எனது சொல்லாத கதைகளின் அங்கம் 29 ஐ எழுத ஆரம்பிக்கின்றேன். அச்சமயம் ஒரு தொலைபேசி அழைப்பு என்னை தொடர்ந்தும் எழுதவிடாமல் தடுக்கிறது.
எடுத்துப்பேசுகிறேன். மறுமுனையில் எனது நீண்டகால நண்பர் திரு. குலம் சண்முகம்.
அவர் சொல்கிறார்: “ நீங்கள் பாப்புவா நியூகினி சென்று கல்விப்பணியாற்றி, அதன்மூலம் வருமானம் பெற்று உங்கள் பிள்ளைகளையும் படிக்கவைத்து ஆளாக்கினீர்கள். அதனைப்பற்றி உங்கள் சொல்லாத கதைகளில் ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள். ஆனால், அந்த நாட்டைப்பற்றியோ, அம்மக்கள் பற்றியோ, அங்கே உங்கள் வாழ்வியல் அனுபவம் தொடர்பாகவோ எதுவும் சொல்லவில்லையே…? ஏன்..? ! “
“ மொரிஷியஸ் வாழ் மக்களிடம் படிப்படியாக தமிழ் அகன்றுவிட்டதை வேதனையுடன் சொல்லியிருந்தீர்கள். அவர்கள் தாய்மொழி தமிழை பேணவில்லை என்றும் மனக்குறை பட்டிருந்தீர்கள். அதுபோன்று பாப்புவா நியூகினி நாட்டைப்பற்றியும் நீங்கள் ஏதும் சொன்னால்தான் உங்களது தொடர் முழுமை பெறும். “
ஆம், நண்பர் குலம். சண்முகத்தின் ஆதங்கம் நியாயமானதுதான்.
அந்த நாட்டுக்குச்செல்ல விரும்புபவர்கள், அந்த நாட்டைப்பற்றி அறியவிரும்புவதும் சரிதானே..? அதனால், இந்த அங்கத்தில் நான் எழுதத் தீர்மானித்த விடயத்தை அடுத்த அங்கத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, குலம். சண்முகம் அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இதனை எழுதுகின்றேன்.
இந்த நண்பரும் அங்கே சிறிதுகாலம் பணியாற்றியவர்தான். எனது இந்தத் தொடரை கணினியில் பதிவுசெய்துவரும் எனது நண்பர் முருகபூபதியும் கடந்த ஆண்டின் இறுதியில் கூறியது தற்போது நினைவுக்கு வருகிறது.
அவருக்கும் அந்த நாட்டைச்சென்று பார்க்கவேண்டும் என நீண்டகாலமாக விருப்பம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இந்த 2020 ஆம் ஆண்டு பிறந்ததும் செல்லவும் தீர்மானித்திருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையடுத்து, அவரது பயணமும் தடைப்பட்டுவிட்டது.
தொடர்ந்தும் உடல் உபாதைகளுடன்தான் இந்தத் தொடரை எழுதிவருகின்றேன். எம்பெருமான் முருகன் துணையிருப்பார் என்ற நம்பிக்கையில் கந்தசஷ்டி கவசத்தை படித்துவிட்டு எழுதுகின்றேன்.
“ கைகள் இரண்டும் கருணைவேல் காக்க…”
எம்பெருமான் முருகனை நெற்றிக்கண்ணால் படைத்த ஈசன் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்த கதையை எங்கள் புராணத்தில் படித்திருப்பீர்கள்.