.
சிட்னியில் இருந்து சிங்கை நோக்கிப் பயணிக்கும் விமானத்தில் ஏறுகிறேன். இருக்கையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமர்ந்ததும் முதல்வேலையாகத் தேடியது அந்த சிங்க்ப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் காண்பிக்கவிருக்கும் படங்களின் பட்டியல். தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த மொக்கைப்படங்களான வேங்கை, மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு என்று விபரமிடப்பட்டிருந்தது. அலுத்துச் சலித்து மேலும் ஏதாவது தேறுகிறதா என்று பக்கங்களைப் புரட்டினேன். Pancham Unmixed என்ற தலைப்பில் இசைமைப்பாளர் ஆர்.டி.பர்மன் குறித்த விபரணச்சித்திரம் ஒன்று இருப்பதாகப் போடப்படிருந்து. சில விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டால் போல எதேச்சையாக நிகழ்வது போலத்தான் இதுவும். காரணம் என் பயணத்துக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் ஆர்.டி.பர்மன் இசையில் இறுதியாக வெளியான 1942 A Love story படத்தின் பாடலான குச் நா கஹோ பாடலை ஏனோ கேட்கவேண்டும் என்று மனம் உந்தித் தள்ள சில பத்துத் தடவைகள் மீண்டும் மீண்டும் கேட்டிருப்பேன், பல வருஷங்களுக்குப் பின் கேட்கும் போது ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பிள்ளை வீட்டுக்கு வரும்போது ஆசை தீர உச்சி மோந்து கொண்டாடும் தாய்போல உணர்வு.
1995 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்து பல்கலைக்கழகப் படிப்பில் நாட்களை நெட்டித் தள்ளியவேளை, இப்போது போல அப்போதெல்லாம் இணைய வானொலிகள்,நண்பர்கள் வாசனையே இல்லாத வேளை ஒரு வட இந்திய மளிகைக்கடையில் சரக்குப் பொட்டலங்களுக்கு மேல் தூசிபடர்ந்திருந்த பொம்மையாக 1942 A Love story படத்தின் ஒலிநாடாப்பேழையைக் கண்டு, (கையில் அப்போது காசு புழங்காத நேரம் வேறு) அந்தப் படம் பற்றி அப்போது விகடனில் வந்த கவர் ஸ்டோரி கொடுத்த பின்னணியால் மட்டுமே வாங்கிக் கேட்டிருந்தேன். அப்போது தான் ஆர்.டி.பர்மன் என்ற பெயரில் ஒரு இசையமைப்பாளர் இருப்பதே தெரிந்திருந்தது எனக்கு. ஊரில் இருக்கும் போது இலங்கை வானொலி வர்த்தக சேவையில் "தம் மரே தம்" பாடலை இவர் தான் இசைத்திருந்தார் என்று தெரியாது கேட்டிருந்தது வேறு விஷயம். அப்போதெல்லாம் எங்களை ஆக்கிரமித்திருந்தது இளையராஜா என்ற மந்திரம். நாளாக இளையராஜாவை என்ற எல்லைக்கு அப்பாலும் இசை மேதைகள் இருக்கின்றார்கள் என்று புரியவைத்தது 1942 A Love story.