மரண அறிவித்தல்

 



          திருமதி மகாதேவி  ஜெயமணி முருகையா

தோற்றம்                                                                 மறைவு

20- 12- 1939                                                                20-04-2022

அமரர்கள் சோமசுந்தரம் -  நவமணி தம்பதியரின் அன்பு மகளும், அமரர்கள் வைரமுத்து – வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அருமை மருமகளும் மெல்பன் ஆறுமுகம் முருகையா ( பதிவுபெற்ற கணக்காளர் )  அவர்களின் அன்பு மனைவியும், துளசி கிருஷ்ணகுமார்  , ரொகான் முருகையா ஆகியோரின் அருமைத் தாயாரும், கிருஷ்ணகுமார் – ட்ரம்மான் ஆகியோரின் அருமை மாமியாரும், செல்வி சூரியா, செல்வன் கேசவன் ஆகியோரின் அன்பு பேத்தியாருமான

 திருமதி  மகாதேவி ஜெயமணி முருகையா அவர்கள் 

      இம்மாதம் 20 ஆம் திகதி இறைபதம் எய்தினார்

                 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 

இம்மாதம் 24 ஆம் திகதி ( 24-04-2022 ) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10-00 மணிக்கு பின்வரும் முகவரியில் நடைபெறும்:

                   STRATUS CHAPEL, BUNURONG MEMORIAL PARK

790 Frankston - Dandenong Rd, Dandenong South, Vic – 3175

இவ்வறிவித்தலை  உறவினர்களுக்கும்  நண்பர்களுக்கும்

                                      அறியத்தருகின்றோம்  

தகவல்:        துளசி கிருஷ்ணகுமார் :     0425 826 643

                  ரொகான் முருகையா 0459 895 862 – 0411 823 256

தேவகி கருணாகரனின் ’அவள் ஒரு பூங்கொத்து’ சிறுகதைகள் பற்றி - புதுவை ரா. ரஜனி

 .

எதிர்வரும் 30ம் திகதி சிட்னியில் வெளியிட இருக்கும் எழுத்தாளர் தேவகி கருணாகரனின் அவள் ஒரு பூங்கொத்து சிறுகதைகள் பற்றி விடியல் சஞ்சிகையில் வெளிவந்த சிறு பதிவு.



’அவள் ஒரு பூங்கொத்து’ (சிறுகதைகள்)

தேவகி கருணாகரன்

வெளியீடு: சிந்தன் புக்ஸ், திவான் சாகிப் தோட்டம்

டி.டி.கெ சாலை, இராயபேட்டை, சென்னை 600 014

தொடர்புக்கு 91 9445123104

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த தேவகி கருணாகரன் எழுதிய சிறுகதை என்ற வடிவத்தை தன் படைப்புகளால் வெளிபடுத்தியுள்ளார் எனபதற்கு இந்தச் சிறுகதைத் தொகுப்பு சாட்சி.

குடும்ப பிரச்சனைகளை. மிக நுட்பமாகத் தன் மொழிநடையில் மிகவும் இயல்பாக மிக நுற்பமாக தன் மொழிநடையில் மிகவும் இயல்பாக எழுதியுள்ளார். இவை அணைத்தும் கணையாழி, கலைமகள், கல்கி, ஞானம், காற்றுவெளி, ஜீவநதி, வீரகேசரி, தினக்குரல் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமானவை என்பதால், அதன் தரத்திற்கு உத்திரவாதம் கிடைக்கின்றது.

முத்தாய்ப்பாக பெரும்பாலான படைப்புகள் போட்டிகளில் பரிசு பெற்றவை. இத்தொகுப்பில், அவள் ஒரு பூங்கொத்து, காலத்தால் கரையாத நினைவுகள், நாடோடிகள் மிகச் சிறப்பான கதைகள். புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள் இந்தக் கதைகளைப் படித்து இப்படித்தான் ஒரு சிறுகதை வெளிப்பட வேண்டும் என்று கற்றுக் கொள்ள ஏராளமான செய்திகள் தொகுப்பில் உள்ளன.

சிறந்த சிறுகதைத தொகுப்புக்கான பல விருதுகளை தேவகி கருணாகரன் இந்த வருடத்தில் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இப்படைப்புகளில் வெளிப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

விடியல் சஞ்சிகை, புதுவை ரா. ரஜனி

நூல் ஆசிரியர், தேவகி கருணாகரன்

thevakiek@hotmail.com


ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 


 

   ……………‘சிவஞானச் சுடர்பல்வைத்திய கலாநிதி

                             பாரதி இளமுருகனார்




பச்சைத்தாள் தாளாகப் பணங்கறக்க எத்தனையோ

பரிகாரப் பரிந்துரைகள்! சிறுதெய்வப் பெருவேள்வி! அச்சமூட்ட ஆள்களுண்டு! ஆட்டிப்படைப் போருமுண்டு! அத்தனையம் செய்திழைத்து ஏமாந்தோர் கணக்கில்லை!

 

விதம்விதமாய்த் துன்பங்கள் உபாதைதரும் வேளைகளில்

வேண்டாத  பரிகாரம் செயவைப்போர் பலருண்டு! மதமென்ற  பெயர்கொண்டு மனதிற்பயம் வரவைத்து

வகைவகையாய் வழிசொல்லி வலைவிரிப்வோர் மலிந்திட்டார்!

 

மிச்சமீதப் பழவினையைப் பரிகாரம்  விலக்கிடுமோ?

மிகுத்துவரும் வினைகளையும் அனுபவித்தே தீர்க்கணுமே!  

இச்சையுடன் கோள்களையே  இயக்குஞ்சிவன் அருளிருக்க

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

போலிச்சா மியாய்வளர்ந்து புடமிட்ட கடவுள்எனப்

பொய்ப்பித்த லாட்டஞ்செயும் போலிகளுக் கோர்கூட்டம்!

சூலினின்று பிறந்தவர்கள் தூயகட வுளாகாரே!

சுத்தமூட நம்பிக்கை? துளிகூட மாறாதோ?

இதமாகப் பரிகாரம் பலசெய்து தோற்றவர்காள்!.

இன்றுநன்றாய் அ றிந்திடுவீர்! இறைவனைமெய்த் தியானத்தால்

இதயத்தில் உணர்ந்திட்டால் இருமைக்கும் வழிபிறக்கும்  ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

 


 

 


 

 

 


எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -09 மெல்பனுக்கு வருகைதந்த பழ. நெடுமாறன்: கேள்வியும் பதிலும் ! அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு !! முருகபூபதி


பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த மெய்யியல் அறிஞர் வோல்டேயர் (1694 – 1778 )  பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் சொன்ன பின்வரும் கூற்று உலகப்பிரசித்தம்.

  I disapprove of what you say, but will defend to the death your right to say it. “

ஒருவருடைய  கருத்துக்கு மாற்றாக கருத்துச் சொல்லும் உரிமை எமக்கு இருக்கும் அதே சமயத்தில், மாற்றுக் கருத்துச் சொல்பவரின் உரிமைக்காகவும் நாம் குரல் கொடுக்கவேண்டும்.

ஊடகத்துறையில் பணியாற்றியமையால், கருத்து முரண்பாடுகள்


ஒருவரின் மேன்மையை இனம்காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது என்ற மனப்பான்மையையும் வளர்த்துக்கொண்டேன்.

அதனால், கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் பல்வேறு கருத்தோட்டம் மிக்கவர்களுடனும் ஊடாட முடிகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களினால் விக்ரோரியாவில்  1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது  இலங்கைத் தமிழ்ச்சங்கம்.

இச்சங்கத்தில் அங்கத்தவராக இருப்பதாயின் என்னைப்போன்று அகதிகளாக இலங்கையிலிருந்து வந்தவர்கள், இந்நாட்டில் நிரந்தர வதிவிடவுரிமை பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு எழுதாத விதி அப்போதிருந்தது.

அதனால்,  நண்பர்  “சுந்தர்  “ சுந்தரமூர்த்தி அக்காலப்பகுதியில்  தங்கள்  சங்கத்தின் செய்தி ஏட்டினை  தொகுப்பதற்கு  என்னை அழைத்தபோது  அதற்கான அருகதை எனக்கில்லை என்பதும்  எனக்கு அப்போது  புரிந்தது.

எனக்கும் சுந்தரமூர்த்திக்கும் இடையிலான நட்புறவு இற்றைவரையில் எந்த விக்கினமும் இல்லாமல்  தொடருகிறது.

1988 இல் நான் இங்கு வதியும் சில அன்பர்களுடன் தொடக்கிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு  சுந்தர் தனது தார்மீக ஆதரவை வழங்கினார்.

காலிமுகம் - நனவிடை தோய்தற் குறிப்புகள் முருகபூபதி

சமகாலத்தில் இலங்கைத்  தலைநகரத்தின் கேந்திரமாக கருதப்படும்


காலிமுகம் ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

இன்று நேற்றல்ல,  இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திற்கு பல கோடி வருடங்களுக்கு  முன்பிருந்தே  காலிமுகத்தை  இந்து சமுத்திரத்தாய் தனது அலைக் கரங்களினால் தொட்டு தழுவிச்சென்றுகொண்டேயிருக்கிறாள்.

அவளுக்கு பேசும் சக்தி இருக்குமானால்,  அங்கே  அவள் நீண்ட நெடுங்காலமாக பார்த்து வரும் காட்சிகளை சொல்லியிருப்பாள்.

இலங்கை சுதந்திரம்பெற்று 72 ஆண்டுகள் நிறைவெய்திவிட்டது.  எனக்கும் 70 ஆண்டுகள் நிறைவெய்திவிட்டது.

நான் குழந்தைப் பருவத்திலிருக்கும்போது, வயிற்றில் புழுக்கள்


உருவாகிவிடலாகாது என்பதனால்  எனது அம்மாவும், பாட்டியும் ( அம்மாவின் அம்மா ) வல்லாரைச்சாறு பருகக்கொடுத்திருக்கிறார்கள். இதனை அக்காலத்தில் எமது சமூகத்தில்  “ பூச்சிக்கு மருந்து கொடுத்தல்    என்பார்கள்.

அதனால், வயிற்றிலிருந்த புழுக்கள் குறைந்ததோ இல்லையோ, வேறு ஒரு நல்ல பலன் கிடைத்துவிட்டது. அதுதான் நினைவாற்றல்.  வல்லாரைக்கு நினைவாற்றலைத்தரக்கூடிய மருத்துவ குணமும் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஆர்த்ரைட்டீஸ் நோயாளருக்கும் வல்லாரை சிறந்த நிவாரணி. கொழும்பு இரத்மலானையில் அமைந்துள்ள சித்தாலேப்ப  ஆயுர்வேத மருத்துவ நிலையம் பிரசித்தமானது. வெளிநாடுகளிலிருந்தும்  அங்கு சென்று சிகிச்சை பெற்று குணமாகி வந்தவர்கள் பற்றியும் அறிந்துள்ளேன்.

அங்கே தினமும் நோயாளர்களுக்கு மதிய உணவு வழங்கும்போது,  வல்லாரைச்சம்பல், வல்லாரைச்சுண்டல், வல்லாரை துவையல்… இவற்றில் ஏதோ ஒன்றையும் உணவுடன் சேர்த்து  தருகிறார்கள்.

அண்மைக்காலமாக  அச்சில் வெளியாகும் பத்திரிகை ஊடகங்களிலும் எண்ணிம ஊடகங்களிலும் ( Digital Media ) காண்பிக்கப்பட்டுவரும் காலிமுகம் பற்றிய எனது இந்த நனவிடை தோய்தற் குறிப்புகளை எழுதத் தொடங்கியபோது அன்று எனது குழந்தைப் பருவத்தில் வீட்டில் பருகத்தந்த வல்லாரைச்சாற்றின் மகத்துவம்தான் நினைவுக்கு வந்தது.

அந்த காலிமுகத்திற்கும் எனக்கும் உணர்வுபூர்வமான உறவு நீடித்திருக்கிறது.

முன்பு சிறிதுகாலம் எனக்கு தொழில் வாய்ப்பைத் தந்து சோறுபோட்டது அந்த காலிமுகம்.  அந்த வீதியை 1970 இல் பதவிக்கு வந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா, என். எம். பெரேரா, பீட்டர் கெனமன் கட்சிகளின் ( ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – லங்கா சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி ) கூட்டரசாங்கத்தில் நீர்ப்பாசன , நெடுஞ்சாலைகள் அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்கா காலிமுக வீதியை மேலும் அகலமாக்குவதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையில் பெற்றிருந்தார்.

ஸ்வீட் சிக்ஸ்டி 10 - சாரதா- - - ச சுந்தரதாஸ்

 .

கணவன்,மனைவி இடையிலான தாம்பத்திய உறவை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ஒரு சில படங்களே வந்துள்ளன.அப்படி வந்த படங்களுக்கு முன்னோடியாக அமைத்த படம் என்று சாரதா படத்தை சொல்லலாம்.1962ல் வெளிவந்த இந்த படம் வழமையான தமிழ் படங்களில் இருந்து வேறுபட்டு சர்ச்சைக்குரிய கதையுடன்,ரசிகர்களின் ரசனையை எடை போடும் விதத்தில் அமைந்திருந்தது.


பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி தனக்கு கல்வி கற்பிக்கும் பேராசிரியர் திருஞானசம்பந்தத்தை திருமணம் செய்து கொள்கிறாள் பணக்கார பெண்ணான சாரதா.சுமுகமாக போகும் இல்வாழ்வில் எதிர்பாராத இடர் ஏற்படுகிறது.விபத்து ஒன்றில் சிக்கிக் கொள்ளும் சம்பந்தம் அதிலிருந்து உயிர் பிழைக்கிறான்.ஆனால் இனி மேல் தாம்பத்திய உறவில் அவன் ஈடுபடுவது அவனின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.இதனை உணர்ந்து தன் ஆசைகளை அடக்கிக் கொண்டு அவனிடம் இருந்து விலகி நிற்கிறாள் சாரதா.ஆனால் உண்மை அறியாமல் சம்பந்தம் அவளுடன் உறவு கொள்ள துடிக்கிறான்.பின்னர் உண்மை தெரிந்வுடன் சாரதாவுக்காக துடிக்கிறான்.துணிந்து ஓர் முடிவும் எடுக்கிறான்.

இப்படி அமைந்த கதையை எழுதிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் அதனை படத் தயாரிப்பாளரான ஏ எல் சீனிவாசனிடம் கூறினார்.அவருக்கு கதை பிடித்து விட்டது.ஆனால் அவரின் நண்பர்கள் சிலர் இந்த கதையை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள்,இது விஷப் பரீட்சை என்று கூறி தடுத்தார்கள்.எம் ஜீ ஆரின் திருடாதே படத்தைத் தயாரித்து வெற்றி கண்டிருந்த ஏ எல் எஸ் அசரவில்லை.கே எஸ் ஜி சொன்ன கதையையே படமாக்கத் துணிதார். அதுமட்டுமன்றி கதையையும் வசனங்களையும் எழுதிய கே எஸ் ஜியையே படத்தின் இயக்குனராகவும் முதல்தடவையாக துணிந்து அறிமுகம் செய்தார்.

கவிஞர் கண்ணதாசனின் அண்ணனான ஏ எல் சீனிவாசன் கொடுத்த வாய்ப்பு கே எஸ் கோபாலக்கிருஷ்ணனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.அதன் பின் பல ஆண்டுகளாக அவர் பிரபல இயக்குநராகத் திகழ்ந்தார்.இயக்குனர் திலகம் என்ற பட்டமுமும் அவரை வந்தடைந்தது.

வரலாற்றில் அழியாத சில நாட்கள் ( கன்பரா யோகன்)

 எருசலேம் நகருக்கு செல்லும் அந்த மண் பாதையெங்கும் துணிகள்


விரிக்கப்பட்டிருந்தன. மரக்கிளைகளையும், இலைளையும், பேரீச்ச மரத்தின்  ஓலைகளையும்  வழியெங்கும் வெட்டிப்  பரப்பி  தெருவின் இரு கரையிலும் சனக்கூட்டம் உற்சாகமாக ஒருவரை வரவேற்க காத்திருக்கிறது.

அந்த உருவம், நாற்பது நாட்களாக வனாந்தரத்தில் பசியுடன் மெலிந்து நலிந்த உடலுடன் ஒரு கழுதையின் மேலேறி வருகிறது.  

‘கழுதையில் பவனி வருகிறார் இராசா’ என்ற பாடலும், கூச்சல்களும் சூழ மக்கள் வரவேற்புடன் கழுதை மெல்ல நடக்கிறது.  

எருசலேமில் தனது சிலுவை மரணத்தை நோக்கிய பயணம்தான்  அது என்று கழுதை மேலிருந்த இயேசு அறிந்திருந்தார்.

உண்மையில் இராசா என்ற சொல்லே பிறகு இயேசுவின் உயிருக்கு உலை வைத்தது.

கழுதையில் பவனி வந்தபோது இந்தளவுக்கு வரவேற்பைபெற்ற ஒருவர் ஒரு  வாரத்துக்குளாகவே விசாரணைகள் நடந்த போது மக்களால் நிராகரிக்கப்பட்டு  தண்டனைக்குட்பட்டது ஒரு முரண்பாடாக தெரிவதுண்டு. ஆனால் இதன் உண்மை என்னவென்றால் யூதர்களில் பலவேறு கருத்துக் கொண்டோர் மத்தியில் அவர் வெவ்வேறு விதமாகப் பார்க்கபட்டதே.     

வாசிப்பு அனுபவம் பெண் ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பேசும் முருகபூபதியின் “ யாதுமாகி “ விஜி இராமச்சந்திரன் – மெல்பன்

 பெண் எப்போதும் ஆணை சார்ந்து வாழ்பவளாகவே இருந்திருக்கிறாள். கடந்த இருபது வருடங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றாலும்,   எழுத்தாளர்  முருகபூபதி 


எழுதியிருக்கும்  யாதுமாகி நூலில்  குறிப்பிடப்பட்டுள்ள சாதனைப் பெண்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னர்  பிறந்தவர்கள். எனவே அந்த காலகட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை என்றே பார்க்கப்படவேண்டும்.

இந்த புத்தகம் ஒரு ஆண் எழுதியது என்பது மிகப் பெரும் சிறப்பு. இந்த புத்தகத்திற்கு "யாதுமாகி" என்று மிகப் பொருத்தமான ஒரு பெயரை தெரிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. மிகவும் பொருத்தமான முகப்பு ஓவியம் வரைந்த திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களையும் இங்கே பாராட்டவேண்டும். .

நூலாசிரியரின் பாட்டி திருமதி தையலம்மா கார்த்திகேசு, மனைவி மாலதி இருவரும் இவர் எழுத்துலகில் தொடர்ந்து பணியாற்ற முக்கிய காரண கர்த்தாக்கள் என்பதை முருகபூபதி நன்றியோடு முன்னுரையில் நினைவு கூறுகிறார்.

இந்நூலில் இடம்பெறும் முதல் பெண்மணி எழுத்தாளர் ராஜம்


கிருஷ்ணன், ஆறு  தசாப்த காலம் தமிழ் எழுத்துலகில் சில முக்கியமான படைப்புக்களை தந்தவர்.  அவர்  களப்பணி ஆற்றி எழுதிய  நாவல்கள் பற்றியும், அவரது துயரமான இறுதி நாட்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

அடுத்த ஆளுமை அருண். விஜயராணி. 1970  களில் இலங்கை வானொலியில் யாழ்ப்பாண மண்ணின் மொழி வாசனையோடு விசாலாட்சி பாட்டி என்ற தொடரை  எழுதி புகழ்பெற்றவர்.  அங்கதம் தோய்ந்த நடையில் சமூக சீர்திருத்த சிறுகதைகள், நாடகங்கள் எழுதியவர். மத்திய கிழக்கு, லண்டன் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர்.

அடுத்த ஆளுமை கமலினி செல்வராசன்.  இயல்பிலேயே கலை இலக்கிய நடன இசை ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தவர். இலங்கை வானொலியில் கணவர் சில்லையூர் எழுதி இயக்கிய நாடகங்கள் பலவற்றில் நடித்தவர். ஆதர கதாவ, கோமாளிகள் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கலை இலக்கிய  மேடைகளிலும் தோன்றியவர்.

கணவர் இறந்த பின்னரும் நெற்றித் திலகத்துடன் வலம் வந்த புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார். கணவரின் மறைவுக்குப் பின் அவரது கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். பலதுறைகளில் மங்காப்புகழுடன் வாழ்ந்த கமலினி 61வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தியையும் இந்த நூலின் வாயிலாக அறிகின்றோம்.

அடுத்த ஆளுமை ஆச்சி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட, கோபிசாந்தா என்ற இயற் பெயர் கொண்ட, கலைமாமணி, பத்மஸ்ரீ விருது பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் சுமார் ஐந்தாயிரம்   நாடக மேடைகளும் கண்ட சாதனைப் பெண் நடிகை மனோரமா. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களே உடன் நடிக்க பயந்த திறம்வாய்ந்த ஆளுமை. கணீர் குரலில் சிறந்த உச்சரிப்புடன் பேசியும், பாடியும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்கள் ஏற்று தமிழ் சினிமாவில் தனக்கான முத்திரை பதித்தவர். மனோரமா தமிழ்த் திரையின் ஒரு சகாப்தம். இவர் பற்றிய பல செய்திகளை முருகபூபதி பதிவுசெய்துள்ளார்.

இலங்கைச் செய்திகள்

 தமிழர்கள் பேரம் பேச வேண்டிய தருணம் இதுவே

பசில் ராஜபக்ஷ கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

ஒற்றுமை, புரிந்துணர்வுடன் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும்

நெருக்கடி சூழல் கடந்து செல்ல ஒன்றிணைவோம்

வளமான எதிர்காலத்துக்கு புது வருடம் வழி வகுக்கட்டும்

 நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்



தமிழர்கள் பேரம் பேச வேண்டிய தருணம் இதுவே

- காணாமல் போனவர்களின் உறவுகள்

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தமிழ்புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் அவர்களால் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

Missing Persons-Vavuniya-Sri Lanka

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்கள், சிங்கள இளைஞர்களின் புரட்சியின் மீது கொண்ட காதல், தமிழர்களுக்கு எந்த விடிவையும் கொண்டு வராது. அது தமிழர்களின் துன்பங்களை ஒழிக்காது, ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்.

உலகச் செய்திகள்

 பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் உக்ரைனுக்கு திடீர் பயணம்

இந்திய ரெயில்வேக்கு ஊக்கம் அளித்திருக்கும் 'வந்தே பாரத்'

இம்ரான் கானின் இடத்திற்கு பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்

ஒஸ்காரில் ஸ்மித்துக்கு பத்து ஆண்டுகள் தடை



பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் உக்ரைனுக்கு திடீர் பயணம்

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியை சந்தித்துள்ளார். உக்ரைன் போர் ஆரம்பித்த பின்னர் ஜி7 நாடுகளைச் சேர்ந்த தலைவர் ஒருவர் உக்ரைன் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை.

பேர்த் பாலமுருகன் கோவில் வருடாந்த திருவிழா 14/04/2022 - 26/04/2022

 


ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை, சிட்னியில் சித்திரைத் திருவிழா

 


தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022


பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்  19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட  தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 34வதுஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குடும்பவாழ்வியலில் ஈடுபட்டிரு
ந்தபோதும்
 இடர்மிகுந்த நெடிய மிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.