இலங்கையில் ஆளும் வர்க்கத்தை
சேர்ந்தவர்களும், அதற்கு எதிரான எதிரணி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பணவசதி படைத்த
செல்வந்தர்கள்தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவர்களிடமிருக்கும் பணம்,
சொத்து, உடமைகள் குறித்து ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் வளமுடன் வாழ்பவர்கள்.
சிலர் அரசியலுக்கு வருமுன்னர்
வைத்திருந்த செல்வத்தை, அரசியலுக்கு வந்த பின்னர் பெருக்கியிருப்பார்கள். வேறும் சிலர்
அரசியலுக்கு வந்த பின்னரே பெரும் செல்வந்தர்களாகியிருப்பார்கள். இன்னும் சிலர் செல்வந்தர்களாவதற்கே
அரசியலுக்கு வருவார்கள். இவர்கள் தாம் தோற்றால், “ பணநாயகம் வென்றது “ என்பார்கள்.
வெற்றி பெற்றால், “ ஜனநாயகம் வென்றது “ என்பார்கள்
!
தேர்தல் காலங்களில் பெரும்பாலான
அரசியல்வாதிகள் பணத்தை வாரி இறைத்து செலவுசெய்வதன் நோக்கமே, ஆட்சிபீடமேறியவுடன், செலவழித்தவற்றை
வட்டியோடு மீளப்பெற்றுக்கொள்வதற்காகத்தான்.
ஆளும்வர்க்கத்துடன் இணைந்து
பதவி சுகம் பெற்றால், சாதாரண
மார்புவலி வந்தாலும் வெளிநாடு சென்று சிகிச்சை செய்வதற்கு
வசதி வாய்ப்புகள் கிடைக்கும். சமகால ஜனாதிபதி
கோத்தபாய ராஜபக்ஷவும் சிங்கப்பூருக்குச் சென்றுதான் தனக்கான இருதய சத்திர சிகிச்சை
செய்துகொண்டு வந்தவர்.
அதன்பின்னரும் விசேட கவனிப்பிற்காகவும்
மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் அங்கே அவ்வப்போது சென்று வருபவர். அவருடை பதவிக்காலத்தில்
மாற்றப்பட்ட முக்கியமான அமைச்சர்களில் சுகாதார
நலத்துறை அமைச்சர்களும் அடங்குவர்.
முன்னாள் சுகாதார அமைச்சர்
திருமதி பவித்ரா வன்னியாராய்ச்சியின் பதவி பறிக்கப்பட்டபோது, அவர் ஊடகவியலாளர்களுக்கு
சொன்ன கதையை ஏற்கனவே அவதானி இந்த பத்தியில் எழுதியிருக்கிறார்.
கோத்தா கோ கம போராட்டம்
தொடங்கி ஐம்பது நாட்கள் கடந்துவிட்டன. இக்காலப்பகுதியிலும்
அதற்கு முன்னர் கொவிட் பெருந்தொற்று காலப்பகுதியிலும் இந்த அரசு சில அமைச்சரவை மாற்றங்களை
கண்டுவிட்டது.
தற்பொழுது சுகாதார அமைச்சராகவிருக்கும்
கெகலிய ரம்புக்வெலவும் சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவிடத்தில்
தாம் தங்கியிருந்த உல்லாச விடுதியின் மேல் மாடியிலிருந்து தவறிவிழுந்து, இங்குள்ள மருத்துவமனையில்
பல நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்தான். அதன் பிறகும் விசேட மருத்துவ ஆலோசனைகளுக்காக
வந்து சென்றவர்தான்.
இவ்வாறு இலங்கை அரசின்
அதிபர், பிரதமர், உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான
அனைத்து வரப்பிரசாதங்களும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் கிடைக்கின்றன.