’விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு’ என்பது எமது முதுமொழி.
விருந்து எப்படியோ மருந்து என்பது இப்பொழுது மூன்று நாட்களுக்கு அல்ல. 365 நாட்களுக்குமே வேண்டி உள்ளது. இருதயநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், போன்ற சில நோய்களுக்கு 365 நாட்களும் மருந்துகளை அருந்துவதால் தான் அந் நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இவ்வாறாக நாளாந்தம் மருந்துகளைப் பருகா விட்டால் எப்பொழுதோ பரலோகம் போயிருப்போம்.
இது ஒரு கசப்பான உண்மைதானே?
அண்மையிலே வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது. செய்தி இது தான். வலிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கொடுக்கப்பட்ட vioxx என்னும் மருந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற வியாதிகளை வரவழைக்கக் கூடிய பக்கவிளைவுகளைத் தருவதாக கண்டறியப்பட்டது. இதனால் இந்த மருந்து வியாபாரம் தடை செய்யப்பட்டு விட்டிருக்கிறது. இந்த மருந்தை ஒழுங்காகப் பாவித்த நோயாளிகளிடம் இது திகிலை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு வலிநிவாரணம் அளிக்கும் மருந்தே எனக்கு யமனாகி விட முடியுமா? மேற்கொண்டு மற்றய மருந்துகள் குறித்த நம்பகத் தன்மை என்ன அவைகளும் மேலதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தத் தக்கவை தானா என்ற கேள்விகள் எல்லாம் எழத்தான் செய்கின்றன.
அவுஸ்திரேலியாவில் நோய் நிவாரணமாகக் கொடுக்கும் மருந்துகளுக்குப் பொறுப்பானவர்கள் Australia's Therapeutic goods & Administration. பலவகையான நோய் தீர்க்கும் மருந்துகள் முதலிலே பரீட்சார்த்தமாக மிருகங்களுக்குக் கொடுத்து அதன் பின் பல ஆயிரம் மக்களில் பரிசோதித்த பின்பே சந்தப்படுத்தப் படுகிறது.
மருந்து கண்டுபிடித்த நாளில் இருந்து சுமார் 5 வருடத்தால் தான் இதை நோயாளிகளுக்குக் கொடுக்கலாம் என்ற அத்தாட்சிப்பத்திரம் பெற்றுஅதன் பின் தான் அவை சந்தைக்கு வரவேண்டும் என்பது அரச விதி முறை. இப்படி வரும் மருந்துகளில் பலவருடங்களுக்கு ஒருமுறை ஒன்றோ அல்லது இரண்டோ மருந்துகள் ஆபத்தானவை என நிறுத்தப்படலாம். அதனால் சகல மருந்துகளுமே ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறிவிட முடியாது.
அலோபதி வைத்தியம்; அது தான் சாதாரண பேச்சுவழக்கில் கூறுவதானால் Western Treatment க்கு கொடுக்கும் மருந்து மாத்திரைகளால் பக்கவிளைவுகள் சிறிது ஏற்படத்தான் செய்யும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதற்காக நான் மருந்து சாப்பிடாமல் இருங்கோ எனச் சொல்ல வரவில்லை. இந்த மருந்துகள் தாம் எம்மை நோயில் இருந்து காப்பாற்றி நீண்ட நாட்கள் வாழ வைப்பவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.