ஒளிப்பதிவாளர் குமரன் செம்ம கலர்புல்லாக காட்டியுள்ளார்.
படத்தின் முதல் பாதி. வில்லன் கதாபாத்திரம் டுவிஸ்ட் அவிழும் காட்சி.
பல்ப்ஸ்
வில்லன் கதாபாத்திரம் வலுவாக இல்லாமல் இரண்டாம் பாதி மிகவும் தடுமாறுகிறது.
தனுஷ் படத்திற்கு இசை என்றாலே அனிருத் புகுந்து விளையாடுவார், ஆனால், இதில் என்னவோ பின்னணி இசையில் சொதப்பியுள்ளார். அதற்காக வேலையில்லா பட்டதாரி இசையை அப்படியேவா போடுவது. சுவாரசியம் இல்லாமல், மெதுவாக நகரும் இரண்டாம் பாதி.
மொத்தத்தில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் இந்த தங்கமகன் மின்னுவான்.

ரேட்டிங்- 2.5/5    நன்றி cineulagam