இறைவனின் படைப்பு -
சங்கார ஒடுக்கத்தைத் தொடர்ந்துயிர்கள் ஈடேற
சங்கார காரகனாம்;; சிவபெருமான் நித்தியமாம்
சங்கைமிகு சத்திவழி மாயைகொண் டரியபல
சடப்பொருளும் பல்கோடி உயிர்களையும் படைத்தனனே!
வினைப்பயனை அனுபவித்து வீடுபெற்று இன்பமுற
விதம்விதமாயப் பலபொருள்கள் வேண்டுமட்டும்; படைத்தளித்தான்
அனைத்துயிரை வருத்தாது அறங்காக்கும் இல்லறத்தால்
அன்புடனே வாழ்ந்துய்ய மன்பதையைத் தோற்றுவித்தான்
“ஒன்றாயும் வேறாயும் உடனுமிருந் தருள்வதொடு
உறுதுணையாய் ஐம்புலன்கள் உதவிநிற்க வாழ்வளிப்பேன்!
என்றென்றும் இயற்கையொடு நன்றாக இயைந்திடுவீர்!
எதுவரினும் அழித்திடாதீர்” என்றவனும் உணரவைத்தான்;!
இறைவன் இயற்கை அன்னைக்கு எச்சரித்தமை!
“அண்டமதில் அமீபாமுதல் ஆறறிவு மாந்தர்வரை
ஆற்றுகின்ற செய்கையெலாம் இயற்கைதன்னை அழிப்;பனவா?
கொண்டநல்ல கொள்கைவிட்டுக் கொடுமைகளை ஆற்றிடுமா?
கூர்மையாய்க்; கவனிப்பாய்” என்றியற்கைக் கறிவித்தான்.
இயற்கை அன்னையின் கணிப்பு
உலகைப் படைத்திட்ட காலம்முதல் அதில்வாழும்
உயிரினங்கள் செயற்பாட்டை உன்னிப்பாய் இயற்கையன்னை
பலவகையில் அனுதினமும் ஆய்ந்தாய்ந்தே அவ்வுயிர்கள்
பாரதிலே வாழ்ந்துவரும் அவசியத்தைச்; கணித்திட்டாள்
முழுமையான பலன்தருமா என்றவளும் நீதியொடு
முறையாகத் தேர்வதனைப் பலகாலம் நடத்திவந்து
களையெடுக்குங் காலமந்தோ வந்ததெனச் சிலவினத்தைக்
காத்திடாது அழித்;தொழித்து வந்ததெலாம் சரித்திரமே!
இயற்கையன்னையின் ‘களையெடுப்பு’
பெருமளவில் வாழ்ந்துவந்த ‘றைனோசர்ஸ்’ இனம்போலப்
பெய்வளையாள் தோற்றுவித்த பலநூறு இனங்களையும்
இருந்தென்ன பலனென்று உருத்தெரியா தொழித்தாளே இயற்கையன்னை செயற்பாடு எல்லாமே நியாயந்தான்!
பலநூறு ஆண்டுமுதல் பாரினிலே சிலவினங்கள்
பலனெதையும் இயற்கைக்குப் பயந்திடாது பெருகியவை
விலைபோகாப் பாரமென விளைந்ததனால் அவ்வினங்கள்
வேரோடு அழிந்தொழிந்த கதைசொன்னால் விடிந்துவிடும்.
இயற்கை மனித இனத்தையும் அழித்திடுமோ?
இதுவெமக்கு இயற்கையன்னை இதமாக உணர்த்தியதே!
எதுவிதற்கு எனக்கேட்டால் என்னவென்று நானுரைப்பேன்?
பொதுவாக மனிதவினம் இயற்கைக்குப் புரிந்துவரும்
போக்கற்ற தீச்செயலாற் பேரழிவும் தொடர்ந்திடுமோ?
மனித இனத்;தால் ஏற்பட்ட கெடுதல்கள் -
விளைநிலத்தை அழித்துமாடி வீடுவீடாய்க் கட்டிவந்தோம்!
விண்ணளாவி நின்றமரச் சோலைகளை அழித்திட்டோம்
மழைபொழியா நிலைகொணர்ந்து வரட்சியெங்கும் வரச்செய்தோம்1
மதவெறியால் இனவெறியால் மக்களுயிர் குடித்திட்டோம்;!
கழிவுநீரைக் குளத்துநீரிற் கலக்கவிட்டுக் குடிநீரைக்
காவிவர ஏழைகளைக் காததூரம் நடக்கவைத்தோம்!
பழிபாவம் கருதிடாது பாவையரை உருக்குலைத்;தோம்;!
பரிசுத்த மானகாற்றை மாசடையச் செய்திட்;டோம்!;
சிற்றின்ப மேபிறவிப் பேறென்று உளமகிழ்ந்து
தேவையற்ற காமவிச்சை தினம்வளர்க்கும் பேய்களுமாய்க்
கற்றநெறி கைவிட்டுக் கயவர்களாய்க் கொலைகுற்றம்
கைக்குவந்த கலையாக்கி வினைமூட்டை துக்கிநின்றோம்;!
இயற்கைதந்த விலங்குகளை இரக்கமின்றிக் கொன்றிட்டோம்!
ஏற்றசைவ உணவிருக்க உயிர்பறித்துப் ‘பிணம்’தின்றோம்!
செயற்கையணுக் குண்டுபோட்டுப்; பேரழிவு செய்திட்டோம்;!
தீவிரவா தியாகிப்பல உயிர்களையும் பலியெடுத்தோம்!
மெலிந்துநாளும் பாலிலாது துடித்துமாளும் குழந்தைகளை
நலிந்தெலும்பும் தோலுமாகித் தினமிறக்கும் பிள்ளைகளைப்
பலிகொடுக்கப் பார்த்தபாவம் பாரிலேதி ரண்டுவந்து
வலிமைமிக்க வைறஸான கொறோனோவாகிக் கொன்றதோ?
வல்லரசு நாடுகளின் படைப்பலமும் போட்டியிட
வரலாறு காணாத பெரும்போரும் வெடித்திடுமோ?
எல்லைகளைக் காப்பதற்கு எத்தனையோ படையடுக்கு!
என்றுமிலாப் பதட்டநிலை இயற்கையின் பேரழிவிற்கோ?
மனிதகுலம் அழிவிலாது வாழ்வதற்(கு) உறுதியேது?
வளம்பெருக்க வாழ்வளித்த இயற்கையன்னை எழிலெல்லாம்
புனிதமாக அன்றுபோல எங்குமின்று இல்லையே!
பொறுமைவிட்டு இயற்கையன்னை பொங்கிவிட்டால் அழிவன்;றோ?
இயற்;கையின் சீற்றம் -
இயற்கைவள அழிவுநிலை இப்படியே தொடர்ந்ததனால்;
இனமழிப்பை இயற்கைசெயும் காலமினி வந்திடுமோ?
வியப்புமேது? பொறுமைக்கோர் எல்லையுண்டு தெரிவீரே!
வீறுகொண்டால் இயற்கையன்னை வெற்றிகொள்ளும் புரிவீரே!
கலங்கியதும் கதறியதும்; காட்டுத்தீ பரவியதால்
கருகியுயிர் நீத்திட்ட உயிரினங்கள் நிலைகண்டு
குலுங்கிப்பல நாளெல்லாம் குமுறியதும் இயற்கையன்றோ?
‘கொறோனாதரும் அழிவுமனித குலத்திற்கோர் படிப்பனையே!
காடுகளை விளையாட்டாய்க் கனல்மூட்டி எரித்துவந்தீர்!
கடல்நீரை மாசாக்கிக் கடலினங்கள் அழித்திட்டீர்!
சுடுகாடாய் மாற்றிவிட்ட நகரங்கள் சொலப்போமோ?
தொடர்ந்திட்ட போர்களினால் துடித்திறந்தோர் தொகையேதோ?
இயற்கையதன் சீற்றத்தைத் தணிப்பவரும் எவருண்டோ?
எரிமலைகள் வெடித்திடுமோ? துருவங்கள் உருகிடுமோ?
பயப்படுத்தும்; சுனாமிவந்து பலியெடுத்து அழித்திடுமோ?
;பாரிற்பல கண்டங்கள் கடற்கோளால் மூழ்கிடுமோ?
இறைவனே தஞ்சம் -
மெய்யாக அழிவுவந்தால்; தடுத்திடநாம் என்செய்வோம்?
மேதினியில் இயற்கைதந்த காலக்கெடு முடிந்ததுவோ?
செய்வதற்கு எதுவுளதோ? செய்தாலும் பயன்தருமோ?
சிவனவனின் திருத்தாளே எஞ்சியுள்ள தஞ்சமாமோ?
எமது கடன் -
மனிதர்களை மனிதன்கொலும் மிருகச்செயல் தவிர்த்திடுவோம்!
மகாசக்தி கொண்டவணு வாயுதப்போர் நிறுத்திடுவோம்
புனிதமான அன்புநெறி பூதலத்தில் வளர்த்திடுவோம்!
போற்றிநின்று இயற்கையெமை வாழவைக்க வேண்டிடுவோம்!.
பரம்பொருளை நினைந்துருகிச் சிந்தையிலே மலரவைப்போம்
பண்சுமந்த திருமுறையைப் பாடித்தினம் பராவிடுவோம்
வரமெனவே இறைதந்த இயற்கைதனை வாழவைத்து
வளம்பெருக்கி இனம்வாழ வழிவகுத்து உயிர்வாழ்வோம்!.
No comments:
Post a Comment