.
xxxxxx சௌந்தரி xxxxxx
பெண் என்பது அவளது பெயர்
அவள் ஒரு இனம்
அவளுக்கு பலகோடி முகம்
அவளது உடலும் உள்ளமும் தனித்தனியாக
தவணைமுறையில் தாக்கப்படும்
பிறக்கமுதல் சிசுக்கொலை
பிறர் இறக்கும்போது உடன்கட்டை
இடையில் கற்பழிப்புஇ வன்முறை
உள்ளச்சுமைகளின் ஓயாதவலி
இவை பட்டியலிட்டு மாளாது
மெல்ல மெல்ல தடைகள் தாண்டி
முட்டிமோதி ஓட்டை உடைத்து
வெளியேவந்து தடம் பதித்தால்
எழுதப்பட்ட சட்டங்கள் பாதுகாக்காது
எழுதப்படாத விதிகளால் ஆளப்பட்டாள்
தனிமைச் சிறைக்குள் அவஸ்தைப்பட்டாள்
ஆண்டாண்டு காலமாய்
தொடர்கின்ற பெண்ணின்கதையிது
ஊடகங்களின் குறியீடு பெண்
சாமி தொடங்கி சாமானியன் வரை
தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் பெண்
கல்லோ புல்லோ கட்டிக்கொண்டு
அழுகின்ற பேதை பெண்
ஆணும் பெண்ணும் வேறுபட்ட இனம்
இரு வேறுபாடு கொண்ட மனம்
பெண்மை என்பது வெறும் நளினமல்ல
அவளிடம் கம்பீரம் உண்டு
நேர்மையுண்டு வீரமுண்டு
ஆண்மை என்பது வெறும் ஆதிக்கமல்ல
அவனிடம் கோழையுண்டு
மூடருண்டு முரடனுண்டு
பெண்ணியம் என்பது வீறாப்பல்ல விவேகம்
பெண்களின் மொழி
உரிமைக்கான ஓர் குரல்
பெண்களின் கருத்து
கைதட்டலுக்கு மட்டுமல்ல
கண்களைத் திறப்பதற்கே!