யாழ் மத்திய கல்லூரியின் இசை அமுதம் நிகழ்வு எனது பார்வையில் - மதுரா மஹாதேவ்

 .

கடந்த வெள்ளிக்கிழமை 26 ஆகஸ்ட் 2022 அன்று Silverwater  இல்  அமைந்திருக்கும் Bahai  சென்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

மண்டபம் நிறைந்த நிகழ்ச்சியாக கொரோனா தொற்று நோயின் பின் இந்தியாவில் இருந்து சூப்பர் சிங்கர் புகழ் புண்ணியா, சத்தியபிரகாஷ், ஸ்ரீதர் சேனா மற்றும் சிரிகமபா  புகழ் வர்ஷா நால்வரும் உலக புகழ் பெற்ற  மணி இசைக்குழுவினருடன் வருகை தந்து சிறப்பித்த முதல் நிகழ்ச்சியாக அமைந்தது.

விளம்பரத்தில் அறிவித்தது போல் நிகழ்ச்சி சரியாக 7 மணிக்கு எமது சிம்மக்குரலோன் மகேஸ்வரன் பிரபாகரன் மேடையில் தோன்றி தனது வழமையான பாணியில் கீதையில் கூறியது போல் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். மணி இசைக்குழுவினர் புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது என்னும் பாடலுடன் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள். 

கண்டேன் திருச்சிற்றம்பலம் - இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்


















இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன் 




07.08.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை(University of New South Wales NIDA Parade Theatre Kensington)

 நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழக NIDA பரேட் தியேட்டர் கென்சிங்டனில் இணுவிலிற் பிறந்து சிட்னியில் வதியும் அருணாசலம் குகசக்தி தம்பதிகளின் புதல்வனும், சிட்னியிலுள்ள சமர்ப்பணா நாட்டியப் பள்ளியின் குரு சிதம்பரம் ஆர் சுரேசின் மாணவனுமாகிய விஷ்ணுவின் அரங்கேற்றம் நடைபெற்றது.  மாலை ஆறு மணிக்கு  வரவேற்புரை, அதனைத் தொடர்ந்து எமது தாய் மண்ணையும், அம்மண்ணிற்குப் பெருமை சேர்த்த நாட்டியக் கலைஞர்களாகிய யாழ்ப்பாணம் இணுவில் திரு ஏரம்பு சுப்பையா, யாழ்ப்பாணம் இணுவில் இயலிசை வாரிதி ம.ந.வீரமணிஐயர் இருவரையும் நினைவு கூர்ந்து ஆற்றப்பட்ட அறிமுக உரை இவற்றோடு அன்றைய நிகழ்வு ஆரம்பமாகியது. 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 28 மெல்பன் கலைவட்டமும் மாவை நித்தியானந்தனும் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா…? முருகபூபதி


கொழும்பில் 1970 களில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற சிறிய அமைப்பு மாதாந்தம்  கலை, இலக்கிய சந்திப்புகளை நடத்திவந்தது.

அதில் இணைந்திருந்த சில எழுத்தாளர்கள் அப்போது திருமணம் முடித்திருக்கவில்லை.  வடக்கிலிருந்து கொழும்பு வந்து உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் மாவை நித்தியானந்தன். இவர் மல்லிகை இதழ்களில் அவ்வப்போது எழுதிவந்தார்.  மல்லிகை அட்டைப்பட அதிதிக்கட்டுரைக்காக சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசையும் நேரில் சந்தித்து


எழுதினார்.  இவருடன் அந்த சந்திப்புக்குச் சென்ற தில்லைக்கூத்தன் என்ற புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த சிவசுப்பிரமணியமும் மெல்பனுக்கு 1990 காலப்பகுதியில் வந்திருந்தார். மாவை நித்தியும்  அதேகாலப்பகுதியில் இங்கே வந்திருந்தமையால்,  மீண்டும் அவர்கள் இணைந்து கலை, இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் இவர்களின் நண்பர் ஶ்ரீபாலனும் சேர்ந்து மெல்பன் கலைவட்டம் என்ற  அமைப்பினை உருவாக்கினார்கள்.  மரபு இதழை வெளிக்கொணர்ந்த விமல் அரவிந்தனும், இராஜரட்ணம் சிவநாதனும் ,  யோகானந்தன், வசந்தன் ஆகியோரும்  குறிப்பிட்ட மெல்பன் கலைவட்டத்தின் ஊடாக சில சந்திப்புகள், கூட்டங்களை நடத்தினர்.

வசந்தன், முன்னர் மாவை நித்தியின் திருவிழா என்ற கூத்தில் பங்கேற்றவர். தற்போது லண்டனில் வதியும் அருணாசலம் ரவியும்  இந்தக்கூத்தில் நடித்தார்.  ரவிக்கு புதுசு ரவி என்றும் ஒரு பெயர். இவர் முன்னர் புதுசு என்ற சிற்றிழக்கிய ஏட்டினை அளவெட்டியிலிருந்து வெளியிட்டவர்.  திருவிழா கூத்தை வவுனியா பூவரசங்குளத்தில் ஒரு பாரதி விழாவில் பார்த்திருக்கின்றேன்.

அந்த விழாவில் பாரதி புகழ் பாடுவோம் என்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றேன். அந்த விழாவில் கவிஞர் இ. சிவானந்தனும் கலந்துகொண்டார்.

விழா முடியும்போது நடு இரவு பன்னிரண்டு மணியும் கடந்துவிட்டது.

விழாவுக்கு வந்திருந்த காந்தீயம்  அமைப்பினைச்சேர்ந்த டாக்டர் சி.வி. இராஜசுந்தரம் தனது ஜீப் வண்டியில் எம்மை அழைத்துவந்து,  வவுனியா ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்.  காந்தீயம் இராஜசுந்தரமும் 1983 ஆம் ஆண்டு கலவர காலத்தில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டார்.  அவரது துணைவியார் மருத்துவர் திருமதி ராஜசுந்தரம் அவர்களை நீண்ட காலத்தின் பின்னர் மெல்பனில் சட்டத்தரணி ரவீந்திரன்  அண்ணரின் இல்லத்தில்தான் சந்தித்தேன்.

வாசகர் முற்றம் : தீவிர வாசகனாக வளர்ந்து, வானொலி ஊடகவியலாளனாகியிருக்கும் நியூசிலாந்து சிற்சபேசன் ஈழத்து மு. தளையசிங்கமும் இந்திய ஆர்.கே. நாராயணனும் இவரது ஆதர்சங்கள் ! முருகபூபதி


பெற்றவர்களிடம் கற்றதையும் சமூகத்திடம் பெற்றதையும் வாழ்வியல் அனுபவமாக்கி,  ஊடகத்துறையின் நுட்பங்களை உள்வாங்கி செய்தியாளராக பரிமளிக்கும்  தேர்ந்த இலக்கிய வாசகர்  சிற்சபேசன் அவர்களை எமது  வாசகர் முற்றத்திற்கு  அழைத்து வருகின்றோம்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்,  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், தன்னுடைய தந்தையார் அதிபராகவிருந்த அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றவர். பின்னர் உயர்கல்வியை தமிழ்நாட்டில்  தொடர்ந்தவர்.

யாழ்ப்பாணத்திலும்  தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழகக்


கல்விவரையான காலகட்டத்திலே வாழ்ந்தமையைப்  பெரும் பாக்கியமாகவே கருதுகின்றார்.

 “ யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம்  “ என்பார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. அந்தவகையில், அங்கே பெற்றுக்கொண்ட சைவத்தமிழ் விழுமியங்களிலான தன்னுடைய அத்திவாரத்தை, தமிழ்நாட்டின் மொழி, கலை, பண்பாட்டுச்சூழல் பலப்படுத்தியதாக நம்புகின்றார்.  அந்தவாய்ப்பை ஏற்படுத்திய தன்னுடைய பெற்றோரை நன்றியோடு நினைவுகூர்கின்றார் சிற்சபேசன்.

தற்போது நியூசிலாந்து அரசதுறையில் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றுகிறார். 

நாம் தொடர்ந்து பதிவேற்றிவரும் வாசகர் முற்றம் பகுதிக்காக சிற்சபேசனை தொடர்புகொண்டோம்.

அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு நாம் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை ஆரம்பித்தபோது, இவரும் அதில் இணைந்து கருத்தரங்குகளில் பங்கேற்றார்.

மெல்பனில் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த புதுவை ரத்தினதுரையின் பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும் நூல் வெளியீட்டில், இவரும் உரையாற்றினார்.

கொழும்பில் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கு முன்னர்,  யாழ். நாவலர் மண்டபத்தில் நடத்திய தகவல் அமர்வு சந்திப்பில் இவரும் கலந்துகொண்டார்.  அவுஸ்திரேலியாவில் நாம் மேற்கொள்ளும் தமிழ்  எழுத்தாளர் விழா இயக்கம் பற்றி, தனது கருத்துரையில் சிற்சபேசன் குறிப்பிட்டார்.

இனிய குரல்வளம் மிக்கவர். அதனால் அவுஸ்திரேலியா  தமிழ் வானொலிகளும் இவரை நன்கு பயன்படுத்திக்கொண்டன.      

ராஜா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 நடிகராக அறிமுகமாகி,தயாரிப்பாளாராக மாறி பல வெற்றி


படங்களை தயாரித்தவர் பாலாஜி.குடும்பக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சிவாஜி கணேசனை அடித்தடி படங்களில் நடிக்க வைத்த பெருமை இவரையே சாரும்.அந்த வரிசையில் 1972ல் இவர் தயாரித்த படம் தான் ராஜா.தான் தயாரிக்கும் எல்லாப் படங்களிலும் கதாநாயகனுக்கு ராஜா என்று பெயர் சூட்டும் பாலாஜி இம்முறை படத்துக்கே ராஜா என்று பெயர் வைத்து விட்டார்.படத்தின் கதை ஹிந்தி படத்திலிருந்து வந்தது.தேவ் ஆனந்த்,ஹேமமாலினி ஜோடியாக நடித்த ஜானி மேரே நாம் தமிழில் ராஜாவானது.


ராஜா,பாபு இருவரும் போலீஸ் இன்ஸ்பெக்ட்டரின்

பிள்ளைகள்.நாகலிங்க பூபதி இண்ஸ்பெக்டரை தீர்த்துக் கட்ட குடும்பம் பிரிகிறது.ராஜா தாயுடன் வளர்ந்து துப்பறியும் நிபுணன் ஆகிறான்.பாபுவோ சந்தர்ப்ப வசத்தால் நாகலிங்கத்திடமே வளர்ந்து அவனின் கையாள் ஆகிறான்.இவர்களின் கூட்டத்தை சேர்ந்த ராதா கள்ளக்கடத்தல் வழக்கில் இருந்து தப்ப ராஜாவை காதலிப்பது போல் நடிக்கிறாள்.ராஜாவோ அவள் மூலம் கடத்தல் கூட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முனைகிறான்.இதன் காரணமாக ராதா மூலம் அந்த கூட்டத்தில் சேர்கிறான்.

இவ்வாறு குடும்ப செண்டிமெண்ட்,காதல் ,கடமை,கவர்ச்சி,ஆக்சன்,என்று கலவையாக அமைந்த படம் ,சிவாஜி ஜெயலலிதா என்ற இரண்டு நட்சத்திரங்களின் பலத்துடன் திரை விருந்தாக ரசிகர்களுக்கு கிடைத்தது.படம் முழுவதும் சிவாஜி ஸ்டைல் மன்னனாகவே காட்சியளித்தார்.அறிமுக காட்சி ஆகட்டும்,டெனிஸ் ராக்கட்டுடன் மை நேம் ஐஸ் ராஜா என்பதில் ஆகட்டும்,ஜெயலலிதாவை சீண்டுவதில் ஆகட்டும் எல்லாம் ஸ்டைல் தான்.இறுதி காட்சியில் தாயை வில்லன் அடிக்கும் போது தர்மசங்கடத்தில் சிரித்திக் கொண்டு துடிக்கிறாரே சிவாஜி சிவாஜிதான்!

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (6/6) கே.எஸ்.சுதாகர்

அதிகாரம் 6


ஒரு சிறு குச்சுவீடு. அங்கு ஏற்கனவே படுத்த படுக்கையாகிக் கிடக்கும் டேவிட்டின் தாயார். அவளைப் பராமரிப்பதற்காக தினமும் அங்கு வந்து போன பெண், பத்மினி போன மறுநாளில் இருந்து வருவதை நிறுத்திவிட்டாள்.

டேவிட்டின் வயது முதிர்ந்த தாயார் எழும்பி நடக்க முடியாதவராக இருந்தார். அவருக்கு உணவு மருந்து மாத்திரைகள் கொடுத்து, மலம் கழுவி, உடுபுடவைகள் கழுவிப் பராமரித்தாள் பத்மினி. அடிக்கடி சிறுநீர் வாடை வீசும் துணிகளைத் துவைப்பதும், உலரவிட்டு மடித்து வைப்பதிலும் பத்மினியின் காலம் கழிந்தது. டேவிட் தனது கடந்தகாலம் பற்றி எதையுமே கேட்காதது அவளுக்கு அந்தச் சுமையைக் காவும் சக்தியைக் கொடுத்தது.

மாலை வேளைகளில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வருவாள். எப்பொழுதாவது டேவிட்டிற்கு நேரம் இருந்தால், சினிமா பார்ப்பாள். அந்த வேளைகளில் முன்பு வந்து போய்க்கொண்டிருந்த அந்தப் பெண் அம்மாவிற்குத் துணையாக வந்து நிற்பார்.

நாள் முழுவதும் கிழவியுடன் வீட்டிற்குள் அடைந்து கிடந்தாள் பத்மினி. அவளுக்கு இப்பொழுது கிழவிதான் பெரும்பாலும் பேச்சுத்துணை. அவள் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப் போக, மினியை சனி பிடித்துக் கொண்டது. உடலின் அழகும் மினுமினுப்பும் குறையத் தொடங்கியது.

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே ! அவதானி


தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு வந்து,  விதிவசத்தாலோ அதிர்ஷ்டத்தாலோ முதலில் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கா, பாராளுமன்றில் அமர்ந்திருக்கும்  மக்கள் பிரதிநிதிகளுக்கு சிம்மாசனப் பிரசங்கம் மூலம் கொள்கை விளக்கமும் அளித்தார்.

அத்துடன் பௌத்த பீடங்களின் ஆசிர்வாதமும் பெற்று நாட்டு மக்களுடனும் உரையாடினார். அண்மையில் அவர் அநுராதபுரம் சென்றிருந்த வேளையில்,  பொதுமக்களையும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும் நேருக்கு நேர் சந்தித்தும் அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளையும் கேட்டறிந்தார்.

முக்கியமாக நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பற்றியும் அறிந்துகொள்ள முயன்றார்.  மக்களால் தெரிவுசெய்யப்படாமல்,   பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கினால் மாத்திரம் அதியுயர் பதவிக்கு வந்துள்ள மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, மக்களின் தேவைகளை அறிய முயன்றது  வரவேற்கத்தக்க விடயம். அத்துடன்,   “ அரச ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை சரிவரச்செய்ய முடியாது போனால், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லவேண்டியதுதான்  “ என்றும் பகிரங்கமாக அதிரடி உத்தரவினையும்  வெளியிட்டிருந்தார்.

இதுவும் அவரது துணிகரத்திற்கு ஒரு சான்று. வாழ்த்துவோம்.

இலங்கைச் செய்திகள்

நல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா

விமான நிலையத்திலிருந்து கோட்டை ரயில் நிலையம் வரை சொகுசு ரயில்கள்

மே 09 தாக்குதல் சம்பவ விசாரணைகள் நிறைவு

நல்லூர் தேர் வெள்ளோட்டம்

தானிஷ் அலி உள்ளிட்ட ஏழு பேருக்கு பிணை

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க மையம்


நல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா

- நாளை (26/08/2022) காலை தீர்த்தோற்வம்; மாலை கொடியிறக்கம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று முற்பகல் நடைபெற்றது.

காலை 6.00 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7.00 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

உலகச் செய்திகள்

 உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்: 25 பேர் பலி

பாகிஸ்தானில் அடைமழை: 937 பேர் பலி; 30 மில்லியன் பேர் பாதிப்பு

இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் குற்றச்சாட்டுப் பதிவு

ஜப்பானிய பிரதிநிதிகள் தாய்வானுக்கு விஜயம்

தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் பதவியிலிருந்து இடைநிறுத்தம்

அவுஸ்திரேலிய கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சி



 உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்: 25 பேர் பலி

உக்ரைனின் சுதந்திர தினமான கடந்த புதன்கிழமை (24) அந்நாட்டின் கிழக்கில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் ஒன்றில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பயணிகள் ரயில் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31, 2022 புதன்கிழமை

 



கணபதி, விநாயகர் மற்றும் பிள்ளையார் என்றும் அழைக்கப்படும் விநாயகர், இந்து சமயக் கடவுள்களில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் வணங்கப்படும் தெய்வங்களில் ஒருவர். மக்கள் வேறுபாடின்றி அவரை வணங்குகிறார்கள். விநாயகர் மீதான பக்தி பரவலாக பரவியுள்ளது மற்றும் பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, குறிப்பாக மற்றும் பெரிய இன இந்திய மற்றும் இலங்கை மக்கள்தொகை கொண்ட நாடுகளில் பரவியுள்ளது. கணபதி / விநாயகருக்கு பல குணங்கள் உண்டு. யானைத் தலையால் அவர் எளிதில் அடையாளம் காணப்படுகிறார். அவர் பரவலாக மதிக்கப்படுகிறார், மேலும் குறிப்பாக, தடைகளை நீக்குபவர் மற்றும் நல்ல அதிர்ஷ்டம், அறிவு மற்றும் ஞானத்தை கொண்டு வருவார் என்று நம்பப்படுகிறது. ஆரம்பத்தின் கடவுளாக, சடங்குகள் மற்றும் சடங்குகளின் தொடக்கத்தில் அவர் மதிக்கப்படுகிறார். கணபதி / விநாயகர் எழுதும் அமர்வுகளின் போது கடிதங்கள் மற்றும் கற்றலின் புரவலராக அழைக்கப்படுகிறார்.

பேர்த் பால முருகன் கோவில் விநாயகர் சதுர்த்தி 31/08/2022


 


இசைக்கதம்பம் 2022 - 03/09/2022 - ஈழத் தமிழர் கழகம்



 



ஓ எஸ் அருண் (O S Arun) -03/09/2022

 


ஓ எஸ் அருண் மிகவும் மதிக்கப்படும் மற்றும் மிகவும் திறமையான பாடகர் ஆவார், அவர் தனது 'முழு, உரத்த மற்றும் ஆழமான' குரலுக்கு பெயர் பெற்றவர். அருண் செப்., 3ல் பெர்த்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

பெர்த்தில் 18 ஆண்டுகளாக இந்திய கிளாசிக்கல் மியூசிக்கை ஊக்குவித்து வரும் இந்தியன்ஐ இந்த இசை நிகழ்ச்சியை வழங்குகிறது. குரல் அல்லது கருவி ஒலிகள் எதுவாக இருந்தாலும், மக்களை ஒன்றிணைப்பதற்கு இசை மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும்.

உங்களுக்குத் தெரியும், இலங்கையில் காலம் கடினமானது. இந்த கச்சேரி மூலம் கிடைக்கும் நிகர வருமானம், Foundation of Goodness மற்றும் Vanni Hope ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்கள் மூலம் தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்கச் செல்லும்.

இந்த சிறந்த கலைஞரை ரசித்து மற்றவர்களுக்கு இசை மூலம் உதவுங்கள்.

ஒரு சிறந்த இசை மாலைக்கு எங்களுடன் இணைந்து, இலங்கையில் உள்ள ஏழைகளுக்கு ஆதரவாக உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்.