உடல் நலம் குன்றியிருந்தமையால்,
இந்த முதல் சந்திப்பு தொடர், கடந்த சில மாதங்களாக வெளிவரவில்லை. எனினும் மீண்டும் எழுதப்படுவதால் உடல் நலம் சீராகிவிட்டது
என்பது அர்த்தமும் அல்ல.
ஏதோ, மீண்டும் எழுத முயற்சிக்கின்றேன்.
சமகாலத்தில் எனது பெரும்பாலான பொழுதுகள் எனது பேரக்குழந்தைகளுடன்
கடந்து செல்கின்றன. அவர்கள் தினசரி தொலைக்காட்சியில்
பார்த்து ரசிக்கும், சுட்டிக்கண்ணம்மா முதலான காணொளி பதிவுகளை நானும் பார்த்து
ரசிக்கின்றேன்.
குழந்தைகளை கவரும் வகையில் அத்தகைய தொலைக்காட்சி காணொளிகளை தயாரித்து இயக்குவது
எத்தகைய கடின முயற்சியோ, அதுபோன்றே, குழந்தைகளுக்காக இலக்கியம் படைப்பதும் கடினமானதுதான்.
பிரான்ஸில் வதியும் திருமதி
பத்மா இளங்கோவன் இதுவரையில்
சில குழந்தை இலக்கிய நூல்களை படைத்திருக்கிறார். குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டவர்களினால்தான்,
அத்தகைய முயற்சிகளில் ஆக்கபூர்வமாக ஈடுபட முடியும்.
பத்மாவை முதல் முதலில்
1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையில் அவர்களது பெற்றோருடன்
சந்தித்தேன். பத்மாவின் தந்தையார் ஆசிரிய பணியிலிருந்தவர் என்பது எனது அவதானம்.
அக்காலப்பகுதியில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பாரதி
நூற்றாண்டு பணிகளில் ஈடுபட்டிருந்தேன். நாம்
கொழும்பில் பாரதி நூல்களின் கண்காட்சியையும், ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் ஒளிப்படக்
கண்காட்சியையும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில்
நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, சங்கத்தின் செயலாளர் ( அமரர்
) பிரேம்ஜி ஞானசுந்தரன், என்னை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.
அங்கே இலக்கிய நண்பர் வி.
ரி. இளங்கோவனின் அழைப்பின்பேரில் கொழும்புத்துறைக்குச்சென்றேன். இளங்கோவன், கலை, இலக்கிய, அரசியல் செயற்பாடுகளின் பின்னணியில் வாழ்ந்தவர். வளர்ந்தவர்.
மூத்த எழுத்தாளர்கள் நாவேந்தன்,
துரைசிங்கம், மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் தகைமைசார் பேராசிரியர் தமிழ்மாறன் ஆகியோரின் சகோதரர்.
ஈழத்து முற்போக்கு இலக்கிய
முகாம் அக்காலப்பகுதியில் கருத்தியல் ரீதியில் பிளவுபட்டிருந்தது.
நண்பர் இளங்கோவன் ஊடாக
யாழ். மாவட்டத்தில் அவர் அங்கம் வகித்த இலக்கிய
அமைப்பினைச் சேர்ந்த எழுத்தாளர்களின் ஒளிப்படங்களை சேகரித்தேன்.