24/02/2018 மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்த 55 கிராமங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பாகச் செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து நிலவிய வன்முறை காரணமாக அரை மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பலர் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின்போது, இவர்களின் வசிப்பிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் வன்முறையில் அகப்பட்டு பலர் உயிரிழந்தனர். இதேவேளை இதுவொரு இன அழிப்பென ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.
இருப்பினும் பொதுமக்களை இலக்குவைத்து தாம் தாக்குதல் நடத்தவில்லையெனவும், போராளிகளை இலக்குவைத்தே தாம் தாக்குதல் நடத்தியதாகவும் மியன்மார் இராணுவத்தினர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி