எனது
அப்பாவின் பூர்வீகம் பாளையங்கோட்டை. அவரது உறவினர்கள் அங்கும் திருநெல்வேலி,
மதுரை, சாத்தூர், தூத்துக்குடி, ஶ்ரீவைகுண்டம், சென்னை முதலான நகரங்களிலும் வசிக்கிறார்கள்.
இந்தத்
தகவல்களை எனது தாத்த முறையான எழுத்தாளர் – பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு. சி. ரகுநாதன்
சொன்னார். சென்னையிலிருந்து நான் திருநெல்வேலி சென்று அங்கிருந்து அவர் குறிப்பிட்ட
ஊர்களிலிருக்கும் உறவினர்களையும் பார்த்துவிட்டு,
இறுதியாக மதுரை வந்து அங்கிருந்து இராமேஸ்வரம் சென்று ராமானுஜம் கப்பல் ஏறி, தாயகம் திரும்புவதுதான் எனது பயண ஒழுங்கு.
ரகுநாதன்
அதற்கேற்றவாறு நான் செல்லவிருக்கும் ஊர்களின் தொலைவு பற்றியும் பயண ஒழுங்கை எவ்வாறு
மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆலோசனை சொன்னார்.
அண்ணா
நகரிலிருந்து சாத்தூரில் வதியும் எனது மைத்துனர் முறையான ஆண்டபெருமாள் அவர்களுக்கு
கடிதம் எழுதியிருந்தேன். அவரும் தாமதிக்காமல்,
தான் வந்து அழைத்துச்செல்வதாக பதில் எழுதியிருந்தார்.
இன்றுபோல்
அப்போது கைத்தொலைபேசி – மின்னஞ்சல் வசதிகள் இல்லை. நண்பர்கள் காவலூர் ஜெகநாதன், மு. கனகராசன் மற்றும்
பச்சையப்பன் கல்லூரி மாணவ நண்பர்களுக்கும் பயணம் சொல்லிவிட்டு மைத்துனருடன் புறப்பட்டேன்.
அவர்
இரண்டு தடவைகள் இலங்கை வந்திருப்பவர். இறுதியாக
அவர் வந்தபோது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும். மேல் வகுப்புக்கு வந்த பின்னர் நானும்
அக்காவும் அவருக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுவோம். அவர் சாத்தூரில் ஒரு பாடசாலையின்
தலைமை ஆசிரியர். அவர் கத்தோலிக்க மதத்தைச்சேர்ந்த ராஜாமணி என்பவரை காதலித்து மணம் முடித்து
அந்த மதத்திலும் சேர்ந்துவிட்டிருந்தார்.