[ மகா சிவராத்திரிப் புனித நன்னாளை மனமிருத்தி இக்கட்டுரை அமைகிறது ]
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையினை யாவருக்கும் காட்டுகின்ற நெறி முறை கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது.கண்டதே காட்சி கொண்டதே கோலம் என எண்ணுபவர்களையும், " இப்படித்தான் வாழவேண்டும் " என அன்புடனும், அரவனைப்புடனும் அணுகி அவர்கள் அனைவரும் வாழ்வதற்குத் தேவையான வற்றைக் காட்டி நிற்பதால் இந்துமதம் -" என்றும் வாழும் நெறியாக " இருந்து வருகிறது எனலாம்.நெகிழ்ச்சியும் , சகிப்புத்தன்மையும், சுதந்திரமும் , கொண்ட தாக இந்துமதம் திகழ்கின்றமையாலும் அதனை- ஒரு வாழும் நெறி என்று குறிப்பிட லாம்.
உலகில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் - தொடங்கியவர்கள் தொடங்கியகாலம் என ஒரு வரையறை காணப்படுகிறது.ஆனால் இந்துமதத்தை யார் தொடக்கினார்கள் ? எப்பொழுது தொடங்கப்பட்டது ? என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் காணப்படவில்லை.ஆதியும் அந்தமும் அற்ற மதமாக இந்துமதம் விளங்குவதைக் காண் கின்றோம்.இதனால்த்தான் இந்துமதத்தை " சனாதன் தர்மம் " என்று குறிப்பிட்டனர்.' சனாதன' என்றால் நிலையானது என்று பொருளாகும்.அதாவது நித்தியமானது அழிவில் லாதது என்பதாகும். இதனாலும் இதனை வாழும் நெறி என்று அழைக்கலாம்.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று கூறப்பட்டு வந்ததை நாமனைவரும் கேட்டி ருக்கின்றோம்.அதற்கு எடுத்துக்காட்டாக' மனமொரு குரங்கு ' என்று ஒரு உதாரணம்காட் டப்படுவது நோக்கத்தக்கது.
விலங்காக இருந்த மனித சிந்தனை, செயற்பாடு . யாவும் சற்று மாறுதலடைந்து சிந்திக்கதக்க மனிதனாக மாற்றம் அடைந்ததற்குக் காரணம் மனிதவாழ்விலேற்பட்ட படிப்படியான மாற்றங்களேயாகும்.
மாற்றம்மடைந்த மனிதனிடம் விலங்கின் தன்மைகள் முழுமையாக விட்டு நீங்க வில்லை என்பதைத் தக்க சமயத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.உணர்ச்சி மேலிட்டு நிற்கின்ற பொழுது மனிதனால் செய்யப்படுகின்ற ஆக்ரோஷமான நடவடிக்கைகள் - இன்னும் மனிதனிடமிருந்து மிருக இயல்புகள் மறையவில்லை என்பதையே காட்டி நிற்கிறது எனலாம்.
அந்த இயல்புகளை மாற்றி மனிதனை மனிதனாகவும் _ அந்த மனிதனைப் புனிதனா கவும் மாற்றும் தன்மைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் திகழ்வ தால் அது " ஒரு வாழும் நெறியாக " விளங்குகிறது எனலாம்.
மதங்களும் -மதங்கள் வகுத்த கடவுள் கோட்பாடுகளும் மனிதனைப் புனிதம்மிக்கவனாக மாற்றுவதற்கே அன்றி -அவனை அடக்கி ,ஒடுக்கி, வைப்பதற்கு அல்ல. மதங்களும். அவற் றின் கொள்கைகளும்- மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் கொள்ளவும்- அவனுள் தூய் மையை ஏற்படுத்தவுமே அமைந்தன.ஆனால்- சில மதங்கள் - மனித சமுதாயத்தை அட க்கி ,ஒடுக்கி, வைக்க முனைகின்றன.சர்வாதிகாரப் போக்குடையயனவாகவும் காணப் படுகின்றன.செய் அல்லது செத்துமடி என்னும் இராணுவத் தோரணை கொண்டனவாகவும் இருகின்றன. சமயமாக இல்லாமல் சர்வாதிகாரம் கொண்டனவாக மாற முற்படுகின்றன.
இவற்றுக்கு மத்தியில் இந்துமதமோ மாறுபட்டு, வேறுபட்டு நிற்கிறது. பூரண சுதந்திரம் கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது.இந்து மதத்தவர்கள் அம்மதத்தை விட்டுச் சென் றாலும் சரி - வேறு மதத்தவர்கள் இந்துமதத்தில் இணைந்தாலும் சரி அதையிட்டு இந்தும தம் கண்டு கொள்ளுவதேயில்லை.